கல்விச் சான்றிதழ் கவலை வேண்டாம்!



வெள்ளக் களத்தில் உதவும் உள்ளங்கள்

மாஃபி

சென்னையை மூழ்கடித்த வெள்ளம் பல தனி மனிதர்களுக்குள் இருந்த மனித நேயத்தை அடையாளம் காட்டியுள்ளது. அமைப்புகளாக இணைந்து உதவிக்கரம் நீட்டுபவர்களோடு, தனி மனிதர்களாக களம் இறங்கி கண்ணீரையும் கவலைகளையும் துடைக்கும் பணியில் இறங்கிய உள்ளங்கள் ஆயிரம் ஆயிரம். சென்ைன இரண்டாவது மெட்ரோபாலிட்டன் நீதிபதி டாக்டர் ஐ.ஜெயந்தி, அவரது மகள் வழக்கறிஞர் மாஃபி இருவரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து மக்களுக்கு பல வகையிலும் உதவி வருகின்றனர். கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் தொலைத்தவர்கள் அதை முறையாகப் பெறுவதற்கான வழிகாட்டுதலையும் வழங்கி வருகின்றனர்.

‘‘பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே உணவு மற்றும் உடை போன்ற அவசியப் பொருட்களை சேகரித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறோம். 3 நாட்களுக்கும் மேல் உதவியின்றி தவித்து வந்த அம்பத்தூர் மற்றும் ஆவடி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் சேகரித்து கொடுத்து உதவினோம்.



இந்த வெள்ளத்தில் எதை இழந்திருந்தாலும், கல்விச் சான்றிதழ்கள் இருந்தால்தான் அடுத்தகட்ட வாழ்க்கையைத் தொடங்க முடியும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நம்பித்தானே எதிர்காலமே உள்ளது? கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் நிறைய உணர்ந்துள்ளோம். என் அம்மா நீதிபதி ஜெயந்தி 12 பட்டங்கள் முடித்துள்ளார். கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இப்போது கல்விச் சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்து வழிகாட்டுகிறோம். விண்ணப்பித்து குறிப்பிட்ட நாட்களுக்குள் சான்றிதழ்கள் கிடைக்காதவர்களுக்கு, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்யவும் உதவுகிறோம். பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை அணுகி கல்விச் சான்றிதழ்கள் பெற முயற்சி எடுக்கிறோம். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த உதவியைப் பயன்படுத்தி நம்பிக்கையுடன் தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க வேண்டும்’’ என்கிறார்  மாஃபி. சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள பி1/1 என்ற  இவர்களது வீட்டில் நேரில் அணுகியும் கல்விச் சான்றிதழ்கள் பெற முயற்சிக்கலாம். நீதிபதி டாக்டர் ஜெயந்தியை வார நாட்களில் காலை 6 மணி முதல்  10 மணி வரையும் வார விடுமுறை நாட்களில் 24 மணி நேரமும்  98403 88188 என்ற  எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.