கைம்மண் அளவு...முப்படையிலும் எமக்கு நண்பர் உண்டு. அவர்கள் முப்படைத் தளபதிகளாக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நண்பர்களை வாசகர் என்றழைக்கும் இறுமாப்பு இல்லை எனக்கு. முப்படைகளிலும் நண்பர்களை வைத்திருப்பவன் தாகத்துடன் இருக்க மாட்டான். தாகம் தீர்க்கும் நண்பர்களை விடவும் எனக்கு நாலாவித உதவிகள் செய்யும் நண்பர் ஒருவர் உண்டு. விருதுநகர் பக்கம் ஆவல்சூரன்பட்டி அவர் ஊர்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார். ‘‘சார்! இன்று கேன்டீன் வர்றீங்களா?’’ என்பார். என்றால் அது தாகம் தீர்க்கும் பானம் ஏதும் வாங்க அல்ல. இரண்டு மாதங்களுக்குத் தேவையான துவைக்கிற சோப்பு, குளிக்கிற சோப்பு, பாத்திரம் தேய்க்கிற சோப்பு, தேயிலைத்தூள், காபித்தூள், பற்பசை, கொசு துரத்தி, ஊதுபத்தி, பிஸ்கோத்துகள் முதலாய பொருட்கள் வாங்க. நான் பட்டியல் கொடுப்பேன், அவர் கணக்கில் வாங்கி வந்து பணம் பெற்றுக் கொள்வார். ஆயிரம் பணத்துக்கு பொருட்கள் வாங்கினால், நானூறு பணம் ஆதாயம் இருக்கும்.

‘இது தவறில்லையா’ எனக் கேட்பீர்கள்! தவறுதான், ஆனால் யோக்கியனாக வாழ ஒரு வழி சொல்லுங்கள் ஐயா, இந்தியத் திருநாட்டில்! அயோக்கியர்கள் பல்லக்குப் பயணத்திலும், யோக்கியர்கள் பாத பலத்திலும் போவதை எவரால் சீர்திருத்த இயலும்? காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு, இரண்டு பேருந்துகள் மாறி, கேன்டீன் வாசலை அடைய வேண்டும்; திரும்புகாலில் ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் ஏற்றி அனுப்புவார்.

நானிருக்கும் பகுதிக்கு, காந்திபுரத்தில் புறப்பட்டு, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நகர்மன்றம், வைசியாள் வீதி, செட்டி வீதி, செல்வபுரம், தெலுங்குபாளையம் பிரிவு, கங்கையிற் புனிதமான - இன்று பாழ்பட்டுக் கிடக்கும் நொய்யல் நதி தாண்டி பேரூர் எனும் சிவத்தலம், செட்டிபாளையம், ஆறுமுகக் கவுண்டனூர், ராமர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர் வழியாகச் செல்லும் பேருந்து. பயண நேரம், பயணியின் முற்பிறவிப் பயன் போல 45 நிமிடம் முதல் 75 நிமிடம் வரை. பயணச்சீட்டு 17 பணம் அல்லது 12 பணம் அல்லது 9 பணம். ஏன் அப்படி என்பீர்கள்! பேருந்துகளின் ஓட்டை உடைசல் தரம் தேர்ந்து பயணக் கட்டணம் நிர்ணயம் செய்வார் போலும்!

ரயில் நிலையத்திலிருந்து பேருந்து பிடித்தேன். காலை மணி பத்தே கால் இருக்கும். நகர்மன்ற நிறுத்தம் தாண்டி, வைசியாள் வீதி முதல் நிறுத்தத்தில் ஒரு பள்ளி மாணவன் ஏறி, காலியாகக் கிடந்த எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். வைசியாள் வீதியைக் கடக்கும்போது எனது பயணத்திசையின் வலதுகைப் பக்கம், இரண்டு பன்னீர் மரங்கள் வாசலில் காவல் தெய்வங்களாக நிற்கும் பழங்கால வீடொன்று உண்டு. தரிசனப்படும் அந்த வீடு ‘சிவக்கவிமணி சி.கே.எஸ்’ என்றழைக்கப்படும் சி.கே.சுப்ரமணிய முதலியார் வாழ்ந்த வீடு.

இன்று சந்ததியினர் வாழ்கிறார்கள். அவர் பெரியபுராணத்துக்கு உரை எழுதிய பெரியார், சைவப் பேரறிஞர். கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுத்து வாடி, நோயுற்று குற்றுயிராய்ச் சிறை மீண்ட கப்பலோட்டிய தமிழன் - ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரம் பிள்ளையை அழைத்து வந்து பண்டுவம் பார்த்து அனுப்பி வைத்தவர். எனக்கு மாதத்தில் இருபது நாட்கள் சி.கே.எஸ். முதலியாரை நினைக்கும் பேற்றை அந்த வீடு வழங்கும். ‘வ.உ.சி.யை நினைக்க மாட்டீர்களா?’ என்பீர்கள்! எனது வாழ்விடமே வ.உ.சி. நகர்தான்.

எனது பேருந்து சிவக்கவிமணி வீட்டைக் கடந்ததும், பக்கத்தில் வந்தமர்ந்த பையனைக் கவனித்தேன். அரை மூட்டை சிமென்ட் அளவிலான பள்ளிப் பையை மடியில் வைத்திருந்தான். நைந்து, அழுக்கேறி, தையல் பிரிந்து, நிறம் தீர்மானிக்க முடியாமல் சீருடை அணிந்திருந்தான். காலையில் குளித்து, எண்ணெய் தடவி, படிய வாரி, நெற்றியில் சந்தனம் தீற்றி... ‘கறுப்பானாலும் களையான முகம்’ என்று எழுதுவதில் எனக்கு விரோதம் உண்டு. கறுப்புக்கு இறக்கம் தந்து பேசுவது தமிழனுக்கும் வழக்கமாகி விட்டது.

நான் உன்னிப்பதை உணர்ந்து அவன் திரும்பிப் பார்த்தான். சிரித்தேன், சிரித்தான்.‘‘எங்கப்பா பள்ளி?’’ என்றேன்.‘‘உக்கடம் மாநகராட்சிப் பள்ளி’’ என்றான்.அவன் செல்வபுரம், தெலுங்கு பாளையம் பிரிவு அல்லது பேரூர் பள்ளிகளில் ஒன்றில் பயிலுபவனாக இருப்பான் என எண்ணியது பிழையாயிற்று.‘‘அப்ப எதுக்குப்பா எதிர்த்திசையிலே போறே?’’‘‘லேட்டாயிடுச்சுங்க... கேட் மூடிட்டாங்க... வீட்டுக்குப் போறேன்!’’

‘இதென்ன வன்முறை’ என்று தோன்றிற்று. வன்முறை என்பது பிரம்பெடுத்துப் புரட்டி எடுப்பது மட்டுமே அல்ல. ஒன்பதரைக்குப் பள்ளி இறுதி மணி. பத்து மணிக்கு வாசல் அடைத்து விடுவார்களாம். அவனைப் பார்த்துக் கேட்டேன்...‘‘ஏந்தம்பி? இந்த வருஷம் எத்தனாவது தரம் வீட்டுக்குப் போறே?’’‘‘மூணாவது முறைங்க...’’‘‘கொஞ்சம் முன்னால புறப்படலாம் இல்லையா? பஸ் லேட்டானா கூட அரைமணி நேரமா லேட்டாகும்? எந்த ஊர்லேருந்து வாரப்பா?’’‘‘ராமர் செட்டிப்பாளையம்ங்க...’’

அது என் வழித்தடமும் கூட. ராமர் செட்டிப்பாளையத்தில் இருந்து உக்கடம் உத்தேசமாய் ஒன்பது கிலோ மீட்டர் இருக்கும். என்ன போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகாது.‘‘ஏந்தம்பி, ஷி17, ஷி14, ஷி25, 9, 9கி, 160னு எத்தனை பஸ் இருக்கு... அரை மணி நேரமாவா பஸ் கிடைக்கல?’’‘‘பஸ் ஆக்சில் உடைஞ்சு போச்சுங்க...’’‘‘வேற பஸ்லே ஏத்தி அனுப்புவாங்களே? ஆக்சில் மாத்தற வரைக்கும் அதே பஸ்லயா உக்காந்திருந்தே?’’

பையனின் முகம் பார்த்தால் பக்குவப்பட்ட பொய்யனாகத் தெரியவில்லை. எனக்கோ மற்றெவருக்குமோ சொல்லக் கூடாத வேறு காரணம் இருக்கலாம். கோவைப் புதூரில் மூன்று, நான்கு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உண்டு.

பேரூரில் உண்டு. தெலுங்குபாளையம் பிரிவில் உண்டு. செல்வபுரத்தில் உண்டு. ஒன்பது கிலோ மீட்டர் பேருந்துப் பயணம் செய்து உக்கடம் மாநகராட்சிப் பள்ளிக்கு வருகிறான் என்றால், அது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு கான்வென்ட் போல கல்வித்தரத்தின் உச்சப்பள்ளி என்பதால் அல்ல.

அடிப்படைக் காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.பெற்றோர் தொழிற்சாலைக் கூலிகளாக, கட்டுமானக் கூலிகளாக, தோட்டக்கூலிகளாக இருக்கலாம். சந்தையில் சில்லறைக் காய்கறி வியாபாரம் செய்பவராக இருக்கலாம். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் உயிர் வாழ? தாமதத்திற்கு அவசரமான காரணங்கள், தவிர்க்க முடியாத ஏதோ ஒரு நிகழ்வு இருக்கலாம். பேருந்தும் கூடப் பிரச்னையாகி விட்டிருக்கலாம்...

ஆயிரம் பேர் படிக்கும் பள்ளி யில் தினமும் ஐம்பது பேர் தாமதமாக வர மாட்டார்களா? அவர்களை வீட்டுக்கு அனுப்புவது தான் படிப்பினை அல்லது தண்டனை என்று நிர்வாகம் நினைத்திருக்கலாம்... ‘கால வரையறை, ஒழுங்குமுறை இன்றிப் பள்ளியை ஆடு, மாடு மேயும் மைதானமாக எந்நேரமும் திறந்துவிட முடியுமா’ என்றும் தோன்றி இருக்கலாம்! எனக்கானால் பொருக்காடிப் போன எனது பழைய புண்ணை ரத்தம் கசியப் பிய்த்து எறிவது போலிருந்தது.

தொழுவத்துச் சாணத்தை தோளிலும் முதுகிலும் மாட்டு மூத்திரம் சொட்ட உரக்குண்டுக்குச் சுமந்து, சாணி - மூத்திரம் என ஊறிக் கிடக்கும் எருமை மாடுகளை ஆற்றுக்குப் பத்தி, தண்ணீரில் கிடக்கப் போட்டு, சாணிப் பொருக்கு போக தேய்த்துக் குளிப்பாட்டி, நானும் குளித்து, வீட்டுக்கு வந்து, கைவசம் இருந்த ஒரேயொரு பள்ளி ஆடை அணிந்து, பழையது குடித்து, ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் இருக்கும் பள்ளிக்கு ஓடி எத்துமுன் அங்கே தொழுகை முடிந்திருக்கும். இறைவனும் இளைப்பாறப் போயிருப்பார்.

2015 ஜனவரி மாதம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பொன்று வாங்கினேன். திருவண்ணாமலை எஸ்.கே.பி.கருணா எழுதியது. அதில் ‘கெட்ட குமாரன் கதை’ என்றொரு சிறுகதை. அதன் தொடக்கம், ‘எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் முப்பத்தேழு வழிகள் இருக்கின்றன’ என்று இருக்கும். திருட்டுத்தனமாக நுழையத்தான். எங்கள் பள்ளிக்கோ காற்றுப் போல நுழையலாம் எங்கிருந்தும்.

என்றாலும் அசெம்பிளி முடிந்த பின், தலைமை ஆசிரியரிடம் மூன்று பிரம்படி வாங்கி, வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும். வெளியே கதவோரம் நின்றவாறே வகுப்பைக் கவனிக்கும்படி வகுப்பாசிரியர் பணிப்பார். பாடத்தில் கேள்வியும் கேட்பார்கள். அந்தப் பக்கமாய் உலாத்தும் தலைமை ஆசிரியர், ‘‘சரிடா! போய் வகுப்பில் ஒக்காரு’’ என்பார். வாரத்தில் இரண்டு நாட்களாவது எனக்கு நடக்கும் இது. ஆனால், ஒருபோதும் வீட்டுக்குத் திரும்பிப் போகச் சொன்னதில்லை. வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட் மார்க் செய்ய மாட்டார்கள். ஒரு பீரியட் கடந்து பள்ளிக்குப் போனால் அரை நாள் மார்க் செய்வார்கள்.

பையனிடம் கேட்டேன்... ‘‘ஏம்பா! அரைநாள் அட்டெண்டன்ஸ் போட்டு வகுப்புக்கு அனுப்ப மாட்டார்களா?’’‘‘அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க சார்’’ என்றான்.இதென்ன கொடுமை? ஒரு வேளை அஃதோர் அதிகப்படி வேலைப்பளு என்று நினைப்பார்களோ! அல்லது சட்டம் அவ்வாறு இருக்கலாம்! ஏன் சட்டமும் நியாயமும் முரண்படுகின்றன பல சந்தர்ப்பங்களில்?

ஒருவேளை மதிய உணவை அவன் பள்ளியில் சத்துணவு வாங்கித் தின்பவனாக இருக்கலாம். வீட்டுக்குப் போய் பட்டினிதானே கிடப்பான்? சரி, தாமதமாக வருவது தவறேதான். வருகைக்குப் பதிவு வேண்டாம். அவனை வகுப்பில் அமர்ந்து பாடத்தைக் கவனிக்க விடலாம் இல்லையா?

‘‘ஏம்பா! கேட் சாத்தின பிறகு, ஆசிரியர்கள் தாமதமா வந்தா வீட்டுக்கு அனுப்பி விடுவார்களா?’’‘‘அதெப்படீங்க?’’ என்று சிரித்தான்.அவர்களுக்கு பர்மிஷன் பெற்றுக்கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஒன்பதாவது படிக்கும் ஏழை மாணவனுக்கு அந்தச் சலுகையை வழங்க இயலுமா என்ன?
‘‘வீட்டுக்குப் போயி என்ன பண்ணுவே?’’

‘‘சும்மாதான் இருப்பேன்... அக்கா பெண்கள் பள்ளியிலே பிளஸ் 2. நாலரை மணிக்கு வந்து டீ வச்சுத் தருவா...’’கல்வியை மறுப்பது பெரும் பாவம். அது இனம், மதம், வாழ்க்கைத் தரம் எனும் வரையறைகளுக்குள் நின்று வழங்கப் பெறும் நியாயம் அல்ல எப்போதும். எனது ஆச்சரியம், அவன் பள்ளியைச் சூழ்ந்திருக்கும் எந்தத் தியேட்டருக்கும் சினிமாவுக்குப் போகவில்லை என்பது. சினிமா என்ன விலையில்லாமலா காட்டுகிறார்கள்?மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நமது மரபு. அம்மைக்கும், அப்பனுக்கும் அடுத்த இடம் ஆசிரியனுக்கு.

‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உருச் சிந்தித்தல் தானே’

என்பது திருமந்திரம். ஆனால், குருக்கள்மார் தெளிவாகத் தாமதமாக வரும் ஏழை மாணாக்கருக்கு வாசல் சாத்துகிறார்கள்.நமது கல்வி அதிகாரிகள், விருந்து உபசாரத்துக்காக முன்னறிவிப்புக் கொடுக்காமல், அரசாங்க வாகனம் பயன்படுத்தாமல், மக்களோடு மக்களாக நடந்தோ, பேருந்திலோ போய் இறங்கி, மாநகராட்சி, நகராட்சி,

அரசுப் பள்ளி வாசல்களில் நின்று இதனைக் கவனிக்க வேண்டும். தினமும் எத்தனை பேர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றும், அவர்கள் தாமதமாகப் பள்ளிக்கு வரும் காரணம் பற்றியும் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களே எத்தனை மணிக்கு அலுவலகம் வருகிறார்கள் என்பதை அம்மையப்பனே அறிவார்!

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் பற்றி இங்கு பேசுவது பொருளற்றது. அவர்கள் பள்ளி வாகனங்களில், வேன்களில், ஆட்டோக்களில், பெற்றோர் வாகனங்களில் என நேரத்தில் வந்து விடுவார்கள். நகரப் பேருந்தை நம்பி இருக்கும் எளிய இளைய தலைமுறை பற்றி நான் கவலை கொள்கிறேன். அவர்கள் இந்த சமூகத்தின் விதை நெல்.தலைமை ஆசிரியர்களுக்கு அந்தக் கவலை ஏன்? அவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்தானே பயில்கிறார்கள்?

கல்வியை மறுப்பது பெரும் பாவம். அது இனம், மதம், வாழ்க்கைத் தரம் எனும் வரையறைகளுக்குள் நின்று வழங்கப் பெறும் நியாயம் அல்ல எப்போதும்.
மாதங்களில் மார்ச் மாதத்தை ஐடியா மாதம் என்கிறார்கள். விதவித ஜாலி ஐடியாக்கள் இப்போதுதான் பிறக்குமாம். வினோதமாக தினங்கள் கொண்டாடும் ஐடியாவையும் சேர்த்துத்தான். இந்த வாரம் அப்படி என்ன அப்பாடக்கர் தினங்கள்? இதோ...

மார்ச் 14உருளைக்கிழங்கு சிப்ஸ் தினம்

‘‘இந்த உருளைக்கிழங்கு வறுவல் வேகவே இல்ல. இன்னும் மெல்லிசா கட் பண்ணி செய்ங்க’’ - அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் கஸ்டமர் இப்படி புகார் சொன்னபோது பிறந்ததுதான் உருளைக்கிழங்கு சிப்ஸாம். ஜார்ஜ் க்ரம் எனும் சமையல்காரர் இதில் டென்ஷன் ஆகி, மெல்லிசா ஒரு கோடு போல உருளைக்கிழங்கை சீவிப் பொரித்த நாள் 1853 மார்ச் 14 என்கிறார்கள். இன்று, நண்பர்களோடு சேர்ந்து சிப்ஸ் (மட்டும்) சாப்பிட்டு கொண்டாடலாம்!

மார்ச் 15 தவறு களுக்காக வருந்தும் தினம்

ரோம் நாட்டின் பெரும் தலைவராக உயர்ந்தாலும் காலப்போக்கில் சர்வாதிகாரியாகவே மாறியவர் ஜூலியஸ் சீஸர். நகரமெங்கும் சீஸர் சிலை... நாணயங்களில் அவர் தலை... என சின்னச் சின்ன விஷயங்களில் கடுப்பாகி, அவர் ஆதரவாளர்களே அவரை வெட்டிக் கொன்ற தினம் இது. இந்த நாளில் நாமும் நம் முந்தைய தவறுகளுக்காக வருந்த வேண்டும்... திருந்த வேண்டும்!

(கற்கலாம்...)

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது