ஒரு பவுனுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலை குறையும்!



மத்திய அரசின் புதுமைத் திட்டம்

தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு; அதிக தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் நாடு... இப்படி இந்தியாவுக்கு ஏகப்பட்ட பெருமைகள் (?) உண்டு. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக நம் அந்நியச் செலாவணி அதிகம் கரைவது தங்க இறக்குமதியில்தான். ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 1000 டன் தங்கம் இந்தியாவுக்குள் வருகிறது. திருட்டுத்தனமாக வரும் 200 டன் தனி.

ஒரு நாட்டில் அதிக தங்கம் இருந்தால் அந்நாட்டின் பணமதிப்பு உயரும். ஆனால், இந்தியாவில் நேர் எதிர் விளைவு. கட்டுப்பாடில்லாத தங்க இறக்குமதியால் அந்நியச் செலாவணி கரைகிறது. அதனால் பணமதிப்பு பின்வாங்குகிறது. வந்து குவியும் தங்கத்தால், வரி வருவாய் தவிர நாட்டுக்கு வேறெந்த பயனும் இல்லை.

எல்லாம் நகைகளாக, சேமிப்பாக வீட்டுக்குள் முடங்கிவிடுகிறது. இப்படி சுமார் 20 ஆயிரம் டன் தங்கம் இந்தியர்களின் வீடுகளில் இருப்பதாகக் கணித்திருக்கிறது உலக தங்கக் கவுன்சில். கோயில்களில் குவிந்திருக்கும் தங்கம் இந்தக் கணக்கில் வராது.  அண்மையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த பட்ஜெட், இந்தத் தங்கத்தைத்தான் குறி வைக்கிறது.

தங்கத்தை மையமாக வைத்து மூன்று திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று, தங்க டெபாசிட் திட்டம். மக்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். அதற்கு வட்டி வழங்கப்படும். முதிர்வுக்குப் பிறகு அதே அளவு தங்கம் திருப்பித் தரப்படும்.  இரண்டாவது, தங்கப் பத்திர திட்டம். உங்களுக்கு எவ்வளவு தங்கம் தேவையோ அதற்கான தொகையை வங்கிகளில் செலுத்தலாம். ஆனால் தங்கத்துக்குப் பதில் பத்திரம் தருவார்கள். முதிர்வுக் காலத்துக்குப் பிறகு அந்தப் பத்திரத்தை ஒப்படைத்து, அப்போதைய தங்க விலை நிலவரப்படி ரொக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவது, தங்க நாணயத் திட்டம். அசோகச் சக்கர சின்னத்துடன் அரசே தங்க நாணயத்தை வெளியிடும். ஒருகாலத்தில் பிஸ்கெட்டாக தங்கம் இறக்குமதியாகும். இப்போது பெரும்பாலும் நாணயங்களாகவே வருகின்றன. உள்நாட்டிலேயே நாணயத்தைத் தயாரித்து விட்டால் இறக்குமதியைக் குறைக்கலாம் என்பது அமைச்சரின் எண்ணம். அதிக எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் ஒருசேர உருவாக்கியிருக்கும் இந்தத் திட்டங்கள் பயனளிக்குமா?

‘‘நிச்சயம் பயனளிக்கும்’’ என்கிறார், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீஜெயந்திலால் ஜே ஜலானி. ‘‘இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் தங்கத்தின் விலை கணிசமாகக் குறையவும் வாய்ப்புண்டு’’ என்கிறார் அவர்.‘‘இறக்குமதியாகும் மொத்த தங்கத்தில் 30% அப்படியே வீடுகளில் முடங்கி விடுகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. இறக்குமதி அதிகரிக்க இதுவே காரணம்.

நாணயங்களாகவே இறக்குமதி செய்யப்படுவதால் மக்கள் அதை சேமிப்பாக நினைத்து வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். முடங்கிக் கிடக்கும் 20 ஆயிரம் டன் தங்கத்தில் நான்கில் ஒரு பங்கு நாணயங்களாகவே இருக்கிறது. இதில் 10 முதல் 15 சதவீதம் வெளியில் வந்தாலே இறக்குமதி கணிசமாகக் குறைந்து விடும். காலம் காலமாக தங்கமாகவே நாம் சேமித்துப் பழகியிருக்கிறோம். சிறிது சிறிதாக சேமித்து, பிறகு பெரிய அளவில் நம் மக்கள் முதலீடு செய்கிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலம், தங்க சேமிப்பில் வழக்கமான லாபத்தை விட கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளில் ஏகப்பட்ட அந்நிய செலாவணியை நாம் இழந்திருக்கிறோம். நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. நகைக்கடைக்காரர்களையும் இதில் இணைத்திருப்பதால் உள்நாட்டுச் சந்தைக்கும் பயனளிக்கும். இந்தத் திட்டம் மக்களை சரியாகச் சென்றடைந்தால் தங்க இறக்குமதியை குறைத்துவிடலாம். உள்நாட்டுக்குள்ளேயே தங்கம் பரவலாகும்போது, உலக சந்தையில் தங்கம் என்ன விலை விற்கிறதோ அதே விலைக்கு இங்கேயும் விற்க முடியும். இதனால் தங்கத்தின் விலை குறையும்...’’ என்கிறார் ஜலானி.

இது தொடர்பாக ஒரு கணக்கையும் போட்டுக் காட்டுகிறார். ‘‘மார்ச் 4 நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம், 1200 டாலர். அதன் அடிப்படையில், 24 கேரட் தங்கம், 1 கிராம் 2400 ரூபாய். இறக்குமதி வரி, விற்பனை வரி, இதர செலவு களைச் சேர்த்து சென்னையில் 1 கிராம் 2700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரிகள் இல்லாவிட்டால் 2400 ரூபாய்க்கே விற்க முடியும். ஆக, குறைந்தது 1 சவரனுக்கு 2000 ரூபாய் குறைய வாய்ப்புண்டு’’ என்கிறார் ஜலானி.

இத்திட்டப்படி, பி.ஐ.எஸ். தரச் சான்றோடு நகைகளை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்கச் சாலையில் அந்த நகை களை உருக்கி, வங்கி இருப்பு வைத்துக் கொள் ளும். மாதா மாதம் வட்டி வழங்கப்படும். முதிர்வுக்காலத்திற்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்த அதே அளவு தங்கம், அரசு வெளியிட உள்ள நாணயமாகத் திருப்பித் தரப்படும். 3% முதல் 5% வட்டி வழங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் இந்த வட்டி மூலம் கிடைக்கும் தொகைக்கு வருமான வரி செலுத்தவும் தேவையிருக்காது.

இத்திட்டங்கள் பற்றி மிகவும் நம்பிக்கையோடு பேசுகிறார் பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன். ‘‘தங்க சேமிப்பு பத்திரம் மூலம் இறக்குமதியை கணிசமாகக் குறைக்க முடியும். இறக்குமதி குறைந்தால் பணம் மதிப்பு பெறும். டெபாசிட் திட்டத்தின் மூலம் தனிநபர் பயன்பாட்டில் மட்டுமே இருக்கும் தங்கத்தை வங்கிக்குக் கொண்டு வந்து தேசத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தலாம். அரசு இத்திட்டத்தை மக்களிடம் விரிவாகக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். தங்கத்தின் மீதான மக்களின் மனநிலையை மாற்றவும் முயற்சிக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

பொருளாதார நிபுணர் நாகப்பன், இத்திட்டம் பற்றி சில சந்தேகங்களை முன் வைக்கிறார். ‘‘இப்போதைக்கு இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. எவ்வளவு வட்டி தருவார்கள்? முதிர்வுக்காலம் எவ்வளவு ஆண்டுகள்? என்னென்ன விதிமுறைகள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தபிறகே இதைப் பற்றி விரிவாகப் பேசமுடியும். பெருமளவு தங்கம் மிடில் கிளாஸ் மக்களிடமே இருப்பதாக நம்புகிறார்கள். கணக்கில் வரும் இந்த தங்கத்தைக் குறி வைத்துத்தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் யதார்த்தம் என்னவென்று எல்லோருக்குமே தெரியும். 100 குடும்பங்கள் தனித்தனியாக வாங்கும் தங்கத்தை ஒரே மனிதர் மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது இங்கு சாதாரணம். அவர் அதை எப்படி வங்கிக்குக் கொண்டு வருவார்? பொது மன்னிப்பு அளித்து, கணக்கில் வராத பணத்தில் வாங்கப்பட்ட தங்கத்தையும் இந்தத் திட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு பெரிய பிரச்னை’’ என்கிறார் நாகப்பன். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

- வெ.நீலகண்டன்