ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 9

‘அன்று அவர் அள்ளி எடுத்த ஏடுகளில் பல செல்லரித்துப் போயிருந்தன. காகிதம் உருவாக்கப்படாத காலத்தில் பனையனே பதியன்! அதாவது, பனை ஏடுகளே பதிவுகளை ஏற்றுக்கொள்பவை. இதனால் பனையேறியைத் தவிர மற்றவர்கள் பனை மரம் மீது தங்கள் கால்கள் படுவதை ஒரு பாவமாகக் கருதினார்களாம். பனைமரமே ஒரு கடவுளாகத்தான் பார்க்கப்பட்டது. அது தரும் கள், காட்டுச் சாமிகளுக்கான படையலில் இடம் பெறும். அது தரும் பதநீர், வளரும் பிள்ளைகளுக்கும், பருவத்தின் வாசலில் நிற்கும் பெண்களுக்கும் சூட்டைத் தணிக்கும்.

அதன் நுங்கு, குழந்தைகளுக்கு மிகவும் ஊட்டமான உணவு; எல்லோருக்கும் மிக ஏற்ற உணவு. பனம்பழமோ மலச்சிக்கலை இல்லாமல் செய்யும். கிழங்கு, பல் ஈறுகளுக்கு பலம். அதன் இலையோ சரஸ்வதி கையின் ஏடாகும். கூடுதலாக இதுவே ‘தாலம்’ எனும் தாலியாகியது! இம்மட்டில் ஒரு பனை, தென்னையை விடவே ஒருபடி கூடுதலான சிறப்புடையது. பனை உரசுவதை வைத்து காற்றின் வேகத்தையும் கண்டறியலாம்.

இப்படி ஒரு பனைமரம் சகல விதமாகவும் பயன்படுவதால் உ.வே.சாமிநாதய்யர் அவர்களும் பனைமரத்தைக் கண்டால் வணக்கம் புரிவாராம். அன்று அவர் தேடி எடுத்த ஏடுகளை காலகாலத்துக்கும் காப்பாற்றுவதற்கு ஒரே வழி, அதிலுள்ள பாடல்களை அச்சிலேற்றுவது ஒன்றுதான்! இந்தக் காரியத்தையும் அய்யர் அவர்களே செய்தார்.

அதனாலேயே ‘சீவக சிந்தாமணி’ நூல் வடிவம் பெற்றது. ஆனால் அது அய்யரை கடன்காரராக்கி விட்டது. இருந்தும் அய்யர் அது குறித்து கவலைப்படவில்லை. அவரது அரும்பணியைப் போற்றி ராமநாதபுரம் சேதுபதி, விலையுயர்ந்த அசல் தங்க ஜரிகையாலான பொன்னாடையைப் போர்த்தியபோது, அதை ஐந்நூறு ரூபாய்க்கு ஏலம் விட்டு, ‘சீவக சிந்தாமணி’ நூலுக்கான அச்சகக் கடனை அய்யர் அடைத்தாராம்.

தேடல் என்பது மனிதர்களை எப்படியெல்லாம் செயல்பட வைக்கிறது என்பதைக் கூறிய என் அப்பா, ‘நீயும் அய்யர் போல சமூகத்துக்குப் பயன்படும் விதமாக அரியவற்றைத் தேடு...’ என்று சொன்னதுதான் நான் ஒரு பெரும் ஆய்வாளராவதற்கே அடிப்படை!’  கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

ப்ரியாவின் முகத்தில் ஒருபுறம் மாற்றம் ஏற்பட, மறுபுறம் மோர் கொண்டு வந்தாள் முத்தழகு. அதை ஒரே மடக்கில் குடித்த வள்ளுவர், ‘‘மணமா இருக்கும்மா மோர்... உன் ஒரு விரல்ல சக்கர ரேகை இருக்குன்னு நினைக்கறேன்...’’ - என்றார்.
‘‘என்ன வள்ளுவரே... நியூமராலஜிக்கு அடுத்து இது கைரேகையா?’’ - சற்று கிண்டலாகக் கேட்டார் கணபதி சுப்ரமணியன்.

‘‘ஆமாங்க... ‘நடு நுனி சக்கரமானால் தொடுபொருள் படு ருசியாகும்’னு பாட்டே இருக்குங்களே...’’‘‘எப்படி... எப்படி?’’‘‘அதாவது நடுவிரல் நுனியில் சக்கர ரேகை இருந்தால், அவங்க தொட்டு சமைக்கற உணவெல்லாம் ருசியாதான் இருக்குமாம்...’’‘‘இதை யார் எழுதினது?’’

‘‘யாரு... எல்லாம் எங்க முப்பாட்டன்மாருங்கதான்...’’‘‘எங்க, நீ கைய நீட்டு...’’ - வள்ளுவர் கை நீட்டச் சொல்ல, முத்தழகுவும் நீட்டினாள். அவள் நடுவிரல் நுனியில் சக்கர ரேகை இருந்தது. ப்ரியாவும் நெருங்கி வந்து பார்த்து ஆச்சரியமானாள்.‘‘அப்ப உங்களுக்கு கைரேகையும் தெரியும்னு சொல்லுங்க...’’‘‘ஜோசியம்தான் ஜீவனம்னு ஆயிட்ட நிலைல கைரேகை மட்டுமா, பட்சி சாஸ்திரம், சாமுத்ரிகா லட்சணம், நிமித்திகம்னு எல்லாத்துலயும் ஞானம் இருந்தாதானே ஜோசியம் சொல்ல முடியும்?’’

‘‘இந்த ரேகைகள் என்பதெல்லாம் கருவுல குழந்தையா இருக்கைல கைய மடக்கி வச்சிருக்கறதால உருவாகற கோடுகள்னு விஞ்ஞானிகள் சொல்றாங்களே..?’’‘‘அப்படின்னா எல்லாருடைய கைலயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதானே ரேகைங்க இருக்கணும். ஆனா அப்படி இல்லையே... அவ்வளவு ஏன்? இந்த விரல் நுனில ஒரு விரல்ல சக்கரம், ஒரு விரல்ல சங்குன்னு மாறி மாறி இருக்குதே... அது எதனால?’’ ‘‘அப்ப ஏன் கைரேகை பார்த்து சொல்ற பல விஷயம் நடக்க மாட்டேங்குது. கைரேகை பாக்கறவனும் தெருத்தெருவா அலையறவனாத்தானே இருக்கான்..?’’

‘‘இந்த மாதிரி நுட்பமான கேள்விகள் நூறு இருக்கு. எல்லாத்துக்கும் சரியான பதிலும் இருக்கு. இது கலிகாலம். ஒரு நல்லதுன்னா, அதோட போட்டி போட மூணு கெட்டது இருக்கும். கெட்டது அதிகமா இருக்கறதாலேயே, நல்லது பெருசா கண்ணுக்குத் தெரியறதில்ல. இந்த நிலை இன்னிக்கு நேத்து இல்ல, ஆராய்ச்சி சாமி...

ராமாயண, மகாபாரத காலத்துலயே இப்படித்தான்!’’- வள்ளுவர் பதிலை மறுக்க முடியவில்லை. வெல்ல உருண்டையை எந்தப் பக்கம் தொட்டாலும் தித்திப்பது போல, மனிதர் எந்தக் கேள்விக்கும் பதில் தருபவராக இருந்தார். ப்ரியாவிடம் பிரமிப்பு கூடிக்கொண்டே போனது. கூடவே ஒரு கேள்வியும்...

‘‘அய்யா...’’‘‘என்ன கண்ணு...’’- வள்ளுவர் ‘கண்ணு’ என்றழைத்தது அவளுக்கு மிகப் பிடித்துப் போனது. அதில் ஒரு வாஞ்சை கமழ்ந்தது. அது அவர் மேல் ஈடுபாட்டை அதிகமாக்கியது.
‘‘அய்யா... விரல் ரேகைக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம்? சமையல்ங்கறது எதை எதை எப்படி சேர்க்கறோம், எவ்வளவு சேர்க்கறோம்ங்கற ஒரு விஷயம்.

சொல்லிக் கொடுத்தா யார் வேணா சமைக்கலாம். ஆனா, இதை ரேகையோட சம்பந்தப்படுத்தறது சரியா படலையே..?’’ என்று அவள் கேட்க, வள்ளுவர் அசராமல் வாயைத் திறந்தார். ‘‘எல்லாம் சரிதான் கண்ணு. அப்படின்னா எல்லா ஹோட்டலுமே நல்ல ஹோட்டலா, எல்லா வீட்லயும் எல்லா வேளையும் நல்ல ருசியோடதானே இருக்கணும்? ஆனா, சிலருக்கு மட்டும் ஏன் இதுல பேர்?’’

‘‘அவங்க முழுமையான ஈடுபாட்டோட செய்யறதால இருக்கும்?’’‘‘இதைக் கூர்ந்து கவனிச்சிட்டு ஒரு கைக்கு நூறு கையால சாப்பிட்டு பார்த்திட்டு சொல். நான் கேட்டுக்கறேன். கைங்கறது உடம்போட உறுப்பு மட்டுமில்ல - இந்தக் கைலதான் எல்லாம் இருக்கு. அஞ்சு விரலும் ஒரே நீளத்துல இல்லாம, நுனில ஒரு பக்கம் மட்டும் நகத்தோட அது இருக்கறதெல்லாம் சிருஷ்டியோட அற்புதம். இந்த கையாலதான் உழைக்கறோம்.

இதாலதான் சாப்பிடறோம். இதால உலகை அழிக்கலாம், ஒரு புது உலகத்தை உருவாக்கலாம். இதை வெறும் எலும்பா, சதையா பார்த்தா, இதோட அற்புதம் தெரிய வராது. இதுல நீ யார்ங்கற விபரம் இருக்கு. இதைவிட உனக்கு உதவி செய்யற ஒரு உறுப்பு இந்த உலகத்துல வேற கிடையாது. இதைக் கொண்டு என்ன செய்யறோம்ங்கறதுலதான் உன் உயர்வும் தாழ்வும் இருக்கு.

அதனாலதான் பெரிய ஞானிகள் கண் முழிக்கும்போதே தன் இணையில்லாத தோழனான இந்தக் கை முகத்துல முழிப்பாங்க. இந்தக் கையால நல்லதை மட்டுமே செய்வாங்க... உடம்பு களைப்படையும்போது, மனசு குழம்பும்போது, விரல்களால் முத்திரை போட்டு பிரபஞ்ச சக்தியை இழுப்பாங்க. அருள் உள்ள மனிதர்களின் கைகளைக் கண்டா, கைகுலுக்கி அந்த அருளோட இணைப்பை உருவாக்கிக்குவாங்க.

மேலான சக்தி உள்ள இடத்துல இரண்டு கையை சேர்த்து மொட்டுபோல ஒரு கூம்பை உருவாக்கி, அந்த நுனி வழியா அங்க உள்ள சக்தி உடம்புல பாயச் செய்வாங்க. இதை ‘கும்பிடுறது’ன்னு சாதாரணமா சொல்லிடறோம். கும்பிட்டாலே நல்லது தொடங்கிடும். ஒரு ரவுடிப் பயகிட்ட கூட உன் கும்பிடு பிரமாதமா வேலை செய்யும். அவன் ரௌத்திரம் செயல் இழக்கும். பதிலுக்கு அவனும் கும்பிடுவான். சிரிப்பான்... என்ன நினைச்சே இந்த கைகளை..?’’

- வள்ளுவர் பொங்கி வழிந்தார். ப்ரியா விக்கித்துப் போனாள்.‘‘கிராண்ட்பா... இவர் ஒரு தகவல் சுரங்கம். எந்த டாபிக்கைத் தொட்டாலும் விஷயம் கொட்டுது. இவர் ஒரு அப்நார்மல் கேரக்டர் கிராண்ட் பா. இவரை நாம ப்ரொட்டக்ட் பண்ணியே தீரணும்!’’ என்று கணபதி சுப்ரமணியனிடம் பேசியவளை ஒரு அரைச்சிரிப்போடு பார்த்தார் வள்ளுவர்.
‘‘என்ன சிரிக்கிறீங்க... நான் என்ன சொன்னேன்னு தெரியுமா?’’

‘‘ஏன் தெரியாம... என்னை சாக விடக்கூடாதுன்னுதானே கண்ணு சொன்னே?’’‘‘ஆமா... இப்ப சொல்றேன்! நீங்க அந்த டாபிக்கையே நினைக்கக்கூடாது!’’‘‘நான் அப்படித்தாம்மா இருக்கேன். சாவுக்கு பயந்திருந்தா இப்படியா பேசிக்கிட்டு இருப்பேன்..?’’‘‘உண்மைதான்... உங்ககிட்ட செத்துடுவோம்ங்கற பதற்றமோ, கவலையோ கொஞ்சமும் இல்லை. ரொம்பவே தெளிவா இருக்கீங்க. ஆனா செத்துடுவேன்னு நம்பறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு!’’

‘‘நான் தெளிவான கால ஞானின்னா நம்பித்தாம்மா தீரணும். இப்ப கூட நான் எனக்கான சாவை ஒரு மாற்றமா மட்டுமே பாக்கறேன்...’’‘‘வேண்டாம்... அதைப் பற்றி இப்ப பேசவே வேண்டாம். தாத்தா இவரை ரூமுக்கு கூட்டிக்கிட்டு போய் இவர் கூடவே இருங்க. நான் வர்ஷன் கிட்ட பேசிட்டு வரேன்...’’ - ப்ரியா விலகி வெளியே தோட்டத்துப் பக்கம் வந்தாள். கைபேசி வழியாக வர்ஷனைப் பிடித்தாள்.

‘‘எங்கடா இருக்கே?’’
‘‘என்ன ஆரம்பமே அதகளமா இருக்கு...’’
‘‘எங்க சார் இருக்கீங்க?’’
‘‘உடனே பாதாளத்துக்கு இறங்கிடுவியா?’’
‘‘ஐயோ... சொல்லித் தொலைடா!’’

‘‘கூல் பேபி... என்ன வள்ளுவர் வந்துட்ட டென்ஷனா?’’
‘‘டென்ஷன்தான்... ஆனா இது ஒரு டைப்பான டென்ஷன்!’’
‘‘டென்ஷன்ல கூட டைப்ஸா? ப்ரி... நீ எங்கயோ போய்ட்டே...’’

‘‘வர்ஷன்! நாம ஜாலியா பேசிக்கற நேரம் இது இல்ல. அந்த வள்ளுவரை நான் இப்ப என் வீட்ல பாத்து பேசிட்டு, அப்புறம்தான் உன்கிட்ட பேசறேன். தாத்தா போய் அவரை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டார். அவர்கூட அரை மணி நேரம்தான் பேசியிருப்பேன். ஒரு லைப்ரரிக்கு போய் ஒரு பத்து, பதினைஞ்சு புத்தகங்கள் படிச்ச ஃபீல் எனக்கு. வள்ளுவர் ஒரு அப்நார்மல் கேரக்டர்! அவர்கிட்ட நாம தெரிஞ்சுக்க ஏராளமான விஷயம் இருக்கு. அவர் பொய்யானவரோ, மூட நம்பிக்கை கொண்டவரோ இல்ல. நீ கொஞ்சம் உடனே புறப்பட்டு வா. நீயும்  மீட் பண்ணு... பேசு... பை த பை, அவர் நாளை மறுநாள் தான் குறிப்பிட்ட அந்த நேரத்துல செத்துடுவோம்ங்கறதுல ரொம்பவே உறுதியா இருக்காரு!’’

‘‘அவர்கிட்ட நிறைய விஷயம் இருக்கு... மூடநம்பிக்கை இல்லை, பொய் இல்லேங்கறே... கூட்டிக் கழிச்சா அவர் செத்துடுவாருங்கற மாதிரிதானே விடை வருது!’’‘‘மண்ணாங்கட்டி.... என் பேச்ச வச்சு முடிவு பண்ணாம கிளம்பி வாடா!’’‘‘சரி, வரேன்... வாழ்க்கைல எப்படி எப்படியெல்லாமோ பிரச்னை வந்து பாத்துருக்கேன். ஆனா நாம சந்திக்கற இந்த சிக்கல் வினோதத்துக்கெல்லாம் வினோதம்...’’ என்கிற சலிப்போடு போனை கட் செய்தான்.ப்ரியா திரும்பினாள் - எதிரில் நேர் பார்வையோடு உடை மாற்றிக்கொண்டு வந்த நிலையில் அனந்தகிருஷ்ணன்.

‘‘என்னம்மா நடக்குது நம்ம வீட்ல... யார் அந்த பெரியவர்?’’ - அனந்து கேட்க, அவர் பின்னாலேயே பத்மாசினியும் வந்து நின்றுகொண்டாள்.‘‘எனக்கென்னமோ நம்ம வீடு ஒரு முதியோர் இல்லமா மாறிடுமோன்னு பயமா இருக்குங்க. உங்கப்பா ரிட்டயர் ஆயிட்டாரு. ஆனா இன்னமும் தன்னை ஒரு வேட்டைக்காரன் மாதிரிதான் நினைச்சுக்கிட்டிருக்காரு...’’ - என்று தூபம் போட்டாள்.

‘‘அம்மா! நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? வயசாயிட்டா அவங்க மூலைல முடங்கி டி.வி. சீரியல் பாக்கணும்ங்கறதுதான் உன் எண்ணமா? டாட்... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ஒரு அசைன்மென்ட் தாத்தாவை தானா தேடி வந்திருக்கு. வந்திருக்கறவர் ஒரு பெரிய நாடி ஜோசியர். உதிரமுத்து வள்ளுவர்ங்கறது இவரோட பேர். இரண்டு நாள்ல தான் செத்துப் போயிடுவேன்னு அவர் நம்பறார். அவர் விதி அவ்வளவுதானாம். ஆனா அவரைப் பார்த்தா ரெண்டு நாள்ள செத்துப் போயிடுறவர் மாதிரியா இருக்கு?’’

‘‘அடக் கடவுளே! அதான் குடுகுடுப்பைக்காரன் வாசல்ல வந்து நின்னு அப்படிச் சொன்னானா? ஏண்டி இப்படி வினையைத் தேடி இழுத்துக்கிட்டு வர்றீங்க..?’’‘‘அம்மா... நீ சும்மாவே இருக்க மாட்டியா? டாட்... நீ கூட அவர் பேசறதை எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தே... அதுல எவ்வளவு க்ளாரிட்டி... அவர்மேல உனக்கு ஒரு மதிப்பு வரலை?’’

‘‘எல்லாம் சரி ப்ரியா! இன்னிக்கு ஒரு மனுஷனை ஒரு அரை மணி... இல்ல, ஒரு மணி நேரத்துல எல்லாம் எடை போட்டுட முடியாதும்மா. என் ஆபீஸ்ல ஒர்க் பண்ற அக்கவுன்ட்ஸ் மேனேஜர் ராமசுந்தரத்தை உனக்கு நல்லா தெரியும்தானே? நெத்தில பட்டை, கழுத்துல கொட்டை, வாயைத் திறந்தா ‘சிவசிவா’ங்கற நாமம்தான்...’’
‘‘சரி, இப்ப அவருக்கு என்னப்பா?’’

‘‘ஒண்ணரை கோடி ரூபா ஸ்கேண்டல்ல மனுஷன் இப்ப அரெஸ்டாகி இருக்கார். நம்ப முடியுதா உன்னால..?’’‘‘மை குட்நெஸ்! சரிப்பா... அதுக்கும் இந்த வள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்?’’‘‘மனிதர்களை வேகமா நம்பிடாதே. அப்புறம் இப்படி ஒரு எண்ணம் கொண்டவரை நம்ம வீட்டுக்கு எதுக்கு கூட்டிக்கிட்டு வரணும்?’’‘‘அவருக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்றதோட, ஒரு பாதுகாப்பையும் தரத்தாம்பா...’’‘‘ஏன்? அவரை ஒரு ஹோட்டல்ல தங்க வெச்சோ... இல்ல, அவர் வீட்லயோ அந்தப் பாதுகாப்பைத் தர முடியாதா?’’‘‘ஏண்டி! பாதுகாப்பு தரணும்னு சொல்றியே... அப்ப இவரைக் கொலை செய்ய யாராவது தயாரா இருக்காங்களா?’’

‘‘ரெண்டு பேரும் இப்படி அநாவசியமா பதற்றப்படுறதை முதல்ல நிறுத்துங்க. அவருக்கு ஒரு எதிரியும் கிடையாது. இப்போதைக்கு அவர் வரைல எமன் மட்டும்தான் எதிரி. எமன்கூட எதிரி இல்லை. எல்லாம் அவரோட கற்பனைன்னு அவருக்குப் புரிய வைக்கறதுதான் எங்க நோக்கம்...’’‘‘அவர் மேல ஏம்மா உங்களுக்கு இவ்வளவு அக்கறை?’’‘‘அவர் மூலமா ‘காலப் பலகணி’ங்கற ஒரு அபூர்வமான விஷயம் தெரிய வந்துருக்குப்பா!’’‘‘அது என்னடி பலகணி, தலகாணின்னு...’’

‘‘அம்மா! நீ போறியா? போய் உன் மாடப்புறாவை... ச்சீ, தம்புராவை எடுத்துக்கிட்டு உக்கார்றியா?’’‘‘என்னடி... நான் சொன்னதுக்கு பதிலுக்கு பதிலா?’’‘‘ஆமாம்... காலப் பலகணி ஒண்ணும் சாதாரண விஷயமில்ல. சயின்டிஸ்ட் பகீரதன் காணாமப் போவார்னு அது எப்பவோ சொல்லிடுச்சு. டெல்லில கெஜ்ரிவால்தான் சி.எம்.னும் அதுல சொல்லியிருக்கு. எப்ப சுனாமி வரும்? ராகுல் பிரதமர் ஆவாரா? அடுத்த வல்லரசு நாமளா...

இல்லை, சீனாவா? அவ்வளவு ஏன்... உனக்கு நீ ஆசைப்படற ‘சங்கீத கலாவாணி’ விருது கிடைக்குமா, கிடைக்காதாங்கற கேள்விக்குக்கூட அதுல பதில் இருக்கு...’’ - ப்ரியா வெடித்தாள். பத்மாசினி திகைத்தாள். அனந்தகிருஷ்ணன் முகத்திலும் ஆச்சரிய அதிர்வு. அந்த நொடி வெடி வெடிப்பதுபோல் ஒரு சப்தம்... முத்தழகு அலறி அடித்துக் கொண்டு சமையல்கட்டிலிருந்து ஓடி வந்து வெளியே விழுந்தாள்!

மார்ச் 11 உலக ப்ளம்பிங் தினம்

‘‘பைப்பைத் திறந்தால் தண்ணீர் வருவதும் பாத்ரூம் கழிவு சாக்கடையில் கலப்பதும் நம் மக்களுக்குப் பழகிப் போய்விட்டது. அதனாலேயே ‘இதிலென்ன இருக்கு’ என அசட்டை காட்டுகிறார்கள். இந்த அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால் என்ன பிரச்னை என்பது இயற்கைப் பேரழிவுகளின்போதுதான் உறைக்கிறது’’ என்கிறார்கள் உலக ப்ளம்பிங் கவுன்சிலைச் சேர்ந்த நிபுணர்கள். எனவேதான் 2011ம் ஆண்டு ஜப்பானில் சுனாமி வந்த தினமான மார்ச் 11ஐ ப்ளம்பிங் தினமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த நாளில் ப்ளம்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமாம்!

மார்ச் 13 டொனால்டு டக் தினம்

குழந்தைகளின் ஆல் டைம் அரசனான டொனால்டு டக்கின் பிறந்த நாள் ஜூன் 9 என அறிவிக்கப்பட்டுள்ளது. அது, முதல் டொனால்டு டக் கார்ட்டூன் வெளியான தினம். ஆனால், டொனால்டு டக் கார்ட்டூன் ஒன்றில் ‘இன்று எனக்குப் பிறந்த நாள்’ என்று டொனால்டு டக் சொல்ல... பின்னணியில் இருக்கும் காலண்டர் மார்ச் 13ம் தேதியைக் காட்டியிருக்கிறது. ஸோ, உண்மையான பர்த் டே இதுதான் என்கிறார்கள் ரசிகர்கள். இன்று டொனால்டு டக்கை யூ டியூபில் பார்த்து நினைவு கூரலாம்!

மார்ச் 14 கேள்வி கேட்கும் தினம்

‘‘கேள்வி கேட்பதை நிறுத்தவே கூடாது’’ என்றவர் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மிக மோசமாக அடாவடித்தனமாக கேள்வி கேட்பவர் என்ற கெட்ட பெயர் அவருக்கு உண்டு. எனவேதான் அவர் பிறந்த நாளான மார்ச் 14ம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்று, நாம் ஒவ்வொருவரும் ஒரு கேள்வியாவது கேட்க வேண்டுமாம். அது கேனத்தனமாக இருந்தாலும் கூட!

மார்ச் 14 பை தினம்

கணக்கில் வருமே பை... 22/7... அதேதான்... அதற்குத்தான் தினம். அதை வகுத்து வேல்யூ பார்த்தால் 3.14 என்று வரும். அதனாலேயே மூன்றாவது மாதம் 14ம் தேதி என வைத்திருக்கிறார்கள். இன்று என்ன செய்ய வேண்டும்? ஒண்ணுமில்லீங்க. வட்டத்தின் பரப்பளவைக் கண்டுபிடிக்க உதவிய இந்த பைக்கும், பையை பயிற்றுவித்த கணித மேதைகளுக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும்; அவ்வளவுதான்!

தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்