நிலா நிலவரம்



10 விஷயம்
வித்யா குருமூர்த்தி

1.பூமியின் ஒரே இயற்கைத் துணைக்கோளான நிலவின் வயது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள் இருக்கக்கூடும். சூரியக் குடும்பம் உருவான 30-40 மில்லியன் வருடங்கள் கழித்து, பூமிக்கும் வேறு ஒரு பெரிய கோளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தூக்கி வீசப்பட்ட ஒரு மாசுப் படிமமே இது என்று நாசா (NASA) ஆய்வறிக்கை ஒன்றில் விளக்கியுள்ளது.

2.நிலவில் வாயு மண்டலம் மிகமிகக் குறைந்த அளவே நிலவுவதால், ஒலி அலைகள் ஊடுருவ இயலாது. அதாவது, எவரேனும் நம் அருகில் காது கிழியும் அளவு சத்தம் போட்டாலும், நமக்கு எதுவுமே கேட்காது. (சில காலம் முன்பு வரை நிலவில் காற்றே இல்லை எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அங்கு பூமியில் இல்லாத விதமாக, சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றால் ஆன வளிமண்டலம் நிலவுகிறது என்பது இப்போதைய கண்டுபிடிப்பு).

3.இதுவரை சூரியக் குடும்பத்தில் மொத்தம் 167 நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளன. பூமி - 1, செவ்வாய் - 2, வியாழன் - 63, சனி - 61
யுரேனஸ் - 27, நெப்டியூன் - 13.

4.நாமெல்லாம் ‘ஆ’ என வாயைப் பிளந்து கேட்ட (நம்பிய) பாட்டி நிலவில் வடை சுட்ட கதையை, இப்போதெல்லாம் குட்டிக் குழந்தை கூட நம்பாது. நம் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய, நிலவில் தெரியும் அந்த சில்-அவுட் வடிவம், 298 கி.மீ. அகலமும், 4250 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு மிகப்பெரிய பள்ளம். அதன் பெயர் Bailey.

5.பூமியிலிருந்து, நம் கண்களுக்குத் தெரிவது நிலவின் 59 சதவிகிதம் மட்டுமே.



6.நிலவின் பரப்பளவு 14 லட்சத்து 658 ஆயிரம் சதுர மைல்கள் (அ) 9.4 பில்லியன் ஏக்கர்.

7.பூமியின் குறுக்களவில் (Diameter) நான்கில் ஒரு பாகம்தான் நிலவின் விட்டம் (2159 மைல் அல்லது 3476 கி.மீ). தோராயமாக, 45 நிலவுகளை பூமிக்குள் அடக்கலாம்.

8.புவியிலிருந்து நாம் எப்போதும் நிலவின் ஒரே பக்கத்தையே பார்க்கிறோம் (ஆங்கிலத்தில் இதை Near side அல்லது Face of Moon என்பார்கள்). நிலவின் இன்னொரு பக்கத்தை இங்கிருந்து காண இயலாது (இதை இருண்ட பக்கம் அதாவது, Dark side என்பர்). இதற்குக் காரணம், நிலா தன்னைத்தானே சுற்றுவதும், புவியின் சுற்றுவட்டப் பாதையில் சஞ்சரிப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. இதனால் தொடர்ச்சியாக, நிலவின் ஒரு பக்கம் மட்டுமே காணக் கிடைக்கிறது.

9.சூரியக் குடும்பத்தில் இருப்பதிலேயே மிகப்பெரிய நிலவின் பெயர் Ganymede. வியாழனின் 63 துணைக்கோள்களில் ஒன்றான இது, 5276 கி.மீ. பரப்பளவு கொண்டது. புளூட்டோ
கிரகத்தை விடவும் பெரியது.

10.நிலவு என்பது வட்ட வடிவமாகத்தான் இருக்கும் என்பதில்லை. வட்ட வடிவம் கொள்வதற்குத் தேவையான நிறை இல்லாதவை மற்றும் குறைவான ஈர்ப்புசக்தி கொண்ட துணைக்கோள்கள் சில, சமையல் தெரியாத புதுப்பெண் செய்த கொழுக்கட்டை போல ஒரு குழப்பமான வடிவத்தில் அமைந்திருக்கும்! எ.கா: செவ்வாயின் Phobos and Deimos - கிட்டத்தட்ட உருளைக்கிழங்கு போன்ற வடிவத்தில் இருக்கும்.

"நாமெல்லாம் ‘ஆ’ என வாயைப் பிளந்து கேட்ட (நம்பிய) பாட்டி நிலவில் வடை சுட்ட கதையை, இப்போதெல்லாம் குட்டிக் குழந்தை கூட நம்பாது!"