கல்வியும் நீதியும் இரு கண்கள்!



நீதி தேவதைகள்

அனிசா ரசூலி

‘மாத விலக்கு...  அதனால் நீ கோயிலுக்கு போகக்கூடாது என்றால் சரிதான்... ஆனால், கோர்ட்டுக்கு போகக்கூடாது என்றால் எப்படி!’ இரண்டு தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையரோ, தாத்தா-பாட்டியோ இப்படி தடை  சொல்லியிருந்தால், ‘போகட்டும்’ என்று விட்டுத் தள்ளலாம். சொன்னவரோ ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்தவர் அனிஷா ரசூலி. பட்டம் படித்து விட்டு சட்டத்தை கையிலெடுத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. திருமணம் செய்துகொள்ளாமல், பெற்றோருடன் வசிக்கும் இவருக்கு இப்போது வயது 47. ‘உலகமே உன்னை வியந்து பார்க்கும்... உன் சாதனை நாடெங்கும் பேசப்படும்’ என்பது இவரது வாழ்க்கையிலேயே நிகழ்ந்தது. இருப்பினும், உழைப்புக்கு நியாயமாக கிடைத்த  புகழை அடித்துப் பறித்ததில் பெரும்பங்கு பெண்களுக்கு உண்டு என அறியும்போது இதயம் கனக்கிறது. சிலரது அலட்சியப் போக்கு வரலாற்றையே புரட்டி போட்டுவிட்டது.

யார் இவர்?

நியாயம் வழங்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி அனிசா ரசூலிக்கே ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் அநியாய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்ணாக பிறந்த ஒரே காரணத்துக்காக அனிசாவை அடைய வேண்டிய புகழ் கைமாறிவிட்டது. ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகள் சங்கத் தலைவி, காபூல் சிறார் நீதிமன்றத்தின் முன்னாள்  நீதிபதி, ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முக்கியத்துறைகளில் பொறுப்பு வகித்தவர் அனிஷா. இவரது திறமையை பாராட்டி உச்சநீதிமன்றம் பல விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிறது. இப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தேர்தலில் போட்டியிட்ட போது, ‘நான் அதிபரானால் ஆப்கானிஸ்தான் அரசின் முக்கிய உயர்பதவிகளில் பெண்களையும் நியமிப்பேன்’ என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்த வாக்கு தவறாமல்,  அவர் ஆட்சிக்கு வந்ததும், 4 பெண்கள் கேபினட்டில் இடம்பிடித்தார்கள். 2 பெண்மணிகள் கவர்னராக நியமனமானார்கள்.

இவை இரண்டை விடவும் வியப்பானதுதான் அடுத்து வருவது... ஆப்கானிஸ்தானில் ஜூலை 2015க்கு முன்பு வரை உச்சநீதிமன்றம் எந்த பெண் நீதிபதியையும் அனுமதித்ததில்லை. இதிலும் மாற்றம் கொண்டுவர அதிபர் அஷ்ரப் முயற்சித்தார். உறுதுணையாக இருந்தது அவரது மனைவி.   ஆப்கான் வரலாற்றிலேயே    முதல்முறையாக அந்தப் பதவிக்கு முழுத்தகுதியுடைய  நீதிபதி அனிசா ரசூலியை  உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து அதிபர் ஆணையிட்டார்.

அவரது உத்தரவுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்க வேண்டியது நடைமுறை... விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நாடெங்கிலும் பரவிக்கிடந்த வல்லூறுகள் கருத்து கந்தசாமிகளாக  அவதாரம் எடுத்தார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்து அமர்வதற்கான சராசரித் தகுதியை விட அதிக தகுதியை பெற்றிருந்தும் அனிஷாவை  சமூகம் ஏற்க மறுத்தது. வாய்ப்புக்காக காத்திருந்தவர்கள் சம்பிரதாயம் என்ற காயை எடுத்து இஷ்டத்துக்கும் உருட்டி விளையாடினார்கள். அதனால் பாராட்டிக் கொண்டாட வேண்டிய ஒருவருக்கு கிடைக்க வேண்டிய புகழும் அந்தஸ்தும் கைநழுவி, அவரது பதவிப்பிரமாணமே விவாதப் பொருளானது.

கருப்பு அங்கி அணிந்த போராளி
 
1996 முதல் 2001 வரை ஆப்கனில் தாலிபான் ஆட்சி நடந்தது. பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். சுதந்திரமாக நடமாட விடாமல் மன ஊனமாக்கப்பட்டு, படிப்பு வேலை எல்லாவற்றையும் துறந்து வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். படிப்புரிமையிலிருந்து வசிப்புரிமை வரை பெண்களுக்கான உரிமைகள் சுத்தமாக துடைத்தெரியப்பட்டன. பெண் நீதிபதிகள் வெளியேற மறுத்ததால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அனிஷாவும் நீதிபதியாக இருந்தார். அவர் நீதிபதி பதவியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். வேறுவழி இல்லாமல் பதவியைத் துறந்து, அவரது சொந்த கிராமத்துக்கே திரும்பிப் போனார். பெண்கள் வேலைக்கு போகக்கூடாது என்பதைக்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், ஆண் துணையில்லாத வீட்டில் வசிக்கவும் கூடாது என்பதை எப்படி ஜீரணிப்பது? இதுதான் அரசின் ஆணை எனும்போது, அந்த உத்தரவை மீறி, நீதிபதியாக இருந்தாலும் என்ன செய்துவிட முடியும்?



இந்த நிலையில் வேறு யாரேனும் இருந்திருந்தால் விதியை நொந்து நேரத்தை நகர்த்தியிருப்பார்கள். அனிஷா அப்படி அல்ல. ‘பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது’ என தடை இருந்ததால், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்பதை தடுக்க விரும்பினார். கிராமத்தில் அரசுக்கு தெரியாமல் ரகசியமாக  பெண்கள் பள்ளி நடத்தினார் (இப்போது அப்பள்ளி அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது).  இவரது பள்ளிப் பட்டறையில்  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புடமிடப்பட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

ஒரு பெண்  பதவியில் இருப்பதையே சகித்துக்கொள்ளாமல், பதவியை துறக்க ஆணையிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தி வெளியேற்றிய தாலிபான், நூற்றுக்கணக்கான  பெண்களுக்கு பாடம் கற்பிப்பதை கண்டுபிடித்துவிட்டால் அனிஷாவின் நிலை? உயிர் துறக்க வேண்டியதுதான்! இது தெரிந்திருந்தும் உயிரைப் பற்றி அஞ்சாமல் அறியாமை இருளகற்ற உழைத்திருக்கிறார். தாலிபான் ராணுவத்தினர் அனிஷாவை    கொலை செய்வதாகவும்,  அவரே தற்கொலை செய்து கொள்வதைப் போல உலகத்தை நம்ப வைப்பதாகவும் மிரட்டினார்கள். எதற்கும் அவர்  பயப்படவில்லை.  ‘ஒரு நாள் இந்த உலகத்துக்கு வந்தோம்... ஒருநாள் போகப் போகிறோம்... அவ்வளவுதான்’ என்றார். இதே காலகட்டத்தில் பஸ்வார் அரினா உயர்நிலைப்பள்ளியில் 2 ஆண்டுகள் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பணமும் பதவியும்

தாலிபான் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அனிஷா மீண்டும் நீதிபதியானார்.  நீதிபதிக்கு கிடைக்கும் வருமானத்தை விட பலமடங்கு சம்பளத்துடன் கூடிய உயர்பதவிக்கான நியமனக் கடிதத்தோடு ஆப்கானிஸ்தான் அலுவலகங்கள் இவரை வரவேற்றன. அதில் ஒன்றுதான் வர்த்தக அமைச்சகத்தில் ஆலோசகராக கிடைத்த வாய்ப்பு. ‘இறுதிவரை நீதித்துறையில் இருந்து நீதிக்குப் பாடுபடுவேன்’ என்ற வைராக்கியத்துடன், தங்க முட்டையிடும் வாய்ப்புகளை திருப்பி அனுப்பினார் நீதி மீது மிகுந்த பற்றுதல் கொண்ட அனிஷா. தன் அறிவை மேலும் செதுக்கிக் கொள்ள இன்றளவும் சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்.

அனிசா ரசூலியை உச்சநீதிமன்ற  நீதிபதியாக நியமிக்கலாமா என்ற கேள்வியோடு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் ஆண்-பெண் இருதரப்பும் சேர்த்து  192 உறுப்பினர்கள். விவாதம் முடிந்த கையோடு ஓட்டு எண்ணிக்கையும் நடந்தது. அனிஷாவுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது ஒட்டுமொத்த பெண்களுக்கே பாதகம் ஆகுமா? இந்த எதிர்பார்ப்போடு நாடே காத்திருந்தது. அனிஷாவுக்கு  ஆதரவாக விழுந்த ஓட்டு  88. ஆப்கன் அரசு 9 ஓட்டு வித்தியாசத்தில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியை
இழந்துவிட்டது.

சொற்ப ஓட்டுகள் அனிஷாவின் பதவியை இல்லாமல் ஆக்கிவிட்டது. திறமையை கணக்கிட்டு, தீர்மானம் செய்யப்பட வேண்டிய பதவிக்கு ஓட்டெடுப்பு நடத்தியதே கண்துடைப்பு நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆப்கன் பெண்ணியவாதிகள் திரைமறைவு ரகசியங்களை கிளறி எடுத்தனர். வாக்கெடுப்பு நிகழ்ந்த அன்று 23 பெண் உறுப்பினர்கள் வரவில்லை... அனிஷாவுக்கு எதிராக விழுந்த ஓட்டு குத்தியதில் பாதி வளையல் அணிந்த கைகளே. வராதவர்களில் பாதிப் பெண்கள் அனிஷாவுக்கு வாக்கு அளித்திருந்தாலே போதும்... அவர் இன்று ஆப்கனின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்திருப்பார்! பள்ளிக்கு லேட்டாக வந்த மாணவனின் காரணத்தைப் போலவே ஓட்டளிக்க வராதவர்களின் சாக்குபோக்கும் இருந்தது. ‘விமானம் கிடைக்கவில்லை’, ‘சாலைப் பயணம் எனக்கு ஒத்துவராது’, ‘அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை...’ அனிஷா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கக்கூடாது என்று கர்ஜித்த நாடாளுமன்ற சிங்கங்களின் கருத்துச்  சிதறல்கள் இதோ...

முத்து 1: உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தினமும் புனித நூலை தொடவேண்டும். பெண்கள் மாதவிலக்காகும் நேரத்தில் புனித நூலை தொடக்கூடாது என்று மதம் கூறுகிறது. புனித நூலை தொடக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்ற நீதிபதி மாதந்தோறும் விடுப்பு எடுப்பது உசிதமில்லை. அதனால் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

முத்து 2: ‘ஷரியா சட்டப்படி  பெண்கள் ஏன் உச்சநீதிமன்ற நீதிபதியாகக் கூடாது என்றால், அவர்கள் இயற்கையாகவே இளகிய மனம் கொண்டவர்கள்... குற்றவியல் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கூறும்போது  கடுமையான தண்டனை கொடுக்க வேண்டிய வழக்குகளில் தண்டனை கொடுக்காமல் சலுகை காட்டிவிடுவார்கள்.  

அனிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதி யாக பரிந்துரைத்த அதிபர் கனிக்கு, வாக்கெடுப்பு முடிவுகள் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அனி‌ஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு முன்பே மதச்சான்றோர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களும் அதற்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த பின்னரே, தனது அறிவிப்பை வெளியிட்டதாக கனி கூறியிருந்தார்.
 
அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பெண்கள் அமர வேண்டும். ஒரு பெண்ணின் உணர்வுகளை இன்னொரு பெண்ணால்தான் சரியாக உணரவும் புரிந்துகொள்ளவும் முடியும். பெண்ணைக் கையாள்வதிலும் குடும்ப விவகார வழக்கிலும் முடிவெடுக்க பெண்ணே நீதிமன்றத்தில் உயர் பதவி வகிக்க வேண்டும் என்று அனிஷாவுக்கு ஆதரவாக வாக்களித்தோர் கூறுகின்றனர். ‘பெண்கள் உச்சநீதிமன்ற நீதிபதி யாக வரக்கூடாது’ என்று மதத்திலோ சட்டத்திலோ  பாகுபாடு இல்லை. பாலஸ்தீனம் ஷரியா  நீதிமன்றம் அதனுடைய முதல் பெண் நீதிபதியை 2009ல் நியமித்திருக்கிறது. அதே போல பாகிஸ்தானில் முதல் பெண் நீதிபதி தேசிய ஷரியா  நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறார் அனிஷா.

"ஒரு பெண்  பதவியில் இருப்பதையே சகித்துக் கொள்ளாமல், பதவியை துறக்க ஆணையிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தி வெளியேற்றிய தாலிபான், நூற்றுக்கணக்கான   பெண்களுக்கு பாடம் கற்பிப்பதை கண்டுபிடித்து விட்டால் அனிஷாவின் நிலை?  உயிர் துறக்க வேண்டியதுதான்!"

"‘இறுதிவரை நீதித்துறையில் இருந்து நீதிக்குப் பாடுபடுவேன்’ என்ற  வைராக்கியத்துடன், தங்க முட்டையிடும் வாய்ப்புகளை திருப்பி அனுப்பினார்  நீதி மீது மிகுந்த பற்றுதல் கொண்ட அனிஷா."

(தேவதைகளைச் சந்திப்போம்!)