விட்டுக் கொடுக்க வேண்டுமா?



எல்பிஜி மானியம்

திடீரென்று மொபைல் போனுக்கு அழைப்பு வருகிறது. பாரதப் பிரதமர், ‘உங்கள் சமையல் கேஸ் மானியத்தை ‘கிவ் இட் அப்’ செய்யுங்கள்’ என்று வேண்டுகோள் விடுகிறார். ‘உங்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுப்பதன் மூலம் ஊதாங்குழலால் அடுப்பூதி வதைபடும் ஒரு ஏழைப்பெண்ணுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கும்’ என்று மனமுருகும் எஸ்.எம்.எஸ்கள் வந்து குவிகின்றன. ‘எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’ என்று விளம்பரம் செய்த பெட்ரோல் பங்குகள், ‘உங்கள் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுங்கள்’ என்று இரண்டு ஆள் உயரத்துக்கு ஹோர்டிங் வைத்து கோரிக்கை விடுகின்றன. ஆனால்...

அரசு அளிக்கும் மானியங்கள் உரியவர்களுக்குக் கிடைக்காமல் இடையில் உள்ளவர்களால் சுரண்டப்படுவதைத் தடுக்கும் விதத்தில் நேரடி மானியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அதன்படி, சமையல் எரிவாயுவுக்கு வழங்கி வந்த மானியத் தொகையை உற்பத்தி நிறுவனங்களுக்குத் தராமல் நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இப்போது ‘கிவ் இட் அப்’ எனப்படும் ‘விட்டுக் கொடுங்கள்’ திட்டம்!

இந்தியாவில் 14 கோடியே 64 லட்சம் எரிவாயு இணைப்புகள் உள்ளன. மாதம் 1 வீதம் ஒரு குடும்பம் வருடத்துக்கு அதிகபட்சம் 12 சிலிண்டர்களை மானியத்தோடு பெற்றுக் கொள்ளலாம். ஒரு சிலிண்டருக்கு 170 முதல் 200 ரூபாய் வரை மானியமாக மத்திய அரசு நேரடியாக நுகர்வோரின் வங்கிக்கணக்கில் செலுத்தும் (பலருக்கு மானியத் தொகை வங்கிக்கணக்கில் வந்து சேராதது வேறு கதை). இப்போது இந்த மானியத்தைத்தான் விட்டுக் கொடுக்கச் சொல்கிறது மத்திய அரசு. இதற்கென பல நூறு கோடி செலவில் பிரசாரம் நடக்கிறது. மானியத்தை விட்டுக் கொடுத்தால் அதன் மூலம் விறகடுப்பைப் பயன்படுத்தும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்க முடியும் என்கிறது மத்திய அரசு.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களும், திரைப்பட நடிகர்கள், இயக்குனர்களும், கோடிகளில் சம்பாதிக்கும் சில விளையாட்டு வீரர்களும் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுத்து விட்டு மக்களுக்கும் அட்வைஸ் செய்கிறார்கள். கடந்த 3 மாதங்களில் சுமார் 12 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்கள் மானியத்தை விட்டுத் தந்ததாக எரிவாயு நிறுவனங்கள் கணக்கு சொல்கின்றன. தமிழகத்தில் மட்டும் சுமார் 21 ஆயிரத்து 300 பேர் தங்கள் மானியத்தை விட்டுத் தந்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் தினமும் 20 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் இணைந்து வருவதாக அரசு இணையதளங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, 140 கோடி ரூபாய் மானியம் மிச்சமாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் இணையவில்லை என்பதும் முக்கியமானது!




மத்திய அரசின் இந்த கிவ் இட் அப் திட்டம் சமூக ஊடகங்களிலும், பொது வெளிகளிலும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு பெரு நிறுவன முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடிகள் வரிச்சலுகைகளையும், வட்டித் தள்ளுபடிகளையும், நிதிகளையும் வாரி வழங்குகிற மத்திய அரசு, ஒரு மத்திய தர குடும்பத்தின் 200 ரூபாய் மானியத்தில் கைவைத்து வஞ்சிக்கிறது என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். “ஒரு குடும்பம் மாதம் ஒன்று என்ற எண்ணிக்கையில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தினால் கூட வருடத்துக்கு கிடைக்கும் மொத்த மானியத்தொகை 2,400 ரூபாய்தான்.

அதிலும் பெரும்பாலான நுகர்வோர் ஆண்டுக்கு நான்கோ, ஐந்தோ சிலிண்டர்களையே வாங்குகிறார்கள். நேரடி மானியத் திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் மானியத்தொகை பெரும்பாலான நுகர்வோருக்கு சென்று சேருவதே இல்லை. நேரடி மானியத் திட்டம் கொண்டு வரும் போதே மானியத்தை நிறுத்துவதற்கான தொடக்கம் என்று நாங்களெல்லாம் குரல் கொடுத்தோம். நேரடியாக மானியத்தை நிறுத்தாமல்,  மக்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்வை உருவாக்கி, அவர்களாகவே ‘எங்களுக்கு மானியம் வேண்டாம்’ என்று சொல்லச் செய்திருக்கிறது மத்திய அரசு. இது ஒரு வகை உளவியல் யுக்தி. ஒரு அரசு இப்படியான ஒரு யுக்தியைக் கையில் எடுத்திருப்பது வருந்தத்தக்கது. சில ஆண்டுகளாகவே மத்திய அரசுகள் இதுபோன்ற யுக்தியை தொடர்ந்து கையாளுகின்றன.

இந்தியாவில், உலகளாவிய அடிப்படையில் நேர்மையாகப் பார்த்தால் 60 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழேதான் இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தைப் பெருக்கி அம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டிய அரசு, வறுமைக்கோட்டுக்கான வரையறை அளவீட்டைக் குறைத்து எங்கள் நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று கணக்குக் காட்டியது. இப்போது, நடுத்தரக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சொற்ப மானியத்தையும் அவர்களாகவே தருமாறு பறித்து, அதன் மூலம் விறகடுப்பு எரிக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு எரிவாயு இணைப்புத் தருவதாகச் சொல்கிறது. அரசின் உண்மையான நோக்கம், நடுத்தர மக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் எந்தப் பலனும் இல்லாத வகையில், ‘மானியமில்லாத இந்தியா’வைக் கட்டமைப்பதுதான். அதற்கான முகாந்திரங்களே இதுபோன்ற திட்டங்கள்.

வெளிநாடுகளுக்குப் போய், பெரு நிறுவனங்களை எல்லாம் வரவேற்று அழைத்து வரும் பிரதமர், அந்நிறுவனங்களுக்கு வழங்குகிற வரிச்சலுகைகள், மானியங்கள் அளவை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? பெரும்புதூரில் பல நூறு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துவிட்டுச் சென்ற நோக்கியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை எவ்வளவு? கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி வரி வரவேண்டும் என்கிறார்கள். இதுபோல பெரு நிறுவனங்கள் கட்ட வேண்டிய நிலுவை வரிகள் எத்தனை லட்சம் கோடிகள்? நிமிடத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அம்பானிகளுக்கு 2,400 ரூபாய் மானியம் என்பது பெரிதில்லை. ஆனால், விலைவாசி உயர்வாலும், வாழ்வாதாரச் சிக்கலாலும் வதைப்பட்டு அன்றாடங்களை நகர்த்துகிற ஒரு நடுத்தர வாசிக்கு இது மிகப்பெரிய தொகை. பெரு நிறுவனங்கள் கட்டவேண்டிய வரிகளை வசூலித்தாலே இந்தியாவில் உள்ள அத்தனை வீடுகளிலும் எரிவாயு அடுப்பு எரியும். அதைச் செய்யாமல் நடுத்தர மக்களின் பாக்கெட்டில் கை வைக்கக்கூடாது...” என்கிறார் ‘இந்தியன் குரல்’ அமைப்பின் நிறுவனரான பாலசுப்ரமணியன்.

சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணனின் பார்வையோ வேறுவிதமாக இருக்கிறது. “உண்மையில் இது மக்களுக்குப் பொறுப்பை உருவாக்கும் திட்டம்...” என்கிறார் அவர். “எரிவாயு  என்பது  சுரந்துகொண்டே இருக்கக்கூடிய பொருளல்ல. அதை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மானியம் கிடைக்காவிட்டால் மக்கள் பொறுப்புணர்வோடு அதைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். கட்டாயம் மானியத்தை விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தவில்லை. தந்தால் ஒரு ஏழை வீட்டு அடுப்பெரியும் என்கிறது. இதுமாதிரி மனநிலை இயல்பாகவே மக்களுக்கு வரவேண்டும். அப்படி வந்தால்தான் திட்டங்கள் உரிய மக்களுக்குப் போய் சேரும். மானியங்கள் என்பதே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத்தான். இந்தியாவிலோ பெரும்பாலான மானியங்கள் உரியவர்களை சென்றடைவதில்லை. அதற்கான மத்திய அரசின் முனைப்புகள் வரவேற்கத்தக்கவை. எரிவாயு மானியம் பெறுவது மக்களின் உரிமை. அதை விட்டுத்தர வேண்டியது கடமை...” என்கிறார் நாராயணன்.

இடதுசாரி சிந்தனையாளர் அருணனின் கோணம் இது... “மத்தியதர வர்க்கத்துக்கு தாழ்வு மனப்பான்மையையும் குற்ற உணர்வையும் உருவாக்குகிறது மத்திய அரசு...” என்று குற்றம் சாட்டுகிறார் அவர். “400 ரூபாய் விற்ற சமையல் எரிவாயு உருளையை இப்போது 650 முதல் 700 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே அரசு சொன்னது போல வங்கிக்கணக்கில் மானியம் வந்து சேருகிறதா இல்லையா என்பதைக்கூட உறுதி செய்ய முடியவில்லை. இப்போது, மானியத்துடன் சமையல் எரிவாயு வாங்குவது தேசத் துரோகம் என்று யோசிக்கும் அளவுக்கு அரசு, ‘கிவ் இட் அப்’ பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் நோக்கம், மானியத்தை மொத்தமாக நிறுத்துவதுதான். ஒரு வருமான வரம்பை நிர்ணயித்து அதற்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே மானிய எரிவாயு என்ற அறிவிப்பு விரைவில் வரலாம்.

இதே வேகத்தையும் ஆர்வத்தையும் கார்பரேட் முதலாளிகள் விஷயத்தில் காட்டினால் நாடு செழிக்கும். எங்கள் கணக்குப்படி ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, வட்டித் தள்ளுபடி, மானியம் வழங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி சேர்மன் ரகுராம் ராஜனே இதுபற்றிக் குறிப்பிட்டு வருத்தப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சுமார் 5 லட்சம் கோடி பற்றாக்குறையாக வருகிறது. கார்பரேட் நிறுவனங்களுக்குத் தரும் சலுகைகளை நிறுத்தினாலே, பற்றாக்குறை இல்லாத
பட்ஜெட்டைப் போட்டுவிட முடியும். பிரதமர் அதற்குத் தயாராக இருக்கிறாரா?  நடுத்தர மக்களின் மனசாட்சியை உலுக்குவது போல பெரு முதலாளிகளிடம் கோரிக்கை விடுப்பாரா? வரவேண்டிய வரிகளை வசூலியுங்கள். பெரு நிறுவனங்களுக்குத் தரும் மானியங்களைக் குறையுங்கள். வட்டிகளை தள்ளுபடி செய்யாமல் வசூல் செய்யுங்கள். மக்கள் தானாக தங்கள் மானியங்களை விட்டுத் தருவார்கள்...” என்கிறார் அருணன். விட்டுக் கொடுக்க வேண்டுமா, என்ன!

"நிமிடத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அம்பானிகளுக்கு 2,400 ரூபாய்  மானியம் என்பது பெரிதில்லை. ஆனால், விலைவாசி உயர்வாலும், வாழ்வாதாரச்  சிக்கலாலும் வதைப்பட்டு அன்றாடங்களை நகர்த்துகிற ஒரு நடுத்தரவாசிக்கு இது  மிகப்பெரிய தொகை..."

"மானியத்துடன் சமையல் எரிவாயு வாங்குவது தேசத் துரோகம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்த அரசு, ‘கிவ் இட் அப்’ பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது..."

"மானியங்கள் என்பதே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத்தான். இந்தியாவிலோ பெரும்பாலான மானியங்கள் உரியவர்களை சென்றடைவது இல்லை..."

- வெ.நீலகண்டன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்