வனாந்திரத்தில் வசிக்கலாம் வானவில்லை ரசிக்கலாம் வாழ்க்கையை கற்கலாம்!அழகேஸ்வரி

தூக்கம் மலர்ந்து நினைவுகளில் அதிகாலைக் குளிர் படரும் தருணத்தில் காதில் விழும் குயிலின் கூவல், உலர்ந்த உணர்வில் மழை தெளித்து, மனதில் ஏக்கத்தின் வாசனை கிளப்பும். கைகள் தேய்த்து கண்களில் பொத்தி மொத்தமாக விழிக்கையில் அருவியின் சலசலப்பு காதில் கூசும். எழுந்து பல் துலக்கி நதியில் நீர் அள்ளி முகம் கழுவும் போது நரம்புகள் சோம்பல் முறிக்கும். வெற்றுக் காலில் நடக்க நடக்க மண்ணும் சிறு கற்களும் உதிர் இலைகளும் உள்ளங்காலில் கிறுக்கும் அழகு! ஹைய்யோ... நினைத்தாலே ஜில்லென இருக்கிறதுதானே?

‘‘பள்ளி செல்ல நினைக்கும் செல்லங்களுக்கு இப்படி ஒரு ஜில் அனுபவம் இனி கிடைக்கும்’’ என்கிறார் இயற்கையியலாளர் அழகேஸ்வரி. மலை, அருவி, சிற்றோடை, பறவை பேச்சு, பூக்கள், தாவரங்கள்  எல்லாம் நிறைந்த மலைப்பாதையில்  விவசாயம், நெசவு என தான் வாழத் தேவையான விஷயங்களை தானே உற்பத்தி செய்ய கற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்? அதுதான் ‘குக்கூ குழந்தைகள் இயக்கம்’ உருவாக்கி வரும் ‘குக்கூ காட்டுப்பள்ளி’யின் ஒன்லைன் சீக்ரெட். இதை சுவர் இல்லாத பள்ளி என்றும் சொல்லலாம். இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் கற்பிப்பவர்களாக மட்டுமல்ல... குழந்தைகளிடம் கற்றுக் கொள்பவர்களாகவும் இருப்பார்களாம்!திருவண்ணாமலை சாலையில் சிங்காரப்பேட்டை வழி புளியனூர் கிராமத்தில் மலை அடிவாரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் குக்கூ காட்டுப் பள்ளி உருவாகி வருகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து பாரம்பரிய கட்டிடக் கலையில் இயங்குபவர்கள், சமூக ஆர்வலர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என ஒரு பட்டாளத்தை பத்து நாட்கள் களத்தில் இறக்கி மண்ணை மட்டுமே கொண்டு காட்டுப்பள்ளிக்கான முதல் கட்டப்  பணியை முடித்துள்ளனர். அங்கிருந்த மண்ணைக் குழைத்து, செங்கல் உருவாக்கி வெயிலில் காய வைத்து அடுக்கி மேலே கட்டிடம் எழும்பியுள்ளது.

‘‘இந்திய அளவில் காவிரிக்கரை, காந்தி சமாதி உள்பட பல இடங்களில் இருந்தும் கைப்பிடி அளவு மண் பெறப்பட்டது. சுமார் ஆயிரம் பேரின்  கைப்பிடி மண்ணைச் சேர்த்தே சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடத்தில் கூட வகுப்பறை கிடையாது. இங்கு படிக்க வரும் மாணவர்கள் தங்குவதற்கான இருப்பிடமே’’ என்கிறார் குக்கூ குழந்தைகள் இயக்கத்தின் இயங்கு சக்தியான அழகேஸ்வரி. ‘இயல்வாகை’ என்ற சூழலியல் அமைப்பின் மூலம் பாரம்பரிய விதைகளை மக்களிடம் சேர்ப்பது, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சிந்தனைகளை மக்களிடம் சேர்க்கும் பதிப்பகம் என பல துறைகளிலும் இயங்கும் இவர், தொடர்ந்து அரசுப் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்.குக்கூ காட்டுப் பள்ளிக்கான விதை மனதில் எப்படி விழுந்தது? சொல்கிறார் அழகேஸ்வரி...

‘‘குக்கூ குழந்தைகள் இயக்கம் தொடக்கத்தில் இருந்தே அரசுப் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய ஆளுமைகளை அறிமுகம் செய்வதோடு, பயிற்சிப் பட்டறைகள் மூலம் அவர்களுக்குள் இருக்கும் திறன்களை வெளிக்கொணர்ந்து தற்சார்பும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களாக வளர்வதற்கான அடிப்படைப் பணிகளை செய்கிறது. அதே பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் தொடர் மாற்றத்துக்கான பணிகளையும் செய்து வருகிறது. குழந்தைகளைப் புரிந்து கொள்ளாத பள்ளி முறையே இப்போது வழக்கத்தில் உள்ளது. பள்ளியே அவர்களது தன்னம்பிக்கை, தனித்திறன் எல்லாவற்றையும் அழுத்தி ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது. குழந்தைகளின் மனம் விடுதலை அடைவதற்கான கல்வியை வழங்க வேண்டும். அதற்கான மாற்றுக் கல்விச் சூழலை உருவாக்க யோசித்த போது உதித்ததுதான் இந்தத் திட்டம்.குழந்தைகள் விரும்பிக் கற்கும் கல்விச் சூழலே இப்போது இல்லை.  மதிப்பெண் சார்ந்த கல்வி முறை குழந்தைகளின் மனதில்  தாழ்வு மனப்பான்மையை ஆழமாக வேர் விடச் செய்கிறது. அரசுப் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் நிறம் குறித்த மதிப்பீடும் அதிக அளவில் உள்ளது. சிவப்பாக இருப்பதே உயர்வு. கருப்பு நிறத்தை தாழ்வாக நினைக்கும் போக்கும் அதிகம்.  வளர் இளம் பருவத்தை எட்டும் குழந்தைகள் தனது கருப்பு நிறத்தை மாற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் கவலை அளிக்கிறது. அறிவுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தி, கருப்பாக இருப்பது குற்றம் என்ற எண்ணத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டியுள்ளது. சமூகம் அவர்களது நிறத்தையும் தோற்றத்தையும் வைத்து கேலி செய்யும் போது அது மாறாத வடுவாக குழந்தைகளின் மனதில் பதிகிறது... அவர்களது திறனை அடக்கி, முயற்சிகளை ஒடுக்குகிறது. இது போன்ற தவறான நம்பிக்கைகள் மற்றும் குழந்தைகளின் சிந்தனையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களையும் தகர்த்து, அவர்களை சுதந்திர மனிதர்களாக மாற்றுவதற்கே இந்தக் கற்றல் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்.  

இது குருகுலக் கல்வி முறை போல திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகங்கள் இருக்கும்... தேர்வு, மனப்பாடம், ஹோம் ஒர்க் ஆகியவை இருக்காது. சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் மற்றும் மொழி சார்ந்த அறிவும் வழங்கப்படும். தனக்கான இருப்பிடத்தை உருவாக்குதல், உணவு உற்பத்தி, நெசவு, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் என தமிழர் வாழ்வியல் முறையை இங்கு கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொண்ட விஷயங்களை செய்து பார்த்து அதில் தனது திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச திறமையாளர்கள் குழந்தைகளுடன் தங்கி, பயிற்சி முகாம்கள் நடத்துவார்கள். குழந்தைகளின் திறன் மற்றும் விருப்பங்கள் அடிப்படையில் விரும்பிய துறையில் தொடர்ந்து கற்கலாம்.

இன்று இயற்கை சார்ந்த வாழ்வியல் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையான சந்தை சூழல் உருவாகி வருகிறது. வரும் காலத்தில் இதற்கான தேவைகளும் அதிகரிக்கும். இங்கு கற்கும் குழந்தைகள் பேராசைக்காக சம்பாதிப்பவர்களாக அல்லாமல் வாழ்வதற்கான பொருள் ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். சுயசார்பு உள்ளவர்களாக உருவாக்கப்படும் போது குழந்தைகளிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டி, பொறாமை மறையும். உணவு முறையும் வாழ்க்கை முறையும் மாறும் போது பணத்துக்கான தேவை குறையும். தனக்கு தெரிந்த திறனை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும். தொடர்ச்சியாக இங்கு பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த கற்றல் முறையின் தன்மை குறித்த பயிற்சி முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பும் வடிவத்துக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மையும் இந்தக் கற்றல் முறையில் உண்டு.

இப்பள்ளிக்கான பாரம்பரியக் கட்டிட முறை குறித்து யோசித்த போது, மண்ணை மட்டுமே கொண்டு  கட்டிடம் அமைப்பதில் இயங்கி வரும் நபர்களை அணுகினோம். ஐ.ஐ.டி.யில் கட்டிடப் பொறியியல் முடித்த வருண், வெளிநாட்டைச் சேர்ந்த ஜெர்மி, ஸ்ருதி தம்பதி சேர்ந்து இந்த பள்ளிக்கான வரைபடத்தை உருவாக்கி, மண் கட்டுமானத் தொழில்நுட்பத்தை வழங்கினர். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கட்டிடம் அமைக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்படவில்லை. இரும்புக் கம்பிகள் சேர்க்கப்படவில்லை. குழந்தைகளே களத்தில் இறங்கி தன்னார்வலர்கள் பலருடன்  இணைந்து ஒரு திருவிழாப் போல செங்கல் தயாரித்து சுவர் எழுப்பினர். அடுத்தடுத்த கட்டிடங்களாக கட்டிடப் பணிகள் நடக்க உள்ளன’’ என்று வியப்பூட்டுகிறார் அழகேஸ்வரி.  

"சுயசார்பு உள்ளவர்களாக உருவாக்கப்படும் போது குழந்தைகளிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டி, பொறாமை போன்ற சிந்தனைகள் மறையும். "

- ஸ்ரீதேவி