விசில்



டி.வியில் 'படையப்பா’ படம் ஓடிக்கொண்டிருந்தது. ரஜினிகாந்த் தோள் துண்டால் அந்த ஊஞ்சலை இழுத்துப் போட்டு கம்பீரமாக அமரும் காட்சி வர, ராஜேஷ் கை தட்டி விசிலடித்தான். பேப்பர் படித்துக்கொண்டிருந்த அவன் அப்பா மகேந்திரனுக்கு டென்ஷன் ஏறியது.‘‘உமா... என்ன பையனைப் பெத்து வளர்த்திருக்கே? ரவுடிப்பய மாதிரி விசிலடிச்சிக்கிட்டு இருக்கான்’’ என்றார் கோபமாக.‘‘அவனுக்குப் பிடிச்சிருக்கு... விசில் அடிக்கறான். இதிலென்னங்க தப்பு?’’ - அம்மா வக்காலத்து வாங்கினாள்.

‘‘பத்தாவது அட்டெம்ப்டு... பிளஸ் 2 இன்னும் கூட பாஸ் பண்ணல... சரி, டிகிரிதான் படிக்கலைன்னாலும், படிச்ச படிப்புக்கு என்ன வேலை கிடைக்குதோ அதைச் செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு வெட்டியா ஊர் சுத்திக்கிட்டிருக்கான். ரெண்டு நாள் முன்னாடி இவனைத் தியேட்டர் வாசல்ல பார்த்தேன். அப்பவும் இப்படித்தான் அசிங்கமா விசிலடிச்சிக்கிட்டு... சே! இவனுக்கெல்லாம் எவன் வேலை கொடுப்பான்!’’

ராஜேஷுக்கு சுரீரென்று ரோஷம் வந்தது. வேலைக்குப் போகாத குற்றத்தைக் களைந்தெறிய முடிவு செய்தான்.‘‘போலாம் ரைட்...’’ - உதடு குவித்து க்ரீச் என விசிலடித்துச் சொன்னான் ராஜேஷ்.கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கொடிவேரி செல்லும் அந்தப் பேருந்தில் கண்டக்டராக பணியில் சேர்ந்துவிட்ட அவனுக்கு இனி பிழைப்பே விசிலடிப்பதுதான்.