பட்ஜெட்டால் பரிதவிக்கும் ஓய்வூதியதாரர்கள்



எங்க பணம் எங்களுக்கே!

புது மாதிரியான பட்ஜெட்... கடந்த 20 வருடங்களில் இல்லாத சூப்பர் பட்ஜெட்... என்றெல்லாம் பூப்போடப்படுகிறது 2015 பட்ஜெட். ஆனால், நடுத்தர - ஏழை மக்கள் சத்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் கடும் டென்ஷனாகி இருப்பது பென்ஷன் வாங்கும் சீனியர் சிட்டிசன்கள் தரப்பு. காரணம், அவர்கள் ஓய்வூதியத் தொகையின் மீதே கை வைக்கப்பட்டிருப்பதுதான்!

‘‘போன பட்ஜெட்ல ஓய்வூதியதாரர்களுக்குன்னு 250 கோடி ரூபாய் ஒதுக்கினாங்க. இந்த பட்ஜெட்டில் ஒற்றை ரூபா ஒதுக்கல. அதுகூட பரவாயில்ல... எங்க பணத்தை அரசுப் பணமாக்கிக்கிட்டு வாரி இறைக்கிறதைத்தான் தாங்கிக்க முடியல!’’ - குமுறலாக ஆரம்பிக்கிறார் இ.பி.எப்.95-அகில இந்திய ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் கே.கனகராஜ்.‘‘சார்... இந்தியாவுல 28 லட்சம் பேர் இன்னமும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாதான் பென்ஷன் வாங்கிட்டு இருக்காங்க.

அரசின் பொதுத்துறை நிறுவனத்துல வேலை பார்த்தவங்களே வெறும் 20 ரூபாய், 30 ரூபாய் பென்ஷன் வாங்குற அவலம் நம்ம நாட்டுலதான் நடக்குது. அவங்களுக்கு இந்த பட்ஜெட்டுல எந்த அறிவிப்பும் இல்ல. அதைவிடக் கொடுமை என்னன்னா, உரிமை கோரப்படாத பென்ஷன் பணமான 9 ஆயிரம் கோடி ரூபாயை எங்களுக்குத் தராம மூத்த குடிமக்களுக்கு ஒதுக்க முடிவெடுத்திருக்காங்க. இதுதான் தப்பு!’’ - ஆதங்கம் பொங்குகிறது அவர் பேச்சில்!

அதென்ன உரிமை கோரப்படாத பென்ஷன் பணம்?

‘‘கடந்த 1995ம் வருஷம் தனியார் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களுக்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த ஓய்வூதியத் திட்டம். இப்போ இந்தத் திட்டத்துல இணைஞ்சிருக்கவங்க ஆறரை கோடிக்கும் மேல. இந்தத் திட்டத்தின்படி, தொழிலாளர் சம்பளத்தி லிருந்து ஒரு தொகை பிடிப்பாங்க. அதே அளவு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனமும் கொடுக்கும்.

இப்படி செலுத்துற பணத்துல 8.33 சதவீதம் பென்ஷன் கணக்குல சேரும். மொத்தமா எவ்வளவு சேருதோ அதுதான் ஓய்வூதிய மூலதனத் தொகை. இதுக்கு ஒரு வட்டி போட்டுத்தான் பென்ஷன் கொடுப்பாங்க. பென்ஷன் வேண்டாம்னு சொல்லிட்டா அந்த மூலதனப் பணத்தையும் திரும்பிக் கொடுத்துருவாங்க. இப்படித்தான் இந்தத் திட்டம் ஆரம்பத்துல இருந்துச்சு.

ஆனா, கடந்த ஆறு வருஷங்களுக்கு முன்னாடி இந்த மூலதனப் பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டோம்னு அரசு நிறுத்திடுச்சு. நாங்க பல தடவை இந்த மூலதனப் பணத்தைத் திருப்பிக் கேட்டும் பலனில்லை. இப்படி அரசிடம் சேர்ந்திருக்கும் மூலதனப் பணம் மட்டுமே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். இந்தப் பணத்தை தொழிலாளர்கள் எல்.ஐ.சியிலோ வேற வங்கியிலோ போட்டிருந்தா நல்ல வட்டியும் கிடைச்சிருக்கும். மூலதனமும் திரும்பக் கிடைச்சிருக்கும்!’’ என்கிறார் கனகராஜ் வேதனையாக.

‘‘இது தவிர, குறைஞ்சது 15 வருஷமாவது வேலை பார்த்திருந்தாதான் அவங்களுக்கு பென்ஷன் கிடைக்கும். ஆனா, இப்ப இருக்கற சூழ்நிலையில நிறைய பேர் ஒரு நிறுவனத்துல இரண்டு வருஷத்துக்கு மேல வேலை பார்க்கிறதில்ல.

கம்பெனி மாறி மாறி அவங்க கணக்குல சேருற 8.33 சதவீத பென்ஷன் பணம் அப்படியே தேங்கிக்கிட்டுத்தான் இருக்கு. இந்தப் பணம் மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய்னு ஆரம்பத்துல அரசு சொல்லுச்சு. இதனால, நாங்க ‘எங்களுக்குத் தர்ற ஓய்வூதியத்தை 6 ஆயிரத்து 500 ரூபாயா உயர்த்துங்க’ன்னு கேட்டோம். அப்பவும் அரசு செய்யலை.

ஆனா, பட்ஜெட்ல இந்தப் பணத்தை 9 ஆயிரம் கோடி ரூபாய்னு சொல்லி, அதை மூத்த குடிமக்களுக்குன்னு ஒதுக்கியிருக்கிறதா சொல்றாங்க. மூத்த குடிமக்களுக்கு செய்றதை வரவேற்கிறோம். ஆனா, அதுக்கு அரசு தன்னோட நிதியைத்தானே ஒதுக்கி செய்யணும்? அத விட்டுட்டு உரிமை கோராத பென்ஷன் பணத்தைத் திருப்புறது சரியில்ல. அந்தப் பணம் பென்ஷனுக்கென ஒதுக்கப்பட்ட பணம். அதை ஓய்வூதியதாரர்களுக்கு செலவழிக்கிறதுதான் முறை.

எனவே, பென்ஷனை உயர்த்திக் கொடுக்க அந்தப் பணத்தை பயன்படுத்தணுமே தவிர, மற்ற திட்டங்களுக்கு திருப்பக் கூடாது. இதைக் கண்டிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணப் போறோம். நாங்க வைக்கிற வேண்டுகோள் ரொம்ப அடிப்படையானது; நியாயமானது. நடையா நடந்து 60 ரூபாயை ஒரு பென்ஷன்னு வாங்கிப் பார்த்தாதான் எங்க கொதிப்பு புரியும்!’’ என்கிறார் அவர் முடிவாக.

அரசின் பொதுத்துறை நிறுவனத்துல வேலை பார்த்தவங்களே வெறும் 20 ரூபாய், 30 ரூபாய் பென்ஷன் வாங்குற அவலம் நம்ம நாட்டுலதான் நடக்குது.

பேராச்சி கண்ணன்
படம்: ஆர்.சி.எஸ்