காரணம்



‘‘என்ன சரவணன் சார்... தலைமுறை தலைமுறையா நீங்க நடத்துற மெட்ரிக் ஸ்கூல்லதான் எங்க புள்ளைங்க எல்லாம் படிக்குது. ஆனா, உங்க பையனை அங்கே படிக்க வைக்காம வேற பள்ளிக்கூடத்துக்கு கூட்டி வர்றீங்க?

உங்க ஸ்கூல் எஜுகேஷன் மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?’’ - ரொம்ப நாளாக சரவணனை நடு ரோட்டில் மடக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராமசாமி இன்று மடக்கிவிட்டார். சரவணன் அசரவில்லை. நிதானமாக பதில் சொன்னார் அவருக்கு.

‘‘சார், என் பையன் எங்க ஸ்கூல்லயே படிச்சா, டீச்சர்களே அவனைக் கண்டிக்க தயங்குவாங்க. ‘இது எங்க ஸ்கூல்’னு ஒரு கர்வம் அவனுக்கே வந்துடும். கூடப் படிக்கிற பசங்க அவன்கூட இயல்பா பழக மாட்டாங்க. நண்பர்களே இல்லாம அவன் தனித் தீவா ஆகிடலாம். இல்லாட்டி, கூடப் படிக்கிற பசங்களை அவனே மிரட்டக் கூட செய்யலாம்.

அப்படியெல்லாம் இல்லாம, அவன் நல்லா படிச்சு அவனுக்கு நாங்க முதல் மார்க் போட்டாலும் ‘தன் பிள்ளையைத் தூக்கி வைக்கிறாங்க’ன்னு எங்களுக்குக் கெட்ட பேர்தான் மிஞ்சும். அதனாலதான் வேற ஸ்கூல்ல சேர்த்திருக்கேன். மற்றபடி எந்த உள்நோக்கமும் கிடையாது!’’கேள்வி கேட்ட ராமசாமி, உண்மை புரிந்து மடமடவென தலையாட்டி மன்னிப்பு கேட்டுக் கிளம்பினார்.               

 வி.சகிதா முருகன்