அப்டேட் அஜித்... காமெடி சென்ஸ் விஜய்!



ஸ்டில் போட்டோகிராபரின் ஜில் அனுபவம்

அஜித், விஜய், பிரபுதேவா, ராஜுசுந்தரம், விஜய்சேதுபதி, சித்தார்த், நயன்தாரா, அனுஷ்கா, ஆர்யா, மோகன்லால், இயக்குநர்கள் கவுதம் மேனன், விஷ்ணுவர்தன் என பலரின் குட் புக்ஸில் இருக்கிறார் சிற்றரசு. மலையாளம், தமிழில் இதுவரை 55 படங்களுக்கு மேல் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றி இருப்பவர். இப்போது சிற்றரசு, சினி ஸ்டில் போட்டோகிராபர் யூனியன் தலைவரும் கூட!

‘‘சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரத்தநாடு. கர்னாட்டிக் மியூசிக் கத்துக்கிட்டேன். பெரிய பாடகரா ஆகணும்கிற லட்சியத்துல சென்னை வந்தேன்.

இங்கே வந்த கொஞ்ச நாள்லேயே சங்கீதம் ஒரு கடல்... நான் கத்துக்கிட்டது எல்லாம் குளம் அளவுக்குத்தான்னு புரிஞ்சுச்சு. போட்டோகிராபிலயும் ஆர்வம்... ஸ்டூடியோ ஆரம்பிச்சேன். மலையாள இயக்குநர் ஐ.வி.சசி சார் படத்தில இருந்துதான் கேரியர் ஸ்டார்ட் ஆச்சு. தமிழ்ல மோகன் நடிச்ச ‘அன்புள்ள காதலுக்கு’ படத்தில இருந்து கேரியர் தொடங்கிச்சு. விஷ்ணுவர்தன் சாரோட ‘அறிந்தும் அறியாமலும்’ படத்துல இருந்துதான் என்னை கவனிக்க ஆரம்பிச்சாங்க. புதுசா எது ட்ரை பண்ணினாலும் விஷ்ணு சார் என்கரேஜ் பண்ணுவார்.

அவரோட ‘யட்சன்’ல சின்னதா கேரக்டர் கொடுத்திருக்கார்!’’ என்கிற சிற்றரசு, பாடகராக முடியவில்லை என்றாலும் பாடகியை மணந்திருக்கிறார். இவர் மனைவி கங்கா, ‘போக்கிரி’யில் ‘மாம்பழமாம்.. மாம்பழம்...’ ஹிட் பாடல் பாடியவர். ‘‘நாங்க ஃபீல்டு ஃபோட்டோகிராபர்ஸ். ஒரு படம் பூஜை போடுவதில் ஆரம்பிச்சு, ஷூட்டிங் முடிஞ்சு, பப்ளிசிட்டி வரை போட்டோகிராபருக்கு வேலை இருக்கு. ஃபிலிம் ரோல் இருந்த காலத்தில், ஒரு படத்துக்கு ஐம்பது, அறுபது ரோல் ஃபிலிம் செலவு ஆகும். இப்போ, ‘சிப்தானே. நிறைய எடுங்க...’ன்னு சொல்லிடுறாங்க.

அஞ்சாயிரம், ஆறாயிரம் போட்டோஸ் க்ளிக்கித் தள்ளிடுறோம். ஆனா, பப்ளிசிட்டினு வரும்போது வேற போட்டோகிராபர வச்சி எங்களை விட நாலு மடங்கு அதிக சம்பளம் கொடுத்து பயன்படுத்துறாங்க. அவங்க வேலை ரெண்டு நாள்தான். நாங்கதான் நூறு நாளைக்கும் மேல உக்காரக் கூட இடமில்லாம ஒரு படத்துக்காக உழைக்கிறோம்!’’ என்கிறவர், அந்தக் கள அனுபவத்திலிருந்து சில தகவல்களைப் பகிர்கிறார்...

அஜித்:

‘பில்லா’வில் ஆரம்பிச்சி, ‘ஏகன்’, ‘அசல்’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’னு 6 படங்கள் அஜித் சாரோட வொர்க் பண்ணியிருக்கேன். அவர் அபூர்வமானவர். என்கிட்ட இல்லாத ஹை டெக் கேமரா கூட அவர்கிட்டே இருக்கும். எலக்ட்ரானிக் பொருட்கள்ல இருந்து கிச்சன் பொருட்கள் வரை எதை வாங்கினாலும், உடனே நெட்ல அதைப்பத்தி முழுக்க படிச்சிடுறார். அப்டேட்டா இருக்கறதில அஜித் சாரை மிஞ்ச ஆளில்லை!

விஜய்:

‘அழகிய தமிழ்மகன்’, ‘போக்கிரி’ விஜய் சாரோட வொர்க் பண்ணினேன். அவர் ஸ்பாட்ல அதிகம் பேசமாட்டார்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, அவர் பயங்கரமான காமெடி சென்ஸ் உள்ளவர். ஷாட்ல காமெடி சீன் வர்றப்ப, கேமரா ஓடுதுனு கூட பார்க்காமல், மனசு விட்டு சிரிச்சு ரசிப்பார். பழகுறதுக்கு இனியவர். டான்ஸ் மூவ்மென்ட்ஸ்ல நல்ல ஸ்டில் அமைஞ்சுட்டா, ‘கலக்கிட்டீங்க’ன்னு உடனே பாராட்டுவார்.

பிரபுதேவா:

‘எங்கேயும் காதல்’ல வொர்க் பண்ணியிருந்தேன். டைரக்டரே பிரபுதேவாதானே. பிரான்ஸ் ரோட்டுல ஷூட்டிங் போயிட்டு இருந்தது. அங்கே ஒருத்தர் நடந்து போய்க்கிட்டிருந்தார். அவரை கவனிச்ச பிரபுதேவா என்னைக் கூப்பிட்டு, ‘சிட்டு, அவர் ஸ்போர் ட்ஸ்ல பெரிய ஆளு... அவரோட நான் ஒரு போட்டோ எடுத்துக்கணும்’னு சொல்லி எடுக்கச் சொன்னார். குழந்தை மனசுக்காரர்.

ராஜுசுந்தரம்:

எனக்கு பிரபுதேவாவை விட, ராஜுசுந்தரம் ரொம்ப க்ளோஸ். அவரோட முதல் படத்துக்கு நான்தான் வொர்க் பண்ணிக் கொடுத்தேன். ‘எங்கேயும் காதல்’ படத்துல ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தாங்க. ராஜுவை கண்டால் பிரபு சாருக்கு பயம்... பிரபுவை கண்டால் ராஜுவுக்கு பயம். ஒருத்தருக்கு ஒருத்தர் மேல அவ்வளவு மரியாதை!

ஆர்யா:

‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஓரம்போ’, ‘ஆரம்பம்’, ‘யட்சன்’னு ஆர்யாவோட அடுத்தடுத்து படங்கள் பண்ணிட்டிருக்கேன். ரொம்ப ஜாலி பர்சன். என் நலனில் அக்கறை உள்ளவர். ‘டேய் மச்சான்... ஓகே மச்சான்...’னு பேசிக்கிட்டு எப்பவும் ஹேப்பியா இருப்பார். ‘நான் கடவுள்’ பண்ணினதுக்கு அப்புறம்தான் ஆளே மாறி, பார்ட்டி பக்குவமாகிட்டார்.

நயன்தாரா:

ஷூட்டிங்ல நடிகைகள்கிட்டே நான் பேசிக்கவே மாட்டேன். ஆனா, நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும். ரெண்டு படங்கள் அவங்களோட வொர்க் பண்ணியிருக்கேன். நல்லா பழகுவாங்க. என்கிட்ட பர்சனலா எந்த விஷயம்னாலும் ஷேர் பண்ணிக்குவாங்க. பெரிய ஹீரோயின்ங்கற பந்தா அவங்ககிட்ட கிடையாது.

- மை.பாரதிராஜா