நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் கலர்ஃபுல் கொண்டாட்டமாக கமலின் ‘உத்தம வில்லன்’ பட இசை வெளியீட்டு விழா நடந்தது. விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பார்த்திபன், ‘‘க - கலைகளில், ம- மரணமே, ல் - இல்லாதவன்... கலைகளில் மரணமே இல்லாதவன் என்பதன் சுருக்கம்தான் கமல்’’ என புது டெஃபினிஷன் சொன்னது கலகல ஹைகூ. ஆடியோ சி.டி.யை கமல் வெளியிட, மும்பையில் இருந்தபடி ஸ்ருதி ஃபேஸ்டைம் மூலம் அதைப் பெற்றுக்கொண்டது டெக்னாலஜி புதுமை.

ஸ்ரீதிவ்யாவின் அக்கா ஸ்ரீரம்யா, தெலுங்குப் படம் ஒன்றில் மொட்டை போட்டு நடித்திருக்கிறார். ‘‘இந்த ரிஸ்க் எல்லாம் சில ஹீரோயின்களுக்குத்தான் செட் ஆகும். எங்க அக்கா தைரியம் எனக்கு வராது’’ என கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஸ்ரீதிவ்யா.
கடந்த மாதம் இந்தியா வந்திருந்தபோது டெல்லி ராஜ்காட்டில் ஒரு அரச மரத்தை நட்டார் அமெரிக்க அதிபர் ஒபாமா. வழக்கம்போலவே அதற்கும் தண்ணீர் ஊற்றாமல் டீலில் விட, பத்து நாட்களில் காய்ந்து குச்சியாகிவிட்டது அது. அடுத்து வரும் அந்நிய தேச அதிபர்கள் யாராவது அதே இடத்தில் மரம்
நடலாம்!

‘‘திருமணம் செய்துகொள்வதைவிட குழந்தை பெற்றுக்கொள்வதில்தான் நான் ஆர்வமாக இருக்கிறேன். திரு மணமே செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்!’’- நடிகர் சல்மான் கான்
‘‘பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சக்தியை இப்போதுதான் புரிந்துகொள்ளவும் அங்கீகரிக்கவும் துவங்கியிருக்கிறோம். அவர்களைப் புறக்கணிப்பது தீவிரவாதத்தைவிட பயங்கரமானது.’’
- ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்
‘தரமணி’ படம் முடிந்த பிறகு ராம் இயக்க இருக்கும் படத்தில் மம்முட்டி தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். படம் வழக்கமான ராம் படம் மாதிரி சீரியஸாக இல்லாமல் ஜாலி மூடில் இருக்குமாம்.
விக்ரம்குமார் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் ‘24’, சயின்ஸ் ஃபிக்ஷன் கதை என தகவல். முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கை ஏப்ரலில் மும்பையில் தொடங்குகிறார்கள்.
‘‘எனக்கும் விராட் கோலிக்கும் ஒரு உறவு இருக்கிறது. அந்த உறவை நான் பெரிதும் மதிக்கிறேன். நாங்கள் அதுபற்றிப் பேசாமல் இருப்பதற்குக் காரணம், அந்த உறவின் எல்லைக்கோடு எது என்பது எங்களுக்குத் தெரியாதது தான்.’’
- நடிகை அனுஷ்கா சர்மா
விஜய்யின் ‘புலி’யில் நடிக்கிறார் இமான் அண்ணாச்சி. குள்ளர் கூட்டத்தில் பொறுப்பான ஒரு பதவியாம் அவருக்கு. ‘‘இந்தக் கேரக்டருக்கு இமான் அண்ணாச்சிதான் சரிப்பட்டு வருவார்...’’ என விஜய்யே விரும்பிச் சொன்னதால், அடித்தது லக்.
கன்னட ஹீரோயின் காவ்யா ஷாவை ‘தாரை தப்பட்டை’க்காக அழைத்து வந்திருக்கிறார் பாலா. சமீபத்தில் வெளியான கன்னடப் படம் ஒன்றில் காவ்யா ஷா நடனத்தில் பின்னி
யெடுக்க, ‘‘பிரமாதம் காவ்யா’’ என பாராட்டுகளோடு கமிட் செய்திருக்கிறார் பாலா.
விக்ரம் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. சமந்தாவுடன் இப்போது நடித்து வருவது அவரது 51வது படம். ‘‘இந்த நம்பர்கள்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. தொடர்ந்து கடினமா உழைப்பேன்’’ என்கிறார் விக்ரம்.
அழகிகள் சமாதான முயற்சியில் இறங்கினால் போர்கள்கூட நின்று விடும் போலிருக்கிறது. இந்த ஆண்டின் ‘மிஸ் யூனிவர்ஸ்‘ கிரீடத்தை சமீபத்தில் வென்றார், கொலம்பிய அழகி பவுலினா வேகா. அந்த நாட்டில் அரசுக்கும் மார்க்சிய கிளர்ச்சியாளர்களுக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர இப்போது பேச்சுவார்த்தை நடக்கிறது. போராளிகள் பேச்சுவார்த்தைக்கு வேகாவை அழைத்துள்ளார்கள். அவரும் சம்மதித்திருக்கிறார்.
கேரளத்தின் செண்டை மேளம் இசைக்கக் கற்றுக்கொள்ளப் போகிறார் வேதிகா. மலையாளப் பட ஷூட்டிங் ஒன்றிற்காக கேரளா சென்றவர், ஸ்பாட்டுக்கு அருகே இருந்த மியூசிக் ஸ்கூலில் செண்டை மேளத்தை மாணவர்கள் இசைத்ததைக் கேட்டு பரவசமாகி விட்டாராம்.
தொழில் முனைவோருக்கென்றே இந்தியாவில் முதல்முறையாக ஒரு மொபைல் ஆப் உருவாக்கியிருக்கிறார் indiafilings.com நிறுவனத்தின் நிறுவனர் லியோனல் சார்லஸ். இதன் வழியாக, தொழில் சம்பந்தமான எல்லாவிதப் பதிவுகளையும் செய்ய முடியும். குறிப்பாக, டிரேட்மார்க் மற்றும் வரி பதிவுகளை எளிமையாக இந்த ஆப் வழியே செய்யலாம். ‘‘ஸ்மார்ட் போன் வருகைக்குப் பிறகு பெரும்பாலான தொழில் முனைவோர் மொபைல் வழியாகவே தங்கள் வணிகத்தைப் பின்தொடர்கிறார்கள். அவர்கள் வேலையை எளிமையாக்கவே இப்படியொரு ஆப். இதனை மொபைலில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்’’ என்கிறார் லியோனல்.
பாலிவுட்டில் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார் காஜல் அகர்வால் என்பதை விட முக்கியமான விஷயம்... காதலில் விழுந்திருக்கிறாராம் காஜல். அந்த பாய் ஃப்ரெண்ட் இருப்பது மும்பையில். மிகப் பெரிய கம்பெனி ஒன்றின் சி.இ.ஓ. அவர் என்று தகவல் கசிகிறது.
ராதாமோகனின் ‘உப்புக்கரு வாடு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஸ்டீவ் வத்ஸ், இயக்குநர் கௌதம்மேனனின் நண்பர். தனது நண்பரின் மியூசிக்கில் ஒரு பாடலைப் பாடி அசத்தியிருக்கிறார் கௌதம். சிம்புவை வைத்து இயக்கும் படத்திற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என டைட்டில் வைத்திருக்கிறார் கௌதம்.
மலையாளத்திலிருந்து ‘தில்லு முல்லு’ மூலம் தமிழுக்கு வந்த இஷா தல்வார், மறுபடியும் அக்கரைக்கே சென்று ஒதுங்கினார். நயன்தாராவின் தீவிர ரசிகை இஷா. சமீபத்தில் இவரது படப்பிடிப்பு நடந்த இடத்திற்குப் பக்கம் மம்முட்டியுடன் நயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்தது. உடனே அங்கே ஓடோடிச் சென்று, நயனுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார் இஷா தல்வார்.
சின்ன வயதில் வரைந்த கிரயான்ஸ் ஓவியங்களிலிருந்து, லேட்டஸ்டாக வரைந்த 3டி ஓவியங்கள் வரை அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் பார்வதி நாயர். கமலின் ‘உத்தம வில்லன்’ ரிலீஸை ஆவலுடன் எதிர்நோக்கும் பார்வதி, தனது ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
மீண்டும் கோலிவுட்டில் அமர்க்களமாக நுழைகிறார் நித்யா மேனன். ‘காஞ்சனா-2’வான ‘கங்கா’வில் டைட்டில் ரோல் அவருக்கு! மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’யில் நடித்து முடித்து விட்டார். ‘‘நான் வொர்க் பண்ணின இயக்குநர்கள்ல மணி சார் வித்தியாசமானவர். எதையும் தடையாக நினைக்காதவர். ஷூட்டிங் நேரத்தில் மழை பெய்தால் கூட ஃபீல் பண்ண மாட்டார். அழகா ஒரு குடையை எடுத்து கையில கொடுத்து அந்த மழையைக் கூட கவிதையா ஷூட் பண்ணிடுவார்’’ என ஃபீல் ஆகிறார் நித்யா.
நாடு முழுவதும் இருக்கும் பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 1061. இது காங்கிரஸைவிட மிக அதிகம். வரலாற்றிலேயே காங்கிரஸைவிட பாரதிய ஜனதாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருப்பது இதுதான் முதல் முறை!