இன்னும் கவனம் தேவை!



க்ருஷ்னி கோவிந்த்

நம் நினைவில் மட்டுமல்ல... அடிக்கடி கனவிலும் வரும் காலம் - பள்ளிக் காலம். மீண்டும் நாம் போக ஏங்கும் காலம் என்றும் அதுதானே? கவலைகள் இன்றி, காரணமின்றி சிரித்து, அழுது, நண்பர்களோடு பகிர்ந்து, ஆசிரியருக்குப் பயந்து, பாராட்டுக்குப் பெருமைப்பட்டு,
சின்னத் திட்டுக்கும் உதடுப் பிதுக்கி அழுது, நண்பர்கள் பிரியும் போது கலங்கி, சிறு சண்டைகளும் செல்லக் கோபங்களுமாக கழிந்த வசந்த காலம் அது. கல்லூரிக் காலம் என்பது வேறு... கொஞ்சம் உலகம் புரிந்த வயதை எட்டிவிடுவதால் வாழ்க்கையும் நட்பும் வேறு தளத்தில் இயங்கும். பள்ளியில் குழந்தையாக நுழைந்து வளர் இளம் பருவத்தில் வெளிவருகிறோம். மனித வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் இது. பார்க்கும் அனைத்தும் புதிதாகும். அறியும் அனைத்தும் ஆச்சரியம் தரும்... கவனம் ஈர்க்கும். இந்தப் பருவத்தில் கேட்கும் ஒரு சொல் கூட மனதில் ஆணியடித்து பதியும். பார்க்கும் ஒரு காட்சி கடைசிவரை மறக்காது. பழகிய நினைவுகளும் அப்படியே.

நமது பள்ளிக்காலம் போலவா இப்போதைய பள்ளிப் பருவம் இருக்கிறது? இத்தனை வீட்டுப்பாடம், இத்தனை நோட்டுப் புத்தகங்கள், இத்தனை கணக்குகள், கழுதை பொதியாக புத்தக மூட்டை, அதிகாலை தொடங்கி விளையாட்டு நேரமே இல்லாத மாலை வரையான வகுப்புகள், அதற்கு மேல் டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், தகுதித் தேர்வு வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், கோச்சிங் க்ளாஸ், இதர விருப்ப வகுப்புகள்... நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. உண்மையில் நம்மைவிட நம் குழந்தைகள் புத்திசாலிகள். அவர்களால் இத்தனையும் சகித்து, படித்து, போட்டியிடவும், சிலரால் முன்னிலையில் வரவும் முடிகிறதே!

காலையில் சாவகாசமாக  எழுந்து, பள்ளி மணி அடிக்கும் ஓசையை வீட்டிலிருந்தே கேட்டு, மஞ்சள் பையோ, துணிக்கடை பையோ, வயர் கூடையோ, அலுமினிய பெட்டியோ - அதில் ஒரு சிலேட்டு, பழைய பெருங்காய டப்பாவில் உடைந்த பென்சில், நாலே நாலு புத்தகம், அதைவிட சிறிய நோட்டுகள் என்று பள்ளி சென்றவர்கள் நாம். இன்றைய குழந்தைகளுக்கு சில இடங்களில் காலை 7 மணிக்கு பள்ளி தொடங்குகிறது, சாப்பிட நேரமில்லாத நேரத்தில் தூக்கக் கலக்க குழந்தையை அள்ளி பாத்ரூமில் தள்ளி, ‘குளித்தேன் பேர்வழி’ என்று தலைவாரி, வாயில் காய்ந்த ரொட்டியை திணித்து, 2 நிமிட நூடுல்ஸை டிபன்பாக்ஸில் அடைத்து, பள்ளி வேனில் திணித்த பின்தான் நாம் மூச்சே விடுகிறோம். குழந்தைகள் இதற்கும் பழகிவிடுகிறார்கள். இப்படி நொடி நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் வீடு வந்த பின் எப்படி ஓடியாடி விளையாடுவார்கள்? அதனால்தான் டி.வி., கம்ப்யூட்டர் என்று செட்டில் ஆகிவிடுகின்றனர்.

வீட்டில் இப்படி என்றால் பள்ளியில் என்ன நிலை? நேரில் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் குழந்தையிடம் கேட்டிருக்கிறீர்களா? காலையில் ப்ரேயரில் ஆரம்பிக்கிறது அவர்கள் பிரச்னை. ஏறுவெயிலில் அரை மணி நேரத்துக்கும் மேல் நிற்கும்போது காலையில் சாப்பிடாத சோர்வில் நிறைய குழந்தைகள் மயங்கி விழுகின்றனர். அவசரத்தில் பள்ளி பேக்கில் எடுத்து வைத்ததில் - குறிப்பாக அன்று தேவைப்படும் நோட்டோ புத்தகமோ இருக்காது, எல்லார் முன்னிலையிலும் திட்டும் தலை குனிவும். அதிலும் பதின்ம பருவ குழந்தைகளின் நிலை மிகவும் மோசம். பெண் குழந்தைகள் என்றால் அடுத்தவருடன் ஒப்பிடும் நோக்கில் நண்பர்கள் சொல்லும் எல்லாமே அவர்களுக்கு மிக முக்கியம் ஆகிறது. உதாரணமாக ஒருவருக்குக் கூந்தலின் நீளம் அழகு என மற்றவர்கள் பாராட்டும்போது இவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.



இப்போதைய காலகட்டத்தில் தகவல் தொடர்பு என்பது நொடியில் நிகழ்வதால் ஏற்படும் எதிர்விளைவுகளும் அதிக அழுத்தத்தை உண்டாக்குகின்றன. இவை எல்லாவற்றையும் விட பள்ளியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவு முறை..?
நாம் ஒருவேளை மறந்திருக்கக்கூடும்... 2012 பிப்ரவரியில் சென்னை பாரிமுனையில் 160 ஆண்டு பாரம்பரியம் மிக்க பள்ளியின் ஆசிரியரை வகுப்பறையிலேயே ஒரு மாணவன் கத்தியால் குத்திக் கொன்றான். இரு மாணவர்கள் சண்டையிட்டதை பிரித்து விட்டதற்காக வகுப்பு ஆசிரியரை கன்னத்தில் அடித்த மாணவன், பாடம் நடத்துகையில் கவனம் கொள்ளாத மாணவனை திட்டியதால் ஆசிரியரைத் தாக்கிய சம்பவம், வகுப்பில் விசில் அடித்ததற்காக தண்டித்த ஆசிரியரை ஆள்வைத்து அடித்த மாணவனின் தந்தை... எங்கே செல்கிறோம் நாம்?

‘கண்ணை மட்டும் விட்டுவிட்டு வேறு எங்கு வேணும்னாலும் அடிங்க’ என்ற பெற்றோர் அந்தக் காலம். குழந்தைகளை அடிப்பதை ஆதரிக்கவில்லை. மாணவர்களின் இந்த மூர்க்க குணத்துக்கு பெற்றோரும் ஆசிரியர்களும் ஒரு காரணம்தான். வீட்டில் குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது, அடிப்பது, பொருட்களை வீசுவது போன்றவையும், பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகளை நடத்தும் விதமும் ஒன்றுதான். எல்லா ஆசிரியர்களையும் குறை சொல்ல முடியாது. பெரும்பான்மை என்று வரும்போது பொதுவில் சொல்லவேண்டியது அவசியமாகிறது.

இரண்டு மாணவர்கள் என்னவெல்லாம் பேசிக்கொள்வார்கள் தெரியுமா? ஒரு தோழி பகிர்ந்த விஷயத்தை கொஞ்சம் விவாதிக்கலாம்... ‘குழந்தைகள் வளர வளர எல்லாவற்றையும் ரொம்பவே அப்சர்ப் செய்கிறார்கள். பெற்றோர்களின் அந்தரங்க நிகழ்வுகளை கவனித்து, அது என்னவென்றே தெரியாமல் வெளியே மற்றவர்களிடம் சொல்லும்போது எப்படி இருக்கும்? சமீபத்தில் ஒரு தோழியின் பையன் (வயது 9) வீட்டுக்கு வந்திருந்தான். யதேச்சையாக எங்களிடம் இதைப் பெருமையாகச் சொன்னான். எங்களுக்குத்தான் பகீரென இருந்தது. வேறு டாப்பிக்கில் கேள்வி கேட்டு இதில் இருந்து பேச்சை மாற்ற வேண்டியதாயிற்று. இதை பள்ளியிலும் பேசுவார்கள் போலத் தெரியுது. அந்தத் தோழியிடம் பேசும்போது, ‘பையன் வளருறான்... தனியாக படுக்க வைங்க’ என்றுதான் சொல்ல முடிந்தது.

இது ஒரு உதாரணம் மட்டுமே... இதில் இருக்கும் முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கும் பெற்றோருக்கும் கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது. இப்போதைய பெற்றோர் குழந்தைகளுக்கு எல்லா வசதியும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்றாலும், சில விஷயங்களில் இன்னும் கவனம் தேவை என்பதையே இது உணர்த்துகிறது. குழந்தைகளுக்கும் பர்சனல் ஸ்பேஸ் எனப்படும் தனிமை அவசியம்... அவர்களின் தனிப்பட்ட செயல்களுக்கும் விருப்பத்துக்கும் மதிப்பு வேண்டும் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

(கற்போம்... கற்பிப்போம்!)