வெயிலோடு போகுமா பன்றிக்காய்ச்சல்?




* நடிகை சோனம் கபூரை பன்றிக்காய்ச்சல் தாக்கியது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
* நடிகை த்ரிஷா பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டார்
* இரண்டு மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக சென்னையில் ஒரு பள்ளி மெஸேஜ் அனுப்ப, மாணவர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு லீவ் போட்டனர்
* பன்றிக்காய்ச்சலுக்கு பயந்து அகமதாபாத் ஐகோர்ட் வக்கீல்கள் ஆயிரம் பேர் விடுப்பு எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு வரவில்லை
* பெங்களூருவைச் சேர்ந்த மோல்பயோ டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம், பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்து ஒரு மணி நேரத்தில் முடிவைச் சொல்லும் டெஸ்ட் கிட்டை கண்டறிந்துள்ளது. இதன் விலை ரூ.850

- சமீப காலத்தில் பன்றிக்காய்ச்சல் அளவுக்கு வேறு எந்த விஷயமும் தலைப்புச் செய்தியாக இத்தனை நாட்கள் இந்தியாவில் தாக்குப் பிடித்ததில்லை. குழப்பமும் பீதியும் அச்சமும் பரவிக் கிடக்க, ‘‘இவ்வளவு பயம் தேவையில்லை பாஸ்’’ என்கிறார்கள் நிபுணர்கள்.எப்போதும் கோடையைக் கடுப்போடு பார்க்கும் இந்தியர்கள், கொளுத்தும் வெயிலை இந்தமுறை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். காரணம்,

பன்றிக்காய்ச்சல். வெயில் வந்ததும் இந்த வைரஸின் தாக்கம் குறைந்துவிடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சீசனில் உலகெங்கும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் நான்கு பேர் இந்தியர்கள். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச இழப்பு. கடந்த இரண்டு வாரங்களில் தினமும் 600 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில்தான் 92 சதவீத பன்றிக்காய்ச்சல் நோயாளிகள் இருக்கிறார்கள். ‘ஏன் இப்படி இங்கு மட்டும்? என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனாலும், ‘‘பயப்பட ஒன்றுமில்லை’’ என்கிறார்கள் நிபுணர்கள். அதற்கு அவர்கள் அடுக்கும் காரணங்கள்...

* பன்றிக்காய்ச்சல் தாக்கியவர்களில் 96 சதவீதம் பேர் எந்த பாதிப்பும் இல்லாமல் பிழைத்துக்கொள்
கிறார்கள். சொல்லப்போனால், பலர் ‘தங்களுக்கு வந்தது பன்றிக்காய்ச்சல்’ என்பது தெரியாமலே குணமாகிவிடுகிறார்கள். இது ஆபத்தான உயிர்க்கொல்லி இல்லை.
* ஒரு வைரஸ் ஒவ்வொரு சீஸனில் வடிவம் மாறும். அப்படி எடுக்கும் புதிய வடிவம் பல சமயங்களில் வீரிய மற்றதாக இருக்கும்; சில சீஸன்களில் ஆபத்தானதாக இருக்கும். இந்த சீஸனில் பன்றிக்காய்ச்சல் ஃப்ளூ வைரஸ், எந்த ஆபத்தான மாற்றமும் பெறவில்லை.
* இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாதாரண ஃப்ளூ ஜுரத்தாலும், நிமோனியா காய்ச்சலாலும் சுமார் ஐந்து லட்சம் பேர் இறக்கிறார்கள். அதோடு ஒப்பிடுகையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மிகக் குறைவு. ஆனாலும் இது புது நோய் என்பதால் பீதி கிளம்புகிறது.

நோயைவிட வேகமாகப் பரவுவது அச்சமும் வதந்திகளும்தான். பன்றிக்காய்ச்சலைத் தடுக்க தடுப்பு மருந்தும், குணப்படுத்த மாத்திரைகளும் உண்டு. அவை சிறப்பாக நிவாரணம் தருகின்றன. இதுவரை நோயைக் கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை கிட், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விலை அதிகம். ஆறு மணி நேரத்தில் முடிவைச் சொல்லும். இப்போது பெங்களூருவில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

சிகிச்சை பல மாநிலங்களில் இலவசமாகவே செய்யப்படுகிறது. மாத்திரையை சகட்டுமேனிக்கு எல்லோரும் வாங்கிச் சாப்பிட்டு, அதன் வீரியத்தைக் குறைத்துவிடக்கூடாது என்பதற்காக, இந்தியா முழுக்க 2800 கடைகளில் மட்டுமே இது கிடைக்குமாறு செய்திருக்கிறார்கள். இதை மட்டும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். துளசி, நெல்லிக்காய், பாதாம் பருப்பு, பூண்டு, மஞ்சள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நிறைய தண்ணீர் குடிப்பதும், போதுமான தூக்கமும் சிக்கலைத் தவிர்க்கும்.

- அகஸ்டஸ்