ஒரு பெண் நம்புகிறாள்



உடல் மனம் மொழி

சக்தி ஜோதி

நாம் அருகருகே இருக்கையில் நம்மிடைச் சிக்கிக் கொள்ளும் காற்று விடுபட இயலாமல் தவிக்கிறது. உள்ளும் புறமும் நாம் கலந்த வேளை பால் சுரக்கும் உணர்வுகள் கனவின் வழி கடந்து செல்கிறது அதன் பெருவெளியில்...

என்னுடைய இந்தக் கவிதை நினைவுக்கு வர, இதன் தொடர்ச்சியாக, ‘காதலர்களுக்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்’ எனப் பொருள் தருகிற, ‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு’ எனும் திருக்குறளை பின்தொடரத் தோன்றியது. காதல் மிகுந்து மனது ஒன்றுபட்டு வாழ்கிற இருவருக்கும் இன்பம் என்பது பொதுவானது. அப்படி இருவரின் உணர்ச்சிகளும் இணைந்திருப்பதுதான் இயல்பான நிலையாக இருக்க முடியும்.

ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதலில் மட்டுமே இது நிகழும். தழுவிக்கொள்ளும் பொழுதும் மனம் ஒன்றிய கூடலிலும் ஒருவரை ஒருவர் நிறைவு செய்வதாகவே அவர்களின் அத்தனை சிறு அசைவும் அமைந்திருக்கும். மனதின் ஆழத்தில் எப்போதும் படிந்திருக்கும் அடிப்படையான நினைவான நான் ஆண் அல்லது நான் பெண் என்கிற எண்ணம் நீங்கும். நீ மேல் அல்லது கீழ் என்கிற மனத்தைக் கடந்து பால் வேறுபாடு எதுவும் அற்ற ஒரு நிலைக்கு நகர்கிற மனத்தை காற்றும் இடையில் புக இயலாத ஒரு தழுவல் செய்துவிடும்.

பசலை படர்கிற தலைவி பற்றி பேசுகிற ஒரு திருக்குறளில் தலைவி ஒருத்தி தலைவனைத் தழுவிக் கிடக்கிறாள். சற்று நகர்ந்து படுக்கிறாள். சட்டென வந்து தழுவிக்கொண்டது பசலை என மிகுந்த காதல் கொண்ட தலைவியை அறிந்திருக்கிறோம். இப்படி ஒருத்திக்கு சிறிய நகர்வே கூட பசலை தரும்படியாக அமைந்திருந்தது அந்தக் காதல். உறவுகளுக்குள் பிரிவு என்பது தவிர்க்க இயலாதது. இணைந்து வாழ்பவர்கள் பல்வேறு  காரணங்களினால் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உறவும் அன்பும் இருக்கிற காரணத்தினால் நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளவும் பொறுப்புகளை ஏற்கவும் வேண்டிய இடத்திற்கு நகர்கிறோம். ஒருவரை ஒருவர் பாதுகாக்கவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவும் வேண்டியது ஆகிறது. அதனாலேயே பிரிவும் சந்திப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

பிரிவு காலத்தில் ஒரு பெண் அனேகமாக வீட்டிலேயே இருக்கிறாள். ஆண் வேறு இடங்களுக்கு நகர்ந்து செல்கிறான். இருவரும் ஒன்றாக இருந்த பொழுது தொட்டுப் பார்த்தப் பொருட்களும் இணைந்திருந்த இடங்களும் பெண்ணுடன் அப்படியே இருக்கும். ஆண், புதிய இடம்... புதிய மனிதர்கள் என சந்திக்கவும் புதிய செயலில் கவனம் கொள்ளவும் வேண்டியவன் ஆகிறான். இருவரின் நிலையும் இவ்வாறு இருக்க ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும் காதலின் இழையினால் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருப்பார்கள். தலைவனோடு இருந்த காலத்தின் நினைவில் தவித்திருக்கும் பெண்கள் பெரும்பாலும் மனுஷி பாரதி கவிதை போல இருக்கிறார்கள்.

‘உன் கண்களுக்குள் இருக்கிறது
எனக்கான ஒளி
உன் குரலில் இருக்கிறது
எனக்கான மொழி
உன் அண்மையில் இருக்கிறது
எனக்கான வாழ்க்கை...’

அவன் அருகில் இருக்கும் பொழுது மட்டுமே அவள் உயிர்ப்புடன் வாழ்கிறதாக நினைக்கிறாள். அவன் சற்று விலகிச் சென்றாலும், அவள் ஒளியிழந்து விட்டதாக நினைக்கிறாள். இன்றைக்கும் கூட பெண்கள் பலரும் கணவர் வெளியூர் சென்றுவிட்டால் தனக்கென  புதியதாக சமைக்கிற பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குளிப்பதும் நல்ல உடை மாற்றிக்கொள்வதிலும்  விருப்பம் அற்றவர்களாக இருக்கிறார்கள். அந்த வீட்டின் சமையல் என்பது ஆண்களுக்கானது என அவள் நினைப்பது போலவே, அவள் தன்னை அழகு செய்து கொள்வதும் கூட அவனுக்காகத்தான் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்களைப் பார்க்க முடிகிறது.



வாலி எழுதிய ஒரு திரைப்படப் பாடலில் ‘அலையோடு பிறவாத கடல் இல்லையே/ நிழலோடு நடக்காத உடல் இல்லையே/ துடிக்காத இமையோடு விழியில்லையே /துணையோடு சேராத இனமில்லையே / என் மேனி உனதன்றி எனதில்லையே’ என எழுதியிருப்பார். காலம் காலமாக பெண்ணின் உடல் என்பது ஆணுக்கானது என்று சொல்லிச் சொல்லியே பெண் வளர்க்கப்படுகிறாள். என்றாலும் முதன்முதலாக காதல் மிகுந்து தன்னுடைய உடலை புதியதாக அறிந்துகொள்கிற எந்தப் பெண்ணும் தன்னை நேசிக்கிற ஆணுக்கு தன்னுடைய உடலை முழுமையும் கொடுத்துவிடத்தான் நினைக்கிறாள். அவள் தன்னுடைய உடலின் மூலமாக அறிந்துகொள்கிற இன்பத்திற்கு அவனே காரணம் என்பதால் அவளுடைய உடலை அவனுக்கானது என நம்புகிறாள். பத்மஜா நாராயணன் கவிதையில்...

‘எதையும் எடுத்துக்கொள் என
கை தூக்கி சரணடைந்துவிட்டாய்
ஆனால், உன் புன்னகையைத் தவிர  
வேறு ஏதும் வேண்டுமாயிருக்கவில்லை.
உனக்குத் தெரியாமல் ஒரு சிறுசுளை
    புன்னகையை
என் கைக்குட்டையில் திருடிக்கொண்டு
    வந்து விட்டேன்.
சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் என மேனியில்
இளைப்பாறவிட்டது ஏனோ தவறாகிவிட்டது
என் உதடடைந்து ஒரு முத்தம் பறித்து
என்னை கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கி
உடலெங்கும் புன்னகை மலரத் தொடங்கிவிட்டது.
போதும்.
உன்னுடையதை நீயே வைத்துக் கொள்
இல்லை உடல் மலர்ந்தவைகளையாவது  
உடனே கொய்து விடு  
சாந்தியடையட்டும் நான்...’

காதலனின் தொடுதலுக்குப் பிறகு அந்தப் பெண் தன்னுடைய உடலைப் பற்றி நினைக்கிறவளாக ஆகிறாள். அவளுடைய உடலின் தவிப்பு அவனுடைய தொடுதலில்தான் அமைதியாகும் என நம்புகிறாள். மிக அந்தரங்கமான தருணத்தில் ஆணும் தன்னை ஒப்புக்கொடுக்கிறவனாகவே இருக்கிறான். பெண்ணின் உடலும் அவளுடைய மொழியும் ஆணுக்கு எனச் சொல்லி வளர்க்கப்படுகிற பெண் ஒருத்தி, அந்த ஆணை தன்னைவிட உயர்ந்தவனாக நினைக்கிறாள். அப்படி உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிற ஆண் தன்னிடம் கீழிறங்கி பணிந்தவுடன் பெருமிதம் அடைகிறாள்.

அவளுக்கு உபாசகனாகி நிற்கும் கணங்களில் அந்தப் பெண் முழுமையும் தன்னை இழந்துவிடுகிறாள். அதன்பின்பு அவனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராகிறாள். அப்படியான ஒரு ஆண் அவளைப் பிரிந்து செல்ல நேரும் பொழுது அவளைத் தொட்டுச் சென்ற இடங்களும் கொடுத்துச் சென்ற முத்தங்களும் பலமடங்கு பெருகி அலைவுருகிற மனத்துடன் பெண் தவித்துக் கொண்டிருக்கிறாள். இந்தச் சூழலில் இருக்கும் பெண்  பெரும்பாலும்  அந்த ஆணைக் குற்றம் சொல்லத் தொடங்கிவிடுகிறாள். தான் மட்டுமே அவனை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அவனோ அவளை மறந்து  வேறு காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் வருத்தப்படுகிறாள்.

இருவரும் இணைந்திருக்கும் பொழுது பெண்ணைப் பணிந்திருப்பதும் அவளைக் கொண்டாடி மகிழ்வதும்  ஆணின் செயல்களாக இருக்கின்றன. அவனுடைய பணிவில் நெகிழ்கிறாள்.  அவனுடைய மகிழ்வில் அவளும் மகிழ்ந்து பெருமிதமடைகிறாள். தன்னால் தான் அவனை அத்தனை மகிழ்வுடன் வைத்திருக்க இயலும் என நம்புகிறாள்.  அவர்கள் பிரிந்திருக்கும் காலங்களில் இடம் மற்றும் சூழல் மாற்றம் காரணமாக அவனுடைய கவனம் வேறுபக்கம் திசை திரும்பியிருக்கும். பெண்ணோ அதே நிலையில் தொடர்ந்து இருக்கிறாள். அவளுக்கு அவளின் முந்தைய நிலையிலிருந்து தன்னைக்  கலைத்துக் கொள்ள இயலவில்லை. இதனால் அவள் அவனைக் குறித்து வருந்துவதும் தன்னிலை கலைவதுமாகத் தவிக்கிறாள். சங்கப் பாடலில் ஒரு காட்சி, தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். அப்போது தலைவியின் நிலை பற்றிய குறமகள் குறியெயினியின் பாடல்,

‘நின் குறிப்பு எவனோ தோழி, என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும் என்றும்
நெஞ்சுவடுப் படுத்துக் கெடஅறி யாதே
சேண்உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்
பெயல்உழந்து உலறிய மணிப்பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலுஞ் சோலை
அம்கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே...

இந்தப் பாடலில், தலைவன் இன்னும் வரவில்லை. அவன் அவளோடு அருவியில் ஆடியிருக்கிறான். இது குறித்துத் தலைவி வருத்தமே இல்லாமல் இருக்கிறாள். தலைவன் வராமல் காலம் தாழ்த்தினால் தலைவி வருத்தப்பட வேண்டும் அல்லவா? அவள் அமைதியாக இருக்க இதைப் பார்க்கிற தோழி வருந்துகிறாள். தலைவி தோழியைப் பார்த்துக் கேட்கிறாள்... ‘தோழி, நான் தலைவனைப் பிரிந்திருக்கும் என்னுடைய இந்த நிலையில் நான் சொல்கிற குறிப்பு எனக்குப் பொருந்தாது.  எனினும், இந்தப் பிரிவினால் என்னுடைய நெஞ்சம் புண்பட்டுக் கெட்டுப்போகவில்லை. மலைகள் வானுயரம் வளர்ந்து நின்றன.

அங்கே  அழகிய புள்ளிகளோடு பீலியையுடைய மயில் மழையில் நனைந்து நிற்கும். அந்த மயில் உலாவி வரும் சோலையில் அழகிய கற்பாறை இருந்தது. அங்கு  அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையும் இருந்தது. அந்தச் சுனையில் மலர்ந்திருக்கும்  குவளை மலர்களைப் பறித்து நீராடினேன். அப்பொழுது அந்த நீர் அலையசைக்க அணிந்திருக்கும் மாலை கலைய சாரல் நாடனும் என்னோடு சேர்ந்து நீராடினான். அவ்வாறு அவனோடு சேர்ந்து அருவியிலாடிய நாளினை நினைத்து நான்  துன்பப்படுவதாயில்லை. இதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?’

இன்னும் தலைவன் வரவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் மிக முக்கியமானது பொருள் தேடித் பிரிவது.  அந்தக் காலத்தில் பெண்ணைத்  திருமணம் செய்து கொள்வதற்காக ஆண் பொருள் கொடுக்க வேண்டும். அதனால் திருமணம் செய்வதற்கான பொருள் தேட தலைவன் பிரிந்து செல்வான்.  களவு எனப்படுகிற காதலில் ஏற்படுகிற பிரிவில் குறிப்பிட்ட காலத்தில் தலைவன் திரும்ப வந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சூழலில் பெரும்பாலும் அவனை நினைத்து பசலை படர்ந்திருக்கும் பெண்களையே சங்கப் பாடல் முழுக்கக் காண்கிறோம். மாறாக இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகிற தலைவி வருத்தம் அடையாமல் இருக்கிறாள்.

தலைவன் திரும்பி வர இயலாத சூழலில் தன்னுடைய நிலை குறித்து நெஞ்சம் காயம் பட்டுக்கொள்ளும் அளவு வருந்துவது அறிவுக்குப் பொருத்தம் இல்லை என்கிற தெளிவு இந்தப் பெண்ணிற்கு இருக்கிறது. தன்னுடைய மனம் கவலை கொள்ளாமல் இருப்பது பற்றி தோழி என்ன நினைக்கிறாளோ என்று தெரிந்துகொள்ள தலைவி நினைக்கிறாள். அதனால், தலைவி தான் அவனோடு சுனை நீராடியது குறித்து வருத்தம் இல்லை என அந்தரங்கமான ஒரு இடத்திலிருந்து தோழியிடம் கேட்கிறாள். ‘கேட்கிறாள்’ என்று சொல்வதை விடவும் தன்னுடைய நிலையைக் குறித்து அவளிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

இந்தப் பாடலை நாம் இருவிதமாகப் பார்க்கலாம். யார் மீதாவது நமக்கு வருத்தம் இருந்தால் நாம் முதலில் சொல்லும் வார்த்தையே ‘எனக்கு ஒன்றும் யார் மீதும் வருத்தம்  இல்லையே’ என்பதுதான். மனதிற்குள் எந்தவிதமான உணர்ச்சி மேலோங்கி இருக்கிறதோ, அதுதான் முதலில் சொல்லாக வெளிப்படும். இவ்விதமாக இந்தப் பாடலைப் பார்த்தால் தன்னுடைய தாங்க இயலாத துயரத்தைதான் தலைவி இவ்விதமாக சொல்கிறாள் எனப் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பாடலை இன்னொருவிதமாகப் பார்க்கவும்  இடம் இருக்கிறது. மழையில் நனைந்த மயில் என ஒரு குறிப்புக் காட்சி வருகிறது. நனைந்த மயில் என்பது தலைவனும் தலைவியும் கூடியிருந்த இன்பத்தின் படிமமாகக் கொள்ளலாம். மழை பெய்தலால் நனைந்த மயில் சோலை முழுக்க உலாவி வரும் என்று சொல்வது முன்பு அவன் கூடியிருந்த இன்பம் இப்போதுவரையில் மனத்தில் பதிந்து இருப்பதால் சோர்வும் வருத்தமும் அடையாமல் இருப்பதாக தலைவி நினைக்கிறாள். தலைவன் அணிந்திருந்த மாலை நீராடலில் கலைந்து கிடந்ததாகவும் பாடல் சொல்கிறது. எனில், அவர்களின் காதல் அனுபவிப்பைக் குறிப்பில் உணரலாம். நீலமலர் விரிந்து வாசம் பரப்புகிற குளிர்ந்த சுனையில் நீராடிக் களித்த இன்பம் என்பது அந்தத் தலைவி மட்டும் அனுபவிக்கவில்லை.

தலைவன் அணிந்திருந்த மாலை கலைய, அவனும்தான் இணைந்து அனுபவித்தான். இங்கே அவர்களின் அனுபவம் என்பது இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. ‘அந்த இன்பம் பொதுவானதாக இருந்தது எனில், இந்தப் பிரிவும் இருவருக்கும் பொதுவானதுதானே? அவனைப் பிரிந்து இருக்கும் அவள் அவனுடைய நினைவில் வாடியிருப்பது போல அவனும்தானே அவளைப் பிரிந்திருக்கிறான்? அவனுக்கும்தானே நீராடலின் நினைவு வரும்? மழை நனைந்த மயிலின் நினைவை அவனும் மனதில் வைத்திருப்பான்தானே? அப்படியெனில் காலம் தாழ்த்தாது வந்துவிடவே அவனும் விரும்புவான். எனவே, இந்தப் பிரிவு குறித்து பெண்ணாகிய நான் மட்டும் வருந்தத் தேவையில்லை’ எனத் தலைவி நினைக்கிறாள்.

ஒரு பெண் நம்புகிறாள்... தன்னுடைய உடல் ஆணுக்கு இன்பம் தந்திருக்கிறது. அவன் தன்னைச் சுகித்துக் கிடக்க முழுமையாக  அனுமதித்திருக்கிறாள். பிரிவு காலத்தில் தன்னுடைய மனம் அவனை நினைத்து தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவனும் அறிவான். போலவே தன்னைப் பிரிந்திருக்கும் ஆணும் தன்னையேதான் காண்பனவற்றில் தேடுவான். அவன் சென்ற திசையில் காணும் மனிதருடன் அல்லது இயற்கையின் சிறு அசைவில் தன்னுடைய பெண்ணைத்தான் அவன் உணர்ந்திருப்பான். இருவரும் சேர்ந்திருந்த காலத்தின் இன்பம் என்பது இருவருக்கும் பொதுவாக இருக்கையில், பிரிவின் பொருட்டு ஏற்படுகிற துன்பம் என்பது மட்டும் எப்படி ஒருவருக்கு மட்டுமான தனியான உணர்ச்சியாக இருக்க முடியும்? அவனும் தன்னை நினைத்தபடிதான் இருப்பான் என்கிற இவளின் இந்த நம்பிக்கையில்தான் ஆணின் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பிறரை நம்புவது என்பதே தன்னை நம்புவதுதான். அவள் தன்னை நம்புகிறாள்.  

குறமகள் குறியெயினி

சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாலை நிலத்துப் பெண்ணை எயினி என்பர். குறி சொல்லும் பெண்ணாக இருந்தமையால் இவரைக் குறியெயினி என்றனர். குறிஞ்சி நிலத்துப் பெண் குறத்தி. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும் என்பதால் குறிஞ்சி நிலக்குறமகள் எயினியாகவும் திணைநிலத் திரிவினால்  பேசப்படுகிறாள். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
நற்றிணை: 357

(சங்கத் தமிழ் அறிவோம்!)