முகம் தெரியாத உறவுகள்!



வெள்ளக் களத்தில் கடலூர் கண்மணிகள்

வெள்ளத்தின் ேகார தாண்டவத்தில் எல்லாவற்றையும் இழந்து நின்றவர்களின் கண்களில் நிறைந்து வழிந்த அந்த பயம்... அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற  கவலை ேதாய்ந்த முகம்... தொலைந்த உறவுகளைத் தேடி அலைந்த மனம்... இந்த  இழப்பின் வலி மனித மனங்களுள் புதைந்து கிடந்த நேசத்தை விழித்து எழ வைத்துள்ளது. சுனாமி, தானே புயல், சென்ற மாத வெள்ளம், இந்த மாத வெள்ளம் என இயற்கையின் கோபத்தை எல்லாம் தன் மடியிலேயே தொடர்ந்து தாங்கி வருகிறது கடலூர். இப்பகுதியில் கண் துஞ்சாது களப்பணியாற்றிய தோழிகள் சிலரோடு பேசினோம்...

மலர்விழி ரமேஷ்

சிதம்பரத்தில் வாழும் மலர்விழி புகைப்படக் கலைஞரும் கூட. ரூ.50 லட்சத்துக்கும் மேல் நிவாரணப் பொருட்களைத் திரட்டி வெள்ளப் பாதிப்பு பகுதிகளில்  முறையாக விநியோகித்து வருகிறார். ‘‘உதவும் குணம் எங்களது வீட்டில் இருந்தே தொடங்கியது. மாமனார் மருத்துவர், கணவரும் மருத்துவர். ஒவ்வொரு மாதத்திலும் இறுதி ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். வெள்ளப் பாதிப்புகள் தொடங்கிய உடன் பாதிக்கப்பட்ட பகுதிகளின் படங்களை ஃபேஸ்புக்கில் ஏற்றினேன். புகைப்பட நண்பர்கள் குழுவாக உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். கடலோரத்தில் இருந்த தில்லை என்ற கிராமத்தில் வீடுகள் இருந்த சுவடே காணாமல் போனது. ெசன்னைக்கு முன்பாகவே கடலூர் கிராமங்கள் வெள்ளத்தில் வீடுகளை இழந்தன. பின்தங்கிய கிராமங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

கடலூர் பகுதி கிராமங்களில் எந்த வெள்ளத்தாலும் அடித்துச் செல்ல முடியாத அளவுக்கு சாதிப் பிரச்னையும் வலுவாக இருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி நிவாரணம் தேவைப்படும் மக்களை கண்டறிந்து பொருட்களை வழங்கினோம். கடலோர கிராமங்களில் சமைத்து உண்ணவும் வழியற்று வாடிய மக்களுக்காக ‘நம்பிக்கை இல்லம்’ பெண்கள் இணைந்து சமைத்துத் தந்தனர். இன்னும் பெட்ஷீட் போன்ற உதவிப் பொருட்கள் தேவைப்படுகிறது. வெள்ளத்தில் வாழ்க்கையை இழந்து நிற்பவர்களுக்கு நாம் செய்யும் உதவி சிறு துளிதான்’’ என்று நெகிழ்கிறார் மலர்விழி.

அனிதா சத்யம்

தனது புகைப்படங்கள் மூலமே வலியைப் பகிர்ந்தளித்து உதவிக்கான வாய்ப்புகளை உருவாக்கிய அனிதா சத்யம், பூனாவில் பிறந்து திருமணத்துக்குப் பின் நெய்வேலியில் செட்டில் ஆனவர். தீபாவளியை ஒட்டி கடலோரப் பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வீடு வீடாக விசிட் அடித்து விசாரித்திருக்கிறார். மழைப் பாதிப்பின் சிரமங்களை  புகைப்படங்களில் பதிவு செய்து, ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் உதவுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளார்.அனிதாவின் புகைப்படங்கள் பலரது மனங்களுக்கு உள்ளும் மயங்கிக் கிடந்த மனிதாபிமானத்தின் முகத்தில் அந்த மக்களின் கண்ணீரைத் தெளித்து எழுப்பியது.
    
‘‘விடிய விடிய பலரும் வெள்ளத்தில் தத்தளித்து மீண்டதே பெரிய கொடுமை. வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட ஈர உடையுடன் அடுத்த வேளை பசிக்கு கையேந்தும் நிலை. வெள்ளத்தால் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த கிராமங்களுக்கு உதவுவதற்காகக்கூட போக முடியவில்லை. வெள்ளம் வடிந்த பின்னர் நண்பர்கள் மூலம் உட்பகுதிகளில் இருந்த கிராமங்களைக் கண்டறிந்து உதவிப் பொருட்களை கொண்டு சேர்த்தோம். வாழ்வதற்கான வலியை அத்தனை முகங்களிலும் பார்க்க முடிந்தது. அவர்களது இழப்பின் முன்னால் தரப்படும் உதவிகள் சிறு துளியாகிக் கரைந்தது. இருப்பினும், முகம் அறியாத நபர்களும் உதவ முடியும் என்பதை ஃபேஸ்புக் உறவுகள் உறுதி செய்துள்ளனர்’’ என்கிறார் அனிதா சத்யம்.



லதா சிவக்குமார்

‘‘கடலூர் விசூர் கிராமத்தில் ஏரி பகுதியில் 15 வீடுகள் தண்ணீரில் அடித்துப் போனது. அங்கிருந்த ஒரு வீட்டில் பெண்ணின் திருமணத்துக்காக சேர்த்த பணம், நகையை மரப்பெட்டியில் வைத்திருந்தனர். நள்ளிரவில் அந்த ஊருக்குள் இருந்த வீடுகளை இழுத்துச் சென்றது வெள்ளம். அந்த வீட்டின் கணவன் 2 ஆண் குழந்தைகளையும் அழைத்துச் சென்று விட்டார். மனைவியும் அவரது மகளும் அந்தப் பெட்டியை பத்திரமாக பிடித்துக் கொண்டு, தண்ணீரில் மிதந்து, கடைசியில் தாயும் மகளும் சடலங்களாக கரை ஒதுங்க, அவர்களுக்கு அருகில் அந்த மரப்பெட்டியும் கிடந்தது. இந்தக் காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்தது’’ என்கிற லதா சிவக்குமார், துயர பூமியில் உதவும் நெஞ்சங்களின் ஈர உணர்வுகளை பகிர்ந்தளிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளார்.

‘‘ஈரோட்டில் இருந்து உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் என ஒன்றரை லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் எனது மகனையும் அழைத்துக் கொண்டு, ஒரு ஆம்னி வேனில் சீட்டைக் கழற்றி அடுக்கி, வண்டியின் மேல் பகுதியிலும் கட்டிக் கொண்டு கிளம்பி விட்ேடன். அந்த வேகம் எனக்குள் எப்படி வந்தது என்று இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. மீடியாவில் பார்ப்பதை விட கிராமங்களில் நேரடியாகப் பார்க்கும் போது உண்மையான துயரத்தின் வலியை உணர முடிந்தது. வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் பெரும்பாலும் ஏரி பகுதிகளில் வீடு கட்டியுள்ளனர். அவர்களுக்கு யார் பட்டா கொடுத்தது, எப்படி மின் இணைப்பு கொடுத்தார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது. இது மக்களின் தவறா? அதிகாரிகளின் தவறா?’’ என்று குமுறுகிறார் லதா சிவக்குமார்.

சஹானா தாஸ்

போரையூர் மலைக்கிராமப்பகுதியில் ஹெலன் கீதாவாக அவதரித்தவர். கணவர் ஏசுதாசன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாகர்கோவில் தக்கலை பகுதியில் செட்டில் ஆனவர். ஃபேஷன் டிசைனர். தனது எழுத்துக்காக சஹானா தாஸ் என பெயர் கொண்டவர். வெள்ளப் பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு உதவியே ஆக வேண்டும் என்ற இவரது உறுதி ஃபேஸ்புக் வழியாக திறக்காத கதவுகளையும் திறந்தது.

‘‘முதல் தவணையாக ரூ.27 ஆயிரம் பணம் சேர்ந்தது. உள்ளூர் நண்பர்களோடு நிவாரணப் பொருட்கள் சேகரித்தோம். முதல் முறையாக நாகர்கோவிலில் இருந்து கடலூருக்கு எனது மகனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன். கடலூரே கடலுக்கு இறையானது போல் இருந்தது. தினமும் 500 ரூபாய் சம்பாதித்து விட்டு 400 ரூபாய்க்கு குடிக்கின்றனர். பிறகு எதை வைத்து பிழைப்பு நடத்துவார்கள்? ஓனாங்குப்பம் கிராமம் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த கிராமம் வரைபடத்திலேயே இல்லையாம். சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை திரட்டி வழங்கினோம். இதில் நான் செய்தது சிறிய வேலைதான். எனது கரங்களுக்குள் உதவிக்கரம் நீட்டிய  அத்தனை பேரின் கரங்களும் அடக்கம்’’ என்கிறார் சஹானா தாஸ்.

காயத்ரி வைத்தியநாதன்

தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி, 16 ஆண்டுகளாக டெல்லியில் வசிக்கிறார். ஃபேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து சமூகத்துக்கு பயனுள்ளதாகச் செய்ய வேண்டும் என்கிற  இவரது எண்ணத்தில் உருவானதுதான் ‘தமிழ்க்குடில்’ அறக்கட்டளை. வெள்ளப் பாதிப்பு தொடர்பான முகநூல் பதிவுகள் காயத்ரியை தூங்கவிடாமல் துரத்த, பாதிக்கப்பட்ட பகுதிகளில் களம் இறங்கியது தமிழ்க்குடில் குழு. கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உடனடித் தேவைகளை உதவியாகப் பெற்றுத் தந்ததுடன், கண்டு கொள்ளப்படாத கிராமங்களைத் தேடிப் பயணித்தனர்.

‘‘பின்தங்கிய கிராமங்களில் யாருடைய உதவியும் கிடைக்காமல் சிக்கிக்கொண்ட 25 கிராமங்களை கண்டறிந்தது தமிழ்க்குடில் டீம். நண்பர்கள் களத்தில் இருந்து பணியாற்றுவதால் உதவி தேவைப்படும் நபர்களை சரியாக கண்டறிந்து தேவையான உதவியை உடனடியாக செய்ய முடிகிறது. இந்த வெள்ள சீற்றத்தில் மனித நேயம் வெளிப்பட்டுள்ளது. கட்சி, சாதி, மதம் போன்ற வேறுபாடுகள் இன்றி சக மனிதர்கள் வலியுணர்ந்து உதவ முன்வந்த உள்ளங்கள் வெள்ளம் வடிந்த உடன் கலைந்து விடக் கூடாது. ஃபேஸ்புக் மூலம் உருவாகியுள்ள இந்த நேயம் பல்வேறு சமூக மாற்றங்களை சாத்தியமாக்கும் சக்தியாக வளர்க்கப்பட வேண்டும்’’ என்கிறார் காயத்ரி.
விரிவாகப் படிக்க: kungumamthozhi.wordpress.com