நோபல் பரிசு வாங்க வேண்டும்!சாதனை சுட்டி

‘‘நான் இந்நாட்டுக்கு சேவை புரிய விரும்புகிறேன். அதற்கு உங்களின் அறிவுரை என்ன?’’
இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் திருநெல்வேலியிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இக்கேள்வியைக் கேட்கிறார் 14 வயதே ஆன சிறுமி விசாலினி.

‘‘இந்த சின்ன வயதிலேயே இத்தனை சாதனைகள் புரிந்திருப்பதும் கூட இந்நாட்டுக்கு நீ செய்திருக்கும் சேவைதான். அன்றாட வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாழ்வதும் கூட சேவைதான்’’ என்று அதற்கு பதில் தருகிறார் பிரதமர் மோடி. ஆசிரியர் தினத்தில் வீடியோ கான்ஃபெரன்ஸில் இந்த உரையாடல் நிகழ்ந்தது.

பாளையங்கோட்டை விசாலினி, இவ்வளவு இளம் வயதிலேயே பல விருதுகளுக்கும் பிரதமரின் வாழ்த்துகளுக்கும் சொந்தக்காரராகியிருக்கிறார். காரணம்... அவரது ஐ.க்யூ. எனப்படும்  நுண்ணறிவுத் திறனே (Intelligence Quotient). விசாலினியின் நுண்ணறிவுத் திறன் 226 புள்ளிகள் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! விசாலினியின் நுண்ணறிவுத் திறன் கண்ட கலசலிங்கம் பல்கலைக்கழகத்தினர் நெட்வொர்க்கிங் துறை பயிற்சிகளை அளித்துள்ளனர். ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்ட விசாலினி, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் எழுதக்கூடிய சி.சி.என்.ஏ. தேர்வை 10 வயதிலேயே எழுதி 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். 3 ஆண்டுகளில் 12 சர்வதேச கணினித் தேர்வுகளில் பங்கேற்று 90 சதவிகிதத்துக்கும் அதிக மதிப்பெண் அள்ளியிருக்கிறார். 11வது வயதிலேயே திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி பொறியியல் கல்லூரியில் பி.டெக்., எம்.டெக் மாணவர்களுக்கு நெட்வொர்க்கிங் பயிற்சி வகுப்பெடுக்க விசாலினியை அழைத்தனர்.அப்போது தொடங்கி, இந்த மூன்றாண்டுகளில் 25 பொறியியல் கல்லூரிகளில் பயிற்சி அளித்திருக்கிறார். 10 சர்வதேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றியிருக்கிறார் விசாலினி. டெட் எக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதற்காக young TED x speaker விருது வழங்கப்பட்டிருக்கிறது. மே 2 அன்று டெல்லியில் நடைபெற்ற Google India Summit நிகழ்வில் ஒரு மணிநேரம் உரையாற்றியிருக்கிறார். இதற்காக Youngest google speaker விருதையும் பெற்றிருக்கிறார். இப்பட்டியல் இன்னும் நீளமானது.

‘‘தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சிக்காகப் பாடுபடுவதும் கூட ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு செலுத்துவது போல்தான். நெட்வொர்க்கிங் துறையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது என் இலக்கு. அது மட்டுமல்ல... ஏதேனும் ஒரு துறையில் நோபல் பரிசு வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மன ளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்காக ஒரு இல்லம் நடத்த வேண்டும் என்பதும் என் ஆசை. கற்றுக்கொள்ள இன்னும் எத்தனையோ இருக்கிறது. என்னால் முடிந்த வரை கற்றுக் கொள்வேன். பிரதமரிடம் வீடியோ கான்ஃபெரன்ஸில் பேசியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அவரை நேரில் சந்தித்து பேசும் அளவுக்கு மேலும் பல சாதனைகள் புரிவேன் என நம்புகிறேன்’’ என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார் விசாலினி.

"எந்தத் துறையிலும் எந்த வயதிலும் சாதிக்கலாம். விசாலினியின் 14 வயது நமக்கு இதனைத் தான் சுட்டிக்காட்டுகிறது. வாழ்த்துகள் விசாலினி!"

- கி.ச.திலீபன்
படங்கள்: ரா.பரமகுமார்