பேஸ்புக்



‘‘உங்க பெண் சுகன்யாவை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா, ஒரு கண்டிஷன்... உங்க பொண்ணு ஃபேஸ்புக் மாதிரி சமூக வலைத்தளங்கள்ல இருந்தா, கல்யாணத்துக்குப் பிறகு அதையெல்லாம் க்ளோஸ் பண்ணிடணும்!’’  மாப்பிள்ளை பாஸ்கர் கறாராகச் சொல்லிவிட்டான். சுகன்யா அரைமனதோடு சம்மதித்தாள்.

அடுத்த வாரமே அப்படியொரு அதிர்ச்சி செய்தி வருமென்று சுகன்யா எதிர்பார்க்கவில்லை. சாலை விபத்தொன்றில் பாஸ்கருக்கு அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். சுகன்யாவும் அவள் அப்பாவும் மருத்துவமனையில் கிடையாய்க் கிடந்தார்கள். பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் பாஸ்கரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ஒரு வாரத்தில் பாஸ்கரால் பேச முடிந்தது. ‘‘பெண் பார்த்த ஒரே காரணத்துக்காக என் உயிரைக் காப்பாத்த இவ்வளவு மெனக்கெட்டீங்களே... அந்த அன்புதான் என்னைக் காப்பாத்தியிருக்கு மாமா!’’ என்றான் சுகன்யாவின் தந்தையிடம் உருக்கமாக.‘‘இல்ல மாப்பிள்ளை...

உங்களைக் காப்பாத்தினது ஃபேஸ்புக்தான். அரிதான உங்க ப்ளட் குரூப் கிடைக்கணும்னு என் பொண்ணு ஃபேஸ்புக்ல தகவல் வெளியிட்டா. அதை நிறைய பேர் ஷேர் பண்ணி, சிலர் தேடி வந்து ரத்தம் கொடுத்தாங்க. எல்லாத்துலயும் நன்மையும் இருக்கு; கெடுதலும் இருக்கு. கெட்ட பக்கத்தை நீங்க பார்க்காதீங்க. பிரச்னையே வராது!’’ - என்றார் சுகன்யாவின் தந்தை. உண்மை புரிந்து தலை கவிழ்ந்தான் பாஸ்கர்.                  

 ஜெ.கண்ணன்