மனக்குறை நீக்கும் மகான்கள்ஸ்ரீ அரவிந்த அன்னை

உன்னுடைய ஜாதகத்தைக் காட்டிலும் பிரபுவை வலியவராக இருக்க விடக் கூடாதா? பரம பிரபுவைப் பொறுத்தமட்டில் மாற்ற முடியாத ஜாதகம் என்பதே இல்லை. பிரபுவின் தயையில் நம்பிக்கை கொள். அனைத்தும் மாறும்!
- ஸ்ரீஅன்னை

ஆங்கிலேயர்களின் ஆட்சி யின் கீழ் இருக்கும் அடிமை தேசம்தான் பாரதம். ஆனால், பாரத மக்களுக்கு தங்களின் ஆட்சியாளர்கள் குறித்தெல்லாம் துளியும் அக்கறை இல்லை. தங்களின் வாழ்க்கையை அவர்களுக்கே உரிய தர்மப்படி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட வழிபாடு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டால் மட்டுமே கொதித்தெழுவார்கள். மற்றபடி உலகில் உள்ள எல்லா மனிதர்களும் மன்னர்களும் அவர்களுக்கு ஒன்றுதான்.

ஒரு முறைப்படி எது நடந்தாலும் சந்தோஷம் என்பதே பாரத மக்களின் பொதுப் பண்பு. விவேகானந்தர் தந்த தேசபக்தியால் வீறுகொண்டு செயல்படும் இளைஞர் கூட்டமும் அங்கு உண்டு. ஆனால், பாரதத்தை வழி நடத்துவது ஆட்சியாளர்கள் அல்ல.

ஆன்மிகம்தான்.பாரதம் உலகின் பார்வைக்கு வேண்டுமானால் அடிமை தேசமாக இருக்கலாம். ஆனால், அகிலமே மனநிம்மதிக்கும் ஆன்ம விடுதலைக்கும் அதனிடம்தான் கையேந்தி நிற்க வேண்டும் என்கிற உண்மை செவி வழியாகவும் தாம் படித்த நூல்களின் வழியாகவும் மிராவுக்குத் தெரிய வர, அவருக்கு பாரதம் மீது தீவிரக் காதல் மலர்ந்தது.

மிராவின் கனவில் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்தான். புத்தர் புன்னகைத்தார். விவேகானந்தர் யோகம் பேசினார். இப்படி பல ரிஷிகளும் முனிவர்களும் தேவர்களும் மிராவுக்கு பல்வேறு
விஷயங்களைப் போதித்து உணர்த்தினார்கள். ஒரு மிகப்பெரிய ஆன்மிக விருட்சத்திற்கான விதை மிராவின் மனதுள் விவேகானந்தரால் ராஜயோகம் வாயிலாக ஊன்றப்பட்டது. மிராவின் மனதுள் ஆன்மத்தேடல் இன்னும் தீவிரமானது.

அதற்குத் தகுந்தாற்போல எலிஸா மார்டிஹை என்பவரின் நட்பு மிராவுக்குக் கிடைத்தது. எலிஸா இந்துமதத் தத்துவங்களில் தேர்ந்த ஞானம் பெற்றவர். இருவரது நட்பின் காரணமாக வேதநெறிகளின் மீது மிராவுக்கு ஆர்வம் அதிகமானது.

அந்தக் காலக் கட்டத்தில் மிராவுடன் ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் அன்பர்கள் அதிகமானார்கள். அது ஒரு குழு போலவே இயங்கத் தொடங்கியது. காஸ்மிக் என அதற்குப் பெயர் சூட்டினார்கள். அதன் தலைவர் போலவே மிரா செயல்பட்டார். மிராவின் தெய்வீக சக்தியை காஸ்மிக் குழுவினர் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆகவே, மிராவைப் பெரிதும் மதித்தார்கள்.

இதற்கிடையே பால் ரிச்சர்ட் என்பவர் காஸ்மிக் கூட்டத்திற்கு அடிக்கடி வர ஆரம்பித்தார். மிராவின் பரந்த ஞானம் அவரைக் கவர்ந்தது. பால் ரிச்சர்டின் ஆன்மிகத் தேடல் மிராவைக் கவர்ந்தது. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மிகுந்த மதிப்போடு கவனிக்கத் தொடங்கினார்கள். மதிப்பு அன்பாக மலர... 1911ம் ஆண்டு மே 5ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

பால் ரிச்சர்டிற்கு அரசுத் தொடர்புகள் உண்டு. அரசாங்கப் பணியின் நிமித்தம் அவர் இந்தியா செல்ல முடிவு செய்தார். அப்போது மிரா, பால் ரிச்சர்டிடம், ‘‘இந்தியா செல்வதாக இருந்தால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’’ எனக் கோரினார்.‘‘என்ன’’ என்று கேட்டார் ரிச்சர்ட்.

சித்துக் கலைகளில் பயன்படுத்தப்படும் ஆறு முனைகளுடன் கூடிய இலச்சினை ஒன்றை ரிச்சர்டிடம் கொடுத்தார். ‘‘இது யூதர்களின் இலச்சினைதான். சாலமோன் முத்திரை, தாவீதின் அடையாளம் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் இந்த இலச்சினையின் மறைபொருள் என்னவென்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இதற்கான விடை இந்தியாவில் கிடைக்கும் என்கிறது என் உள்ளுணர்வு. அங்குள்ள மகான் யாரிடமாவது கேட்டு வாருங்கள்’’ என்றார்மிரா.

‘‘சரி’’ என்று அதனைப் பெற்றுக்கொண்ட பால் ரிச்சர்ட் இந்தியா பயணப்பட்டார்.புதுச்சேரி வந்த அவர் தன் பணிகளை முடித்துக் கொண்டபிறகு மிரா கொடுத்தனுப்பிய இலச்சினையைக் கையில் எடுத்தார். ‘இதுபற்றி யாரிடம் கேட்கலாம்?’ என நண்பர்களிடம் விசாரித்தார்.அவரது நண்பர்கள் அனைவரும் ஒருமித்து, ‘‘அரவிந்தரைப் பாருங்களேன்...’’ என்றார்கள்.
யார் அரவிந்தர்?சுதந்திரப் போராட்ட வீரரா? மகானா?

இப்படியான கேள்விகளுக்கு முன்னதாக அரவிந்தர் தன் மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதத்தைப் படிப்போம். அது சொல்லும் யார் அவர் என்பதை...‘அன்புக்குரிய மிருணாளினி, உன்னுடைய ஆகஸ்ட் 24ம் தேதி கடிதம் கிடைத்தது. உன் பெற்றோருக்கு மீண்டும் அதே துயரம் ஏற்பட்டிருப்பதை அறிந்து வருந்துகிறேன். நம்மை விட்டுப் போய் விட்டது எந்தப் பையன் என்று நீ எழுதவில்லை. இதைப் போன்ற நஷ்டம் ஏற்படும்போது நம்மால் என்னதான் செய்ய முடியும்?

சுகத்தை நாடினால் அதன் நடுவே துக்கம் இருப்பதும், இன்பத்துடன் எப்போதும் துன்பம் ஒட்டிக்கொண்டிருப்பதும்தான் இந்த உலகத்தின் இயல்பு. இந்த விதி குழந்தைகள் மீதுள்ள ஆசைக்கு மட்டும்தான் என்றில்லை; எல்லா விதமான ஆசைகளுக்கும் இது பொருந்தும். அமைதியான உள்ளத்தோடு எல்லா சுகத்தையும் எல்லா துக்கத்தையும் கடவுளின் காலடியில் அர்ப்பணித்துவிடுவது ஒன்றே இதற்கு மருந்தாகும்.

இப்பொழுது நான் முன்பு குறிப்பிட்ட அந்த விஷயத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன். யார் விதியோடு உன்னுடைய விதி முடிச்சு போடப்பட்டுள்ளதோ அவன் மிகவும் அசாதாரணமான குணமுடையவன் என்பதை நீ இதற்குள் புரிந்து கொண்டிருப்பாய். நான் வேலை செய்யும் துறையும் எனது வாழ்க்கையின் நோக்கமும் எனது மனப்பாங்கும் இன்று இந்நாட்டில் வாழும் மக்களுடையவை போலில்லை.

நான் எல்லா வகையிலும் அவர்களிட மிருந்து வேறுபட்டு அசாதாரணமானவனாக இருக்கிறேன். அசாதாரண நோக்கம், அசாதாரண முயற்சி, அசாதாரணமான ஆசைகளை உடைய ஒருவனைப் பற்றிச் சாதாரண மனிதர்கள் என்ன சொல்லுவார்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்கலாம்.

அவர்கள் அவனை ‘பைத்தியக்காரன்’ என்பார்கள். அந்தப் பைத்தியக்காரன், தான் எடுத்த காரியத்தில் வெற்றி கண்டுவிட்டால் அவனை ‘மகா மேதாவி’ என்று புகழ்வார்கள்.
தங்கள் வாழ்க்கை லட்சியத்தில் வெற்றி பெறுவோர் எத்தனை பேர்? ஆயிரம் பேர்களில் ஐந்து அல்லது ஆறு பேரே அசாதாரணமாயிருப்பார்கள்; இந்த ஐந்து அல்லது ஆறு பேரில் ஏதோ ஒருவன் வெற்றி பெறுவான். என்னைப் பொறுத்தவரை, வெற்றி ஒருபுறம் இருக்கட்டும்; நான் முழுவதுமாகக் களத்தில் இறங்கக்கூட இல்லை. அப்படியிருக்கும்போது நீ என்னைப் பைத்தியக்காரன் என நினைக்காமல் வேறு எப்படி நினைக்க முடியும்?

ஒரு பெண்ணுக்கு ஒரு பைத்தியக்காரனுடன் மாட்டிக்கொள்வது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்? ஏனெனில், பெண்களின் அபிலாஷைகளெல்லாம் லௌகீக சுக துக்கங்களிலேயே கட்டுப்பட்டுள்ளன. ஒரு பைத்தியக்காரனால் தனது மனைவியைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாது. அவளுடைய வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாகத்தான் அவனால் ஆக்க
முடியும்.

இந்து மதத்தைத் தோற்றுவித்தவர்கள் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் அசாதாரண குணமுடையவர்களை, அசாதா ரண முயற்சிகளை, அசாதாரண ஆர்வங்களைப் பெரிதும் விரும்பினார்கள். அவன் பைத்தியக்காரனோ, மேதாவியோ, அசாதாரண மனிதனுக்கு அவர்கள் அதிக மதிப்பு கொடுத்தார்கள். ஆனால், அசாதாரண மனிதனால் மனைவிக்குப் பெரிய சங்கடமாயிற்றே.
அந்தப் பிரச்னைக்கு முடிவு என்ன?

நோய் நீக்கி வாழ்வளித்த அன்னை!

அன்னையின் அற்புதம்

‘‘என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம், நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பேரானந்தத்தைத் தருவதற்காகவே நடந்தது. அது ஸ்ரீஅன்னையின் தரிசனம். 1967ல் கிடைத்தது. அப்போது நான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். என் உறவினர் ஒருவர் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி சென்று வருவார். அந்த முறை என்னையும் அழைத்துச் சென்றார். அன்னையை அனைவரும் வரிசையாகச் சென்று தரிசித்துக் கொண்டிருந்தார்கள். நானும் வரிசையில் நடந்தேன். வரிசையில் என் முறை. அன்னையின் எதிரே நிற்கிறேன். அன்னையின் திருமுகத்தை கை கூப்பியபடி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறேன்.

அன்னையும் என்னை கனிவோடும் தீர்க்கமாகவும் பார்க்கிறார். என் மனம் வார்த்தையாக்க முடியாத நிம்மதியால் நிரம்பி வழிகிறது. மதுரை மீனாட்சியைப் போல பார்வையினாலேயே எனக்கு அன்று தீட்சை தந்துள்ளார் அன்னை. இது காலம் எனக்கு உணர்த்திய உண்மை. அந்த தரிசனம் கிடைத்த அந்த நிமிடத்திலிருந்து என் மனம் பூரணமான ஒரு நிறைவில் திளைத்தது. இந்த நொடி வரை அந்த தரிசனம் தந்த மகிழ்ச்சி அப்படியே பசுமையாக நீடிக்கிறது.

படிப்பு முடித்து அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தேன். இதற்கிடையே ஜீணீரீமீt என்கிற எலும்பு நோய் என்னைத் தாக்கியது. இந்நோய் கோடியில் ஒருத்தருக்குத்தான் வரும். இனி, ஊன்றுகோல் உதவியோடுதான் நடக்க முடியும் என்றார்கள் மருத்துவர்கள். எனக்கு அன்னையை விட்டால் யார் கதி? அன்னையைத் தீவிரமாக வேண்டினேன். ‘உண்மையான பிரார்த்தனைக்கு நிச்சயம் பதில் உண்டு’ என்பது அன்னையின் அமுத வார்த்தை. என் பிரார்த்தனையை அன்னை கவனித்துக்கொண்டார். நான் படிப்படியாகக் குணமடைந்தேன்.

அன்னையின் மீதான பக்தி மேலும் தீவிரமாக, என் நண்பர்கள் எல்லாம் இணைந்து அரவிந்தர் ஸ்டடி சென்டரை ஆரம்பித்தோம். வாரந்தோறும் சந்தித்து அரவிந்த அன்னையைப் பற்றி படிப்பது, பேசுவதை வழக்கமாக்கினோம். அது மெல்ல வளர்ந்து இன்று ஸ்ரீஅரவிந்தர் அன்னை டிரஸ்ட்டாக மாறியுள்ளது. மதுரை-திருநகரில், அரவிந்தர் அவென்யூவில் ஸ்ரீஅரவிந்தர் அன்னையின் புனிதப் பொருட்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று தியான மையமாக செயல்பட்டு வருகிறது.

‘இனி நடக்கவே முடியாது’ என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நான், இப்போது இமயமலை மீதேறி அங்கு தியான மையத்தின் சார்பாக நடக்கும் இலவச தியான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். எல்லாம் அன்னையின் கருணை!’’ என சிலிர்க்கிறார், 68 வயது தொட்ட குற்றால சபாபதி தேசிகர்.

வரம் தரும் மலர்

மன நிம்மதி தரும் மஞ்சள் ரோஜா!

வாழ்வில் பணம் இருந்தும் உடல் ஆரோக்கியம் இருந்தும் தேவையற்ற பிரச்னைகளால் மன நிம்மதி இல்லாமல் துன்பத்தில் துவள்பவர்கள் ஏராளம். உண்மையில் மன நிம்மதி இருந்தால் மற்றவை எல்லாம் கிடைக்கும். இந்த மன நிம்மதியைத் தரும் வல்லமை வாய்ந்தது மஞ்சள் ரோஜா. அன்னைக்கு மஞ்சள் ரோஜா பூக்களை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, தொலைந்த நிம்மதி திரும்பக் கிடைக்கும்.

(பூ மலரும்)