ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.

72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?

ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.

ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை விருப்பு வெறுப்பின்றி அலசிப் பார்ப்பது அவசியம். ஏனெனில் மரணம் எல்லா கசப்புகளையும் மறந்து விடச் செய்யும் மாமருந்தல்ல. ஜெயலலிதா என்கிற தலைவருக்கு பல பரிமாணங்கள் உண்டு.

’ரோஷாமான், ‘விருமாண்டி’ திரைப்படங்களில் ஒவ்வொரு வர் கோணத்தில் பார்த்தால் ஒவ்வொரு கதை என்பது போல ஒரு கார்ப்பரேட் மனிதருக்கோ, சாதி அபிமானம் கொண்ட ஒரு பார்ப்பனருக்கோ, ஓர் ஏழைக்கோ, ஒரு அரசு ஊழியருக்கோ, ஓர் ஆசிரியருக்கோ, ஆட்டோ ஓட்டுபவர் ஒருவருக்கோ நினைவி லிருக்கும் ஜெயலலிதா ஒரே ஜெயலலிதா அல்ல. தமிழகத்தின் தலைவர்களில் இப்படிப்பட்ட தன்மை கொண்டவர் ஜெயலலிதா மட்டுமே. அவர் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறாய் இருந்தார் என்பதல்ல.

அவரவர் தங்களுக்குத் தெரிந்த முகத்தை மட்டுமே பார்த்தனர். ஒட்டுமொத்த ஜெயலலிதா என்பவர் என்னவாக இருந்தார் என்பதுதான் நாம் அலசவேண்டியது. ஓர் அரசு ஊழியரைக் கேட்டால் அவருக்கு ஜெ. குறித்து நினைவில் இருப்பது என்னவாக இருக்கும். ஒரு லட்சம் பேரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியதுதான் நினைவில் இருக்கும்.

திமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்பதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களை கேளுங்கள். அவர்களுக்கு ஜெ. குறித்த மனப்பதிவு அவ்வாறே இருக்கும். ஆனால், சரிதாவைக் கேளுங்கள். தனக்கு வேலை தர முன்வந்த உத்தமி அவர் என்பார். யார் இந்த சரிதா? ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென வேண்டிக்கொண்டு காணிக்கையாக தனது நாக்கை வெட்டிக்கொண்டவர். அவருக்கு அரசு வேலையை அளிக்க முன்வந்தார் ஜெ. சரிதாவைப் பொறுத்தவரை ஜெ. அவருக்கு வாழ்வளிக்க முன்வந்த தெய்வம்.

பெண்களுக்கு இலவச சைக்கிள் தந்தவர் என்று கிராமப்புறங்களில் பயனாளிகளால் நினைக்கப்படுவார். ஆனால், அதே பெண்களில் பலரது வாழ்வில் கடும் பொருளாதாரச் சுமையை உருவாக்கி, குடும்பத்தில் சிக்கல்கள் வரக் காரணமாக இருந்த டாஸ்மாக்கை வீதிக்கு இரண்டு என்று திறந்தும் வைத்தார். மது ஒழிப்பு என்பதை அனைத்துக் கட்சி களும் பெரும் பிரசாரமாக முன்வைத்தபோதும் டாஸ்மாக் மட்டும் கோடிகளை குவித்தது.

டாஸ்மாக் ஒழிப்புப் பிரசாரப் பாடல் பாடிய கோவனை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது உச்சம் எனலாம். கோவனின் பாடலில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் சொற்கள் இருந்தன என்றாலும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யும் அளவுக்கான கொடிய குற்றமா அது என்கிற கேள்வி நமக்கு எழாமல் இல்லை. பெண்களை இழிவுபடுத்தக்கூடாது, அதனால்தான் இந்த கைது என்று வைத்துக்கொண்டால், இன்னொரு பெண்ணான சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது அமிலம் வீசப்பட்டதும் இதே ஜெயலலிதாவின் ஆட்சியில்தான்.

ஜெ. ஆட்சியில்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. காவல் நிலையம் செல்ல பெண்களுக்கு இயல்பாக இருக்கக்கூடிய அச்சத்தைப் போக்கி இக்காவல் நிலையங்கள் நோக்கி புகாரளிக்க பெண்களை வரவழைத்தது ஜெ. அரசின் முக்கியமான நகர்வு எனலாம். ஆனால், பெண்கள் குடும்ப வன்முறை தாங்காமல் கணவன் மீது புகார் தந்தால், ‘புருஷனை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்.

அதானே வாழ்க்கை’ என்று அங்குள்ள பெண் காவலர்கள், பஞ்சாயத்து செய்யும் ஆலமரங்களாக அந்த காவல் நிலையங்கள் மாறிப்போயின. ஒரு பக்கம் பெண்களுக்கு காவல் நிலையங்கள், மறுபக்கம் அதே ஜெ. ஆட்சியில்தான் வனக்காவலர்களும், காவலர்களும் இணைந்து நடத்திய வாச்சாத்தி கொடூரம் நிகழ்ந்தேறியது. பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர் ஆட்சியில்தான் திருக்கோவிலூரில் இருளர் இனப் பெண்களை காவலர்கள் வன்புணர்வு செய்தனர். சிதம்பரம் பத்மினி, ரீட்டாமேரி என தமிழகம் மறக்க முடியாத கொடூரங்கள் காவல் நிலையத்திலும், சிறையிலும் நிகழ்ந்தன.

ஜெ. தன் இரும்பு மனுஷி பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டதே காவல்துறையை வைத்துத்தான் என்றே சொல்ல வேண்டும். காவல்துறையை ஏவல்துறையாக்கியே நள்ளிரவில் திமுக தலைவரை கைது செய்தார். இதை எதிர்த்து சென்னையில் நடந்த திமுக பேரணியில் வந்தவர்கள் மீது அயோத்தியாக்குப்பம் வீரமணி குழுவினர் தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர்.

அன்றைய வன்முறையில் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர் பெண் பத்திரிகையாளரை தாக்கினார்.  தனக்குப் பிடிக்காத நடராஜனை பழிவாங்க செரினாவை கஞ்சா வழக்கில் கைது செய்தார். ஒத்துவராமல் போன வளர்ப்பு மகனை பழிவாங்கவும் அதே கஞ்சா வழக்குதான். சட்டக்கல்லூரி மாணவர்களின் விடுதிக்குள் புகுந்து காவல்துறை செய்த அராஜகம் அன்றைக்கு அத்தனை பரபரப்பானது.

அவர் மூன்றாம் முறை ஆட்சிக்கு வந்தபோது பரமக்குடியில் தலித்துகள் ஏழுபேர் கொல்லப்பட்டனர். அதில் ஆறு பேரை துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை கொன்றது. அடுத்த ஆண்டு கூடங்குளத்தில் அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி அடக்குமுறையை ஏவியது. காவல்துறையை தன்வசம் வைத்திருந்தார் ஜெ. ஜெ.வின் இரும்பு மனுஷி பிம்பத்திற்கு இன்னொரு காரணம் அவர் ஆட்சியின் என்கவுன்டர்கள்.

மனித உரிமை குறித்த எந்தக் கவலையுமில்லாத சாதாரண மக்களுக்கு ரவுடிகளையோ அல்லது கொள்ளைக்காரர்களையோ என்கவுன்டர் செய்வது என்பது வீரத்தின் அடையாளம். எனவே வீரப்பன் தொடங்கி வெங்கடேசப் பண்ணை யார், வேளச்சேரியில் வடமாநிலத் தொழிலாளர்கள் என்று தொடர்ந்த என்கவுன்டர்கள் இரும்பு மனுஷி பட்டத்திற்கு உதவின. அண்மையில் நடந்த ராம்குமாரின் சர்ச்சைகுரிய மரணம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தன.

ஆனால், மிக முக்கியமான இவ்விஷயங்களில் எந்த நகர்வும் மேலிடத்தின் உத்தரவு பெறாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. தலித்துகள் மீது வன்முறையை தூண்டும் படியாகப் பேசினார் என பாமக தலைவர் ராமதாஸை கைது செய்தார் ஜெ. பல தலித் தலைவர்களும் பாராட்டிய ஜெ.யின் இச்செயல் உண்மையில் அன்றைக்குத் தேவையாக இருந்தது. இது ஜெ.யின் ஒரு முகம். ஆனால், இக்கைது ஒருபுறம் நிகழ்ந்தாலும், தர்மபுரி இளவரசனின் மர்ம மரணத்தில் அரசு நடந்துகொண்ட விதம், யாரையோ காப்பாற்றுவதாகவே இருந்தது.

இன்றுவரை தர்மபுரியில் மூன்று ஊர்களை எரித்தவர்கள் எந்தத் தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாகவே நடமாடுகின்றனர். இளவரசனுக்குப் பின் கோகுல்ராஜ், சங்கர் என தொடரும் தலித் ஆண்களின் கொலையும், கோகுல்ராஜ் கொலையை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவின் மர்ம மரணமும், பெண்களின் உயிரைக் கேட்கும் சாதி ஆணவக் கொலைகளும் பெருகியபோதும் ஜெ.  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதுவும் அவர் முகம்தான். இதில் எது உண்மையான முகம்?
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளிலேயே உச்சம் என அனைவரும் பாராட்டுவது காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ததுதான். உண்மையில் சங்கரராமன் கொலை வழக்கில் அந்தக் கைது நடக்குமென யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. யாரும் எதிர்ப்பாராததைச் செய்வார். அதுதான் ஜெயலலிதா. பார்ப்பனர்களின் தலைமை என்று அறியப்படும் ஒருவரை கைது செய்தார் ஜெ. ஆனால், சட்டமன்றத்தில் ‘நான் பாப்பாத்தி’ என பெருமிதப்பட்டவர். அத்தோடு மூடநம்பிக்கைகளில் ஊறியவராகவும் திகழ்ந்தார்.

அவருடைய ஆட்சியில் மழைவேண்டி கோயில்களில் யாகங்கள் நடத்தப்பட்டன. கோயில்களை நிர்வகிக்க வேண்டிய இந்து அறநிலையத் துறை இதற்கான சுற்றறிக்கையை பிறப்பித்தது. அறிவியல் முன்னேறிய இந்தக் காலத்தில் மழைவேண்டி யாகம் வளர்ப்பதும், அதில் அமைச்சர்கள் பங்குகொள்வதும் நிகழ்ந்தன. ஜெயலலிதாவின் பிறந்தநாளன்றும், அவர் சிறை சென்றபோதும் அமைச்சர்கள் மண்சோறு உண்டனர், அங்கப்பிரதட்சணம் செய்தனர், அலகு குத்திக்கொண்டனர். இதையெல்லாம் ஜெ. தடுக்கவில்லை மாறாக விசுவாசத்தை
அளவிடும் கருவியாக பாவித்தார்.

ஜெ. ஹெலிகாப்டரில் பறந்தாலும், தரையில் நின்று முதுகு வளைத்து கும்பிடு போடுபவர்களாக, அவர் காலில் வீழ்பவர்களாக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். அத்தனை ஆண்களையும் தன் காலில் விழ வைத்தவர் என்று பெண்கள் பலர் அதைக் கொண்டாடவே செய்கின்றனர். பெண்களின் இந்த உளவியல் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், காலில் விழ வைப்பதா பெண்ணியம்? ஜெ. சிறைக்குச் சென்றபோது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றபோது அழுதுகொண்டே பதவியேற்றனர்.

ஆனால்,  தங்கள் தலைவியின் உயிரற்ற உடல் நகரில் ஒருபுறம் இருக்கையில் எச்சலனமும் இல்லாமல் அத்தனை பேரும் இந்த முறை பதவியேற்றனர். இதற்காக சமூக வலைத்தளங்களில் அமைச்சர்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், பதவியேற்ற அன்றைக்கு அவர்கள் யாரிடமும் தங்கள் விசுவாசத்தை அழுது நிரூபிக்கத் தேவையில்லை. பயம் விலகியவர்களாக இருந்தனர். அன்பினால் சேரும் மனிதர்களுக்கும் அச்சத்தால் சேரும் மனிதர்களுக்கும் வேறுபாடு உண்டுதானே? ஜெ. மரணத்திற்காக உண்மையில் அழுதவர்கள் கடைக்கோடி அதிமுக தொண்டர்கள்தான்.

உண்மையில் அவர்கள் தங்கள் தலைவிக்காக அழுதனர். ஏதோ ஒரு வகையில் ஜெயலலிதா அவர்களின் உள்ளங்களை தொடவே செய்திருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. கண்ணில் நீரோடு அவருடைய சமாதியில் திரளும் கூட்டத்தையும் பார்க்க முடிகிறது. அவர்கள் நம்புகிறார்கள், தங்கள் தலைவியைப் போல் ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை என. ஜெயலலிதாவின் ஆரம்பகாலத்திலிருந்து அவரை உற்று கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். அவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாகப் பிரிந்து ஜெ.அணி, ஜா.அணி என்றானது. அப்போது தன்னோடிருந்த நாவலர் நெடுஞ்செழியன் பின்னாளில் நால்வர் அணி கண்டபோது அவர்களை ‘என் உடலிலிருந்து உதிர்ந்த ரோமங்கள்’ என்றார். இக்கடுமையே அவரை கடைசிவரை வழிநடத்தியது. ‘ஜானகிதான் எம்.ஜி.ஆரை மோரில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டார்’ என்று குற்றம் சாட்டினார்.

அதன்பின் 1989ல் நடந்த தேர்தலில் 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரானார். சந்திரசேகர் பிரதமராயிருந்த சமயம், உள்துறை அமைச்சராய் இருந்த சுப்பிரமணியசாமியின் துணையோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ராஜீவ்காந்தி கொல்லப்பட்டவுடன் கிளம்பிய அனுதாப அலையில் அதிமுக-காங்கிரஸ் அணி ஒட்டுமொத்தமாய் வென்றது.

முதன்முதலில் முதல்வரானார் ஜெயலலிதா. அந்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழகம் கண்டவை யாரும் எதிர்பாராதவை. விமர்சித்து எழுதியதற்காக ஒரு வாரப்பத்திரிகையின் அலுவலகம் தாக்கப்பட்டது. ஆடிட்டர் சண்முக சுந்தரம் தாக்கப்பட்டார். குடந்தை மகாமகத்தில் கலந்துகொள்ள ஜெயலலிதாவும் சசிகலாவும் சென்றதால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கரசேவையை ஆதரிக்கும் அளவுக்குச் சென்றார் ஜெயலலிதா.

மிக ஆடம்பரமாக நடந்த வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் முகம் சுளிக்க வைத்தது. வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட புடவைகள், நகைகள், செருப்புகள் என அந்தக் காட்சி தமிழகம் முழுவதும் ஓர் அலையாய் பரவியது. கண்ணில்பட்ட இடத்தையெல்லாம் தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்ட சசிகலாவின் உறவினர்கள், அவர்களுக்கு இடம் கொடுத்த ஜெ. என தொடர்ந்து நடப்புகளை கவனித்து வந்த மக்கள் அடுத்து வந்த தேர்தலில் இரு தொகுதிகளில் நின்ற ஜெயலலிதாவையே தோற்கடித்தனர் என்பது வரலாறு.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பின் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெ, மதமாற்ற தடைச் சட்டம், ஆடுகோழி பலியிட தடைச்சட்டம் என தொடர்ந்து தனது இந்துத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். தர்மபுரி பேருந்து எரிப்பில் மூன்று மாணவிகள் உயிரிழந்ததை மறக்க முடியுமா? திமுக, அதிமுக என தொடர்ந்த சுழற்சியில் அதிமுக மீண்டும் ஆட்சியை 2010ல் கைப்பற்றியது.

இம்முறையும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கப்போவதாக அறிவித்தார். அறிவுச்சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை அவர் நினைத்தபடி மருத்துவமனையாக்கிவிட்டார். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாதென அவர் காட்டிய பிடிவாதத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

முதல் நான்காண்டுகளுக்கு மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் செய்து விட்டு இறுதியாண்டில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதை ஜெ. அரசு தன் வழக்கமாக்கிக்கொண்டது. இந்த இறுதி ஓராண்டோ, சில மாதங்களோதான் ஜெயலலிதாவின் ஆதரவு மனநிலை ஓங்கும் காலம். தமிழக மக்களின் மறதியே ஜெயலலிதாவின் மூலதனம். ஜெயலலிதாவின் அரசை மக்கள் மன்னித்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றினர்.

கருத்துச் சுதந்திரம் காற்றில்போனது. விமர்சிக்கும் பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டன. செய்தி வாசிப்பாளர் மீதுகூட வழக்கு போடும் அவலமும் நிகழ்ந்தேறியது. பத்திரிகையாளர் சந்திப்புகள் நின்றுபோயின. ஜெ. தன் இறுதிக்காலத்தில் மக்களை சந்திக்கவே இல்லை. யாராலும் மறக்கமுடியாத நிகழ்வாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட நிகழ்வு நடந்தது. சென்னையை மூழ்கடித்து உயிர்களை கொன்ற ஏரி திறப்பை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் தவிர்த்திருக்க முடியும். 

நிர்வாகச் சீர்குலைவின் உச்சகட்ட எடுத்துக்காட்டு இந்நிகழ்வு. அத்தினங்களில் அரசின் செயலற்ற தன்மை அதிர்ச்சியூட்டியது. அப்போது மக்கள் தங்களுக்குள் உதவிக்கொண்டு அச்சூழலை கடந்துவந்தார்கள்.  ஆனால் நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது அதிமுக அரசு. 2016 தேர்தலில் ஜெ பிரசாரத்தில் சுடும் வெயில் காரணமாக  பலர் மரணித்தனர்.

ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தார் என்பது மிக முக்கியமான அவருடைய பங்களிப்பு. அம்மா உணவகங்கள் ஏழைகளுக்கு நிச்சயமாக பயனுள்ள திட்டம்தான். ஜெயலலிதா இதுபோன்ற சில திட்டங்களால் எளிய மக்களால் என்றென்றும் நினைக்கப்படுவார். ஏழை எளிய மக்கள் கொள்கை கோட்பாடு, அரச அராஜகம், மனித உரிமை குறித்தெல்லாம் அறியாதவர்கள். அன்றைய பாட்டிற்காய் உழைக்கும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு இலவச அரிசியும், அம்மா உணவகங்களும் ஜெயலலிதாவை உய்விக்க வந்தவராகவே பார்க்க வைக்கும்.

இந்த எளிய மக்களே ஜெயலலிதாவின் பலம். ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கை மிகத் துயரமான ஒன்றுதான். தனிமை கொல்லும் வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட தனிமை இது. சோபன் பாபுவுடனான ஏழு ஆண்டு வாழ்க்கையை அவர் மறைத்ததில்லை. ‘எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று எண்ணினேன்’ என்று கூறுமளவுக்கு தன் வாழ்வை திறந்த புத்தகமாக வைத்திருந்தார். தமிழக மக்களுக்கு அவர் குறித்த கலாசாரப் போலீஸ் பார்வை இல்லை என்பதே ஆறுதலான விஷயம்.

பணம், கை சொடுக்கினால் வந்து நிற்கும் அதிகாரம் எல்லாமிருந்தும் ஜெ. மகிழ்ச்சியாய் வாழ்ந்தாரா என்பது சந்தேகம்தான். உற்ற தோழியாக்கிக்கொண்ட சசிகலாவும் துரோகித்தபோது வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னார் ஜெ. அதன்பின் மன்னித்து மீண்டும் இணைத்துக்கொண்டார். இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாகத்தான் திகழ்ந்தார் ஜெ. ஆங்கிலப் பேட்டியொன்றில் ஜெ. இப்படிக் கூறுகிறார். “என் தனிப்பட்ட வாழ்வு தோல்வியடைந்த ஒன்று. எம்ஜிஆருடனான என் உறவு சட்டரீதியானதல்ல.

ஆகவே எம்.ஜி.ஆர்தான் என் அடையாளம் என்று நிறுவ எண்ணினேன். அதற்காகவே அரசியலுக்கு வந்தேன். ஒரு பெண் முதலில் மகளாகப் பிறக்கிறாள். பின் மனைவியாகிறாள். தாயாய் மரிக்கிறாள். ஆனால், நான் மனைவியாக வாழவே இல்லை. நிச்சயம் தாயாகத்தான் மரிப்பேன்”. ஜெ ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்ற பெண்களின் அடையாளம் என பல பெண்கள் எண்ணிக்கொண்டிருக்க, ஓர் ஆண்தான் தன் அடையாளம் என நிறுவவே அரசியலுக்கு வந்ததாகச் சொல்லும் இக்கூற்று ஆய்வுக்குரிய ஒன்று.

சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’ கதையில் ‘ஜீவா’ என்கிற கதாபாத்திரம் உண்டு. அந்த ஜீவாவை யாருமே பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், ஜீவாதான் நாட்டையே ஆள்வார். அப்படி யாருமே பார்த்திராத... பார்க்கமுடியாதவராய் ஜெ இருந்தார். உடல்நலம் சரியின்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபிறகும் யாரும் பார்க்கமுடியாதவராகவே இறுதிவரை இருந்துவிட்டு மறைந்துவிட்டதுதான் பெருந்துயரம். அவரால் லாபமடைந்தவர்களுக்கு அல்ல, அவரை இழந்துவாடும் அவர் கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்கு ஜெயலலிதாவின் மரணம் பேரிழப்பு.

ஆட்சிக்காலத்தில் அவ்வபோது ஜெ. கொடநாடு சென்று ஓய்வெடுக்கச் செல்வது வழக்கம். அப்போது அரசு நிர்வாகமும், தலைமைச் செயலகமும் அவர் திரும்பி வரும்வரை ஸ்தம்பித்துவிடும். இப்போது ஜெ. கொடநாட்டில் அல்ல, சென்னையில், தலைமைச் செயலகத்துக்கு மிக அருகில் மெரீனா கடற்கரையில் ஓய்வில் இருக்கிறார். இது நிரந்தர ஓய்வு. திரும்பி வரமுடியாத ஓய்வு.

- கவின் மலர்