க்யூட் குட்டீஸ் கிறிஸ்துமஸ் கவுன்கள்



ஃபேஷன்


“கிறிஸ்துமஸ் வருவதற்கு முன்பே பரிசுப் பொருட்கள் சேகரிப்பதிலும், கேக் தயாரிப்பு, கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வதிலும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடுவோம் இல்லையா? பெரியவர்களுக்கே விதவிதமான உடை அணிவதில் ஆர்வம் இருக்கும்போது, குழந்தைகளுக்கான உடைகளை மாடர்னாக வாங்கி அணிவித்து அழகு பார்க்கும்போது நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அளவில் அடங்காது’’ எனக் குதூகலத்தோடு, குட்டித் தேவதைகளுக்காக தான் வடிவமைத்துள்ள கிறிஸ்துமஸ் கவுன்களை அறிமுகம் செய்கிறார் ‘ஜீஸ்டைல்’ டிசைனர் ஷீபா.

“கலர் கலர் தீம்களில், சிறுசிறு மணிகள் வைத்து தைத்த விதவிதமான தேவதை ஃப்ராக்ஸ், மேக்ஸிகள் போன்றவை இந்த கிறிஸ்துமஸுக்கான ஸ்பெஷல். வானவில் டுட்டூ கவுன்களும், ஃப்ரோசன் பிரின்ஸஸ் மேக்ஸிகளும் இவ்வாண்டின் புதுவரவுகள். ஃபேஷன் விஷயத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று குட்டிப்பெண்களின் அம்மாக்களும் எங்களுக்குப் புதுப்புது ஐடியாக்களை தருகின்றனர். அம்மாக்களின் வித்தியாசமான ஐடியாக்களால் கவரப்பட்டு, இப்போது பெரிய உடை வடிவமைப்பாளர்கள் கூட வாடிக்கையாளர்களாகிவிட்டார்கள்!’’ என்கிற ஷீபா, கிறிஸ்துமஸுக்கு மல்ட்டி லேயர்கள் கொண்ட ஷார்ட் ட்ரஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.



“மேக்ஸி போல நீளமான பல அடுக்குகளாக தைக்கப்பட்ட கவுன்கள் இப்போதும் ஃபேஷனாகவே உள்ளது. முழங்கால் வரை உள்ள குட்டை கவுன்களை மேட்சான ஹெட்பேன்ட் மற்றும் அணிகலன்களோடு அணியும்போது அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு, திருமண சீஸனாகவும் இருக்கிறது. மணப்பெண்கள் திருமணத்தன்று அணியும் உடை மட்டுமல்ல... அதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டோ ஷுட்டுகளுக்கும் கண்கவரும் வண்ணங்களில் ஃப்ளோரல் பிரின்ட் செய்யப்பட்ட கவுன்களை அணிவதையே இப்போது விரும்புகின்றனர்.

உடைகளை வடிவமைக்கும்போது அதற்கான துணிகளை தேர்வு செய்வது எங்களுக்கு பெரிய சவாலாகவே இருக்கிறது. சென்னையில் குளிர்காலத்தில் அதிக குளிர் இருப்பதில்லை என்பதால், குளிருக்கேற்ற துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த பருவநிலையே இன்னொரு விதத்தில் சாதகமாக இருக்கிறது. இதனால் எல்லாவிதமான ஃபேப்ரிக் வகைகளையும் தேர்ந்தெடுத்து, புதுப்புது டிசைன்களில் திருமண உடைகளை உருவாக்க முடிகிறது. உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற நிறத்தில் டிசைனையும் துணியையும் தேர்ந்தெடுக்கும் போது தோற்றம் மேலும் மெருகேறும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் நீங்கள்தான் அனைவரையும் அசத்துவீர்கள். மிடுக்கான தோற்றமே உங்களின் ஒவ்வொரு ஸ்பெஷல் தினத்தையும் மேலும் சிறப்பாக்கும்’’ என்கிறார் ஷீபா. மெர்ரி கிறிஸ்துமஸ்! ஹேப்பி நியூ இயர்!

"மேக்ஸி போல நீளமான பல அடுக்குகளாக தைக்கப்பட்ட கவுன்கள் இப்போதும் ஃபேஷனாகவே உள்ளது. முழங்கால் வரை உள்ள குட்டை கவுன்களை மேட்சான ஹெட்பேன்ட் மற்றும் அணிகலன்களோடு அணியும்போது அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்."