இணையம் இணைத்த இதயங்கள்



வெள்ளக் களத்தில் வெளிநாட்டுத் தோழிகள்

சுமிதா ரமேஷ்

திருச்சியை சேர்ந்த சுமிதா திருமணத்துக்குப் பின் துபாயில் செட்டில் ஆனவர். முன்னாள் கணித ஆசிரியை... இந்நாள் இணைய வானொலி ஆர்.ஜே. புகைப்படக்கலையிலும் ஆர்வம் கொண்டவர். பொழுதுபோக்காகப் பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் இணைய தளத்தை ஆபத்துக்கு உதவும் அரிய கருவியாக மாற்றி யோசித்ததில் சுமிதாவுக்குப் பெரும் பங்கு உண்டு.

‘‘வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. நெட்டிசன் என்ற பெயரில் ஃபேஸ்புக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தோம். எங்களது குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தனர். உதவி கேட்டு வந்த தொலைபேசி எண்கள் உண்மைதானா என்பதை ஒரு குழு நேரடியாக தொடர்பு கொண்டு பேசி உறுதி  செய்தது. இன்னொரு புறம் தன்னார்வலர்களைத் தொடர்பு கொண்டு உதவி தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக அனுப்பும் பணியை செய்தோம்.

உறுதி செய்யப்பட்ட தகவல்களை பட வடிவில் மாற்றி, எந்த வழியிலும் படிக்கும் வகையில் பதிவு செய்தோம். உதவி கேட்டு வந்த தகவல்களை உறுதி செய்து அதிகம் பேருக்கு பரவச் செய்தோம். உதவும் குழுக்கள் டேட்டாக்களை ஒருங்கிணைத்து வைத்திருந்ததால், உதவி கேட்ட சில நிமிடங்களில் தன்னார்வலர்களையும் படகுகளையும் அனுப்பி மீட்க முடிந்தது. முதலில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 250 குழந்தைகளை மீட்க தகவல் தந்தோம். மீட்கப்பட்ட மகிழ்ச்சித் தகவல் படத்தோடு வந்தது. பள்ளிக்கரணை கோசாலையில் 40க்கும் அதிக பசுக்கள் மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருந்தன. உரிய நபர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். அரசுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களை உறுதி செய்து கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தந்தோம்.



ராமாபுரம் பகுதியில் தாய் இறந்துவிட்டதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். வயதானவர்களுக்கு மருத்துவ உதவி, மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டும் பதிவுகள் வந்தன. ஏற்பாடு செய்தோம். போரூர் பகுதியில் ஒரு ஹாஸ்டலில் வட இந்தியப் பெண்கள் மாட்டிக் ெகாண்டு உதவி கேட்டனர். கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்தோம். ராணுவம் அவர்களை மீட்டது. சென்னையை சேர்ந்த சாருலதா ரங்கராஜன் தனியாக படகு எடுத்துச் சென்று பலரையும் மீட்டார். ஓ.எம்.ஆர். பகுதியில் ஒரு கருத்தரங்கில் கலந்து ெகாள்ள வந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஐ.டி.ஐ. முதல்வர்களை மீட்கச் செய்தோம்.

துபாயில் இருந்து நானும், அமெரிக்காவில் கார்த்திக் ரங்கராஜன், வெங்கட்ராகவன் ஆகியோரும் விரைந்து செயல்பட்டோம். உதவிப் பொருட்கள் உள்ள இடங்களையும் தேவைக்கான இடங்களையும் மிகச்சரியாக இணைக்க இணையமும் சில இதயங்களும் உதவின. மனிதம் இன்னும் இருக்கிறது என்பதன் அடையாளம்தான் இது! தமிழ்நாட்டை விட்டு வந்த பின்னர் நான் நண்பர்களுடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முகம் தெரியாத தம்பிகள் இப்போது என்னை ‘அக்கா’ என அழைத்துப் பேசுகிறார்கள். இப்படி இணையம் இவ்வளவு இதயங்களையும் கரங்களையும் இணைத்து சாத்தியப்படுத்தியுள்ளது. ஒரு வேளை நான் சென்னையில் இருந்திருந்தால் கூட, இவ்வளவு பேரை இணைத்திருக்க முடியாது...’’ என்று திருப்தியுடன் கூறுகிறார் சுமிதா. இந்த நாட்களில் இவருக்கு காபி, உணவு வழங்குவது முதல் குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் கணவரே கவனித்துக் கொண்டாராம். அவருக்கும் தோழியின் நன்றி!

‘வெள்ளக் களத்தில்...’
நேர்காணல்கள்: ஸ்ரீதேவி
விரிவாகப் படிக்க:  kungumamthozhi.wordpress.com