சிம்னிஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!

‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்றது அந்தக் காலம்’ என்று மேடையில் முழங்கி இருக்கிறேன் என் சிறுவயதில்! ஊதினால் புகை வரும்... பெண் கண்ணைக் கசக்குவாள்... அடுப்பும் இல்லை... ஊதலும் இல்லை... ஆனாலும், புகையும் புகைச்சலும் தீரவே இல்லை. அடுப்பு எண்ணெய்ப் புகையில் பெரும்பாலும் கலங்குவது இன்றும் பெண்தான். அடுப்பங்கரை புகை பெண்களுக்கு மட்டுமல்ல... வீட்டினர்க்கே பகை. மொத்தத்தில் புகை பகை என்பதால் அதைத் தவிர்ப்பது அவசியம். ‘அவளை கண்ணை கசக்க விடக் கூடாது... இந்தக் கண்ணில் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்’ என்று நினைத்த ஒரு புண்ணியவான்தான் மின்சார புகைப்போக்கியை கண்டுபிடித்து இருக்கிறான்! ஒரு காலத்தில் விறகு கொண்டு  வந்து அடுப்பெரிப்போம்... அதற்கு மேலே ஒரு புகைப்போக்கி இருக்கும். அதன் நவீனமே சிம்னி எனப்படும் மின்சார புகைப்போக்கிகள்!

நம்ம ஊரில் ‘சிம்னி’ என்றால் மண்ணெண்ணெயில் சின்னதா விளக்கெரியுமே... அதுதான். அதையே மறந்துபோற அளவுக்கு நவீன சிம்னிகள் நம் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டன. இப்போது எக்சாஸ்ட் ஃபேன் கூட மறைந்து போய், ‘சிம்னியில்லா அடுப்பங்கரை பாழ்’ என்ற நிலைமை வந்துவிட்டது. ‘எக்சாஸ்ட் ஹுட், ரேஞ் ஹுட்’  என்றும் இதைச் சொல்கிறார்கள்.

நகர நெரிசலில் பத்துக்கு பத்துக் கூட இல்லாமல்தான் பெரும்பாலான சமையலறைகள் இருக்கின்றன. சமையலறையில் இடம் இல்லாததால் நிறைய அலமாரிகள்  தேவையாக இருக்கிறது. சில வீடுகளில் லட்சக்கணக்கில் பணம் கொட்டி அடுப்பங்கரை அமைக்கிறார்கள். வித விதமான வடிவங்களில் அசத்துகிறார்கள். ஆனால், சமைக்கத்தானே சமையலறை? அலங்காரம் செய்ய அல்லவே. சமைப்பதற்கு அடுப்பு மூட்ட வேண்டும்... புகை வெளியேறி காற்றோட்டம் வேண்டும்... அதற்கு கைக்கொடுப்பதே இந்த மின் புகைப் போக்கி!

ஊட்டி போன்ற ஊர்களில் ஆங்கிலேயர் கால வீடுகளில் குளிருக்கு விறகெரிக்க ஒன்றும் சமையலறைக்கு ஒன்றும் என  இரு புகைப்போக்கிகள் இருக்கும். ஓட்டு வீடுகளில் இடுக்குகள் வழியே  இயற்கையாகவே காற்றோட்டம் இருந்ததால் புகைப்போக்கி அவசியப்பட வில்லை. இன்று விறகு அடுப்பு போய் நவீன சமையல் அடுப்புகள் வந்துவிட்டன. அடுப்பு மாறினாலும் அடுப்பங்கரை சூடாகத்தானே இருக்கும்? எக்சாஸ்ட் ஃபேன் அறிமுகம் ஆனது. ஆனால், அதனால் காற்றை மட்டும் ஓரளவுக்கு வெளியேற்ற முடிந்தது. புகையை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. முக்கியமாக நவீன சமையல் அறைகளில் கேபினட் எனப்படும் அலமாரிகள் மிக அதிகமாக இருப்பதால், அவற்றில் எண்ணெயும் பிசுபிசுப்பும் அதிகமாகும்.எடிசன் காலத்திலேயே இந்த முறையை முயற்சித்துப் பார்த்து இருக்கிறார்கள். நாளாக நாளாக இந்த முறை மேம்பட்டு இருக்கிறது. முதன்முதலில் Vent-a-Hood கம்பெனி அமெரிக்காவில் 1937ல்  மின் புகைப்போக்கியை அறிமுகப்படுத்தியது.  அதற்குப் பிறகு, பல நவீன மாற்றங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உட்படுத்தப்பட்டு இன்றைக்கு பல வடிவங்கள் வந்துள்ளன. ‘எக்சாஸ்ட் ஃபேனை எடுத்து அடுப்புக்கு நேரா மாட்டினா என்ன’ன்னு யாருக்கோ தோணிருக்கு... உடனே உருவானது சிம்னி! இதுலேர்ந்து ஒரு விஷயம் கத்துக்கலாம்... நாமளும்தான் அடுப்பங்கரைக்குள்ள மணிக்கணக்கா இருக்கோம். ஏதாவது தோணிச்சுன்னா, அதைச் செயல்படுத்திட்டா எத்தனைப் பெரிய பணக்காரரா ஆகலாம்! இனிமே அடுப்பங்கரையை சுத்திப் பார்க்கிறோம். எல்லாத்தையும் தலைகீழா மாட்டிப் பார்த்து... பெரிய ஆளா வளரப்
பார்க்கிறோம்!

* முடிவெடுத்துட்டோம்... எப்படி வாங்கறது?

எது தேவையா இருந்தாலும் பட்ஜெட் ரொம்ப முக்கியம். நாலாயிரம் ரூபாய்க்கு கூட கிடைக்கும். லட்சம் கூட ஆகும். தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லையே. மின் புகைப்போக்கிகள் பாரம்பரிய முறையிலும் நவீன வடிவிலும் வருகின்றன. புதிய அலங்கார சமையல் அறைகளுக்கு பொருத்தமாக எண்ணற்ற வடிவங்களில் கிடைக்கிறது. சமையலறை கட்டும்போதே பொறியாளருடன் நன்கு ஆலோசனை செய்து வடிவமைக்க வேண்டும். வழக்கம் போல குடும்ப நபர்களின் எண்ணிக்கை... அதிக நபர்கள் இருந்தால் அதிக அளவில் சமையல் நடைபெறும். வாங்கும்போதும் வடிவமைக்கும்போதும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அளவு... எந்த அளவு அடுப்பு இருக்கிறதோ, அதைவிட கொஞ்சம் பெரிதாக மின் புகைப்போக்கி இருக்க வேண்டும். பெரும்பாலும் இந்தியாவில் இரு அளவுகளில் கிடைக்கின்றன. 60 செ.மீ. மற்றும் 90 செ.மீ. வகைகள்.

ஐலேண்ட் கிச்சன் எனப்படும் தீவு மேடை புகைப்போக்கி...

இது நடுவில் கட்டப்படும் மேடை. இதற்கு மேல் பொருத்தும் முன்பே பிளான் செய்து சீலிங்கில் ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.சுவரில் பொருத்தப்படும் புகைப்போக்கி...

வால் மவுன்ட் எனப்படும் இதை சுவரில் பொருத்த வேண்டும். பீம் அல்லது தூண் இல்லாத இடங்களில் வென்ட் அமைக்க தேவை இருக்கிறது. அப்படி பீம் வந்தாலும் பிரச்னை இல்லை. கான்க்ரீட்டில் ஓட்டைப் போடும் ட்ரில் மெஷின்கள் வந்துவிட்டன. அதன் மூலம் பெரிய துளை போடலாம்.  மேலே சீலிங்கிலும் செய்து கொள்ளலாம். ஆனால், மிகுந்த கவனம் தேவை.

கார்னர் எனப்படும் சுவர் மூலையில் பொருத்தப்படும் வகை...

இந்த வகையில் இரு பக்கமும் அடைப்படும். அதற்கு ஏற்றார்போல வாங்கிக் கொள்வது முக்கியம்.

அலமாரிகளோடு பொருத்தப்படும் பில்ட் இன் வகை...

இது பெரும்பாலும் மாடுலர், டிசைனர் என்று சொல்லப்படும் சமையல் அறைகளில் வடிவமைக்கப்படும். எந்த வடிவமைப்பில் இருக்கிறதோ, அதுக்கு பொருந்திப் போகும் வெளியே அதிகம் தெரியாத  புகைப்போக்கிகள்.

* ஃபில்டர் வகைகள்

மெஷ் எனப்படும் வலை சல்லடை இதில் பெரும்பாலும் அலுமினிய வலை பயன்படுத்தப்படும். மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இந்திய சமையல்களில் எண்ணெய்ப் புகை அதிகம் இருப்பதால், அடிக்கடி அடைத்துக் கொள்ளும் பிரச்னை உண்டு. சுத்தப்படுத்தும் வேலை அதிகமாக இருக்கும்.

பேஃபில் ஃபில்டர்

இந்த வகையில் எண்ணெய் தனியாகவும், புகை மட்டும் உள்ளே போகும் வழியாகவும் இருக்கும். இந்திய சமையலுக்கு இன்னும் பொருத்தமானது. இது அலுமினியம், எவர்சில்வர் என இரு வகைகளில் வரும். அலுமினியம் எடை இல்லாமல் இருக்கும். ஆனால், காஸ்டிக் சோடா போன்றவை வைத்து கழுவும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். இதில் அடைப்புப் பிரச்னை அதிகம் இல்லை.

சார்கோல் ஃபில்டர்

சில சிம்னிகளின் விளம்பரங்களில் ‘புகை போக வெளியே துளை தேவையில்லை. இதுவே புகையை உறிந்துகொண்டு நல்லக் காற்றை வெளியே விடும்’ என்று சொல்வார்கள். சார்கோல் எனப்படும் கரி உள்ளே இருக்கும். அது புகையை வடிகட்டி கொடுக்கும்... காற்றை மறுசுழற்சி (Recycle) செய்வது போன்று. இந்திய சமையல் முறைகளுக்கு இது அத்தனை பொருத்தமாக இருக்காது. எனினும், சார்கோல் ஃபில்டர் வசதியுடன் சாதாரண அமைப்பு வருகிறது. சார்கோல் கரியை அவ்வப்போது மாற்ற வேண்டியிருக்கும். இந்த ஃபில்டரை அலசியோ, கழுவியோ உபயோகப்படுத்த முடியாது.

காற்றை உறியும் வேகம் (Suction Power)

* இது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.
* வேகமானது 401Cubic M/hrக்கு மேலே இருக்கும்.
* மித வேகம் 400 Cubic M/hrக்குள் இருக்கும்.
* அதை விட குறைந்த வேகமும் உண்டு.
* அதிக எண்ணெய்ப் புகை சமையல் என்றால் அதிக திறன் வாங்குதல் நலம். ‘ஆட்கள் குறைவு... சமையல் வேலையும் குறைவு’ என்பவர்கள் திறன் குறைவாக உள்ளதை வாங்கலாம்.

உறியும் காற்றாடிகள் (ப்ளோயர்ஸ்)

அதிக காற்றாடிகள் இருக்கும் வேளையில் அதிக அளவில் உறியும் தன்மை இருக்கிறது. அதனால் ப்ளோயர்ஸ் எத்தனை  என்று பார்க்க வேண்டும்.
 
தெர்மல் ஓவர் லோட் தவிர்ப்பு

சில வகைகளில் மோட்டார் அதிக சூடுக்கு உட்பட்டால் தானே அணைந்து விடும் வசதி இருக்கிறது. இது மோட்டார் சூடாகி எரிவதை அல்லது வீணாவதைத் தடுக்கும்.

ஸ்ப்ளிட் சிம்னி

 இதில் மோட்டார் வெளியே பொருத்தப்பட்டு இருக்கும். அதனால் சமையல் அறையில் சத்தம் வராது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் நவீன வசதி.

* சுத்தப்படுத்தும் முறை

ஆட்டோமேடிக் கிளீனிங் என்று விளம்பரங்களில் கவனித்து இருக்கலாம். புகையை ஃபில்டர் வழியாக காற்றாடி மூலம் உறிந்து வெளியே அனுப்புவதே இதன் வேலை. ஆனால், மோட்டார் எண்ணெய் பிசுக்கில் வீணாவது, எண்ணெய் வடிகட்டியில் அடைத்துக் கொள்வது என்று நிறைய பிரச்னைகள் ஏற்படலாம். சில சீன வகை சிம்னிகளில் தானாகவே சிறிதளவு நீர் அடித்துப் பாய்ச்சி சுத்தம் செய்யும்  முறை இருக்கிறது. எண்ணெய் பிசுக்கு வெறும் நீரால் போகுமா? அதனால், இந்திய சமையலுக்கு இது அதிகம் சரி வராது. அதே நேரம் எண்ணெய் பிரிந்து போய் சேகரிக்கும் வசதி உள்ள சிம்னிகள் உள்ளன. சிலவற்றில் நான்ஸ்டிக் படிமம் மூலம் எண்ணெயை மோட்டார், உட்புறத்தில் படிய விடாமல் ஒரு கொள்கலத்தில் உள்ளேயே சேகரம் செய்யும் வசதி இருக்கிறது. இன்னொன்று சார்கோல் வைத்து இருப்பது, காற்றை தூய்மை செய்து திரும்ப அனுப்பும் முறை. உள்ளே அழுக்கை இழுப்பதால், அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அதனால், அதை ஒரு கூடுதல் வசதியாக வைத்துக் கொள்ளலாம். வெறும் சார்கோல் ஃபில்டர் இந்திய சமையலுக்கு சரி வருமா என்று ஆலோசித்தே வாங்க வேண்டும். ஆட்டோ கிளீனிங் என்றால் எந்த முறை என்று தீவிரமாக பார்த்தே வாங்க வேண்டும்.

விளக்குகள்

பல்வேறு விதமான விளக்குகள் பொருத்தப்பட்டு வந்துள்ளன. சமையல் செய்யும்போது இது நேரடியாக பாத்திரத்தின் மேல் வெளிச்சத்தை வீசுவதால், இன்னும் எளிதாக இருக்கிறது.

சத்தம்

சில சிம்னிகள் மிக அதிக சத்தம் எழுப்பும். அது எழுப்பும் சத்தத்தின் விகிதம் (Sound Noise Level) பற்றி விசாரித்தால் கடையில் சொல்லுவார்கள். வோல்டேஜ் அதிக வாட் திறன் உள்ள மோட்டார்கள் நன்றாக செயல்படும்.

* பராமரிப்பு

வலை ஃபில்டர்கள் என்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை சோப்பு போட்டு கழுவலாம். காஸ்டிக் சோடா போட்டு கழுவலாம். ஆனால், மெல்லிய அலுமினிய வலை என்றால் அறுந்துவிடக்கூடும். கவனமாக அலச வேண்டும். பேஃபில் ஃபில்டரை சோப்பு வென்னீரில் 3  அல்லது 4 வாரங்களுக்கு ஒரு முறை கழுவுவது நல்லது. சார்கோல் என்றால் 3  அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பெரிய குடும்பம் என்றால் 1000 Cubic M/hr  அல்லது அதற்கு மேல் திறன் உள்ளதை பார்த்து வாங்குவது நல்லது. அடுத்து வேகம், வடிவம், விலை ஆகியன பார்க்க வேண்டும். பெரிய அடுப்பு தேவையாக இருந்தால் 90 cm வாங்கலாம். சிறிய குடும்பம் என்றால், இன்னும் கொஞ்சம் திறன் குறைவாக உள்ளது போதும். 400-450 Cubic M/hr  அளவுக்கு மேல் உள்ளது வாங்கலாம். புகை போகும் விதமாகவும், எடுத்துப் பராமரிக்க எளிதாகவும் உள்ள  உயரத்தில் பொருத்தப்பட வேண்டும். பொதுவாக 4 அடிக்கு மேல் அமைப்பது நல்லது.

விலை

5 ஆயிரம் ரூபாய்க்குக் கூட அடிப்படை மாடல்கள் கிடைக்கின்றன. கொஞ்சம் பெரிய குடும்பம், அதிக சமையல் என்றால் அது உகந்ததாக இருக்காது. அடுத்து 60 cm அகலத்தில் 800-1000 Cubic M/hr சக் ஷன் திறன் உள்ளது கிடைக்கும். ரூ. 10 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை ஆகும். அடுத்து 18 ஆயிரம் முதல் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு எப்படி வேண்டுமோ, அப்படி கிடைக்கிறது. 90 cm அகலத்திலும் 1000 Cubic M/hrக்கு மேலே உள்ள திறனிலும் உள்ளது. வேண்டிய அளவில், வடிவில் வாங்கலாம். பல மாடல்கள் இருக்கின்றன. ஒரு அறிமுகத்துக்கு...

ஃபேபர்

இந்தியாவில் பல பிராண்டுகள் இருந்தாலும், ஃபேபர் பலருக்கும் ப்ரியமானதாக இருக்கிறது. 1955ல் தொடங்கப்பட்ட நிறுவனம். அழகிய வடிவம் உடைய புகைப்போக்கிகளோடு, சாதாரண வகைகளும் உள்ளன. ஒரு உதாரணம்... இது சாண்டலியர் போல அழகாக அமைந்து உள்ளது. எலெக்ட்ரானிக் முறை.  நான்கு 20w பல்புகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டிஷ்வாஷரிலேயே கழுவிக் கொள்ள முடியும். காற்று உறியும் திறன் 910 Cubic M/hr, ஒலி அளவு கொஞ்சம் குறைவு. விலை ரூ. 1,49,990!

கிளன்

இவற்றில் ஸ்ட்ரைட் லைன் எனப்படும் அடிப்படை வடிவம் கொண்டவையும் டிசைனர் வகைகளும் அடக்கம். கண்ணாடி மற்றும் எவர்சில்வர் வகைகள் கிடைக்கும். எவர்சில்வர், 3 வேக அளவுகள், ஒரு மோட்டார், இரண்டு விளக்குகள், PDCA Housing, ஒரு வருட வாரன்டி, ஆட்டோமேடிக் டைமர், 1250 Cubic M/hr  திறன், பேபிஃல் ஃபில்டர்.

கஃப்  (KAFF)

மிகுந்த திறனுள்ள மோட்டார் உடையவை. ப்ரெஷர் டை கேஸ்ட் அலுமினியம் PDCA மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட கன்வேயர் சிஸ்டம் உள்ளது. 1180 Cubic M/hr  திறன், கண்ணாடி வடிவம், ரூ. 42,000. ஒரு வருட வாரன்டி.

IFB

பெரும்பாலும் சுவரில் பொருத்தப்படும் மாடல்கள் கிடைக்கிறது. சத்தம் குறைவு, எளிதாக பயன்படுத்தும் வசதி. ஐந்து வருடம் வரை வாரன்டி. விலை ரூ. 54,990ல் இருந்து. கருப்பு நிற கண்ணாடி வடிவம். 1050 Cubic M/hr  காற்று உள்ளிழுக்கும் திறன். மூன்று வேக அமைப்பு. LED விளக்கு, ஆட்டோ சாட்டர்ட்  ரிமோட் வசதி.

பிரஸ்டீஜ்

இந்தியாவில் புகழ்பெற்ற பிராண்ட். இப்போது சிம்னியிலும்! 2 மோட்டார்கள் பொருத்தப்பட்ட மாடல்கள் அதிக திறனுடன் செயல்படுகின்றன. கார்பன் ஃபில்டர் உடனும் வருகிறது. விலை  ரூ. 11,444 முதல். 1000 Cubic M/hr  உள்ளிழுப்புத் திறன். 2 வருட வாரன்டி. இரண்டு விளக்கு. மெடல் கிரீஸ் ஃபில்டர்.

ELICA (எலிகா)

புதுமுறை நவீன ஆட்டோ கிளீனிங்கை இந்திய சமையலுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ரூ.14 ஆயிரம் முதல் கிடைக்கிறது. சில இடங்களில் தள்ளுபடியில் கிடைக்கலாம். 925 Cubic M/hr  உள்ளிழுப்புத் திறன். லைஃப் டைம் வாரன்டி இதன் சிறப்பு. இவற்றோடு, கில்மா, ஹிந்த்வேர், இனல்சா, கேட்டா, வேர்ல்பூல், உஷா, பஜாஜ், வென்ட் அ ஏர் என்று நிறைய பிராண்டுகள் இருக்கின்றன.
புகையில்லா புலனாய்வு செய்வோம்!

"இந்திய சமையல்களில் எண்ணெய்ப்புகை அதிகம் இருப்பதால், அடிக்கடி அடைத்துக் கொள்ளும் பிரச்னை உண்டு."

"‘ஆட்கள் குறைவு... சமையல் வேலையும் குறைவு’ என்பவர்கள் திறன் குறைவாக உள்ளதை வாங்கலாம்."

"ஆட்டோ கிளீனிங் என்றால் எந்த முறை என்று தீவிரமாக பார்த்தே வாங்க வேண்டும்."

"5 ஆயிரம் ரூபாய்க்கு கூட அடிப்படை மாடல்கள் கிடைக்கின்றன."

(வாங்குவோம்!)