விட்டு விடுதலையாகிப் பறப்போம் அந்தச் சிட்டுக் குருவியைப் போல!



பாமா
ஆசிரியர் / எழுத்தாளர்

விளிம்புநிலை மக்களின் குறிப்பாக பெண்களின் அவல நிலையை, வாழ்வின் வலிகளை தன் வாழ்க்கையோடு இணைத்து இந்த சமூகத்துக்கு அறிவித்தவர். தலித் மக்களின் வாழ்வியல் மொழியை தன் படைப்புகளில் பயன்படுத்தி தமிழ் நாவல் உலகில் புதிய பாதையை வகுத்தவர். எழுதியவை அதிகமில்லை எனினும், இவரது எழுத்துகள் பொழுது போக்குக்கானவை அல்ல. சமூக மாற்றத்திற்கான விதைகள் அவை.  இலக்கிய உலகில் இவர் நுழைந்த ஆரம்ப நொடியே அதிரடிதான். இவரது முதல் நாவலுக்கு எழுந்த எதிர்ப்பு, பின்னாளில் அதே அளவு புகழை அவருக்குப் பெற்று தந்தது. அந்த நாவலே அவருக்கு அடையாளமாகிப் போனது. பாமா ‘கருக்கு பாமா’ ஆனதும் அப்படித்தான். துன்பமும் துணிச்சலும் கலந்த அவரது வாழ்வின் சில துளிகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதில் இருந்து...

இளமைப் பருவம் மற்றும் குடும்பப் பின்னணி...

அப்பா,  அம்மா அதிகம் படிக்கவில்லை. அப்பா  இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அம்மா கூலி வேலை செய்தார்கள்.  என்னோடு சேர்த்து நாங்கள் 6 பேர். பெண்கள் கல்வி  பெறுவதற்கு பெரிய வரவேற்பு  எதுவும்  இல்லாத  காலகட்டத்தில்   நான் படிக்க நேர்ந்தாலும்  எனது அப்பா ராணுவத்தில் இருந்ததால் எனக்குப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பா எங்கள் அனைவரையும் அவரது வாழ்நாள் உழைப்பெல்லாம் செலவு செய்து படிக்க வைத்தார். நாங்கள் அனைவரும்  நன்கு படித்து அவரவர் கால்களில் அவரவர் நிற்க வேண்டுமென ஆசைப்பட்டார். அதன்படியே செய்தும் காட்டினார்.  எனது பாட்டிதான் எங்களுக்குப் பக்க பலமாக இருந்தார்கள்.

இலக்கிய ஈடுபாடு வந்த காலகட்டம்?

ஆரம்பத்தில் இலக்கிய ஆர்வம் என்று பெரிதாக ஒன்றுமில்லை. என் அண்ணன் கல்லூரி விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும்போது பக்கத்து ஊரிலிருந்த  நூல் நிலையத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து வாசிப்பதை வழக்கமாகக்  கொண்டிருந்தார். அந்தப் புத்தகங்களை என் அம்மா முதற்கொண்டு நாங்கள் அனைவருமே வாசிப்போம். அப்படித்தான் எனக்கு பல எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்கள் மீது அலாதியான ஈடுபாடும் ஏற்பட்டது. சின்னச் சின்னதாக கவிதைகள் எழுத ஆரம்பித்ததும் அந்த நாட்களில்தான்.

முதல் நாவலே இலகுவாக கைவந்தது எப்படி?


என் அப்பா  ராணுவத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது திரையிசைப் பாடல்களின் மெட்டில் பக்திப் பாடல்கள் எழுதி எங்களுக்குக் கற்றுக் கொடுத்து பாட வைப்பார்கள். தனது இளமைக் கால வாழ்க்கைச் சரித்திரத்தை மிகவும் விறுவிறுப்பாகவும் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் அப்பா எழுதி வைத்திருந்தார். நாங்கள் அதை வாசித்துப் பார்த்து வியப்படைந்தோம். விடுமுறைக்கு வந்திருந்த போது நாடகங்கள்  எழுதி நடித்திருக்கிறார்கள் என்று  அம்மா சொல்வார்கள்.  என் பாட்டியும் ஒரு சிறந்த கதைசொல்லி. அண்ணன் ராஜ் கௌதமனும் ஓர் எழுத்தாளர். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை ‘நந்தினியின் சபதம்’ என்ற தலைப்பில் நாடகமாக வசனங்கள் எழுதி, எங்கள் ஊர் இளைஞர்களை வைத்து நடித்தார்கள். நானும் நன்றாகக் கதைகள் சொல்வேன். நான் எதனையும் உன்னிப்பாகக் கண்டு ரசிப்பவள்... உணர்பவள்.  ஒருவேளை   இப்படி ஒரு சூழலில் வளர்ந்து வந்த எனக்கு  எனது முதல் புத்தகமான ‘கருக்கு’ எழுதுவது சாத்தியமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.     
  


‘கருக்கு’ நாவலுக்கு வந்த எதிர்ப்புகளும் பாராட்டுகளும்...

ஆரம்பத்தில்  கருக்கு நாவலுக்கு அதிகம் எதிர்ப்பு இருந்தது. அதன் மொழி, நடை, வடிவம், அமைப்பு, அதில் எழுதப்பட்ட விஷயங்கள், அவை எழுதப்பட்ட விதம் என்று பல்வேறு விமர்சனங்கள் வந்தன. அதைப்பற்றி  இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று நான்
எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே நொந்து போயிருந்த எனக்கு இந்த விமர்சனங்கள் மிகுந்த வேதனையைத் தந்தன. குறிப்பாக எனது சொந்த ஊரிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரிலிருந்த எனது பெற்றோரிடம் சண்டை போட்டது என்னை மிகவும் பாதித்தது. போகப்போக அந்த விமர்சனங்கள் குறைய ஆரம்பித்தன. அது ஒரு வித்தியாசமான படைப்பு என்றும், வித்தியாசமான எழுத்து என்றும் தமிழுக்குக் கிடைத்த புதுவரவு என்றும் கொண்டாடினார்கள். என் ஊர் மக்களும் எனக்கு ‘கருக்கு பாமா’ என்ற அடையாளத்தைத் தந்து பெரிய விழா எடுத்து மகிழ்ந்தார்கள்.

பாமா- ‘கருக்கு’ பாமா வித்தியாசம்?

இப்படியெல்லாம் வித்தியாசப்படுத்த முடியாது. இந்த வாழ்க்கையை நான் அவதானிக்கும் விதம் பற்றியும், நான் எதிர் கொள்ளும் சவால்கள், சாதனைகள் பற்றியும், நானறியும் மக்களின் உணர்வுகள் பற்றியும், சமுதாயத்தின் நிகழ்வுகள் பற்றியும் என் பாணியில் நான் பதிவு செய்கிறேன்.  பொதுவாக என் வாழ்க்கைக்கும் என் எழுத்துகளுக்கும்  பெரிய இடைவெளி என்று  எதுவும் இல்லை.

முதல் நாவல் உங்கள் வாழ்க்கை சுருக்கமாக அமைந்தது இயல்பு. அடுத்தடுத்து வந்த படைப்புகளிலும் உங்கள் வாழ்க்கை இழையோடுவது ஏன்?

எனது படைப்புகள் எல்லாவற்றிலுமே நான் இருக்கிறேன். காரணம், அவை என் கதை மட்டுமல்ல... அவை மக்களின் கதைகள். மக்களோடு இணைந்த என் கதைகளில் நிச்சயமாக என்னைத் தவிர்க்க முடியாது.

உங்கள் நாவல்களின் மொழிநடை, வடிவம் குறித்தான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

எனது படைப்புகளில், நான் பயன்படுத்தும் மொழிநடைப் பற்றி பலரும் விமர்சித்துள்ளனர். தமிழ் பலவிதமான பேச்சு மொழிகளைக் கொண்டு வளமான மொழியாக  உயிர்ப்புடன் இருக்கிறது. அதிலுள்ள வட்டார வழக்குகளும், பழமொழிகளும், சொலவடைகளும் சொல்லாடல்களும்  தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை உணர்த்தக்கூடிய மொழியில் எழுதுவது தவறல்ல... அது தவிர்க்க இயலாத ஒன்று. எனவே, நான் அப்படிப்பட்ட மக்களின் மொழியைக் கையாள்வதில் தவறொன்றுமில்லை என்றுதான் கருதுகிறேன். அதனால் தொடர்ந்து அந்த மொழியிலேயே எழுதி வருகிறேன். மக்களின் மொழி இழிவான  தென்று  கருதுபவர்களை  மொழியின் செழுமையை அறியாதவர்கள் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

தங்கள் கதைகள் சமூக விழிப்புணர்வு நாடகங்களாக மாற்றப்படுவது தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமல்லவா? அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் எப்படிப்பட்டவை?

கண்டிப்பாக. நான் படைத்த பாத்திரங்கள் நாடகங்கள் மூலமாக உயிரோட்டமாக உலா  வரும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதை மிகப்பெரிய அங்கீகாரமாகத்தான் கருதுகிறேன். அந்தக் கதை மாந்தர்களோடு மீண்டும் உறவாடும் உரையாடும் மகிழ்ச்சி உண்டாகிறது. அந்நாடகங்களைப் பார்ப்பவர்களுக்கு அக்கதைகளை வாசிப்பதற்கும் ஓர்  உந்துசக்தியாக இருக்குமென நம்புகிறேன். காட்சிப்படுத்தும் போது கதை மாந்தர்களின் உணர்வுகளுக்குள் எளிதில் உட்புகுவது சாத்தியமாகிறது. நாடகங்களைப் பார்த்த உடனே அதைப்பற்றிய நேர்மறையான, எதிர்மறையான கருத்துகள்  பகிர்ந்து கொள்ளப்படுகின்றன... விமர்சிக்கப்படுகின்றன. அத்தகைய விமர்சனங்கள் என்னை இன்னும் பக்குவப்படுத்திக் கொள்ள வழி செய்கின்றன. மனிதத்தை  மதிக்கத் தெரிந்தவர் அனைவருமே சமூக மாற்றத்துக்காகக்  குரல் கொடுக்கத் தயங்கமாட்டார்கள்.

சமூக மாற்றம் குறித்து பேசும் துணிச்சல் பெற்றோரிடமிருந்து பெற்ற விஷயமா?

என் பெற்றோர்கள் சமூக அக்கறையும் சமூக நீதியும் உடையவர்கள். விளிம்புநிலை மக்களுடனான அவர்களது உறவினையும், அவர்களுக்குச் செய்த உதவிகளையும்  நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்ததால் எனக்கும் நீதி நியாயத்தின் மீதும் சமத்துவ சகோதரத்துவத்தின் மீதும் அதீத ஈடுபாடும் அக்கறையும்  இருக்கிறது. வாழ்க்கையில் தூய்மையும் நேர்மையும் இருந்தால் நெஞ்சில்  துணிச்சல் வந்துவிடும். மனிதத்தை  மதிக்கத் தெரிந்தவர்கள் சமூக மாற்றத்திற்காகக்  குரல் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.

எழுத்தாளர் பாமா கதை சொல்லி பாமாவாக ஆனது எப்போது? எப்படி?


சிறுவயதில் எங்கள் கிராமத்தில் இருந்த போது நிறைய கதைகள் என் பாட்டி மூலமாகத்தான் கேட்டு ரசித்திருக்கிறேன். அநேகமாக  எங்கள் ஊரில் உள்ள எல்லா பெரியவர்களும் கதைகள் சொல்வதில் வல்லவர்கள். வரலாற்றுக் கதைகள், புனைவுகள், நாட்டுப்புறக் கதைகள், விடுகதைகள், புதிர்கள் என பலதரப்பட்ட கதைகளை சலிக்காமல் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஊரிலிருந்த சின்னஞ்சிறுசுகளும் அவற்றை  திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். என் அண்ணனும் எங்களுக்குக் கதைகள் சொல்லி இருக்கிறார்கள். நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கதை சொல்வதற்கென்றே ஒரு சிறப்பு வகுப்பு இருந்தது. அப்போது கதைப் புத்தகங்களில் இருந்து கதைகள் வாசித்துக் காட்டுவோம். கதைமாந்தர்கள் சிரித்தால் நாங்களும் சிரித்து அவர்கள் அழுதால் நாங்களும் அழுது, அவர்களுடைய உணர்வுகளில் இரண்டறக் கலந்து அவர்களோடு பயணித்து கிறங்கிப்போய் கிடந்த காலங்கள் அவை. இப்படிக் கதைகள் கேட்டு, கதைகள் சொல்லி வளர்ந்த காலங்கள் கடந்தன. பள்ளியில் ஆசிரியையான பிறகு வகுப்புப் பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இப்படியாக தொடர்ச்சியாக கதை கேட்டலும் சொல்லலும் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.

கதை சொல்லல் தரும் மன நிறைவு, ஏற்படுத்தும் மாற்றம்..?


கதை சொல்லல் என்பதே ஒரு தனிக்கலை. கதை சொல்லும்போது நாம் யதார்த்த உலகை விடுத்து கதைமாந்தர்களின்  உலகில் பிரவேசித்து அவர்களாகவே மாறிவிடும் நிலை நமக்குத் தெரியாமலேயே நடக்கிறது. நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகை வலம் வரும் வல்லமை பெற்றுவிடுகிறோம். புற உலகம் நமக்கு அந்நியமாகத் தெரிகிறது.  கதை முடியும்போது மிகவும் பிரயத்தனப்பட்டுத்தான் யதார்த்த வாழ்க்கைக்கு மீண்டும் வர முடிகிறது. வந்தபிறகும் மனது மயங்கிக் கிடப்பதை உணர முடிகிறது. சொல்லும் கதையைப் பொறுத்து நவரச உணர்வுகளும் நம்மில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. சொல்பவர்களும்  கேட்பவர்களும் இந்த மாற்றத்தை உணர முடியும். இந்த உணர்வுகளின் தாக்கங்கள் அவ்வப்போது வாழ்க்கையின் பல கணங்களில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

எழுத்தாளராக காட்டிக்கொள்ளாத ஆசிரியர் வாழ்க்கைக்கும், எழுத்தாளராக அறியப்படும் தருணத்திற்கும் உள்ள வித்தியாசம்?

ஆசிரியப்பணி நான் ஆசையாசையாகத் தேர்ந்தெடுத்தது. ஓர் ஆசிரியையாகக் குழந்தைகளுடன் இருக்கும் தருணங்கள் சந்தோஷமானவை. சவாலானவையும் கூட. ஒவ்வொரு குழந்தையும் என்னை முழுமையாக நம்பி என் ஒவ்வொரு அசைவையும் பார்த்து என்னிடமிருந்து ஏகப்பட்ட விஷயங்களை விரும்பியோ விரும்பாமலோ கற்றுக்கொள்கிறது. குழந்தையின் முழு ஆளுமை வளர்ச்சிக்கும், தான் வாழும் சமுதாயத்தை உற்று நோக்கித் தன்னை தகவமைத்துக் கொண்டு வாழ்வதற்குரிய ஆற்றலைப் பெறுவதற்கும், சமுதாய மாற்றத்திற்கான சரியான கல்வியைக் கற்றுக்கொள்வதற்கும், மனிதநேய மதிப்பீடுகளைக் கற்றுக் கொண்டு மனிதனாக வாழ்வதற்கும்  ஆசிரியையாக நான் செய்ய வேண்டிய பொறுப்பு மிகப்பெரியது.    குழந்தைகளிடமிருந்து கிடைக்கும் பாசமும் நேசமும் வேறெங்கும் கிடைக்காத பொக்கிஷங்கள். குழந்தைகளோடு குழந்தையாக மாறி மகிழும் தருணங்கள் அதி அற்புதமானவை. நான் ஓர் எழுத்தாளராக அறியப்படும் தருணங்களில் என் எழுத்துகளுக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். எழுத்துகளைக் கையாளும் திறனும் பக்குவமும் கொண்டு, சொல்ல வந்தவற்றைச் சமூகப் பொறுப்போடு சொல்ல வேண்டும். எழுத்தாளனுக்கு நமது சமுதாயத்தில்  நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளும் அதிகமென எண்ணுகிறேன். இருந்தாலும் இவை அனைத்தையும் மீறிய ஒரு சுதந்திர உலகினுள் பிரவேசிக்கக்கூடிய, தனக்கே உரிய ஒரு பிரமாண்ட வெளியில் பயணிக்கக்கூடிய, பறக்கக்கூடிய இறக்கைகளைக்  கொண்டவளாகவும் உணர முடியும்.

கடந்து வந்த பாதை...

கடந்து வந்த பாதை கடினமானது... மிகவும் கடினமானது. சவால்கள் நிறைந்தது என்றாலும் சாதனைகளும் செய்ய முடிந்தது. திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாகவும் இருக்கிறது. அர்த்தமுள்ள சுதந்திர வாழ்க்கை. அவலமும் ஆனந்தமும் ஆங்காங்கே அள்ளித் தெளித்த பாதையில் தனிமனுஷியாக பயணித்த சுகங்களும் சுமைகளும் சேர்ந்தே வந்திருக்கின்றன.

பெண் முன்னேற்றம் குறித்து பேசப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்க பாலியல் பேசும் கவிதைகள் குறித்து...

பெண் என்றாலே  பாலியல் நுகர்வுக்கான ஒரு பண்டமென்றாகிப் போன நமது உயர்சாதி ஆணாதிக்கச் சமுதாயத்தில், அனைத்து ஊடகங்களும் பாலியல் பற்றி அடிக்கடிப் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் கவிதைகள் பெண்ணின் உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்வு சார்ந்த  வதைகளை, வலிகளை, பரவசங்களை, உன்னதங்களை, அற்புதங்களை, அதிசயங்களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. உழைக்கும் அடித்தட்டுப் பெண்களைப் பற்றியோ அவர்கள் அன்றாடம் படும் பாடுகள் பற்றியோ, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தைப் பற்றியோ குறைவாகவே பேசப்பட்டுள்ளன. அவர்களைப் பொறுத்த வரையில் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தாங்கள் மானமும் மாண்பும் மரியாதையும் உள்ள மனுஷிகள் என்பதைப் போராடிப் போராடித்தான் மெய்ப்பிக்க வேண்டிய சூழலில் இருக்கும் வேளையில், பாலியல் சார்ந்த விஷயங்கள் ஒப்பீட்டளவில் கனமற்றுப் போகின்றன. பெண் முன்னேற்றம், பெண் விடுதலை பற்றி நிறையவே சொல்ல வேண்டும்.

‘குங்குமம் தோழி’களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது...

நாம் நமது சக்தியை உணர்ந்து அங்கீகரித்து அதைக் கொண்டாட வேண்டும். நாம் சுதந்திரமாக வாழ்வதற்குத் தடையாக உள்ளவற்றைக் கண்டறிந்து அவற்றை உடைத்தெறிய வேண்டும். நாம் நாமாக இருக்க வேண்டும். மரபுரீதியான சடங்குகள், சம்பிரதாயங்கள், மத
வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், சாதி அமைப்பு முறைகள், பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, நம்மை நாமே விடுவித்துக் கொண்டு பாரதி சொன்னதைப் போல விட்டுவிடுதலையாகிப் பறப்போம் அந்தச் சிட்டுக்குருவியைப் போல!

கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி என 4 நாவல்கள் எழுதி இருக்கிறார்.  கிசும்புக்காரன், ஒரு தாத்தாவும் எருமையும். கொண்டாட்டம் போன்ற 3  சிறுகதைத்தொகுப்புகள். இனி வரவிருப்பது பள்ளிக் குழந்தைகளுடனான அவரது அனுபவங்கள்.

"ஓர் ஆசிரியையாகக் குழந்தைகளுடன் இருக்கும் தருணங்கள் சந்தோஷமானவை என்றாலும் சவாலானவையும் கூட."

"அவலமும் ஆனந்தமும் ஆங்காங்கே அள்ளித் தெளித்த பாதையில் தனிமனுஷியாக  பயணித்த சுகங்களும் சுமைகளும் சேர்ந்தே
வந்திருக்கின்றன."

"நாம் நமது சக்தியை உணர்ந்து அங்கீகரித்து அதைக் கொண்டாட வேண்டும்."

தொகுப்பு: தேவி மோகன்
படங்கள்: பாஸ்கரன்