அதிகப்பிரசங்கி‘‘மேனேஜர் கூப்பிடறார்... என்ன என்கொயரின்னு தெரியல... போ!’’ - கிளார்க் சொன்ன தோரணையில் நடுங்கிப் போனான் ஆபீஸ் பாய் சுந்தரம். அந்த ஆபீஸுக்கு அவன் புது அப்பாயின்ட்மென்ட். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்த்தான். எல்லோருக்கும் நல்ல பிள்ளை.

ஆனால், ‘அதிகப்பிரசங்கி’ என்றுதான் அடிக்கடி திட்டு வாங்குவான்.‘‘நான் அப்பவே நெனைச்சேன். ஆபீஸ் பாய்னா ஃபைலை எடுத்துட்டு வர்றது... டீ, காபி கொடுக்கறது... அதோட நிறுத்திக்கணும்! நீ என்னடான்னா எல்லா தபால்களையும் படிச்சுப் பாக்கறது... தேவையில்லாததுல மூக்கை நுழைக்கறதுன்னு இருக்கே! ம்... டிஸ்மிஸ்தான். சீக்கிரம் போ!’’ - இது சீனியர் கிளார்க்.

ஒரு தப்பும் செய்யாத தனக்கு என்கொயரியா? குளிர்காய்ச்சல் வந்தவனைப் போல் மேலாளரின் கேபினுக்குள் நுழைந்தான் சுந்தரம்.‘‘சுந்தரம்... இந்த ஆபீஸ்ல வருஷக்கணக்கா வேலை பார்க்கறவங்க கூட லிமிட்டா அவங்கவங்க வேலையை செஞ்சிட்டு, மணி அடிச்சா சாப்பாடுன்னு போயிடறாங்க!

ஆனா, நீ வந்த புதுசுலயே ரொம்ப அக்கறையா எல்லா வேலைகளையும் தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டறது பாராட்டுக்குரிய விஷயம். அதனால, உன் பிரமோஷனுக்கு மேலிடத்துல கேட்டு அனுமதி வாங்கிட்டேன். இன்றிலிருந்து நீ ஆபீஸ் பாய் சுந்தரம் இல்லை, கிளார்க் சுந்தரம்!’’ - மேனேஜர் சொன்னதும் நெகிழ்ந்து நின்றான் சுந்தரம்.                     

 எம்.சுப்பையா