ப்ளீஸ் சார்... ஹெல்மெட்போடுங்க!நெகிழ வைக்கும் குட்டிப் பையன்

‘‘தயவுசெஞ்சு ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க!’’ என இந்தக் குட்டிப் பையன் நம்மிடம் மன்றாடும்போது மனதில் ஏதோ செய்கிறது. ‘உன் நல்லதுக்காக நான் ஏன்யா உன்கிட்ட கெஞ்சணும்?’ என்ற ஈகோ இல்லாமல் அக்கறை காட்டும் இந்தப் பையனை, சென்னையில் டூ வீலர் ஓட்டுபவர் நிச்சயம் மிஸ் பண்ணியிருக்க முடியாது. ‘‘என் பேரு ஆகாஷ். யு.கே.ஜி படிக்கறேன்!’’ - மழலை மாறவில்லை அந்தக் குரலில். அதற்குள் எங்கிருந்து வந்தது இப்படியொரு சேவை மனம்?

‘‘நல்ல விஷயத்தை நாம ஒரு நொடி சொல்லிட்டு கடந்து போயிடறோம். குழந்தைங்கதான் அதை விடாப்பிடியா பிடிச்சிக்கிட்டு எல்லாருக்கும் நல்லது பண்ணணும்னு நினைக்கிறாங்க!’’ எனத் துவங்குகிறார் ஆனந்த்... ஆகாஷின் அப்பா!‘‘போன வருஷம் நான் குடும்பத்தோட பைக்ல போகும்போது, துரைப்பாக்கம் பக்கத்துல சுமார் 25 வயசு பையன் ஒருத்தன் தலையில அடிபட்டு விழுந்து கிடந்தான். நான் வண்டியை நிறுத்திட்டு ஆம்புலன்ஸை வர வச்சேன். ஆம்புலன்ஸ்ல ஏத்தும்போதே அந்தப் பையன் இறந்துட்டான்.

ரொம்ப கஷ்டமாகிடுச்சு. உடம்புல ஒரு காயம் கூட இல்ல. தலையிலதான் நல்ல அடி! ‘ஹெல்மெட் போட்டிருந்தா உயிர் போயிருக்காது’ன்னு என் மனைவிகிட்ட சொல்லி வருத்தப்பட்டேன். இதை ஆகாஷ் கேட்டுக்கிட்டிருந்தான். அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வர்ற நண்பர்கள், உறவினர்கள்னு எல்லார்கிட்டயும் ‘ஹெல்மெட் கட்டாயம் போடுங்க’னு சொல்ல ஆரம்பிச்சான். இது அவன் வயசுக்கு மீறினதா இருந்தாலும் நல்ல விஷயம்தானேன்னு நானும் கூட சேர்ந்தேன்.

முதல்ல, ஹெல்மெட் போடுறதோட அவசியத்தை வலியுறுத்தி பத்தாயிரம் நோட்டீஸ் அடிச்சு, அதை சிக்னல் பக்கமா நின்னு கொடுக்க ஆரம்பிச்சோம். நிறைய நண்பர்கள் சேர்ந்தாங்க. சில நாட்கள்ல கல்லூரி மாணவர்களும் கலந்துக்கிட்டாங்க. இந்த ஏழு மாசத்துல ஒரு லட்சம் நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கோம். அடுத்த கட்டமா பள்ளிகளுக்குப் போலாம்னு இருக்கோம். குழந்தைகள்கிட்ட இந்த விஷயத்தை எடுத்துட்டுப் போய், அவங்க பெற்றோரை ஹெல்மெட் கட்டாயம் அணிய வைங்கன்னு சொல்லப் போறோம். ஏன்னா இவ்வளவு பெரிய வேலைக்கு ஒரு ஆகாஷ் போதாது’’ என்கிறார் அவர் நம்பிக்கை பொங்க!

 பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.விவேகானந்தன்