மனிதம் இருக்கும் வரை உலகம் அழியாது



சேவை அல்ல... கடமை!

‘மனிதம் இருக்கும் வரை உலகம் அழியாது’ ஹாலிவுட் படமான ‘இண்டர்ஸ்டெல்லார்’ படத்தில் வரும் வசனம் இது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை பெருமழை பேய் மழையாகி சூறையாடிச் சென்ற போது, உடைமைகளை இழந்து, உணவின்றி, உடையின்றித் தத்தளித்தார்கள் நம் மக்கள். இந்தப் பேரிடர் காலத்தில் அரசுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல் தன்னார்வலர்கள் தாங்களாகவே களத்தில் இறங்கினார்கள். அந்த வரிசையில் நூற்றுக்கணக்கான பெண்களும் உண்டு. கழுத்தளவு தண்ணீரையும் பொருட்படுத்தாமல் களம் இறங்கி அரும்பணியாற்றிய அத்தோழிகளில் சிலரைச் சந்தித்தோம்...

ஜோனா கலா

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவம் பயிலும் மாணவி. ‘மக்கள் விடுதலை தமிழ்நாடு’ என்கிற சமூக அமைப்பிலும், ‘புத்தர் கலைக்குழு’விலும் செயலாற்றி வருகிறார். கிராமப்புற மக்களிடம் மாதவிடாய், கர்ப்பப்பை வாய்  புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வாழ்க்கைத்திறன் பயிற்சிகளையும் அளித்து வருகிறார். ‘‘சமூகத்து மேல எல்லாருக்கும் ஒரு பொறுப்புணர்வு இருக்கணும்கிறதை அப்பாதான் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்காலத்துல இருந்தே என்னால முடிஞ்ச செயல்பாடுகளை செஞ்சுட்டு வர்றேன். மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்த நண்பர்களோடு வெள்ள நிவாரணப் பணிகளில் இறங்கினோம்.

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டப்பவே தி.நகர்  முத்துரங்கன் சாலை, சி.ஐ.டி. நகர், அப்பா நகர் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு போகச் சொன்னோம். தரைத்தளத்துல இருந்தவங்க வீட்டை விட்டு வெளியேறினாங்க. முதல் தளத்துல இருந்தவங்க தண்ணி வராதுன்னு நினைச்சுக்கிட்டு வெளியேறலை. ஆனா, இரண்டாவது தளம் வரைக்கும் தண்ணீர் போச்சு. நண்பர் ஆனந்த் மூலம் படகு  வரவழைச்சு வெளியேற முடியாம இருந்தவங்களை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்தோம்.



சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவு செஞ்சப்ப ‘இளம் தமிழகம்’ அமைப்பும், சில தன்னார்வலர்களும் எங்களோட இணைஞ்சாங்க. திருநெல்வேலி, கோவை, மதுரை,  பெங்களூரு, ஈரோடுன்னு பல பகுதிகள்ல இருந்தும் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தது. கோடம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் சமைச்சு மக்களுக்கு விநியோகம் பண்ணினோம். மீட்கிற பணி, சமையல், விநியோகம், எந்தெந்த பகுதிக்கு என்னென்ன தேவைங்கிறதை கணக்கிடறதுன்னு தனித்தனிக் குழுவா பிரிஞ்சு வேலை செஞ்சோம். கல்லுக்குட்டை, சூளைப்பள்ளம்,  எம்.ஜி.ஆர். நகர், பள்ளிக்கரணை, கண்ணம்மாப்பேட்டை, சி.ஐ.டி. நகர் ஆகிய இடங்களில் உள்ளே  இருக்கும் பகுதிகளுக்குக் கொடுத்தோம். தேவைக்கு மிஞ்சுன உணவை வேற பகுதிகள்ல வேலை செய்யுற அமைப்புகள்கிட்ட கொடுத்தோம். பெட்ஷீட், நாப்கின், டயப்பர், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, உடைகள், பால் பவுடர், மருந்துகள்னு அத்தியாவசியப் பொருட்களையும் கொடுத்தோம்’’ என்கிறார் ஜோனா கலா.
 
ரோகிணி

பண்பலை மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்... சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவர். மழையின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை பார்த்ததும் களத்தில் இறங்கி பணிபுரிய வேண்டும் என்கிற உந்துதல் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘‘இது மாதிரியான அவசர காலங்கள்ல ஒரு குழுவா சேர்ந்து செயல்பட்டால் வலிமையா இருக்கும். தனிநபர் ஒவ்வொருவரும் களத்துல இறங்கினால்தான், அந்த முனைப்போட இருக்கிறவங்க ஒண்ணு சேர்ந்து ஒரு குழுவா உருவாக முடியும். ஸ்டேட்டஸ் மட்டும் போட்டுக்கிட்டிருக்காம களத்துல இறங்கி மக்களுக்கு உதவலாம்னு நான் முடிவு பண்ணதுமே, கணவர் பாலாஜி ஆதரவு தெரிவிச்சார். கணவரோட அண்ணன் சந்திரசேகர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆரிஷ், ஜெகன், சுரேஷ், ராஜேஷ், கண்ணன்னு நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு குழுவா உருவானோம்.

நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய் வழங்கப் போறதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிச்சிருந்தேன். ‘கோயம்புத்தூர் ஒன்’ ஃபேஸ்புக் குழுவில் இருக்கும் ஷோபனா செல்வன், அருண் பாலகிருஷ்ணன், ராஜ் கபூர் ஆகியோர் கோயம்புத்தூர் மக்களிடமிருந்து நிவாரண உதவிகளை கேட்டு வாங்கினாங்க. 3 லாரி முழுக்க நிவாரணப் பொருட்களோட கார்த்திக் என்பவரும் எங்களோட களத்துக்கு வந்தார். தஞ்சாவூரிலிருந்து காவேரி மாணிக்கம் ஒருங்கிணைப்பில் ஒரு லாரியும், புதுச்சேரியிலிருந்து செந்தில் ஒருங்கிணைப்பில் ஒரு லாரியும் வந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு எங்க வாகனங்கள்ல பொருட்களை ஏத்திக்கிட்டு நேரடியாப் போனோம்.

துரைப்பாக்கத்தில் ஏழடிக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. நிவாரணப் பொருட்களோட படகில்தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போனோம். மக்கள் எல்லோரும் காம்பவுண்ட் சுவர் மேல் ஏறி நின்னுட்டிருந்தாங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு லிட்டர் பால், குழந்தைகள் இருக்கும் வீட்டில் பால் பவுடர், ஷெரிலாக், டயப்பர், பெண்களுக்கு சானிட்டரி நாப்கின், 4 மெழுகுவர்த்தி, ஒரு பாக்கெட் கொசுவர்த்தி, தீப்பெட்டி கொடுத்தோம். தி.நகர், தெற்கு போக் ரோட்ல நிறைய பேர் வெள்ளத்தில் மாட்டியிருந்தாங்க.

கர்னல் தியாகு-லஷ்மி தம்பதி மற்றும் மீனவர்கள் உதவியோட படகில் போய் அவங்களை மீட்டோம். கீழ்ப்பாக்கத்தில் ஆறடிக்குத் தேங்கியிருந்த தண்ணீரில் ஒரு வீட்டில் 6 பேர் மாட்டியிருந்தாங்க. மீனவர்கள் உதவியோட அவங்களையும் மீட்டு, உறவினர் வீட்டுக்கு அனுப்பி வெச்சோம். மீனவர்களை நாம் பாராட்டியே ஆகணும். இதுக்காக அவங்க ஒத்த பைசா கூட கேட்கலை... அதோடு, எப்ப படகு வேணும்னாலும் தொடர்பு கொள்ளச் சொன்னாங்க’’ என்று கள அனுபவம் பகிர்கிறார் ரோகிணி.
 
ஜெயக்கொடி குமாரவேல்

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். கார்கில் போரின்போது ரத்ததானம் அளித்து உதவியவர். 2006ல் மக்கள் நல மேம்பாட்டு அறக்கட்டளை தொடங்கி, வளர் இளம்பெண்கள் நலம், ஹெச்.ஐ.வி., சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ‘‘சுனாமி, தானே புயலுக்கு அடுத்து இந்தப் பெருமழையால் கடலூர் உருக்குலைஞ்சு போயிருக்கு. ஏழை மக்கள்தான் இங்க அதிகம் வசிக்குறாங்க. குடிசை வீடுகள் பெரும் சேதத்துக்கு ஆளாகியிருக்கிற சூழல்ல, இதிலிருந்து மீண்டு வர்றதுக்கே பல காலம் ஆகும். கடலூருடைய இந்த அவல நிலையைப் போக்க தமிழகத்தின் பல பகுதி மக்களும் உதவிக்கரம் நீட்டியிருக்காங்க. பாப்புலர் இந்தியா நிறுவனம் பால் பவுடர், பிஸ் கெட், பாய், மெழுகுவர்த்தி, சோப்பு, பழங்களை நிவாரணமாக் கொடுத்தாங்க. வானகரத்தைச் சேர்ந்த குமாரவேல், போர்வை, புடவை, நாப்கின், பேஸ்ட், பிரஷ், அரிசி கொடுத்து உதவினார். சேலத்திலிருந்து மருத்துவர் ரமேஷ் குளுகோஸ் பவுடர் மற்றும் மாத்திரைகள் அனுப்பி வெச்சார்.



உண்ணமலை செட்டி சாவடி, சாவடி, குண்டு உப்பளவாடி, பல்லவராயர்நத்தம், பாலூர், தொட்டி, கே.என்.பேட்டை, குமாரப்பேட்டை, பாதிரிக்குப்பம், கொய்யாத்தோப்பு, தேவனாம்பட்டினம்னு நாங்க கவர் பண்ணின பகுதிகளிலெல்லாம் இடுப்பளவுக்குத் தண்ணீர் இருந்தது. பனங்காட்டுக்காலனிங்கிற பகுதி ஹவுசிங் போர்டில் முதல் தளமே மூழ்கிடுச்சு. பல குடிசை வீடுகள் மூழ்கியும் எல்லாப் பகுதிகளும் வீடு வீடாகப் போய் நிவாரணப் பொருட்களைக் கொடுத்தோம். நிவாரணப் பொருட்களைக் கொண்டு போகும்போது அதை வாங்குறதுக்காக பசியோடவும் பரிதவிப்போடவும் வர்றவங்களைப் பாக்குறப்போ ரொம்பவும் வேதனையா இருந்தது. சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளும் மோசமான நிலையில்தான் இருந்தது. நம்ம மக்கள் எவ்வளவு மனிதநேயத்தோட இருக்கிறாங்கங்கிறதை இந்த மாதிரியான அவசர காலத்துலதான் தெரிஞ்சுக்க முடியுது’’ என்கிறார் நெகிழ்வாக.
 
இ.மாலா

நேசம் என்கிற அமைப்பு மூலம் நீண்ட காலமாக சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக வெள்ள நிவாரணப் பணிகளையும் அக்கறையோடு மேற்கொண்டுள்ளார்... ‘‘டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தலைமையிலான ‘லட்சிய இந்திய இயக்கம்’ மூலமா உணவுப்பொருட்கள், சோப்பு, டெட்டால், நாப்கின்னு முக்கியமான பொருட்களெல்லாம் முதலில் 3 லாரிகள்ல வந்தது. அதில் ஒரு லாரியை கடலூருக்கு அனுப்பினோம். ரெண்டு லாரில உள்ள பொருட்களை வியாசர்பாடி மக்களுக்கு விநியோகிச்சோம். கோடம்பாக்கத்தில் கொட்டுற மழையில் பாத்திமா கான்வென்ட் பள்ளியில் 50 குடும்பங்கள் தங்கியிருந்தாங்க. பள்ளி முழுவதும் தேங்கியிருந்த தண்ணில சாக்கடை தண்ணியும் கலந்திருந்தது. அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 500 குடும்பங்கள் இருந்தது.
 
மூலக்கடையில் சாப்பாடு இல்லாம 30 பேர் இருந்தாங்க. இவங்களுக்கெல்லாம் சாய்ராம் பொறியியல் கல்லூரி உதவியோடு சாப்பாடு செஞ்சு பொட்டலங்கள் கொடுத்தோம். தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீரில் இருந்தார்கள். வருத்தமான முகங்களோடு வந்துதான் நிவாரணப் பொருட்களை வாங்கினாங்க. பல பகுதிகள்ல இருந்தும்  சேத்துப்புண்ணுக்கான மருந்தும் கொசுவர்த்தியும் முக்கியமாக் கேட்டாங்க. இரவிலிருந்து அதிகாலை வரை குளிருக்கு போர்வை எல்லாருக்கும் அவசியமா இருந்தது. இப்படி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கிடைக்குற நிவாரணப் பொருட்களை தேவைக்கேற்ப பிரிச்சுக் கொடுத்துக்கிட்டிருக்கோம்’’ என்கிறார் மாலா.
 
விஜயலஷ்மி

மென்பொருள் துறையில் ஏ.சி. காற்றில் வேலை பார்ப்பவர்கள் கூட சேறு, சகதிக்குள் இறங்கி தங்களது சமூக அக்கறையைக் காட்டியிருக்கின்றனர். மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் பயிற்றுவிக்கும் விஜயலஷ்மி அதிதீவிரத்துடன் களத்தில் இறங்கினார். ‘‘மனிதநேயம்கிறது எல்லார்கிட்டயும் இருக்கிறதுதான். இதை யாரும் கத்துத் தரத் தேவையில்லை. டி.ஜி.எஸ். ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுறதுக்காக ஆர்கெஸ்ட்ரா ஆரம்பிச்சு, அதில் நான் பாடினேன். திருமணத்துக்குப் பிறகு அதைத் தொடர முடியாம போச்சு. என் வீடு வானகரத்தில் இருக்கு. அங்கு வீடுகளை இழந்து நின்ற பெண்களுக்கு என்கிட்ட இருந்த 50 புடவைகளைக் கொடுத்தோம். நூறு பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தோம்.

என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூறு பேருக்குத் தேவையான துணிமணிகள் கொடுத்தாங்க. எங்களால முடிஞ்ச வரை நிவாரண உதவிகள் பண்ணோம். ஒரு கட்டத்துல தேவைகள் அதிகம் இருக்கிறதால இன்னும் பலரோட உதவிகள் தேவைப்பட்டுச்சு. வாட்ஸப் குரூப்பில் நிவாரணப் பொருட்கள் தேவைன்னு செய்தி அனுப்பினேன். அதைப் பார்த்துட்டு,  வேலூரிலிருந்து மகாலட்சுமி மூலமாக 100 கிலோ அரிசி வந்தது. மோனிகாங்கிறவங்க மூலமா சானிட்டரி  நாப்கின் வந்தது. இதுக்குப் பிறகு chennai rains helpனு வாட்ஸப் குரூப் ஆரம்பிச்சும், ஃபேஸ்புக்லயும் தேவையானதை பதிவிட்டேன். ஹெ.வி.குமார் மற்றும் அவரோட நண்பர்கள் சேர்ந்து 1  ட்ரக்லயும் 23 கார்லயும் பெங்களூரிலிருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வெச்சார்.

 அம்பத்தூர், முகப்பேர், காஞ்சிபுரம், பல்லாவரம், குரோம்பேட்டை  பகுதிகளில் துணிகள் அனுப்பி வெச்சோம். மறுபடியும் பேசின் பிரிட்ஜ்,  ராமாபுரம், ஐயப்பன்தாங்கல் பகுதிகள்ல நிவாரணம் கிடைக்காத பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிச்சோம். உமாநாத்செல்வன் மூலமா கிடைச்ச நிவாரணப் பொருட்களைக் கொண்டு காஞ்சிபுரம், குரோம்பேட்டை,  பேசின் பிரிட்ஜ் பகுதிகளில் விநியோகிச்சோம். ‘சமைக்கத் தயார்... ஆனால் பொருட்கள் இல்லை’னு சொன்ன பகுதிகளுக்கெல்லாம் பொருட்களை அனுப்பி வெச்சோம். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பேக்கேஜா தந்தோம். இதை உதவின்னு சொல்றதை விட எங்க கடமைன்னே சொல்லலாம்...’’ என்று உருகுகிறார் விஜி.
 
ஏஞ்சல் கிளாடி

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் திருநங்கையாக வந்த திருநங்கை. நாடகத்துறையில் பங்காற்றி வரும் இவரும் முழுமூச்சோடு களத்தில் இறங்கி நிவாரணங்கள் வழங்கினார். ‘‘மயிலாப்பூர் சிட்டி சென்டர்ல தங்க வைக்கப்பட்டிருந்த மக்களைப் பார்த்தப்ப, வீடு, உடைகளை இழந்த அவங்களோட அவலம் புரிஞ்சுது. உதவி பண்ணலாம்னு தோணுனாலும் ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு. பல பகுதிகள்ல பெண்களே களத்துல இறங்கி வேலை செய்யுறதைப் பார்த்தப்ப அந்த தயக்கம் போயிடுச்சு. என்னுடைய தோழிகளான ரெஜினா பானு, ஷானு ஆகியோரை இணைச்சுக்கிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போனோம். வில்லிவாக்கம் சிட்கோ நகர் பெரிய அளவுல பாதிக்கப்பட்டிருந்தது.

அங்க நிறைய பேர் சாப்பாடு கொடுத்தாங்க. சாப்பாடு அதிகமாக வந்ததால நிறைய சாப்பாடு வீணானதை கண் முன்னாடிப் பார்த்தேன்.  சாப்பாட்டை விட்டுட்டு தண்ணீர், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, போர்வை, ஓடோமோஸ், நாப்கின்னு அவங்களுக்கு தேவையானதைக் கொடுத்தோம். கரன்ட் இல்லாததால இருட்டான தெருக்கள்ல இடுப்பு வரை இருந்த தண்ணில நடந்து போய்தான் விநியோகம் பண்ண வேண்டியிருந்தது’’ என்கிற ஏஞ்சல், ‘‘உதவி பண்றது நல்ல விஷயம்தான். ஆனா, அதை ஆத்மார்த்தமாவும் கவனமாவும் பண்ணணும்’’ என்றும் அனுபவ அறிவும் பகிர்கிறார்.

- கி.ச.திலீபன்
படங்கள்: மாதவன், பால்துரை, முத்து, ஆர்.கோபால்