இங்கு 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும்



பவர்கட் இல்லாத பளபள சோலார் கிராமம்

இரவிலும் சூரிய ஒளியின் வெளிச்சம் கிடைத்தால் எப்படியிருக்கும்? கற்பனையே வேண்டாம். நாகை மாவட்டம் பாகசாலை கிராமத்துக்குப் போனால், அதை நேரிலேயே பார்க்கலாம். சீர்காழியிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த கிராமம், இப்போது சோலார் மின்சாரத்தில் தகதகவென மின்னுகிறது.

அங்கன்வாடி தொடங்கி தெரு விளக்குகள் வரை எல்லாம் சோலார் மயம்! சுற்றியிருக்கும் கிராமங்கள் பவர்கட்டில் இருளாகிப் போனாலும், பாகசாலை பளிச்செனத் தெரியும்.

''கரன்ட் கட் பிரச்னை பெரிசா இருந்தப்போ ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் சார்... அதுவும் பரீட்சை நேரத்துல பசங்க படிக்க முடியாம ரொம்ப அவஸ்தைப்பட்டுட்டாங்க. ஆனா, இனி அந்த நிலைமை எங்க கிராமத்துக்கு வராது. ஏன்னா, ஊர்ப் பொது நூலகத்துக்கும் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு வந்துட்டோம். இது தவிர பஞ்சாயத்து ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம், தெரு விளக்குகள்னு எல்லா இடத்திலும் சோலார் பவர் வந்தாச்சு!’’ - பிரகாசமாகப் பேசுகிறார் பாகசாலை பஞ்சாயத்துத் தலைவர் கிருஷ்ணன்.

ஒரு கிராமத்து மக்களுக்கு இத்தனை தூரம் சோலார் விழிப்புணர்வு ஏற்படக் காரணம் என்ன? சென்னையைச் சேர்ந்த ‘உந்துனர்’ அறக்கட்டளையை கைகாட்டுகிறார்கள் ஊர் மக்கள். அதன் மேலாண் அறங்காவலர், ஸ்ரீப்ரியா சுவாமிநாதனைச் சந்தித்தோம். ‘‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மின்வெட்டு பூதாகாரமா இருந்த நேரம். குறிப்பா, கிராமங்கள்ல 20 மணி நேரம் மின்சாரம் இல்லாமப் போச்சு. நகர்ப்புறங்கள்ல பணக்காரங்க வீடுகள்ல இன்வெர்ட்டர், சோலார் சிஸ்டம் எல்லாம் போட்டுக்கிட்டாங்க.

நடுத்தரக் குடும்பங்கள்லகூட இது அத்தியாவசியமான விஷயமா ஆகிடுச்சு. ஆனா, எளிய கிராமத்து மக்களால பெரிய தொகை கொடுத்து அதை வாங்க முடியல. ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இதுக்கு ஏதாவது மாற்று வழிமுறை பண்ணணும்னு தோணுச்சு. அதனால, ஒரு கிராமத்தை தத்தெடுத்து சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை வழங்கலாம்னு நினைச்சோம். அந்தத் திட்டம் இப்போ நிறைவேறியிருக்கு’’ என்கிறார் அவர் சந்தோஷம் பொங்க. சுமார் 85 லட்ச ரூபாயில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சூரிய ஒளி மின்சாரத்தால் பாகசாலையில் பலன்கள் நிறைய!

‘‘ஆரம்பத்துல இந்தத் திட்டத்துக்காக நிறைய உழைக்க வேண்டி இருந்துச்சு. முதல்ல ஒரு ப்ளான் ரெடி பண்ணி நிதி உதவிக்காக மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அணுகினோம். பதில் பாசிட்டிவா வந்துச்சு. எந்த கிராமத்தைத் தேர்ந்தெடுக்கலாம்னு யோசிச்சோம்.

எங்க அறக்கட்டளையில ‘மக்கள் மையம்’னு ஒரு அமைப்பு இருக்கு. இந்த அமைப்பு மூலமா, நிறைய கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்துட்டு இருக்கோம். அப்போ, அந்த அமைப்பு பாகசாலை கிராமத்துல ரொம்ப ஆக்டிவ். இதனால, அங்கேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தோம். இதுக்கிடையில ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துல இருந்து, ‘தமிழக அரசும் இந்தத் திட்டத்துல இணைஞ்சா நல்லாயிருக்கும்’னு சொன்னாங்க.

ஏற்கனவே, இப்படிப்பட்ட முயற்சிகளுக்காக மாநில அரசில் ‘தன்னிறைவு’ன்னு ஒரு திட்டம் இருக்கு. அதை வச்சி கவர்மென்ட்ல பேசி ஓகே வாங்குனோம். பாதி நிதியை ஓ.என்.ஜி.சி.யும், மீதியை அரசும் கொடுத்து உதவினாங்க. உடனடியா வேலையை ஆரம்பிச்சு முடிச்சிட்டோம். இப்ப இங்க அரசு கட்டிடங்கள், தெருவிளக்குகள்னு மொத்தம் 186 விளக்குகள் சூரிய மின்சக்தியில எரியுது. முன்னாடி சாயங்காலம் ஆனா ஊரே வெறிச்சோடிக் கிடக்கும்.

இப்போ பளிச்னு இருக்கு. பசங்க தெரு விளக்குக்குக் கீழே விளையாடுறதைப் பார்க்கிறப்போ மனசு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. வீட்ல பவர்கட் ஆனா, மக்கள் வீதிக்கு வந்து வெளிச்சத்துல இருக்கலாம். படிக்கலாம். நூலகக் கட்டிடத்தில் கரன்ட்டைப் பத்தின கவலையில்லாம எந்த நேரத்துலயும் பசங்க படிக்கும்படி செய்துட்டோம். இப்போ அங்க எல்லா கட்டிடங்களுக்கும் கரன்ட் பில் மிச்சமாகி மாசம் ரூ.45 ஆயிரம் வரை சேமிக்கிறாங்க. அதை பஞ்சாயத்து வழியா வேற விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்னு இருக்காங்க.

சோலார்னா, சீக்கிரம் வீணாப் போயிடும்னு ஒரு கருத்து இருக்கு. அதனாலயே, இங்க சோலார் போட்டுக் கொடுத்த நிறுவனத்துக் கிட்ட மூணு வருஷ வாரன்ட்டி வாங்கியிருக்கோம். அதோட, ஒரு கண்காணிப்புக் குழுவும் ஏற்படுத்தப் போறோம். மூணு வருஷத்துக்குப் பிறகு பேட்டரி போயிடுச்சுன்னா என்ன பண்றது? இந்தக் குழு அதற்கான மூலதனத்தை உருவாக்கும். அப்புறம், இந்த கிராமத்துல இருந்து ரெண்டு பெண்களைத் தேர்ந்தெடுத்து எப்படி சோலார் பேனல்களைப் பராமரிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாச்சு.

அதனால, இன்னும் 20 வருஷம் இந்த சோலார் சிஸ்டம் நல்ல நிலையில் இருக்கும்னு நம்பலாம்!’’ என்கிற ஸ்ரீப்ரியா, ‘‘அடுத்ததா இதே முயற்சியை ஒரு நகராட்சியிலும் செய்து பார்க்கலாம்னு இருக்கோம். ரிசல்ட் பாசிட்டிவா அமைஞ்சா, மின் தட்டுப்பாட்டை அடியோடு ஒழிச்சிடலாம்!’’ என்கிறார் பாசிட்டிவ் பன்ச்சாக!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஜி.ராஜேந்திரன்