தல வீட்டில் குட்டி இளவரசன்!மகள் அனோஷ்கா பிறந்து சரியாக 7 வருடம் கழித்து ‘சின்ன தல’ வந்திருக்கிறார். கடந்த 2ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருப்பதாகச் சொல்கிறது அஜித் குடும்ப வட்டாரம்.

பொறுப்பான கணவராக, பிரசவ நேரத்தில் மனைவியின் அருகில் இருந்து கவனித்துக்கொண்டார் அஜித். வழக்கமாக ஹாஸ்பிடல் வாசம் எப்போது நேர்ந்தாலும் வீடு திரும்பும் நாளில் மருத்துவ மனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி சந்தோஷப்படுத்துவது அஜித்தின் ஸ்டைல்தான்.

இம்முறையும் அதே! அருகில் இருந்த மிக நெருங்கிய உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் தல. அவர் ரசிகர்களோ ‘அசல் வாரிசு அவதரித்த நாள்’ என போஸ்டரே அடித்து அமர்க்களப்படுத்திவிட்டனர். குட்டி அஜித் பிறந்த தகவல் அதிகாலை 5 மணிக்கெல்லாம் வாட்ஸ் அப்பில் பரபரக்க ஆரம்பித்துவிட்டது.

மருத்துவமனை ஊழியர்களுடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து ட்விட்டர் வரை லைக், ஷேர் ஆகி, ‘கங்கிராட்ஸ்’கள் குவிய ஆரம்பித்தன. அதெல்லாம் அனோஷ்கா பிறந்தபோது எடுத்த பழைய படங்கள் என பின்னர் தெரிய வந்தாலும், தல ரசிகர்களிடம் ஏமாற்றம் இல்லை...

தொடர் கொண்டாட்டம்தான். இதற்கு மகுடம் வைத்ததுபோல, பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை ஒன்றின் புகைப்படம் ‘சின்ன தல’ என வாட்ஸ் அப்பில் ஃபாஸ்ட் ஃபார்வேர்டு ஆகிக்கொண்டிருந்தது. அதன் பின்னர், ‘அது வேறு ஏதோ குழந்தை’ என்ற தகவல் அஜித் வட்டாரத்தி
லிருந்து வந்தது.

இப்போது அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் அஜித். அதுவும் பழைய அஜித் போல வெறி கொண்டு உழைக்க ஆரம்பித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் அந்தப் படத்துக்கு கதை விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ‘தல’ தானும் ஸ்டோரி டிஸ்கஷனில் கவனம் செலுத்துகிறார் எனத் தகவல். மருத்துவமனையில் ஷாலினியை ரொம்பவே நெருங்கிய உறவினர்கள் கவனித்துக்கொள்வதால், அவ்வப்போது சர்ப்ரைஸ் விசிட் அடித்து, குழந்தையைப் பார்த்துச் செல்வதோடு சரி!

அஜித்தின் அலுவல் உதவியாளர்கள், பர்சனல் உதவியாளர்கள் எல்லோரும் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். ஆனால், அவர்களே இன்னும் சின்ன அஜித்தைப் பார்க்கவில்லையாம். இதற்கிடையே ஒரு குழந்தையை விஜய், தன் கையில் தூக்கிக் கொஞ்சுவது போல புகைப்படம் ஒன்று கலக்க ஆரம்பித்தது. ‘இது அல்லவோ நட்பு...’ என விஜய்க்கு பாராட்டு ஸ்டேட்டஸ்கள் ஒரு பக்கம் அணிவகுத்தன. உண்மையில் விஜய் தன் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில், ஏதோ ஒரு குழந்தைக்கு மோதிரம் அணிவித்த காட்சி அது.
 
சின்ன அஜித்துக்கு என்ன பெயர் சூட்டலாம் என அஜித்தும், ஷாலினியும் ஒரு லிஸ்ட்டே ரெடி செய்துவிட்டனராம். இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரத்தில் லிட்டில் அஜித்திற்கு பெயர் சூட்டியிருப்பார்கள்.

- மை.பாரதிராஜா