வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்



வெள்ளக் களத்தில் நம் தோழிகள்

ஸ்மிதா ஜோஷி

‘‘பெரம்பூர் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அதிகம் காணப்பட்டது. அங்கிருந்த குடிசைப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அடிப்படை தேவைகளை கேட்டு உதவிகளைப் பெற்றுத் தந்ேதாம். அப்பகுதியில் 4 நாட்கள் வரை போக்கு வரத்து இன்றி ஸ்தம்பித்தது. இக்கட்டான சூழலில் எந்த வாகன வசதியும் இன்றி நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொடுத்தோம். இப்போது தி.நகரிலும் மற்ற பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் செய்து வருகிறோம்’’ என்கிறார் கல்லூரி மாணவியும் புகைப்படக் கலைஞருமான ஸ்மிதா.



சுபஸ்ரீ ேமாகன்

‘‘வீட்டில் கணவர் மற்றும் மகள் பிரீத்தியின் உதவியுடன் சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினேன். முதல் நாள் 25 பேருக்கு உணவளித்தேன். இந்த எண்ணிக்கை இப்போது 100 ஆக உயர்ந்துள்ளது. தினமும் செல்வதால் எனது உறவுகள் போலவே அவர்கள் பழகுகின்றனர். என் கையால் சமைத்துக் கொடுக்கிறேன் என்ற திருப்தியே எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. அந்த மக்களின் வலியுடன் ஒப்பிடும் போது, எனது பங்களிப்பு கடலில் கலக்கும் சிறு துளியே’’ என்கிறார் எழுத்தாளர் சுபஸ்ரீ.

ஸ்ரீப்ரியா

‘‘அம்பேத்கர் நகர் பகுதியில் சேற்றில் குழந்தைகள் தத்தளித்த காட்சி இன்னும் கண்களிலேயே நிற்கிறது. காலளவு சேற்றில் குழந்தைகள் உணவுக்காக ஓடின. விழுந்து அழுதன. இந்தக் காட்சி இதயத்தை உடைத்து அழ வைத்தது. சேற்றில் சிக்கிக் கொண்ட ஒரு டெடிபியர் பொம்மை தனதா என ஒரு குழந்தை ஏக்கத்தோடு பார்த்தது. இப்படி வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளே மிச்சம். மிகவும் மோசமான நிலையில் உதவி தேவைப்படும் மக்களை நண்பர்களுடன் இணைந்து கண்டறிந்தோம். மீட்புக் குழுவினருக்கும் வழிகாட்டி நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்தோம். இதற்காக குழந்தைகள் கூட தங்கள் சேமிப்புகளை அளித்தனர்’’ என்கிறார் புகைப்படக் கலைஞர் ஸ்ரீப்ரியா அய்யங்கார்.

புகைப்படக் கலைஞர்கள் மலர்விழி ரமேஷ், ஸ்ரீப்ரியா அய்யங்கார், ஸ்மிதா ஜோஷி ஆகியோரின் வெள்ள ஆல்பம் காணவும், விரிவான பேட்டிகளைப் படிக்கவும்: kungumamthozhi.wordpress.com | facebook.com/KungumamThozhi