தூக்கம் மறந்து துயரம் நிறைந்த கண்கள்



வெள்ளக் களத்தில் அன்புப் பாலம்

கிர்த்திகா தரன்

சமீப காலமாக தினம் 3 மணி நேரம் மட்டுமே தூங்கும் கிர்த்திகாவின் கனவிலும் வெள்ளத்தின்  துயரம் பெருகுகிறது. பெங்களூருவில் வசிக்கும் கிர்த்திகாவின் கணவர் மருத்துவர் என்பதால், ெவள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மருந்து குறித்து
தெரிந்துகொள்ள எங்களை அணுகலாம் என பதிவு செய்து, தனது வெள்ள நிவாரணப் பணிகளை ஃபேஸ்புக்கில் தொடங்கினார் கிர்த்திகா. அந்த சிறு பதிவின் நீட்சியே, சரியான இடத்திலும் சரியான நேரத்தில் உதவிகள் போய் சேர அடிப்படையாக அமைந்தது!

‘‘ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என தொடர்ந்தது. கே.கே.நகரில் வீட்டின் மாடியில் கர்ப்பிணி சிறு குழந்தையுடன் மாட்டிக் கொண்டார். அவரை காப்பாற்றக் கூறி வெளிநாட்டு உறவினர் ஃபேஸ்புக்கில் அப்டேட்  செய்தார். படகு வைத்திருந்த ஒருவர் மற்றும் அதை ஓட்டிச் சென்று மீட்பதற்கான தன்னார்வலர் ஆகியோரை ஃபேஸ்புக் மூலமே தொடர்பு கொண்டு கே.கே.நகருக்கு அனுப்பி அவர்களை மீட்டோம்.

20 பேர் லேடீஸ் ஹாஸ்டலில் சிக்கிக் கொண்டதாக பதிவு செய்தார் பவித்ரா மணிகண்டன். அவர்களுக்கும் படகு அனுப்பினோம். மீட்க முடியாத இடங்களில் உணவும், அத்தியாவசியப் பொருட்களும் தந்து உதவ முடிந்தது. ‘நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லை’, ‘200 பேருக்கு உணவு இல்லை’ என வந்த தகவல்கள் அனைத்தையும், அப்பகுதியில் இருந்த தன்னார்வலர் மூலம் உறுதி செய்து, உதவிகளை அனுப்பினோம். ஹன்சாரி மற்றும் முகமது போன்ற நண்பர் குழுக்களே களத்தில் இறங்கி உழைத்தார்கள்.
 
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளுக்கான ஃபேஸ்புக் பதிவுகள் உலக அளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. ஒரு சிறு குழந்ைதயின் அழுகுரலை, ஒரு பெண்ணின் அவஸ்தையை, வயதானவர்களின் பதைபதைப்பை கடல் கடந்தவர்களாலும் உணர முடிந்தது. அந்த உணர்வுகள் உதவிகளாக உருவெடுத்தது. வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் குவிந்தன. ேகாவை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர் பகுதியை சேர்ந்தவர்களின் உதவிகள் மறக்க முடியாதவை. சென்னை, கடலூர் வெள்ளப் பாதிப்பு முகாம்களில் உள்ள பெண்கள் மாற்றுத்துணி கூட இல்லாமல் உடல் சார் பிரச்னைகளைக் கடப்பது எவ்வளவு கொடுமை? பெண்களுக்கான உடைகள், உள்ளாடைகள், சானிடரி நாப்கின், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான உணவுப் பொருட்கள் என மற்றவர்கள் தயங்கும் விஷயங்களையும் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்த்தோம்.



இஸ்லாமிய நண்பர்கள் களத்தில் இறங்கி உணவு வழங்குவது, மீட்பது மற்றும் வெள்ளம் வடிந்த பின் அவர்களது இருப்பிடங்களைச் சுத்தம் செய்வது வரை அத்தனை பணிகளையும் செய்து முடிக்க இந்த நெட்வொர்க்கிங் மிகவும் உதவியாக இருந்தது. நேரம் வீணாகாமல் உதவிப் பொருட்கள் சரியான நபர்களை சென்றடையவும் வழி வகுத்தது. வெளிநாடுகளில் இருந்த தோழிகளும் ெதாடர்ந்து உதவி கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

உதவி தேவைப்படும் கிராமங்கள் மற்றும் உதவி வழங்கப்பட்ட இடங்கள் என தகவல் பரிமாற்றத்துக்காக கடலூர் தன்னார்வலர்கள் இணைந்து வாட்ஸ்அப்பில் ஒரு குழு உருவாக்கினோம். களத்தில் பணியாற்றியவர்கள் திறம்பட செயல்பட இது உதவியது. போன் வழியாகவும் தொடர்ச்சியாக ஃபாலோ செய்தோம். ஒரு இடத்துக்கு உதவி அனுப்பினால் அது சென்று சேர்ந்து விட்டதா என்று கடைசி வரை உறுதி செய்து கொண்டோம். இதனால், வெள்ளம் சூழ்ந்த போது அபாயத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 200க்கும் அதிகமானவர்களை இக்கட்டான சூழலில் இருந்து வெளியில் கொண்டு வர முடிந்தது. ஒரே இடத்துக்கு பொருட்கள் சேர்ந்து விடாமல், பரவலாகப் பிரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ேதாம்.

கடலூர் பகுதி கிராமங்களின் வெள்ளப் பாதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அங்கே சேற்றிலும் சகதியிலுமே வாழ வேண்டியுள்ளது. பெண்களும் குழந்தைகளும் தொடர்ச்சியாக சேற்றில் இருந்தால் என்ன ஆவார்கள்? நினைக்கவே பயமாக இருந்தது. சில இடங்களில் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை கூட பதிவு செய்யப்படுவதில்லை. மீடியாக்களால் கண்டு கொள்ளப்படாத பகுதிகளில் வெள்ளப் பாதிப்பின் வலி அதிகமாக உள்ளது. அங்கு மருத்துவ உதவி மற்றும் உணவு, அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களை எல்லாம் அரசு கண்டு கொள்ளுமா? கடலோரப் பகுதி மக்கள் ஒவ்வொரு புயல் வரும் போதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டு எப்போதும் உதவி கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இவர்களது வாழ்க்கை இப்படியே ெதாடருமா? இப்படி இந்த வெள்ளம் பல கேள்விகளுக்கு விடை தேடும் சூழலை உருவாக்கியுள்ளது. மாதம் இரண்டாயிரம்  ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பையன் 300 ரூபாய் உதவி செய்திருந்தான். இப்படி உதவ மனம் உள்ள அத்தனை பேரையும் இந்த வெள்ளம் ஃபேஸ்புக் வழியாக இணைத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்கள் ஃபேஸ்புக்குக்குதான் நன்றி சொல்ல வேண்டும்’’ என்கிற கிர்த்திகா தரன், இரவிலும் விழித்திருந்து உதவிகளைத் தொடர்கிறார்.

ஒரு ஐடியா எல்லாவற்றையும் மாற்றிடுமே!

‘கேஸ் சிலிண்டர் மானியம் போலவே, வெள்ள நிவாரண தொகையையும் வங்கிக் கணக்கிலேயே செலுத்த வேண்டும்... அப்படிச் செய்தால்தான், அது வெள்ளமாக வடித்த கண்ணீருக்கு ஒரு துளி ஆறுதலாக சரியாகச் சென்றடையும்’ என்கிற எண்ணத்தை ஃபேஸ்புக்கில் டிசம்பர் 5 அன்று பதிவு செய்தார் தோழி புவனா ஸ்ரீதர். இவரது பதிவு ஆயிரக்கணக்கில் வைரலாக பரவியது. இப்போது நிவாரணத் தொகை வங்கிக் கணக்கிலேயே அளிக்கப்படும் என்கிற செய்தியும் வந்திருக்கிறது!