இசைன்னா என் கொள்ளுப் பாட்டி!



இசை எனும் இன்ப வெள்ளம்

ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன்

ஆசீர்வதிக்கப்பட்டவர் ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன்! இளம் கர்நாடக இசைக் கலைஞர்கள் வரிசையில் முன்னேறிக் கொண்டிருப்பவர். பெங்களூருவில் வசிக்கிற ஐஸ்வர்யா, பி.ஏ. இலக்கியம் இறுதி ஆண்டு படிக்கிற மாணவி. சீனியர் இசைக் கலைஞர்களுக்கு இணையாக, இந்த வருட சென்னை மியூசிக் சீசனில் பத்துக்கும் மேலான கச்சேரிகளில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஐஸ்வர்யாவை ஆசீர்வதிக்கப்பட்டவர் எனச் சொன்னதற்கு இவை மட்டுமே காரணங்கள் அல்ல. அவற்றைத் தாண்டிய சிறப்புப் பெருமை உண்டு அவருக்கு! யெஸ்... இசையுலக மகாராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப் பேத்தி இவர்! எம்.எஸ்.அம்மாவின் மகள் ராதா விஸ்வநாதனின் பேத்தி. ராதாவின் மகன்
ஸ்ரீனிவாசனின் மகள்!

கொள்ளுப் பாட்டியைப் பற்றிப் பேசச் சொன்னால், இசையாக மலர்கிறார் பேத்தி. பாட்டியைப் பற்றிய அவரது நினைவுப் பகிர்தலில் அத்தனை பாசம்... அத்தனை பெருமை!

``இசையால சூழப்பட்ட உலகத்துலதான் பிறந்தேன். வளர்ந்தேன். வாழ்ந்திட்டிருக்கேன். என்ைனயும் அறியாம, எனக்குள்ள இசை ஊடுருவியிருக்கு. பெரிய பெரிய இசைக்கலைஞர்கள் எல்லாம் எங்க வீட்டுக்கு வந்து எம்.எஸ். கொள்ளுப்பாட்டி  முன்னாடி பாடிக் காட்டுவாங்க. வீட்ல இசை ஒலிக்காத நாளே இருந்ததில்லை. கொள்ளுப் பாட்டியும் பாட்டியும் எப்போதும் யாருக்காவது சங்கீதம் கத்துக் கொடுத்துட்டிருப்பாங்க. இதெல்லாம் எனக்கு காதுல விழுந்து, மனசுக்குள்ள போயிருக்கணும். எனக்கு 4 வயசிருக்கும் போது, ஒரு விஜயதசமி அன்னிக்கு கொள்ளுப் பாட்டியும் பாட்டியும் என்னை இழுத்து உட்கார வச்சு, முறைப்படி சங்கீதம் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அதைப் பத்தின சீரியஸ்னஸ் எனக்கு இல்லை. விளையாட்டுக் குழந்தையா சுத்திக்கிட்டிருந்த என்னை அப்பப்ப பிடிச்சுட்டு வந்து பாட்டு கிளாஸ்ல உட்கார வைப்பாங்க. அப்பவே பாட்டுங்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
 


ரெண்டு பாட்டிகளுக்கும் நான் அநியாய செல்லம்.  அதனால என்னை சரண்யா கிருஷ்ணன், சுகுணா புருஷோத்தமன்னு ரெண்டு பேர்கிட்டயும் கத்துக்க வச்சாங்க.  வெளியில கத்துக்கிறது மூலமா என்னோட உலகம் இன்னும் விரியும், கண்டிப்போட கத்துக் கொடுப்பாங்கனு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்படிக் கத்துக்க வச்சாங்க...’’ - எம்.எஸ்சை நினைவுப்படுத்துகிற குரலில் அறிமுகம் செய்கிறார் ஐஸ்வர்யா.

``2002ல சென்னையிலேருந்து பெங்களூருக்கு மாற்றலாகி வந்தோம். அங்கே திருமதி ஜம்பு கண்ணன்கிட்ட பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன். இப்பவும் கத்துக்கறேன். பண்டிட் நாகராஜ்ராவ் ஹவல்தார்கிட்ட ஹிந்துஸ்தானியும், சங்கர் ராமன்கிட்ட வீணையும் கத்துக்கறேன்...’’ என்கிற ஐஸ்வர்யாவுக்கு கொள்ளுப் பாட்டியின் நினைவுகள் தொட்டே ஒவ்வொரு வார்த்தையும் வருகிறது. ``கொள்ளுப் பாட்டி உயிரோட இருக்கிற வரைக்கும் அவங்க எவ்ளோ பெரிய இசைமேதைனு எனக்குத் தெரியாது. அவங்களும் அப்படி நடந்துக்கிட்டதில்லை. சாதாரணமா எல்லா வீடுகள்லயும் பாட்டிக்கும் பேத்திக்குமான உறவு எப்படியிருக்குமோ அப்படித்தான் எங்களுக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகள்லயும் பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க. என்னைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க.



தவறுகளைத் திருத்துவாங்க. நான் தாளம் போடறதை ரொம்பவே ரசிப்பாங்க. `நீ பிரமாதமா தாளம் போடறே’னு அப்பவே பாராட்டியிருக்காங்க. என்மேல அளவுகடந்த அன்பு உண்டு. நான் எப்போதும் விளையாட்டுத்தனமா இருப்பேன். பாட்டி ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவங்க. அவங்க இருக்கிறபோது என்னை அவங்க பக்கத்துலயே பத்திரமா வச்சுக்கணும்னு நினைப்பாங்க. அவங்க இறந்தபோது, வீடு கொள்ளாம நிறைஞ்சு வழிஞ்ச மனுஷங்களையும், பெரிய பெரிய விஐபிக்களையும் பார்த்தப்ப பிரமிப்பா இருந்தது. இசையோட சேர்ந்து நானும் வளர வளரத்தான் கொள்ளுப் பாட்டியோட பின்னணியும் அருமை, பெருமைகளும் தெரிஞ்சது. அப்புறம் அவங்களோட ரெக்கார்டிங்ஸ் நிறைய கேட்கக் கேட்க, அவங்க மேல இருந்த பிரமிப்பும் மரியாதையும் அதிகமாச்சு.

ராதா பாட்டியும் நானும்கூட ரொம்ப க்ளோஸ்தான். பாட்டி பாட்டு கத்துக் கொடுக்கிறபோது, ஒரு பக்கம் அந்தப் பாட்டையும், இன்னொரு பக்கம் அந்தப் பாட்டோட பின்னணிக் கதையையும் கேட்டு எழுதி வச்சுக்கிறது என் வழக்கம். இப்பவும் பாட்டியோட சேர்ந்திருக்கிற ேநரங்கள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்...’’ - நெகிழ்கிற பேத்திக்கு கொள்ளுப் பாட்டிக்குப் பெருமை சேர்த்துவிட்டதில் சந்தோஷம் இருந்தாலும் அவரை இழந்துவிட்ட சோகம் உச்சத்தில் இருக்கிறது. ``கொள்ளுப் பாட்டியை தினம் தினம் மிஸ் பண்றேன். பாட்டி
உயிரோட இருக்கிற வரைக்கும் நான் மேடையில கச்சேரிகள் பண்ண ஆரம்பிக்கலை. வீட்டுக்குள்ள பாடறதைக் கேட்டுட்டு, `என் பேரை இவ நிச்சயம் காப்பாத்துவா’னு பாட்டி சொன்னது மறக்கலை. கொள்ளுப் பாட்டி கிட்ட நான் முதல் முதல்ல கத்துக்கிட்ட பாட்டு `நாதவிந்து கலாதி நமோநம’. அது அருணகிரிநாதரோட திருப்புகழ்ல உள்ளது. அந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ெசன்டிமென்ட்டலானது. எப்பல்லாம் கொள்ளுப் பாட்டி ஞாபகம் வருதோ அப்பல்லாம் பாடுவேன்.

எம்.எஸ். பாட்டி பாடினதுல என்னோட ஃபேவரைட் மீரா பஜன். `சேவா சதனம்’ல அவங்க பாடினதும் பிடிக்கும். என் ஐபாட்ல முழுக்க 300க்கும் மேலான கச்சேரிகள் இருக்கு. அத்தனையும் கொள்ளுப் பாட்டியோடது. 24 மணி நேரமும் அதைக் கேட்டுக்கிட்டேதான் என் பொழுது நகரும். இந்த வருஷம் கொள்ளுப்பாட்டியோட நூற்றாண்டு கொண்டாட்டம் நடந்திட்டிருக்கு. அதுக்காக செப்டம்பர் 16ம் தேதி, பாட்டி பிறந்த வீட்ல நானும் என் தங்கை சவுந்தர்யாவும் பாடிட்டு வந்தோம். இசை மூலமா பாட்டி என்னைக் கவனிச்சுக்கிட்டே இருக்கிறதாகவும் என் கூடவே இருக்கிறதாகவும் தான் நான் ஃபீல் பண்றேன். இசைன்னா என் அகராதியில கொள்ளுப் பாட்டி. எனக்கு எல்லாமே இசைதான்...’’ அர்த்தமான வார்த்தைகளில் அழகாக முடிக்கிறார் ஐஸ்வர்யா!