மன்னார்குடி டேட்ஸ் அல்வா



அல்வா ஸ்பெஷல்

உங்களுக்கு எத்தனை வகை இனிப்புகளின் பெயர்கள் தெரியும்? லட்டு, ஜிலேபி, அதிரசம், மைசூர்பா, பர்பி, கேக், அல்வா... இவற்றில் உட்பிரிவுகள் எத்தனை வகை தெரியும்? கடலைமாவு லட்டு, ரவா லட்டு, பொரி விளங்காய், ஜாங்கிரி, தினை அதிரசம், ஹார்லிக்ஸ் மைசூர்பா, கேரட் மைசூர்பா, தேங்கா பர்பி, கடலை பர்பி, மைதா கேக், 7 கப் கேக், முந்திரி கேக்... இப்படி. அல்வாவில்? ஏறக்குறைய 600க்கும் அதிக அல்வா வகைகள் உலகெங்கும் உள்ளன. லட்டு, ஜிலேபி, அதிரசம் போல நம் ஊர் இனிப்பாக மட்டுமே அல்லாமல், உலகமெங்கும் அவரவர் கலாசாரத்தில் இனிப்பாக இடம் பிடித்திருக்கிறது  அல்வா!

உலகில் 1840ம் ஆண்டிலிருந்து அல்வா தயாரிக்கப்படுவது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமான அல்வா இருந்தாலும், நம் இந்தியாவில் கிடைக்கும் அல்வாக்களின் சுவை தனித்துவமானது. சுடச் சுட  நெய் ஒழுகும் அல்வாவை வாழை இலையில் வைத்துத் தந்த உடனே, ஒரு துணுக்கும் விடாமல் விரலால் வழித்து வாயில் போட்டதும், அது நாவில் படாமலே கரைந்து நேரே வயிற்றில் விழுவது போன்ற உணர்வை அனுபவிக்காதவர் யார்!



நம் தமிழகமோ ஏராளமான அல்வாக்களுக்குப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஊரும் அதன் தனித்துவமான அல்வாவை தன்னகத்தே கொண்டிருக்கும். திருவையாறா... இதோ அசோகா அல்வா, திருநெல்வேலியா... இருட்டுக்கடை அல்வா... இவை மட்டுமல்ல... பாதாம் அல்வா, பெங்களூர் பேப்பர் அல்வா, காயல்பட்டினம் முக்கலர் அல்வா, காரைக்கால் தம்ரூட் அல்வா, முதலூர் மஸ்கோத் அல்வா,  மன்னார்குடி கோதுமை முந்திரி அல்வா மற்றும் பேரீச்சம்பழ அல்வா...   இந்த உதாரண வரிசையில் இன்னும் நிறையவே உண்டு. இந்த வரிசையில் மன்னார்குடி பேரீச்சம்பழ அல்வாவை சுவைப்போமே...

பேரீச்சம்பழ அல்வா... பெயரே ஒரு கவர்ச்சியான சுவையைத் தருகிறது. பேரீச்சம் பழ கலரில் அல்வா என்பது இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. மன்னார்குடியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இனிப்பு வகைகளுக்குப் புகழ்பெற்ற கடை டெல்லி ஸ்வீட்ஸ். 1975ல்
யுவராஜ் சிங் தொடங்கிய கடையை, இன்று அவரது மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர் ஹரிசிங்  நடத்துகிறார். சுவை சற்றும் குறையாத அதே தரத்தையும் உறுதிப்படுத்துகிறார்.



இங்குள்ள ஸ்வீட் மாஸ்டர் கதிரவன் 25 ஆண்டுகளாக பேரீச்சம்பழ அல்வா செய்வதில் கைதேர்ந்தவர். இவர்கள் இருவரும் அல்வாவை வர்ணிக்கும் போதே சுவைக்கத் தூண்டு கிறது. காலை 10 மணி முதல் கிடைக்கும் இந்த அல்வாவுக்குத் தேவையான பொருட்களை ஒரே இடத்தில் இருந்து வாங்குவதில்லையாம். ஒவ்வொரு மூலப்பொருளும் அதற்கென்றே பிரசித்தி பெற்ற சிறப்பான இடங்களில் இருந்து பெறப்படுவதே தரம் குறையாத சுவைக்குக் காரணம்.

அல்வா செய்வது சற்று கடினமான வேலையே. பதம் வரும் வரை நம் பொறுமையை பதம் பார்க்கும் வேலையும் கூட. பேரீச்சம் பழ அல்வாக்கான பிரதான பொருட்களை வீட்டில் செய்து, அதன் பின் அல்வா கிண்டுவது மலைப்பூட்டும் விஷயம். அதனால், தயாராகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, ரெடிமேடாக அல்வா செய்வது எளிது. வழக்கமாக, பாதாம், மைதா, கேரட் போன்ற மாவு வகைகளில் செய்யும் அல்வா போன்றதல்ல இது. மாறாக, பால் பேணி / பதுர் பேணி மற்றும் பால்கோவா சேர்த்து செய்யப்படுகிறது. எல்லாமே பாலும் பழமுமாக இருப்பதால் அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. அதிகபட்சம் 3 நாட்கள் நன்றாக இருக்கும். சுடச் சுட சாப்பிடும் சுவைக்கு ஈடு ஏதும் இல்லை என்பதால் மூன்று நாளே அதிகம்தானே? பேணியின் சேமியா வடிவமும், பேரீச்சை அவ்வப்போது கடிபடுவதும் முந்திரியின் மணமுமாக அபாரமான சுவையை இனியும் வர்ணிக்கத்தான் வேண்டுமா! கொஞ்சம் பொறுமையும் ஆர்வமும் சேர்த்து பண்டிகை காலங்களில் புதிய இனிப்பாக பேரீச்சம்பழ அல்வாவை முயற்சிக்கலாமே...

"அல்வா செய்வது சற்று கடினமான வேலையே. பதம் வரும் வரை நம் பொறுமையை பதம் பார்க்கும் வேலையும் கூட. ஆனால், பேரீச்சம் பழ அல்வாவை எளிதாகச் செய்ய முடியும்!"


சீக்ரெட் ரெசிபி

மன்னார்குடி டேட்ஸ் அல்வா

என்னென்ன தேவை?

பால் பேணி / பதுர் பேணி - 2, பால்கோவா (இனிப்பு கோவா) - 200 கிராம், பால் - அரை லிட்டர், முந்திரி - 100 கிராம், பேரீச்சம் பழம் - 200 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு.

எப்படிச் செய்வது?

முந்திரியை ரவை போல ஒன்றிரண்டாக பொடிக்கவும். பேரீச்சம் பழத்தை  பாதி பொடியாக நறுக்கியும், மீதியை மிக்ஸியில் போட்டு சிறிது பொடித்தும் வைக்கவும். நறுக்கிய மற்றும் துருவிய பதத்தில் இருக்கும் பேரீச்சையை நெய் விட்டு லேசாக வறுத்து வைக்கவும். சிறிது
முந்திரியையும் நெய்யில் வறுத்து வைக்கவும் (அலங்கரிக்க). அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டு சூடானதும், பால்கோவா போட்டு நன்கு கிளறவும். பொடித்து வைத்த பேரீச்சம் பழம் சேர்த்து, முந்திரி பவுடர், எசென்ஸ்  சேர்த்து நன்கு கிளறவும். பால் பேணியைப் பொடித்து, இத்துடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது நெய்  சேர்க்கவும்.  பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், அடுப்பிலிருந்து அகற்றி, மேலே சிறிது பேரீச்சை, முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...

* நெய் வறுப்பதற்கு மட்டும் போதுமானது. அதிகம் தேவைப்படாது.
* கலர் பவுடர் தவிர்க்கலாம், விரும்பினால் சிறிது ஆரஞ்சு கலர் சேர்க்கலாம்.
* பால்கோவா, முந்திரி, பேரீச்சையின் இனிப்புகளே போதும். தனியாக சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.

அல்வா 600!

கிழக்கு ஆப்பிரிக்காவில் Dodol எனும் அரிசி மாவில் செய்யப்பட்ட அல்வா.
இதுபோன்ற நட்ஸ் அண்ட் பட்டர் வகை அல்வாக்கள் பல்ஜீரியா, ரஷ்யா, எகிப்து நாடுகளில் மிகப் பிரபலம்.
நம்ம ஊர் சோன்பப்டி ஸ்டைலில் இருக்கும் Floss Halva  துருக்கியின் பாரம்பரிய உணவு.  எள்ளை வைத்து செய்யப்படும் தஹினி அல்வா... துருக்கி, போலந்து போன்ற நாடுகளில் விருப்ப இனிப்பு.

படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்