நீங்கதான் முதலாளியம்மா!



குரோஷா கைவினைப் பொருட்கள்
ஏஞ்சலின் ப்ரின்ஸ்

``கைவினைப் பொருட்கள் செய்யறது கைகளுக்கு மட்டுமான பயிற்சி இல்லை. மனசுக்கும் ஆரோக்கியம் கூட்டற விஷயம். தன்னாலயும் ஒரு சுய தொழிலை செய்ய முடியும்கிற தன்னம்பிக்கையை அதிகரிக்கும்’’ என்கிறார் ஏஞ்சலின் ப்ரின்ஸ். சென்னை அண்ணாநகரை சேர்ந்த இவர், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் சமூகப்பணி தொடர்பான படிப்பை முடித்துவிட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.

``மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கும் போதை அடிமைகளுக்கும் மறுவாழ்வு கொடுத்து அவங்க உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவற வேலைகளை எங்க அமைப்பு மூலமா செய்யறோம். அதுல ஒண்ணுதான் அவங்களுக்கான கைவினைக் கலைப் பயிற்சி. பிளாக் பிரின்டிங், புடவை டிசைனிங்னு நிறைய சொல்லிக் கொடுக்கறேன். அதுல முக்கியமானது குரோஷா வேலைப்பாடு. குரோஷா பின்னல் கத்துக்க மனசு ஒருநிலைப்படணும். கவனம் சிதறக்கூடாது. மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கு மட்டுமல்ல... மத்தவங்களுக்குமே இது ரொம்ப நல்ல பயிற்சி. குரோஷா பின்னல் முறையில பிறந்த குழந்தைங்களுக்கான பூட்டிஸ், தொப்பி, செல்போன் பவுச், ஹேண்ட்பேக், பிரேஸ்லெட், கொலுசுனு நிறைய பண்ணலாம். உல்லன் நூல், குரோஷா ஊசி மட்டும்தான் மூலதனம். ஒரு பந்து உல்லன் நூல் 12 ரூபாய்க்கு கிடைக்கும். அதுல ஒரு ஜோடி பூட்டிஸ் பின்னலாம். அதை 150 ரூபாய்க்கு விற்கலாம். எதிர்பார்க்க முடியாத அளவுக்கு லாபம் கிடைக்கும். பொறுமையும் கிரியேட்டிவிட்டியும்தான் இதுல முக்கிய மூலதனங்கள். வெளிநாடுகள்ல இந்த உல்லன் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. நம்மூர்லயும் அடுத்து வரப்போறது குளிர்காலம்கிறதால உல்லன் தயாரிப்புகளுக்கு டிமாண்ட் அதிகமாகும்’’ என்கிற ஏஞ்சலின் 2 நாட்கள் பயிற்சியில் அடிப்படையான குரோஷா பின்னல் முறைகளையும், அதை வைத்து 6 வகையான உல்லன் தயாரிப்புகள் செய்யவும் கற்றுத் தருகிறார். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,000 ரூபாய்.



பனியன் துணியில் நைட் டிரெஸ்
அமுதா

பருத்தி உடைகள்தான் உடலுக்குப் பாந்தமானவை... ஆரோக்கியமானவை. ஆனாலும், சுத்தமான பருத்தித் துணிகளில் உடைகள் கிடைப்பது இன்று குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதிலும் அன்றாடத் தேவையான உள்ளாடைகள், இரவு உடைகள் போன்றவை பருத்தியில் கிடைப்பது அபூர்வம். பருத்திக்கு இணையான இன்னொரு மாற்று பனியன் துணி. அணிய இதமானது என்பதால் இதற்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக பனியன் துணியில் தைக்கப்பட்ட நைட் டிரெஸ்தான் வேண்டும் எனத் தேடித் தேடி வாங்கவே ஒரு கூட்டம் உண்டு. திருப்பூரைச் சேர்ந்த அமுதா பனியன் துணியில் நைட் டிரெஸ் தைத்து விற்பனை செய்கிறார்.

``எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். சொந்த ஊர் திருப்பூர். அதனால பனியன் துணிகளைப் பத்தி சின்ன வயசுலயே தெரியும். சொந்தக்காரங்களும் இந்தத் துறையில இருக்காங்க. படிப்பை முடிச்சிட்டு ஒரு கம்பெனியில சேல்ஸ் மேனேஜரா வேலை பார்த்திட்டிருந்தேன். குழந்தை பிறந்ததும் வேலைக்குப் போக முடியலை. எனக்குப் பரிச்சயமான வேலையை வீட்ல இருந்தபடியே செய்யலாம்னு நினைச்சேன். எனக்கு டெய்லரிங்கும் தெரியும். அப்பதான் பனியன் துணியில நைட் டிரெஸ் தச்சு விற்கற ஐடியா வந்தது. திருப்பூர்ல நல்ல தரமான பனியன் துணி கிலோ கணக்குல கிடைக்கும்.  தரத்தைப் பொறுத்து கிலோ 150 ரூபாய்லேருந்து 500 ரூபாய் வரைக்கும் விற்கறாங்க. ஒரு கிலோவுல 6 வயசுக் குழந்தைங்களுக்கான நைட் டிரெஸ்னா 3 செட் தைக்கலாம். தையல் மெஷின், எலாஸ்டிக், ஊசி, நூல்தான் தேவை. மெஷின் தவிர்த்து மற்ற பொருட்களுக்கு 3 ஆயிரம் முதலீடு போதும். ஒரு நாளைக்கு 4 செட் வரை தைக்கலாம். பேன்ட், ஷர்ட் மாடல்லயே ரெண்டு விதமா தைக்கறேன். வெளியில இதே நைட் டிரெஸ்சை ஒரு செட் 400 ரூபாய்க்கு விற்கறாங்க. நான் 300 ரூபாய்க்கு கொடுக்கறேன். 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற அமுதா, ஒரே நாள் பயிற்சியில் 2 விதமான நைட் டிரெஸ் மாடல் தைக்கக் கற்றுத் தருகிறார். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 750 ரூபாய்.

மணப் பெண்களுக்கான பூ ஜடை
அர்ச்சனா


என்னதான் திருமண நிகழ்வுகளும் பெண்களுக்கான மற்ற சடங்குகளும் நாகரிகமாக மாறிப் போனாலும், பின்னலில் பூ ஜடை வைத்துத் தைத்து அலங்கரிக்கிற கலாசாரம் மட்டும் மாறவே இல்லை. மேற்கத்திய சிந்தனை உள்ள பெண்களுமேகூட, முகூர்த்தத்துக்கு பட்டு உடுத்தி, பின்னலில் பூ வைத்து தைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். மணப் பெண்களுக்கான பூ ஜடை அலங்காரங்களில் அசத்துகிறார் சென்னை அசோக் நகரை சேர்ந்த அர்ச்சனா.

``பிளஸ் டூதான் படிச்சிருக்கேன். சின்ன வயசுலேருந்தே பூ கட்டறது, ஜடை அலங்காரம் பண்றதுல எல்லாம் ஆர்வம் உண்டு. எந்தப் பூவைக் கொடுத்தாலும் அதை அழகான ஜடையா தச்சுடுவேன். எல்லாரும் பாராட்டவே, அதையே முழு நேர வேலையா பண்ணினா என்னங்கிற எண்ணம் வந்தது. கடந்த 5 வருஷங்களா பூ ஜடை தச்சுக் கொடுக்க ஆர்டர்ஸ் எடுக்கறேன்...’’ என்கிற அர்ச்சனா, இந்த ஜடைகளை ஒரிஜினல் பூக்களில் தைக்கிறார். ``ரோஜா, மல்லி, நந்தியாவட்டைனு எல்லா பூக்கள்லயும் ஜடைகள் தைக்கலாம். சிலர் மாடல் காட்டி, அதே போல வேணும்னு கேட்பாங்க. இன்னும் சிலர் உங்க ஐடியாபடி தச்சுக் கொடுங்கனு கேட்பாங்க. கல்யாணப் பெண்ணோட புடவை, மேக்கப்னு எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கிற மாதிரி தச்சுக் கொடுப்பேன். பூக்கள், வாழைநார், ஊசினு தேவையான பொருட்களுக்கு வெறும் 500 ரூபாய்தான் முதலீடு. இந்த 500 ரூபாய்ல 4 ஜடைகள் தச்சிடலாம். ஒரு ஜடை தைக்க 4 மணி நேரம் போதும். சிலர்  ‘ஜடையா தச்சுக் கொடுத்துடுங்க... நாங்க கல்யாணப் பெண்ணோட தலையில ஃபிக்ஸ் பண்ணிக்கிறோம்’னு கேட்பாங்க. சிலர் நேர்ல வந்து வச்சுக்கிட்டுப் போறதும் உண்டு. முகூர்த்த சீசன்ல நிறைய ஆர்டர் வரும். ஒரு ஜடையை 1,500 ரூபாய்க்கு விற்கலாம். பெரிய லாபம் பார்க்கலாம்’’ என்கிற அர்ச்சனாவிடம் ஒரே நாள் பயிற்சியில் 10 மாடல் ஜடைகள் தைக்க (வேணி, உள்பட) கட்டணம் 1,500 ரூபாய்.    

 - ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்