இது அவமானமா?



ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்காக ஒரு தேசமே வீதிக்கு வந்து நீதி கேட்டுப் போராடியது இந்தியாவில்தான் நிகழ்ந்தது. 2012 டிசம்பர் 17ம் தேதி டெல்லியில் நிர்பயா பாலியல் வன்முறைக்கு ஆளானதற்கு நீதி கேட்டு மக்கள் கொதித்தபோது உலகமே திரும்பிப் பார்த்தது. அந்தச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஏற்படுத்திய கொந்தளிப்பால் இப்போதும் உலகம் நம்மை கவனிக்கிறது.

இப்போதைய சர்ச்சைகளின் மையப்புள்ளி, லெஸ்லீ உத்வின். இங்கிலாந்தில் வாழும் ஆவணப்பட இயக்குனர். 57 வயதாகும் இந்தப் பெண், தன் வாழ்வில் மிக மோசமான பாலியல் வன்முறையைச் சந்தித்து, அந்த நினைவின் வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர். டெல்லி சம்பவத்துக்கு நம் மக்கள் போராடிய விதம் அவரைச் சிலிர்க்க வைத்தது. அந்தப் போராட்டங்கள் நடந்தபோதே இந்தியா வந்துவிட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்... தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரிந்து இந்தியாவிலேயே தங்கி, சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று குற்றவாளிகளைச்
சந்தித்து, அவர் உருவாக்கிய ஆவணப்படம் ‘இந்தியாவின் மகள்’, இந்த மகளிர் தினத்தில் பிபிசி4 சேனலில் ஒளிபரப்பாக இருந்தது. மத்திய அரசு கொதிக்க, டெல்லி நீதிமன்றம் தடை விதிக்க, அவசரம் அவசரமாக கடந்த புதன் இரவே அந்த சேனலில் அது ஒளிபரப்பாகி விட்டது.

அந்த மோசமான வன்முறையில் பலியான மாணவி யின் பெற்றோர், பாலியல் வன்முறையை நிகழ்த்திய குற்றவாளிகள், அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர், அந்தப் பெண்ணுக்காக நீதி கேட்டு வீதிக்கு வந்து போராடியவர்கள் என பலரும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்கள். இதில் அம்பலமாகும் உண்மைகள்தான் பலராலும் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கின்றன.
குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் அம்மா மூலமாக அவனது மனதைக் கரைத்து, சிறையில் அவனைச் சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார் உத்வின்.

‘‘நல்ல பொண்ணுக்கு ராத்திரி 9 மணிக்கு மேல ரோட்டுல என்ன வேலை? கற்பழிப்பு நடக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்காம அமைதியா ஒத்துழைச்சா, எல்லாம் முடிஞ்சதும் அவளை பத்திரமா விட்டுடுவோம். இந்தப் பொண்ணு விவகாரத்தால, இனிமே இப்படிச் செய்யற ஆம்பளைங்க, அந்தப் பொண்ணுங்களை கொன்னு போட்டுடுவாங்க’’ என முகேஷ் சிங் சலனமின்றி சொல்கிறான். அவன் நிகழ்த்திய குற்றங்களைப் பட்டியலிட்டபோது, அவன் முகத்தில் துளியும் வருத்தமில்லை.

இதேபோல இன்னொரு கொடூரத்தை நிகழ்த்திய கௌரவ் என்ற 34 வயது நபர் பேசும் காட்சியும் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது. 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறான் கௌரவ். ‘‘ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாழ்வைச் சிதைத்த வருத்தம் இல்லையா உனக்கு?’’ என்ற கேள்விக்கு அவன் அலட்சியமாக பதில் சொல்கிறான்... ‘‘அவள் ஒரு பிச்சைக்காரி யின் மகள். அவளுக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது?’’

‘‘பாலியல் வன்முறை குறித்து உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் படத்தை எடுத்தேன். பள்ளிக் குழந்தைகளுக்கு இதைப் போட்டுக் காட்டி, ‘இப்படிப்பட்ட ஆண்களாக உருவாகாதீர்கள்’ என பாடம் சொல்ல வேண்டி இருக்கிறது’’ என்கிறார் உத்வின். ‘‘இந்தப் படம் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ளும் முயற்சி’’ என வரவேற்கிறார்கள் பலர்.
ஆனால், ‘‘இது இந்தியாவை அவமானப்படுத்த நடக்கும் சர்வதேச சதி’’ என்கிறார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு. ‘‘இப்படி எல்லாம் படம் எடுத்தால் சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள்’’ என்கிறார் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. மீனாட்சி லேகி. கடைசியில் இதுதான் உங்கள் பிரச்னையா?

- அகஸ்டஸ்