38 வயதுக்குள் முழு வாழ்வு!ஆங்கில இலக்கியத்தில் அமர காவியம்
சார்லொட் ப்ரான்டே

சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த சார்லொட் ப்ரான்டே (Charlotte bronte) புகழை, இன்றும் உலகம் முழுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது ஜேன் ஐர் (Jane Eyre)!

மரியா-பாட்ரிக் ப்ரான்டேவின் 6 குழந்தைகளில் ஒருவராக இங்கிலாந்தில் பிறந்தார் சார்லொட். 5 வயதில் தாயை இழந்தார். அவரது தந்தை தன்னுடைய 5 பெண்குழந்தைகளையும் ஒரு விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அந்த விடுதியில் கட்டுப்பாடுகள் இருந்த அளவுக்கு, சுகாதாரமோ, ஆரோக்கியமான உணவோ கிடைக்கவில்லை. அங்கே குழந்தை மரணங்கள் சர்வசாதாரணமாக நிகழ்ந்தன. சார்லொட்டின் சகோதரிகள் இருவர் காச நோய்க்கு பலியானார்கள். எமிலி, ஆன், சார்லொட் மூவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் அவர்களது அப்பா. வீட்டில் சகோதரிகளுக்கும் சகோதரனுக்கும் ஓர் அம்மாவாகவும் இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார் சார்லொட். சகோதரனும் சகோதரிகளும் கற்பனையான உலகத்தை உருவாக்கினார்கள். புதுப்புது ஆட்டங்களை உருவாக்கி விளையாடினார்கள். சார்லொட்டும் தம்பியும் இணைந்து அங்கிரியா என்ற கற்பனை நாட்டை உருவாக்கி,  கதைகள் எழுத ஆரம்பித்தனர். சகோதரிகள் இருவரும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினார்கள்.சார்லொட் ஓராண்டு மேற்படிப்புக்காகச் சென்றபோது, எல்லன் நஸ்ஸியின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிப்போனார்கள். சார்லொட் தன் வாழ்நாளில் 500 கடிதங்களை எல்லனுக்கு எழுதியிருக்கிறார். படிப்பை முடித்த உடனே தன் குடும்பத்தின் நிலையை உயர்த்த முனைந்தார். பணக்காரக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும் வேலையில் சேர்ந்தார். ஆனால், அவர் பணி செய்த இடங்களில் அவருக்கு மோசமான அனுபவங்களே கிடைத்தன. ஒரு கட்டத்தில் தாங்களே ஒரு பள்ளி ஆரம்பிக்கும் எண்ணத்தில் வேலையை விட்டுவிட்டு வந்தார். சகோதரிகளும் சகோதரனும் கவிதைகள், கதைகள் எழுதினர். தங்களின் படைப்பை வெளிக்கொண்டு வர விரும்பினர். இன்றும் ஜே.கே. ரோலிங் கூட ஆண் பெயரில் எழுத வேண்டிய சூழல் இருக்கிறது. அந்தக் காலத்திலும் பெண்கள் எழுதுவதை சமூகம் அங்கீகரிக்கவில்லை. அதனால் க்யூரர், எலிஸ், ஆக்டன் பெல் என்று ஆண் பெயர்களைப் புனைப்பெயர்களாக வைத்துக்கொண்டனர் ப்ரான்டே சகோதரிகள். சார்லொட்டின் ‘புரொபசர்’ என்ற முதல் படைப்பு பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டது. எனினும், தங்கள் வெளியீடாகவே புத்தகங்களைக் கொண்டு வர எண்ணினர்.

தான் உறைவிடப் பள்ளியில் பயின்ற அனுபவம், செல்வந்தர் வீடுகளில் பார்த்த வேலைகளை எல்லாம் வைத்து, சுயசரிதை போல ஒரு நாவலை எழுதினார் சார்லொட். ஜேன் ஐர் என்ற 3 பாகங்கள் கொண்ட அந்தப் புத்தகம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அந்தக் காலத்தில் பெண்ணின் உணர்வுகளை ஒரு பெண்ணே அழகாக வெளிப்படுத்திய படைப்பாக அது விளங்கியது. ஜேனுக்காக உருகாதவர்களே கிடையாது.  அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் அற்புதமான காதல் காவியமாக நிலைபெற்றுவிட்டது அந்நூல்.
எழுத்தாளராகவும் ஓவியராகவும் இருந்த தம்பியின் மரணம், அவரது கடன், அடுத்தடுத்து நிகழ்ந்த சகோதரிகளின் மரணங்கள் என்று சார்லொட் தன் திருமணம் குறித்து நினைப்பதற்குக் கூட சூழல் இடம் கொடுக்கவில்லை. ஒருமுறை அவரது தோழி எல்லன் நஸ்ஸி மூலம் நிகழ்ந்த திருமண ஏற்பாட்டையும் நிராகரித்தார் சார்லொட். திருமணம் செய்துகொள்வது மூலம் ஏற்படும் கடமைகளும் வேலைகளும் பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அடுத்தடுத்து நாவல்கள் எழுதி, வெளியிடுவதில் கவனமாக இருந்தார். குடும்ப நண்பராக இருந்த ஆர்தர் பெல் நிகோலஸ் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி சார்லொட்டிடம் கோரிக்கை வைத்தார். சார்லொட்டும் முதலில் சிறிது ஆர்வம் காட்டினார். அவரது அப்பாவோ, நிகோலஸின் வறுமையைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகும் நிகோலஸ் அதே கோரிக்கையுடன் வந்தார். இந்த முறை அவரது பொருளாதார நிலையை முன்னேற்ற உதவினார் சார்லொட். அப்பாவின் எதிர்ப்பையும் மீறி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அப்பாவின் அனுமதிக்குக் காத்திருந்து, கிடைத்தவுடன் திருமணம் செய்துகொண்டார்.

தேனிலவுக்கு அயர்லாந்து சென்று வந்தவுடன் கருவுற்றார் சார்லொட்.  பாதிரியராக இருந்த நிகோலஸ், தன் மனைவியின் அறிவார்ந்த வாழ்க்கையில் பங்கேற்கவில்லை. ஆனால், சார்லொட், ஒரு மனைவியின் கடமைகளை மகிழ்ச்சியுடன் செய்ய ஆரம்பித்தார். கருவுற்றலால் ஏற்பட்ட மிகை வாந்தியும் மயக்கமும் அவரது உடல்நலத்தைக் குன்ற வைத்தது. 38வது வயதில், குழந்தை பிறப்பதற்கு முன்பே இரக்கமற்ற  மரணம் சார்லொட்டைத் தழுவிக் கொண்டது. பிற்காலத்தில், சார்லொட்டின் புரொபசர் உள்பட பல படைப்புகளும் கடிதங்களும், அவரது சகோதரிகளின் படைப்புகளும் அவர்களது சொந்தப் பெயர்களிலேயே வெளியிடப்பட்டு, கவனம் ஈர்த்தன. மிகக்குறைந்த காலமே வாழ்ந்தாலும், ஆங்கில இலக்கியத்தில் இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் சார்லொட்.

"சார்லொட்டும் தம்பியும் இணைந்து அங்கிரியா என்ற கற்பனை நாட்டை உருவாக்கி, கதைகள் எழுத ஆரம்பித்தனர். சகோதரிகள் இருவரும் கட்டுரைகளும் கவிதைகளும்  எழுதினார்கள்."

"பெண்ணின் உணர்வுகளை ஒரு பெண்ணே அழகாக வெளிப்படுத்திய படைப்பாக ஜேன் ஐர்  விளங்கியது. அன்று முதல் இன்று வரை  உலகம் முழுவதும் அற்புதமான காதல் காவியமாக நிலைபெற்றுவிட்டது அந்நூல்."

-சஹானா