குங்குமம் தோழியால் இணைந்த தோழிகள்!



குங்குமம் தோழிக்கு...  ஜலீலா எழுதுவது! எனது ரம்ஜான் ஸ்பெஷல் 30 ரெசிபி தோழி இதழ் இணைப்பாக பிரசுரமானது. நான் துபாயில் இருப்பதால், எனக்கு உடனே இதழ் கிடைக்கவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, என் பள்ளித் தோழி கவிதா, குங்குமம் தோழி அலுவலகத்துக்குத் தொடர்ந்து போன் செய்து, என் எண் பெற்று என்னை தொடர்பு கொண்டார். அதனால்தான் இந்தக் கடிதம்!

பள்ளிக் காலத்தில் எனக்கு நிறைய நட்புகள் கிடையாது. இருப்பினும் 4 பேர் மட்டும் எனக்கு ரொம்ப க்ளோஸ் (சித்ரா, கவிதா, ஹசீனா, வள்ளி). நாங்கள் ஐவரும் சேர்ந்தாலோ கலகலப்புதான். எங்கள் பள்ளி (மாடல் ஸ்கூல், திருவல்லிக்கேணி) கடற்கரை அருகில் உள்ளது என்பதால் அடிக்கடி அங்கே விசிட் அடிப்போம். மரத்தடியில் லஞ்ச் சாப்பிடும் போது உணவு பரிமாற்றம் நடக்கும். வள்ளி கொண்டு வரும் பருப்பு உருண்டைக் குழம்பு, சித்ரா கொண்டுவரும் டபுள் பீன்ஸ் பிரிஞ்சி சாதம், கவிதாவின் கொண்டைக்கடலை புளிசாதம், ஹசீனா எடுத்து வரும் ஸ்பெஷல் ரொட்டி - தக்காளி சட்னி, என் அம்மாவின் ஸ்பெஷல் பூரி - உருளைக்கிழங்கு... இவையெல்லாம் எல்லாருக்கும் பிடிக்கும். இப்படி எல்லாம் கலந்து சாப்பிட்டு விட்டு, பீச்சில் காற்று வாங்கிவிட்டு, தள்ளுவண்டியில் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்த நாட்கள் இனி வருமா?



அது ஒரு இனிய கனா காலம்! பள்ளிக் காலம் முடியும் போதே, ‘எப்படியாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக சந்திக்கணும்’ என்று பேசி வைத்துகொண்டோம். முதலில் என் திருமணத்துக்கு எல்லாத் தோழிகளும் வந்தார்கள். கவிதாவும் சித்ராவும் எனக்கு மேக்கப் போட்டு விட்டார்கள். அடுத்து ஹசீனா, சித்ரா திருமணம் வரை சந்தித்தோம். நான் சென்னையில் இருந்த வரை வருடம் ஒரு முறையாவது தோழிகளை சந்திப்பேன். துபாய் வந்ததில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊருக்குப் போக முடிகிறது. வள்ளி எங்கள் வீட்டின் அருகிலேயே பிரின்டிங் பிரஸில் வேலை பார்த்தாள். சித்ராவும் பக்கம்தான். ஹசீனா என் பெரியம்மா பொண்ணுதான். கவிதா பட்டினப்பாக்கம் எஸ்டேட்டில் வசிக்கிறாள். இப்படி எல்லோரையும் தவறாமல் சந்திப்பேன். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக ஹசீனாவை தவிர யாருடனும் தொடர்பு இல்லை.

முகநூலிலும் பள்ளித் தோழிகளைத் தேடிப் பார்ப்பேன். இது வரை யாரும் கிடைக்கவில்லை. ‘குங்குமம் தோழி’யில் என் சமையல் புத்தகம் வெளியானதை பார்த்த அன்றே, கவிதா ‘குங்குமம் தோழி’ அலுவலகத்துக்கு போன் செய்து, எனக்குத் தகவல் தந்து, தொடர்பு கொண்டாள்.

ஆஹா... இப்போது ‘குங்குமம் தோழி’ என்னையும் கவிதாவையும் இணைத்து விட்டது! கவிதாவுக்கு ஹசீனா நம்பரை நான் கொடுக்க, மிகவும் சந்தோஷமாக, ‘ஹசீகிட்ட பேசிட்டேன்டி... ஏய் ஜலீ ரொம்ப சந்தோஷம்டி’ என்றாள். சித்ரா மற்றும் வள்ளியையும் குங்குமம் தோழியே இணைத்து வைக்கும் என்று நினைக்கிறேன். (சமையல் கலைஞர் ஜலீலா கமாலை தொடர்புகொள்ள: facebook.com/jaleela.kamal)