வர்ஷாவின் கணவனுக்கு பிரமோஷனுடன் கொல்கத்தாவிற்கு மாற்றல் கிடைத்தது. கொஞ்ச நாளிலேயே அடுத்த மாற்றலில் சொந்த ஊருக்குத் திரும்பி விடலாம் என்பதால், இப்போதைக்கு கணவனும் மனைவியும் மட்டும் கொஞ்ச நாளைக்கு அங்கே இருப்பதாக ப்ளான். கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.‘‘நீ ரெடியாகும்மா...

நான் பெட்டியை அடுக்கறேன்!’’ - அவள் மாமியார் வடிவு அனைத்திலும் ஒத்தாசையாக இருந்தாள். அவர்களை வழியனுப்ப வர்ஷாவின் அம்மாவும் வந்திருந்தாள். எப்போதும் தன் மகளைக் குற்றம் சொல்லும் சம்பந்தியம்மாள் வடிவு, இப்படி கரிசனமாக நடந்து கொள்வது அவளுக்கே பிரமிப்பை ஏற்படுத்தியது. ஏர்போர்ட்டில் வைத்து ரகசியமாக, ‘‘உன் மாமியாருக்கு என்னடி ஆச்சு? திடீர்னு நல்லவளாயிட்டா..!’’ என்றாள் மகளிடம்.
‘‘அது ஒண்ணுமில்லைம்மா. போன வாரம் சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு என் ரெட்டை வட சங்கிலியை வாங்கிப் போட்டுக்கிட்டுப் போனாங்க. அது இன்னும் அவங்ககிட்டதான் இருக்கு. அதை எங்கே கேட்டுடப் போறேனோன்னுதான் இப்படி பதவிசா நடந்துக்கறாங்க!’’‘‘அடிப்பாவி மகளே, இப்படி அநியாயத்துக்கு பத்து பவுன் செயினை விட்டுட்டு வந்துட்டியே’’ - அம்மா பதறினாள்.
‘‘அம்மா நான் போற இடமோ புதுசு. அங்கே பாதுகாப்பெல்லாம் எப்படி இருக்குமோ என்னவோ! அந்த சங்கிலி மாமியார்கிட்ட இருக்கறது சேஃப்டிதானேம்மா’’ - வர்ஷா கண் சிமிட்டினாள் தெளிவாக!
ராஜன்புத்திரன்