காக்கி சட்டை‘மூன்று முகம்’ ரஜினி, ‘சிங்கம்’ சூர்யா மாதிரி, ஒரு சாதாரண கான்ஸ்டபிள் மாற முடியுமா? ‘முடியும்’ என்ற அல்வாவை மசாலா தொட்டு ஊட்டுவதுதான் ‘காக்கி சட்டை’.இன்ஸ்பெக்டர் ஆகும் கனவோடு கான்ஸ்டபிள் சிவகார்த்திகேயன். மற்றபடி வழக்கமான நேர்மை போலீஸ்தான்.

வடநாட்டில் இருந்து பிழைக்க வரும் சிறுவர்களை செயற்கையாய் மூளைச்சாவு அடைய வைத்து உடல் உறுப்புகளைத் திருடுகிறது ஒரு கூட்டம். சிவகார்த்தி எப்படி இந்தக் கூட்டத்தை சேஸ் பண்ணி, வில்லனை க்ளோஸ் பண்ணி, இன்ஸ்பெக்டர் கனவை நிறைவேற்றுகிறார் என்பதே க்ளைமேக்ஸ்.

டாப் ஹீரோக்கள் மிஸ் பண்ணி விட்ட படம். பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ளிட்ட ஏழெட்டு பேர் திரைக்கதைக்காக உழைத்திருப்பது வீண் போகவில்லை. ஆனாலும் இதே உடலுறுப்பு திருட்டை மிகச் சமீபத்தில் பார்த்துவிட்டதால் விறுவிறுப்பு குறைகிறது.

சிவகார்த்திகேயன் செம ஃப்ரெஷ். அவரின் ஜிம் உழைப்பு ஜம்மென்று தெரிய ஆரம்பித்திருக்கிறது. காதலியை முதல்முதலாக மீட் பண்ணுவதே பிச்சைக்கார வேடத்தில் என்பது ரசனை.

‘நம்பிக்கை... அதானே எல்லாம்’ என சிவா பிரபுவையே மிமிக்ரி செய்யும்போது தியேட்டர் அதிர்கிறது. ‘ஹரஹர மகாதேவா’ என வரும் ‘அந்த மாதிரி’ ஆடியோ ஸ்டைலில் அவர் ஃப்ளாஷ்பேக் சொல்லும்போது தியேட்டரில் அதிர்ந்து சிரிக்கிறார்கள். (இவ்வளவு பேருக்கா அது ரீச் ஆகியிருக்கு!) மொத்தத்தில் இளமையும், துடிப்பும், காதலும், நக்கலுமாக நம்மை வசப்படுத்துவதில் வழக்கம் போல சிவகார்த்திக்கு லைக்ஸ்.

காதல் எபிசோடே கம்மிதான் என்பதால் ஸ்ரீதிவ்யாவுக்கு ‘வ.வா.சங்கம்’ அளவுக்கெல்லாம் வேலை இல்லை. செய்திருக்கும் வரை நன்று. ஆனாலும் அந்த ஹோம்லி வட்ட முகத்துக்கு குத்தாட்டமெல்லாம் ஒத்து வரவில்லை பாஸ். ‘எதிர் நீச்சல்’ போலவே இதிலும் ஹீரோயின் காஸ்ட்யூமில் நீலம், மஞ்சள் காம்பினேஷன் ஒரே டாமினேஷன். அது ஏனோ... டைரக்டருக்கே வெளிச்சம்!படம் முழுக்க பயணிக்கும் கேரக்டரைத் தாங்கி நின்று ஜொலிக்கிறார் இமான் அண்ணாச்சி.

உயிர்த்தியாகம் செய்யும் மேலதிகாரியாக பிரபு ரொம்பவே பிராக்டிகல். வில்லனாக விஜய் ராஸ் பார்க்கப் புதுசு. அதனாலேயே ஒரு பயமும் சஸ்பென்ஸும் சாத்தியமாகியிருக்கிறது. உய
ரதிகாரி மகனை பணயமாக அனுப்புவது, கலவரம் ஏற்படுத்தி வில்லனை கள்ளத் துப்பாக்கியால் சுடுவது எனப் பார்த்துப் பழகிய ட்விஸ்டுகள் நிறைய. ஏன்... ‘‘பொண்ணுங்க என் பின்னாடி வரணும்னா நான் அவங்க ஹேண்ட் பேக்கைத்தான் புடுங்கிட்டு ஓடணும்’’ என்ற வசனம் கூட சந்தானம் அடிச்சதாச்சே! கொஞ்சம் ரிப்பிட்டிஷன் தவிர்த்திருக்கலாமே!

பாடல்களில் குளிர்ச்சி என்றால் பரபர இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் மிரட்சி... கேமராவும் கையுமாக டிஸ்டிங்ஷன் தட்டுகிறார் சுகுமார். இசை யாரு? அனிருத்தா? வழக்கமாக படம் வரும் முன்பே ஒரு பாட்டை மனப்பாடம் பண்ண வைப்பீங்களே...

அது எங்கே மிஸ்ஸிங்? ஒரு நர்ஸுக்குக் கூட கிடைக்கும்படி ஹாஸ்பிட்டல் சர்வரிலேயேவா போட்டு வைப்பார்கள் முறைகேடுகளை? ஒரு கான்ஸ்டபிள் இப்படி ஸ்காட்லேண்ட் யார்டு ரேஞ்சுக்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? லாஜிக் நிறையவே இடித்தாலும்... எக்கச்சக்க எம்பிராய்டரி, சம்கி வொர்க் செய்து பார்க்க வைத்திருக்கிறார்கள் ‘காக்கி சட்டை’யை!

- குங்குமம் விமர்சனக் குழு