அழியாத கோலங்கள்



சினிமாவை ஒரு கடவுளாக்கி, அந்தக் கடவுள் சார்ந்த மதத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆறு கால பூஜை செய்பவர்கள் எனக்குத் தெரிந்து இரண்டே நபர்கள்... கமலும் இயக்குனர் ஆர்.சி.சக்தியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் இயக்குனர் ஆர்.சி.சக்தியும் ‘நான் முந்தியா? நீ முந்தியா?’ என்று சந்திக்கும்போதெல்லாம் மரணத்தை நோக்கிப் போட்டி போடுவோம்.

அவர் வெகு நாட்கள் டயாலிசிஸ் என்ற ரத்த சுத்திகரிப்பு முறையிலும், தினம் இரண்டு முறை இன்சுலின் ஊசி போட்டும் உயிர் வாழ்ந்தவர். நான் அவருடன் போட்டியிட்டு இரண்டு இதய சிகிச்சைகளும் ஒரு மூளை சலவை சிகிச்சையும் செய்தபடி தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்..!

அவருக்கு இணை இயக்குனராக ‘ராஜாங்கம்’ என்ற ஒரு படத்தில் செயல்பட்டவன் நான். ஆர்.சி.சக்தி, என் தாயார் ராஜலட்சுமிக்கு பிள்ளையாகப் பிறக்காமல் இருந்தாலும், எங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக வளர்ந்தவர். கமலின் சகோதரனாகவே பிராமணத் தாயுடன் வளர்ந்ததாலோ என்னவோ...

தேவர் வழி பிறந்த அவர், ஒரு முட்டை கூட உண்ணாத சுத்த சைவமாக வாழ்ந்தார். சக்தியின் தந்தை பரமக்குடியில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர். எனக்கு அவரை சப் இன்ஸ்பெக்டராகத்தான் தெரியுமே தவிர, அவருக்கு ஆர்.சி.சக்தி என்று ஒரு மகன் இருந்ததோ, அவர் பின்னாளில் எனக்கும் கமலுக்கும் இடையே இன்னொரு சகோதரனாக வாழப் போவதோ அன்று தெரியாது.

ஒரு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் இயக்குனர் சக்தி - ரஜினி படம் ஒன்றை இயக்கப் போகிறவர் - என் தாயாருக்கு சுக்கு தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.நான் கேட்டேன், ‘‘இவன்தான் பெரிய டைரக்டர் ஆயிட்டானே... ஏன் உனக்கு சுக்கு தட்டிக் குடுக்கிறான்?’’‘‘ரஜினியோட சேந்துட்டான் இல்லையோ... ராத்திரி கடப்பாரையை முழுங்கியிருப்பான்!’’ என்றார் என் தாய். கடப்பாரையை முழுங்கினால் சுக்குக் கஷாயம் கொடுத்து குணப்படுத்த முடியாது.

அது எங்கள் அம்மா அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி. கமலும் சக்தியும் தங்கப்பன் மாஸ்டர் இயக்கிய ‘அன்னை வேளாங்கண்ணி’ என்ற படத்தில் உதவி இயக்குனர்களாகப் பணி புரிந்தவர்கள். பின்னாளில் ஒருவர் இந்தியாவே அறிந்த ஸ்டாராகவும், மற்றொருவர் பிரபல இயக்குநராவும் ஆனபிறகு தொலைக்காட்சியில் ‘அன்னை வேளாங்கண்ணி’ படம் ஒருமுறை ஓடியது. டைட்டில் கார்டு போடும்போது ‘உதவி இயக்குனர்கள் ஆர்.சி.சக்தி - கமல ஹாஸன்’ என்று ஒரே ஃப்ரேமில் வரும். அப்போது இருவரும் ஒன்றாக உட்கார்ந்து கைதட்டி பெருமைப்பட்டுக் கொண்டனர். அவர்கள் நட்பையும் உழைப்பின் ஆழத்தையும் அப்போது நான் புரிந்துகொண்டேன்.

சென்னையில் கமலும் சக்தியும் இன்னொரு நண்பர் தயாரிப்பில், ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தை கமலுடைய சொந்த வீட்டிலேயே டிராலி டிராக்குடனும் விளக்குகளுடனும் ஆரம்பித்தார்கள். ஸ்டூடியோ அல்லது வெளிப்புற அவுட்டோர் இல்லாமல், முதன்முதலில் தனியார் வீட்டில் படமாக்கப்பட்டது ஆர்.சி.சக்தியின் ‘உணர்ச்சிகள்’ படம்தான்! அந்தப் படம் பாதியில் நின்ற பிறகு பரமக்குடிக்கு வந்து ஆர்.சி.சக்தி தங்கியிருந்தார்.

கமல் மலையாளப் படங்களில் வெற்றி பெற்ற சமயம், தயாரிப்பாளர்கள் அவருக்காக கதைகள் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது சக்தியை சென்னைக்குக் கூட்டி வந்து, மலையாளத் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்தோம். பாதியில் நிறுத்தப்பட்ட ‘உணர்ச்சிகள்’ படம் ‘இராசலீலை’ என்ற தலைப்பில் வெளியானது. மலையாளப்படமாகவே அது சென்னையில் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

அதற்குப் பின்தான் சக்தியின் முதல் படமான ‘உணர்ச்சிகள்’ வெற்றிப் படமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தப் பட வெளியீட்டின்போது நான் வக்கீல் என்ற முறையில் தயாரிப்பாளர் போஸ் அவர்களுக்கும், ஃபைனான்சியர், டிஸ்ட்ரிபியூட்டர்கள் இடையே சமரசம் செய்து பேசி முடிக்க நேர்ந்தது.பின்னால், விஜயசாந்தியும் சந்திரசேகரும் நடித்த ‘ராஜாங்கம்’ படத்தில் நான் சக்திக்கு கதை, திரைக்கதை,

 இயக்கம் எல்லாவற்றிற்கும் உதவியாளனாக இருந்தேன். ஆனால், அவர் சகோதர பாசத்தால் எனக்கு ‘இணை இயக்குனர்’ என்று ஒரு தகுதியற்ற பதவி உயர்வு கொடுத்தார். ஆர்.சி.சக்தியிடம் நான் கண்ட ஒரே ஒரு குறை... அளவு மிகுந்த பாசத்தில் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுத்துவிட்டுத் திண்டாடுவதுதான்.

ஒரு முறை நான் சிபாரிசு செய்ததால், நான் செய்ய வேண்டிய தந்தையின் வேடத்தை என் நண்பருக்குக் கொடுத்திருந்தார். அதில் ஒரு காட்சி... தந்தையாக நடிப்பவரிடம், ‘‘எனக்கு இன்றே பதில் தெரிந்தாக வேண்டும்!’’ என்று பயமுறுத்துகிறான் வில்லன்...இவருக்கு இயக்குனர் சொன்ன நடிப்பு...

ஒரு டைட் குளோஸப்பில் கொஞ்சம் யோசித்து, ‘‘நாளை சொல்கிறேன்’’ என்பது. நடிகர் யோசித்துத்தான் சொன்னார்... ‘‘நாளை சொல்கிறேன்’’ என்று. ஆனால், முகத்தில் நடிப்பு வரவில்லை. நாலைந்து டேக்குகளுக்குப் பிறகு சக்தி என்னிடம் கோபமாக, ‘‘இவனை என் தலையில் கட்டிட்டீங்களே! நீங்களே சரி பண்ணுங்க... நான் அடுத்த சீன் டயலாக் பார்க்கிறேன்!’’ என்றார்.

நான் என் நண்பரிடம் நெருங்கிப் போனேன். வில்லன் ‘‘எனக்கு பதில் தெரிஞ்சாகணும்!’’ என்று கேட்டதும், அவன் முகத்திலிருந்து பார்வையை உயர்த்தி இடது புறம் மேலே கூரையில் உள்ள உத்திரத்தைப் பார்த்துவிட்டு திரும்ப வில்லன் முகத்தைப் பார்த்து ‘‘நாளை சொல்கிறேன்’’ என்று சொல்லச் சொன்னேன்.ஒரே டேக்கில் ஓகே ஆகிவிட்டது. ‘‘இப்போ எப்படி வந்தது?’’ என்று கேட்டார் இயக்குனர் சக்தி.‘‘அய்யா! என் ஆள், வாழ்க்கையில் என்றுமே யோசித்ததில்லை. அவனை யோசிக்கச் சொன்னால்..? மனதுக்குள் யோசித்திருப்பான் போலிருக்கிறது’’ என்றேன்.

ஒரு நல்ல நடிப்பைக் கண்டுவிட்டால், கே.பாலசந்தர் துள்ளிக் குதித்துப் பாராட்டுவார். சக்தி கண்ணீரே விட்டுவிடுவார். மறைந்த ஆர்.சி.சக்தி இன்றும் எங்கள் மனதில் வாழ்கிறார்.
ஸ்டூடியோ அல்லது வெளிப்புற அவுட்டோர் இல்லாமல், முதன் முதலில் தனியார் வீட்டில் படமாக்கப்பட்டது ஆர்.சி.சக்தியின் ‘உணர்ச்சிகள்’ படம்தான்!

மார்ச் 14 பை தினம்

கணக்கில் வருமே பை... 22/7... அதேதான்... அதற்குத்தான் தினம். அதை வகுத்து வேல்யூ பார்த்தால் 3.14 என்று வரும். அதனாலேயே மூன்றாவது மாதம் 14ம் தேதி என வைத்திருக்கிறார்கள். இன்று என்ன செய்ய வேண்டும்? ஒண்ணுமில்லீங்க. வட்டத்தின் பரப்பளவைக் கண்டுபிடிக்க உதவிய இந்த பைக்கும், பையை பயிற்றுவித்த கணித மேதைகளுக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும்; அவ்வளவு தான்!

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்