வெங்காயம் இல்லாமலே விருந்தே படைக்கலாம்!



சுவை புதிது

வெங்காய விலையேற்றம் வீம்பு பிடித்தாற்போல தொடர்கிறது. காய்கறிக்குக் கடைக்குப் போனாலே கண்ணீர் வருகிறது. சிலருக்கோ இல்லாமல் சிலருக்கு சமைக்கவே தெரியாது. ‘எப்படியிருப்பினும் வெங்காயம் இல்லாத உணவு ருசிக்குமா’ என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வி. வெங்காயமே இல்லாமல் விருந்தும் சமைக்கலாம் என நிரூபிக்க வருகிறார்கள் தோழியின் சிறப்பு சமையல்கலை நிபுணர்கள். இதோ இந்த இதழில் புதிய சுவை படைக்கிறார் சமையல் கலைஞர் ஜெய சுரேஷ். திடீர் திடீரென எகிறும் வெங்காய விலை ஏற்றத்தை சமாளிக்க, இந்த ரெசிபிகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்!

கல்யாண கொத்சு


என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், டர்நிப், கேரட் - 1 கப், பாசிப் பருப்பு - 1/4 கப், கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் தூள் - 3/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, பெருங்காயம் - 1 சிட்டிகை, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், வெல்லம் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

புளியை வெந்நீரில் ஊற வைத்து, 1 கப் தண்ணீர் விட்டு புளித் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பு, கடலைப் பருப்பை தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, காய்கறிகளைச் சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கி உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், புளித் தண்ணீர் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் ஊற வைத்த பருப்பைப் போட்டு, குக்கரை மூடி விடவும்.  3 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு அத்துடன் வெல்லம் சேர்த்து, ஒரு கொதிவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்கி சூடாக இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



வாழைக்காய் கோஃப்தா

என்னென்ன தேவை?

கோஃப்தாவுக்கு...

வாழைக்காய் - 1, முந்திரிப் பருப்பு - 7, கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

கிரேவிக்கு...

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், தக்காளி - 2, சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன், தனியா தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், க்ரீம் அல்லது பால் - 1/4 கப், கசூரி மேத்தி - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வாழைக்காயை இரண்டாக வெட்டி, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். தோலை எடுத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை பொடித்துக் கொள்ளவும். மசித்த வாழைக்காயுடன் பொடித்த முந்திரி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்துப் பிசையவும். இதை சிறிய உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். அத்துடன் சீரகத் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது சிறிது தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்தவுடன் பால் அல்லது க்ரீம் சேர்த்து, 2 நிமிடம் கழித்து கசூரி மேத்தி சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும். பரிமாறும் போது கோஃப்தா உருண்டைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

ஜவ்வரிசி உப்புமா

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி - 1 கப், கேரட் - 1, குடை மிளகாய் - 1/4 துண்டு, பச்சை மிளகாய் - 1, கடுகு - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஜவ்வரிசி மூழ்கும் அளவுக்கு விட்டால் போதும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு, பொடியாக நறுக்கிய கேரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். ஜவ்வரிசி நீரை நன்கு உறிஞ்சி இருக்கும். அதையும் கடாயில் போட்டுக் கிளறவும். தீயை சிறியதாக வைத்து, ஜவ்வரிசி கண்ணாடி மாதிரி ஆகும் வரை கிளறவும். ஜவ்வரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.

தால்  ஃப்ரை

என்னென்ன தேவை?


பாசிப் பருப்பு - 1/2 கப், தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் + நெய் - 2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது, கடுகு - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் பாசிப் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும். கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.