குட்டிச்சுவர் சிந்தனைகள்நடுவர் அவர்களே, குவாட்டர், ஹாஃப், ஃபுல் என சரக்கு விலை உயரும்போதெல்லாம் கண்டிப்பான காவல்துறை என்னைக்காவது ட்ரங்க் அண்டு டிரைவ் ஃபைனை உயர்த்தியிருக்கா? இல்லையே.

இந்தப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் கட்டணத்தை உயர்த்திய பின், பாடம் சொல்லித் தரும் நேரத்தை உயர்த்தியிருக்கா? மாசா மாசம் பியூட்டி பார்லர் ஃபேஷியல் கட்டணம் உயருதே, அதைப் பண்ணிட்டு வர்ற பொண்ணோட அழகு உயருதா என்ன? வாரா வாரம் தமிழக பி.ஜே.பி.யின் உறுப்பினர் எண்ணிக்கை உயருதே, ஆனா அதோட வாக்கு எண்ணிக்கை உயருதா? இல்லையே.

ஆனா இந்த டீசல் விலை உயர்ந்தால் மட்டும் ஏன் லாரி ஓனர்கள் வாடகைக் கட்டணத்தை உயர்த்தி, அத்தியாவசியப் பொருட்கள் எல்லாத்தையும் விலை ஏற வைக்கிறாங்க?

* காதலி தின்னு போட்ட சாக்லேட் பேப்பர், குளிச்சு போட்ட ஷாம்பூ கவர், சவுரில இருந்து விழுந்த முடி, காட்ட முடியாத முகமா இருந்தாலும் அது வெட்டிப் போட்ட நகம், காய்ஞ்சு போன பூவுன்னு கண்டதையும் காதல்ங்கிற பேருல பொறுக்கி எடுத்து வச்சு பாதுகாக்கிறதுனாலதான், பொண்ணை பெத்தவங்க நம்மள ‘பொறுக்கி’ன்னு சொல்றாங்க.

* ‘ஆடிக்குப் பின்னால் ஆவணி, என் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணி’, ‘கடலின் ஆழத்தில் மீனின் ஆட்சி, என் மனதின் ஆழத்தில் மீனாட்சி’, ‘அன்பே நிர்மலா, நீதான் என்னை விட்டு விலகாத இருமலா?’ - இப்படியெல்லாம் கண்டதையும் கிறுக்கி வைக்கிறது னாலதான், நம்மள பொண்ண பெத்தவங்க ‘கிறுக்கன்’னு சொல்றாங்க.

* இது மட்டுமா! ஒரு பொண்ணுக்கு குச்சி மிட்டாய்ல இருந்து குருவி ரொட்டி வரை வாங்கி தண்டச் செலவு பண்றது, ரோட்டுல அவ பின்னாலயே பைக்ல சுத்தி பெட்ரோலுக்கு தண்டச் செலவு பண்றதுன்னு இருக்கிறதுனாலதான் நம்மளை ‘தண்டம்’னு சொல்றாங்க.

பத்தாவது முடிச்சதுக்கு அப்புறம் +1க்கு ஃபர்ஸ்ட் குரூப், செகண்ட் குரூப்ல ஆரம்பிச்சு மொத்தம் எத்தனை குரூப் இருக்குன்னு கூட தெரியாதவங்க எல்லாம் இப்ப வாட்ஸ் அப்ல கண்ட கண்ட குரூப்ப ஆரம்பிச்சுட்டு பண்ற அழிச்சாட்டியம் இருக்கே... என்னமோ அமெரிக்க அதிபர் தலைமையில உலக பொருளாதாரத்துக்கு உதவுற மாதிரி போடுறாங்க சீனு. 1947ல வந்த மொக்க ஜோக்கையெல்லாம் ஃபார்வர்ட் பண்றது,

காட்டுக்குரங்க க்ளோஸ் அப்ல எடுத்த மாதிரி ஒரு செல்ஃபி எடுத்து அந்த கருமத்த போடுறது, பழைய சர்தார்ஜி ஜோக்குகளுக்கு பாலிஷ் போட்டு தமிழ் செலிப்ரிட்டிகள டிங்கர் பண்ணி அனுப்பி விடுறது, ‘ஹரஹர மகாதேவகி’ன்னு மங்களகரமா ஆரம்பிச்சு மஞ்சள் கதை சொல்றது, யானை சைக்கிள் ஓட்டுற போட்டோ, பூனை பல்லு விளக்குற வீடியோன்னு அனுப்பி கொலையா கொல்றதை விடுங்கய்யா. மக்களே, இதை அப்படியே டைப் செய்து உங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் போடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னத்தய்யா தர்றீங்க அவார்டு? பெரிய ஆஸ்கர் அவார்டு? ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே! சூரியனை கர்ச்சீப் போட்டு மூட முடியாது, ஆனியனை ஹெல்மெட் போட்டு அரிய முடியாது. நடிக்கத் தெரிஞ்சவன் நடிகன் இல்லடா. நடிக்கத் தெரியாட்டியும் நடிக்கத் தெரிஞ்ச மாதிரி நடிக்கத் தெரிஞ்சவன்தான் சிறந்த நடிகன். அப்படி பார்க்கிறப்ப, எங்க பவர் ஸ்டாருக்கு இல்ல நீங்க சிறந்த நடிகருக்கான அவார்டு கொடுத்து இருக்கணும்?

1980ல இருந்து பார்க்கிறேன். இதுவரை 500க்கும் மேற்பட்ட படத்துல வில்லனுக்கு துணையா சின்ன வீடாவோ செட்டப்பாகவோ நடிச்ச அந்த அம்மாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது தரணும்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? 1980ல முரளியோட, அப்புறம் அஜித், அப்பாஸ், அரவிந்த்சாமியோட, இப்ப அதர்வா, ஆர்யாவோடன்னு புதுசா காலேஜ் போற எல்லாரோடும் துணையா காலேஜ் போன சின்னி ஜெயந்த், சார்லி, தாமுவுக்கெல்லாம் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் தந்திருக்கீங்களா?

சிறந்த மேக்கப்புக்கான ஆஸ்கர், ‘கத்தி’ படத்துல, டி - ஷர்ட் போட்டுக்கிட்டு கிளீன் ஷேவ்ல வந்தா கதிரேசன் விஜய், சட்டை போட்டுக்கிட்டு லைட் தாடியோட வந்தா ஜீவானந்தம் விஜய்னு அற்புதமா புரிய வச்ச முருகதாஸுக்குத்தானே கிடைச்சிருக்கணும்? நீங்க கொடுக்கலியே! ‘ஆம்பள’ படத்துல விஷால 60 அடி உயரத்துல, ஜீப் மேல குந்த வச்சு,

பார்க்கிறவங்கள ஆனந்தக் கண்ணீர் சிந்த வச்ச சுந்தர்.சிக்குதானே நீங்க தந்திருக்கணும் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர். கல்லையும் கண்ணீர் சிந்த வைத்த, புல்லையும் பன்னீர் சிந்த வைத்த, பார்க்கிறவங்களை ரத்தம் சிந்த வைத்த எங்கள் சோலார் ஸ்டாருக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் தர உங்களுக்கு ஏன் மனசு வரமாட்டேங்குது? வாய்லயே வயலின் முதல் வித்தியாசமான வாத்தியங்கள் வரை வாசித்து, பலப்பல இசை நுணுக்கங்களைக் கொண்டு வரும் எங்க வெண்ணிற ஆடை மூர்த்திக்கு சிறந்த இசைக்கான ஆஸ்கர் தந்தீங்களா?
போங்கடா நீங்களும் உங்க ஆஸ்கரும்!

பார்லிமென்ட் கேன்டீன்ல புரோட்டா சாப்பிட்டுட்டு பிரதமர் மோடி பில் கொடுத்ததைப் பெருமையா பேசிக்கிட்டு இருக்காங்க பி.ஜே.பிக்காரங்க. பிரதமர் சாப்பிட்டதுக்கு பிரதமர் பில் தராம, பில் கேட்ஸா வந்து தருவாரு? என்னய்யா எப்ப பார்த்தாலும் போங்கு பப்ளிசிட்டியாவே பண்றீங்க?கூட ராஜ்நாத் சிங்கை கூட்டிப் போயிட்டு, பில் வர்றப்ப ‘மச்சி... இந்த தடவ நீ பில் கொடு, அடுத்த தடவை நான் தர்றேன்’னு தாட்டி விட்டிருந்தா, நம்மள மாதிரியே இருக்காரேன்னு பெருமைப்படலாம்.

இல்ல, அத்வானி, வாஜ்பாய்னு வருத்தப்படாத வயசான வாலிபர் சங்கத்தினரைக் கூட்டிப் போயிட்டு, பில் வர்றப்ப போன் வந்த மாதிரியோ, பாத்ரூம் போற மாதிரியோ எழுந்து போயிருந்தா, நமக்கு திறமைசாலி பிரதமர் கிடைச்சாருன்னு அருமை கொள்ளலாம். இதை விட்டுட்டு, பவர் ஸ்டார் போல புவர் பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு இருக்கீங்க! பிரதமர் கட்டுன பில் தொகை 29 ரூபா போக மீதி ஒரு ரூபாய்க்கு ரெண்டு ஹால்ஸ் மிட்டாய் கொடுத்தாங்களா... இல்ல, ஒரு ரூபா காசே கொடுத்தாங்களான்னு ட்விட்டர், ஃபேஸ்புக்ல கலாய்க்கிற மாதிரி லீடு எடுத்து கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. ஆப் கி பார், மோடி புவர் பப்ளிசிட்டி!

ஆல்தோட்ட பூபதி