ஃபேஸ்புக்கில் என்ன செய்ய முடியும்?



வெள்ளக் களத்தில் நட்புக் கரங்கள்

விமலா சஞ்சீவ்குமார்

‘வீழ்வோம் என நினைத்தாயோ மழையே? மீண்டு வருவோம் உன்னை வரவேற்க! கொட்டித் தீர்த்த மழையில் பல தெய்வங்களையும், பல மனிதர்களையும், வெகு சில மிருகங்களையும் கண்டுகொண்டேன்...’ இப்படி நம்பிக்கையும் தத்துவமுமாகப் பேசத் தொடங்குகிற விமலா சஞ்சீவ்குமார், சவுதி அரசு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும்  ஆராய்ச்சியாளர். சென்னை இருளில் கிடந்த வெள்ள நாட்களில், வெளிநாட்டில் இருந்து மீட்புப் பணிக்கு உதவிய பல தோழிகளில் ஒருவர்!

‘‘அன்று இரவு பிடித்த அடை மழை... முதலில் சில பேர் வீட்டுக்கு போக முடியாமல் தவித்த போது நீண்டது நேசக்கரம்.  ‘எங்க வீட்டுக்கு வாங்க... இத்தனை பேர் தங்கலாம்... இத்தனை பேருக்கு உணவு அளிக்க முடியும்’ என்று ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும். இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் பெண்கள் கூட தங்கள்  வீடு உள்ள ஏரியா, போன் நம்பர் பகிர்ந்ததுதான். இந்த நேரத்தில் என்னால் ஒரு முடிவும் எடுக்க முடியாமல் வரும் நம்பர், முகவரிகளை மட்டும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து  கொண்டிருந்தேன்.

திடீர் என வெள்ளப் பெருக்கு, ஏரிகள் உடைந்து நீர்மட்டம் உயர்ந்து கொண்டே போனது. பல பேர் வெள்ளத்தில் சிக்கி, வீடு, உடமைகளை இழந்து, சொந்தங்களை பிரிந்து விவரிக்க முடியாத துயரத்துக்கு ஆட்படும் போதுதான் மழையின் கோர தாண்டவம் புரிந்தது. பலர் தன்னார்வ தொண்டர்களால் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து, ‘அங்கே வெள்ளம்’, ‘இங்கே இவர்களை மீட்க வேண்டும்’ என செய்திகளை பகிர்ந்தவண்ணம் இருந்தோம். ஒரு குழுவாக செயல்பட்டு வெவ்வேறு நாடுகளில் உள்ள தோழிகளை ஒருங்கிணைத்து செய்திகளை அவரவர் ஃபேஸ்புக்கில் பதிந்து, சென்னையில் உள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து செய்திகளை அனுப்பினோம்.

அவர்கள் அங்கிருக்கும் நண்பர்களை திரட்டி தெருத் தெருவாக போய் மக்களை காப்பாற்றி கரை சேர்த்தனர். இதன் பிறகுதான் வேலைகள் முழுவீச்சில் ஆரம்பம் ஆனது. நான் 2 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு முகநூல் மூலமாக மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து, உடை, பாய், போர்வை, தண்ணீர், சானிடரி நாப்கின் ஆகியவற்றைக் கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தோம். இதில் பல தோழிகள் இணைந்தனர். என் தோழிகளின் அளப்பரிய சேவைகளை சொல்லியே ஆகணும்.



* நித்யா கந்தசாமி கத்தார் நாட்டில் வசிக்கிறார். அவருடைய சென்னை வீட்டைத் திறந்து வேண்டிய பொருட்களை எடுத்து சமையல் செய்து தேவையானவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தார். பக்கத்துக்கு வீடுகளைச் சேர்ந்த 10 பெண்கள்  சேர்ந்து உணவு தயார் செய்து அளித்தனர்.

* ப்ரீதா ராஜேஷ் வெள்ள நிவாரணப் பணிக்கு நேரடியாக சென்று உதவினார். ‘காலைல ஒரு காபி குடிச்சிட்டு வீட்ட விட்டு போனா ராத்திரிதான் வர முடியும். நடுவுல டீ குடிக்க கூட நேரம் இல்ல... தோனவும் இல்ல... வீட்டுக்கு வந்ததும் என்ன இருக்கோ சாப்ட்டு தூங்கிடுவேன்... அதனால இன்னைக்கு சோறப் பார்த்தவுடனே வேக வேகமா சாப்ட்டேன்... அப்பதான் தோணுச்சு... மூணு நாளுக்கே நாம இப்படி ஆகிட்டோமே... இத்தனை நாள் வீடு இழந்த மக்களின் மனநிலை இப்படித்தானே இருக்கும்? நாமதானே அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு’ என்கிற ப்ரீதா, இப்போது ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் பணிகளைத் தொடர்கிறார்.

* செல்வ சுதா என்ற சமத்துப்பெண் என்னிடம் சொன்னாள்... ‘அக்கா... எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல சம்பளம் வந்திடும். என்னால் 2 ஆயிரம் ருபாய் கொடுக்க முடியும்... என்ன வாங்கி அனுப்ப’ என்று. ‘முடிந்தால் சானிடரி நாப்கின் வாங்கி உங்க ஊரில் இருக்கும் ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்து அனுப்பி விடு’ என்றேன்.

*பனிமலர் வைத்தி விரைவாக செய்திகளை சேகரித்து அனுப்பியவர். துபாயில் வசிக்கிறார். முழு நேரமும் என்னுடன் இணைந்து இருந்தவர்.

*ராதிகா யோகேந்தர் கொடுத்த தகவல்களால் நிறைய உதவிகள் சரியான நபர்
களைச் சென்று அடைந்தது.

*மரியம் ஜமாலியா தன் கடையில் இருக்கும் புதுத் துணிகளை நிவாரணத்துக்கு அளித்தவர். எங்கள் தகவல்களை எல்லாம் ஒருங்கிணைத்து களத்தில் பணியாற்றும் நண்பர்கள் ஏராளம். அவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை. இப்போதெல்லாம் சென்னை என்றாலே எனக்கு முஹம்மது பாரூக்கும், கடலூர் என்றால் சக்தி சரவணன் தம்பியும்தான் நினைவுக்கு வருகிறார்கள். காலை 6 மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு 1 மணிக்குத்தான் இவர்கள் பணி  நிறைவடையும். அவசரமாக ரத்தம் தேவைப்பட்ட போது அவருடைய நண்பர்களை இணைத்து ரத்தம் கொடுத்தும், இன்னும் பல உதவிகளை செய்தும் மனதில் நின்றவர் பிரேம் விஜய்.

என்னால் இரவு பகல் பாராமல் இங்கே ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு காரணம் என் கணவர் சஞ்சீவ்குமார். வெளிநாடுகளில் வசித்தாலும் தகவல் தொடர்புப் பணியில் உதவிய கனவுப் பிரியன், முகமது, காஜா மொஹிதீன்,  வில்சன், அப்துல் வஹாப், முத்துராமலிங்கம், பூபதி கலைவாணன், புவனேஸ்வரன் (சவுதி), அப்துல் ஹகீம் (மேட்டுப்பாளையம்) மற்றும் பல ஃபேஸ்புக் நண்பர்களாலேயே எங்கள் பணி மக்களைச் சென்றடைந்தது. ஃபேஸ்புக்கில் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு ஒரே பதில்: மனிதத்தை மீட்டுக்க முடியும்! ஆம்... இந்த களப்பணிகளில் மனிதம் மட்டுமே பிரதானமானது!’’ என்று புதிய அனுபவம் பகிர்கிறார் விமலா சஞ்சீவ்குமார்.