ஒரு பெண் பொறுப்புகளை ஏற்றிருக்கிறாள்



உடல் மனம் மொழி

-சக்தி ஜோதி

திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்கிற வழக்கம் எனக்கு இருக்கிறது. அங்கு சென்று திரும்புகிற பயணங்களில் எல்லாம் தவறாது எனக்குள் எழும்புகிற  எண்ணம், “இங்கே சாமியாராக சுற்றித் திரிபவர்களுக்கெல்லாம் மனைவி, பிள்ளைகள் கிடையாதா? இவர்களில் எத்தனை பேர் தங்கள் பொறுப்புகளை விட்டு நழுவி இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஒரு பகுதியில் மட்டும் இத்தனை சாமியார்கள் இருக்கிறார்கள் என்றால் நாடு முழுக்க எத்தனை லட்சம் ஆட்கள் இருப்பார்கள். மன்னனாக இருந்த சித்தார்த்தன் புத்தனாக ஆனதும்
மன்னனாக ஆகவேண்டிய இளங்கோவடிகள் துறவியானதும் போலவே எல்லோரும் ஞானம் அடைந்தார்களா” என்பதுதான்.

ஆண், தன்னுடைய வாழ்வில் ஏதாவது ஒருகட்டத்தில் தன்னுடைய நட்புகளையும் உறவுகளையும் ஒட்டுமொத்தமாக அறுத்துவிட்டு தான் மட்டும் பிறவிப்பெருங்கடல் நீந்தவும், இந்தப் பிறப்பினைக் கடந்து தப்பிச் செல்லவும் நினைக்கிறான். ஆண் ஒருவன் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் சாமியாராகப் போயிருக்கலாம் எனச் சொல்லாமல் இருப்பதில்லை.

ஓர் ஆண் தன்னுடைய இளமைக்காலத்தில் அவன் விரும்புகிற பெண்ணை அடைவதற்காக எதனையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறான். சிலசமயம் விரும்பியது கிடைத்தாலும் அது குறித்த கவலை அவனுக்கு இருக்கிறது. தன்னுடைய உடல்வலு குறையும் பொழுது, தான் விரும்பியவை அல்லது தான் நேசித்தவை தன்னைவிட்டுப் போய்விடுமோ என தடுமாறுகிறவனாக ஆண் இருக்கிறான்.

ஒரு பெண்ணுக்காக பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிற ஒருவன் அந்தப் பொறுப்புகளை விரும்பிய விதமாக நிறைவுசெய்ய இயலாத நிலை வரும்பொழுது சோர்வடைகிறான். யதார்த்த வாழ்வின் அன்றாடத்திற்குள் தோல்வியுறுகிறவன் குடிகாரனாகவோ துறவியாகவோ ஆகிறான்.

பெண்ணோடு சேர்ந்து வாழ்வதே இன்பம் என நினைக்கும் ஆண் ஒரு குறிப்பிட்ட சூழலில் அவளை விட்டு விலக விரும்புகிறான். ஒரு பெண்ணுடன் பற்று ஏற்படுத்த தவித்தது போலவே அவளிடமிருந்து பற்று அறுக்கவும் முயலுகிறான். இளமைக்காலத்தில் மட்டுமல்ல, பெண் மீதான பிரியம் என்பது ஆணுக்கு எந்தப்பருவத்திலும் குறைவது இல்லை. அம்மா, மகள், தங்கை, தோழி, இன்னபிற உறவுகளினால் பெண்களுடன் தங்களை பிணைத்துக் கொண்டிருக்கிறான்.

மற்ற எல்லா உறவுகளையும்விட மனைவி அல்லது காதலியிடம் கூடுதல் உரிமை எடுத்துக்கொள்கிறான். இந்த உரிமையே காதலாகவும் காமமாகவும் அதிகாரமாகவும் இருக்கிறது. பெண்ணிடம் ஆணுக்கு காதல் என்பது தீர்வதேயில்லை. சிலசமயம் தன் வழியாக உருவாகிற சந்ததி ஆணை அச்சப்படுத்துகிறது. ஆணுக்குப் பெண்ணுடல் என்பது உற்பத்திக்கருவியாக இருக்கிறது.

பெண்ணுக்கு இவ்வகையான குழப்பம் ஏதுமில்லை. பெண் தன்னுடைய உடலை உயிர்களை உற்பத்தி செய்யும் கருவியாகப் பார்ப்பதில்லை. தன்னுடைய இன்னொரு வடிவமாக புதிய உயிரைப் பார்க்கிறாள். அவளுக்கு ரத்த உறவுகளின்பால் பயமேதுமில்லை. அதனால் குடும்ப உறவுக்குள் இணைத்துக் கொள்கிற ஒரு பெண் தனியாக ஒரு துறவு வாழ்வை மேற்கொள்ள நினைப்பதில்லை.

குடும்பம் என்பது ஆணை பதற்றப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் தனக்கு அடங்கி இருப்பதையே ஆணின் மனம் மிகவும் விரும்புகிறது. அசோகமித்திரனின் ‘விமோசனம்’ கதையில், நாயகி சரஸ்வதி கணவனுக்கு பயப்படுகிறவள். எப்பொழுதும் மற்றவர்களின் முன்பாக அவமானப்படுத்துகிற கணவனுக்கு பயப்படுகிற அவளைப் பார்த்தால் பரிதாபமே ஏற்படுகிறது. ஒருமுறை குழந்தையின் அழுகையை அடக்கமுடியாமல் தடுமாறும் அவளை கடுமையாக திட்டி அடிக்கிற கணவனிடம், அதுவரை அடங்கியே இருந்த மனைவி திடீரென்று எழுந்து நின்று “உம்” என்கிறாள். 

அவன் திடுக்கிட்டுப் பயந்து பின்வாங்குகிறான். சரஸ்வதி கணவனை பார்த்து கண்களை உருட்டி அகல விரித்து, “உம், ஜாக்கிரதை” என்று திரும்பவும் சொல்கிறாள்.  குழந்தையும் கூட அப்பொழுது அழுகையை நிறுத்துகிறது. ஆனால் அதன்பிறகு அவள் கணவன் அவளிடம் பேசுவதில்லை. அவனிடம் பலமுறை கெஞ்சிக் கூத்தாடிப் பார்க்கிறாள். அவன் அவளிடம் பேசவேயில்லை. கதையின் இறுதியில், முன்பு கணவனுடன் சந்தித்திருந்த மகானை பார்த்து அவள் தன்னுடைய துயரத்தைப் பகிர்ந்துகொள்ள போகிறாள். ஆனால் அவரைப் பார்க்க இயலவில்லை. வீடு திரும்புகிறாள். அன்று அவள் கணவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

“ஏன் என்றுமே வந்திருக்கவில்லை” என்று கதையை முடித்திருக்கிறார் அசோகமித்திரன். இப்படித்தான் பல ஆண்கள் பெண்களிடம் தன்னுடைய அதிகாரம் சிதைவுறும் நிலையை ஏற்றுக்கொள்ள இயலாமல் இருக்கிறார்கள். மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என ஆண்களுக்கு நான்கு பருவங்கள் இருப்பதாக வேதமரபு சொல்கிறது. துறவை இந்து மதம் நான்காம் நிலையிலேயே வைத்துப் பார்த்தது.

பெண்ணிடம் காதல் கொண்டு, இயற்கையான உணர்வெழுச்சிக்குள் தன்னை ஒப்புகொடுக்க காதலி ஒருத்தியை தேர்வதும், உடலை அதன்போக்கிலேயே அனுமதித்து, தன்னுடலை தான் உணர்வதும்தான் இல்லறத்தில் முக்கியமானது. தன்னை உணர்ந்த நிலையிலிருந்து லௌகீக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வானப்ரஸ்தம் என்கிற பூரணசந்நியாசம் பெற்றுக்கொள்வது ஒரு நிலை. திருமணம் முடித்து, குடும்பம் மற்றும் உறவுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முழுமையாகச் செய்து, “ஓய்வுநிலை” என்கிற மூன்றாம் நிலையில் உறவுகளை விட்டு மெல்ல மெல்ல விட்டு விலகி, சம்பாதித்த பொருட்களை தானம் செய்கிற மனநிலைக்கு வந்து நான்காம் நிலையான துறவுக்குள் நுழைய வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை விரதம் இருந்து கருப்பு உடையோ, காவி உடையோ கட்டிக்கொண்டு தன்னை ஒரு சாமியாராக நினைத்துக்கொள்வதில் ஆண் உள்ளூர மகிழ்வடைகிறான். உறவுகளை துறந்துவிட ஒருகணமேனும் நினைக்கிற ஆண்தான் ஆண்டுதோறும் முருகனுக்கும், ஐயப்பனுக்குமென குறுகிய தவவாழ்வை வாழ்ந்து பார்க்கிறான்.

பகல் முழுக்கக் குடிப்பவரும், இரவு வந்தால் குடி நினைவில் கைகால் நடுங்குபவரும் கூட சாமிக்கு மாலை போட்டு விரதமிருந்தால் யாரும் சொல்லாமலேயே சுயக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுகின்றனர். அக்காலகட்டத்தில் தன்னையவன் முழுமையான துறவு நிலைக்குள் வைத்துக்கொள்ள முனைகிறான். கிடைத்ததை உண்டு, மிகக்குறைவாக உறங்கி, போகத்திலிருந்து விலகியிருப்பது ஒரு வகையான தவம். தற்காலிகத் துறவுகளில் நிறைவடையாமல் முழுமையான துறவு மேற்கொள்பவர்களும் உண்டு. குடும்பம், உறவுகளை விட்டு விலகாமல் வீட்டிற்குள்ளேயே ஐம்புலன் அடக்கி துறவு ஏற்பவரும் உண்டு.

இந்த உலகும் மனித உறவுகளும் நிலையானது அல்ல என்று நினைக்கும் ஒருவன் உலக வாழ்வின் மீது பற்று அறுக்க துறவைத் தேர்ந்தெடுக்கிறான். 11ம் நூற்றாண்டின் துறவி பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.  கடல்வழி வாணிகத்தில் பெரும்பொருள் சேர்த்தவர். மனைவி சிவகலையோடும் பெரும்செல்வத்தோடும் வாழ்ந்தவர். “காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே” எனக் கூறிய தத்தெடுத்த பிள்ளை மருதவாணனின் சொல்லைக்கேட்டு, பொருளின் நிலையாமையை உணர்ந்து துறவறம் பூண்டவர்.

சொத்துகளையும் ஆடம்பரங்களையும் விட்டு விலகியவர். புத்தருக்கு இணையானவர். உஜ்ஜயினி அரசர் பர்த்ருஹரியாருக்கு மனைவி பிங்கலை மீது காதல். தனக்குக் கிடைத்த அதிசயப்பழம் ஒன்றினை பேரன்புடன் அரசிக்குக் கொடுக்கிறார். அரசிக்கு குதிரைக்காரன் மீது காதல். எனவே பழத்தைக் கொண்டுபோய் அவனுக்குக் கொடுக்கிறாள். குதிரைக்காரனுக்கு ஒரு தாசியின் மீது காதல், அவன் பழத்தை அவளிடம் கொடுத்து விடுகிறான். அந்த தாசி அந்தப் பழத்தை அரசனுக்கு அர்ப்பணிக்கிறாள்.

பர்த்ருஹரியாருக்கு அரசியைப் பற்றிய இந்த உண்மை தெரிந்தவுடன் உலகியலில் வெறுப்புற்று  துறவியாகிவிடுகிறார். பட்டினத்தார்க்கு சேவகம் செய்யும் வாழ்வைத் தேர்கிறார். பொருள் மீதான பற்றுதலை விடவும் பெண் மீதான பற்றினை அறுப்பது அத்தனை எளிதல்ல. இவ்வகையான சூழலில் துறவியானவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

சிலசமயம் ஒற்றைப்புள்ளியில் குவிகிற குறிமையமான ஆணின் காமம், உடலெல்லாம் காதலாக பரவியிருக்கிற பெண்ணை ஈடு செய்யவியலாமல் போய்விடுகிறது. வேறு சில சமயம், ஒரு பெண் தன்னிடம் நிறைவடைந்து விட்டாளென்பதை  ஆணுடைய மனம் நம்ப மறுக்கிறது. தான் அவளை நிறைவு செய்யவில்லையோ எனத் தன்னையே சந்தேகிக்கிறது. இம்மாதிரியான சூழலில் பெண் என்கிற உறவை விட்டே ஆண் விலகிச்செல்கிறான் அல்லது அவளைவிட்டு வேறு ஒரு பெண்ணை நாடிச்செல்கிறான்.

ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குத் தாவுகிற இந்த அலைச்சல்கூட யாராவது ஒரு பெண்ணிடம் தன்னை முற்று முழுதுமாக ஒப்புகொடுத்துவிட முனைவதுதான். ஆனால் அங்கும் தடுமாறுகிறான். காலம் முழுக்க ஒரு பெண் மாற்றி இன்னொரு பெண் என இப்படியே அலைந்து கொண்டிருப்பவரும் உள்ளனர், இவ்வகையான ஆணை நிறைவு செய்வதென்பது சிலசமயம் ஒரே ஒரு பெண்ணால் இயலுவதில்லை. ஒரு பெண்ணிடம் தொடங்கி அவளிடமும் அல்லது வேறு சில பெண்களிடமும் தோய்ந்து காதல் செய்கிற ஒருவன் பின்பொரு நாள் துறவை நோக்கிப் போன கதைகளும் உள்ளன.

கற்புடை மகளிர் என்று சொல்லப்படுகிற மனைவியுடன் மட்டும் உறவு வைத்துக் கொள்கிற ஆண், வாழ்கிற காலம் முழுக்க மிகப் பெரிய மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்வதில்லை. ஆனால் தனக்கு அடங்கியே இருக்கிற பெண்ணை விடவும் சவாலான பெண்ணை ஆண் மிகவும் விரும்புகிறான். அவள் ஆணைத் தூண்டுகிறாள். பதற்றப்படுத்துகிறாள். அவள் தன்னை விட்டு விலகி விடுவாளோ எனப் பயப்படுகிறான். சங்ககாலத்தில் பரத்தையர் எனவும் காப்பிய காலத்தில் கணிகையர் எனவும் சொல்லப்பட்ட பெண்கள் பக்தி காலத்தில் வளர்ந்து நிறுவனமாகினர்.

தாசியர் எனப்படுகிற தேவதாசிப் பெண்கள் ஆணுக்குச் சவாலாக இருந்தார்கள். பரத்தையர் என்கிற வகைப் பெண்களை இன்றைய புரிதலின் படியான பாலியல் தொழிலாளிகளைப் போல உடலின் இச்சையினைப் பூர்த்தி செய்பவர்களாக மட்டும் பார்க்க இயலாது. கற்புடை மகளிரை ஆணுக்குக் காத்திருப்பவளாகவும் அவனுடைய விருப்பத்திற்கு மாற்றுக்கருத்து இல்லாதவளாக வளர்த்தெடுத்த தமிழ்ச்சமூகம் பரத்தையர் வகைப்பட்ட பெண்களை பல்வேறு திறமைகளோடும் உருவாக்கியது.

சான்றோனாகவும், கலைகளில் தேர்ந்தவனாகவும் இருக்கிற ஆண், அவனுடைய அரசியல் சிக்கல்களை, கலைகளில் உள்ள ஈடுபாட்டினைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆள் தேவைப்பட்டிருக்கலாம். அப்படித் திறன் படைத்தவர்கள் பெண்களாகவும் இருக்க அவனுடைய பாலியல் விருப்பத்தினையும் நிறைவு செய்துகொள்கிறான். மனைவிடம் அவளை அடக்குபவனாக, வெற்றியாளனாக இருக்கும் ஆண், பரத்தையரிடம் வரும்பொழுது தோற்றவனாக உணர்வதற்கும் இடமிருக்கிறது.

அவள் எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள், சமமாக சமர் செய்யும் அளவு அறிவில் தேர்ச்சியுடையவளாக இருக்கிறாள். அவளிடம் தோல்வியுறும் ஆண் தன்னிலையை இழந்துவிடுகிறான். கோவலன் மாதவியிடம் கோபப்பட்டுப் பிரிந்த இடமும் அதுதான். திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலியன அருளிச் செய்தவருமான அருணகிரி “மானார் கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து கைப்பொருளே இழந்து அயர்வாயே” என்கிற வரிகளில் நிலைத்திருக்கிறார். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் தாசியரின் உறவுக்குள் மிகையான போகத்தில் திளைத்திருந்தவர். முருகன் மேல் கொண்ட பக்தியுடன் ஒருநாள் எல்லாவற்றையும் துறந்து துறவியானார்.  

மற்ற எந்த நாடுகளையும்விட இந்தியாவில் துறவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. உண்மையில் இவர்கள் எதையும் துறந்தவர்கள் இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே தொலைக்க இயலாமல் வேறு எங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஞானத்தை அடைவதற்கு காமமும் ஒருவழிதான், அதனால்தான் ரஜனீஷ் என்பவர் ஓஷோவாக அறியப்பட்டார்.

ஓஷோ தன்னுடைய “காமத்திலிருந்து கடவுளுக்கு” நூலைப்பற்றிச் சொன்னவை, “தந்திரா தத்துவத்தை வெளியிட்ட ஒரு நாடு கஜுராஹோ, கொனார்க் போன்ற கோயில்களை உருவாக்கிய நாடு முட்டாள்தனமானதாக இருக்க முடியாது. நான் சொல்வதை விளங்கிக்கொள்ள முடியாததாக இருக்க முடியாது. கஜுராஹோ எனது சாட்சியம். தந்திரா இலக்கியங்கள் எல்லாமே என் சாட்சியங்கள். தந்திரா போன்றவை தாக்குப்பிடித்து இருந்த நாடு இது ஒன்றுதான். உலகத்தின் எந்த நாட்டிலும் காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றும் முயற்சி நடைபெறவே இல்லை.”

இவ்வகையான ஆணின் துறவு பற்றி சங்க இலக்கியத்தில் மாற்பித்தியார் என்னும் பெண்பாற் புலவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
முதல் பாடல்,

“ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிகும்-
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே.”

“ஓவியம் போன்று விளங்கும் அழகிய இடத்தில், குறுகிய வளையலணிந்த மகளிரின் கைகளிலிருந்து அணிகலகங்கள் கழன்று நெகிழுமாறு காதலை மூட்டிய இளைஞனைக் கண்டோம். இப்போது அவன் மூங்கில் நிறைந்த மலைச் சாரலின்கண் அருவியில் நீராடிக் காட்டிலிருந்து யானையால் கொண்டுவரப்பட்ட விறகை எரித்தாற் போன்ற செந்தீயென விளங்கும் நீண்டு தாழும் சடையை உலர்த்திக் கொண்டுள்ளானே.”

இரண்டாம் பாடல்,
“கறங்குவெள் ளருவி ஏற்றலின்  நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.”

ஒளி விளங்கும் அருவிநீரில் நீராடுதலால் தன்னுடைய கருமையான நிறம் மாறி, தில்லை இலை போன்று புல்லிய சடையோடு கூடியவனாய்ச் செறிந்த இலையுடைய தாளியில் தளிர் கொய்யும் இவன் முன்பு இல்லங்களில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய மகளிரைத் தன் இனிய சொல்லால் காதல் மொழியாற்றி வயப்படுத்தும் வேட்டுவனாக இருந்தவன்.

இந்த இரண்டு பாடல்களிலும் தலைவன் குடும்பப் பொறுப்பை ஏற்று அதன்பின்பு துறவறம் ஏற்றிருக்க வாய்ப்பில்லை. உரையாசிரியர்கள் சொல்வது போல முதுமையில் துறவு என்றோ, மனைவி இறந்த பின்பான ஆணின் துறவு என்றோ இந்தப் பாடல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள இயலாது. ‘இழைநிலை நெகிழ்த்த’, ‘சொல்வலை வேட்டுவன்’ ஆகிய வெளிப்பாடுகள் அவனை கற்பொழுக்கத்தில் இருந்தவனாகக் காண்பிக்கவில்லை. இளமைகாலக் களவுகளின் பின்பு புலனொடுக்கத்தை நாடி துறவு ஏற்றவனாக இருக்கிறான்.

ஞான அநுபூதி பெற்று வாழ ஆண்களே பெரும்பாலும் விரும்புகின்றனர். துறவு மேற்கொண்ட எல்லோரும் ஞானத்தைக் கண்டடைந்தவர் என்று சொல்லிவிட இயலாது. இளமையில் துறவு பூண்ட ராமானுஜர் ஒருவகை என்றால் இளங்கோவடிகள் இன்னொருவகை. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு காப்பியங்களைப் படைத்தார். விவேகானந்தர் இன்னொரு வகை. இந்திய ஆன்மிகத்தை உலக மொழியாக ஆக்கிப்பார்க்க முனைந்தார். தன்னைக் கண்டடைந்து தன்னை நாடிவருபவர்களையும் உள்மலர சொற்களாக உடனிருப்பது ஞானியின் செயலாக இருக்கும்.

சாமியாராக ஆகிறவர்கள் எல்லோரும் “ஞானம்” என்கிற ஒரே ஒரு காரணத்தினால் வந்தவர்கள் அல்ல, தன்னுடைய உழைப்பை உதறி விட்டேத்தியாக இருக்க வந்தவர்கள், எந்தப் பொறுப்பையும் ஏற்க இயலாதவர்கள், கடன்பட்டு ஓடிவந்தவர்கள், மனைவியின் மீது சந்தேகம் கொண்டு வந்தவர்கள், மனைவியை நிறைவு செய்ய இயலாதவர்கள், மனைவியால் ஏமாற்றப்பட்டவர்கள், ஏதோ ஒரு சிறிய காரணத்தினால் வைராக்கியமாக குடும்பத்தை உதறியவர்கள், அனுபவித்தது “போதும்” என்று தங்களை நிறைத்துக் கொண்டவர்கள், இதனைத் தவிர கார்பரேட் சாமியார்கள்.

ஓர் ஆணுக்கு எப்பொழுதெல்லாம் துறவுக்கான மனம் தூண்டப்படுகிறது என்பதைப் பார்த்தால் பல்வேறு காரணங்கள் இருப்பது போலத் தோன்றும். பெரும்பாலும் பெண்ணும் அவள் வழியாக உருவாகிற சந்ததியும் அதன் காரணமான பொறுப்புகளும் ஓர் ஆணைப் பதற்றப்படுத்தியபடி இருக்கிறது.

ஆணின் துறவுக்கு பொறுப்புகளிலிருந்து தப்பித்தலே காரணமாக இருக்கிறது. பாம்பு சட்டை உரிவதுபோல தன்னுடைய பொறுப்புகளை கலைந்துவிட முயலுகிறான். பெண்ணுக்கு குடும்பம் சார்ந்து, அதன் மீதான பொறுப்புகள் சார்ந்து சிக்கல் ஒருபோதும் இல்லை. அவள் பொறுப்புகளை உவந்து ஏற்கிறாள்.

(சங்கத்தமிழ் அறிவோம்!)

மாற்பித்தியார்

பெயர்க்காரணம் எதுவும் அறிய இயலவில்லை. ஆனால் சங்கப்பெண்பாற் புலவர்களில் ஆணின் துறவு குறித்து மட்டும் பாடல் எழுதியவர் இவர் ஒருவர் மட்டுமே. இரண்டு புறநானூற்றுப் பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு பாடல்களுமே ஆணின் துறவு நிலையை பற்றியது. தாபதவாகை என்கிற துறையின் கீழ் அமைந்துள்ளன. புறம்: 251, 252.

தாபத வாகை

தாபதர் என்றால் வெற்றி என்று பொருள். தாபதர் எனில், தவம் செய்யும் முனிவர். தாபதம் எனில் நோன்பு அல்லது புலனடக்கம் என்று பொருள்.

தாபத முனிவர் தவத்தொடு முயங்கி
ஓவுதல் அறியா ஒழுக்குரைத் தன்று 
(கொளு-14 வெண்பாமாலை)

தவம் செய்பவர்கள் தாம் செய்யும் தவத்தோடு பொருந்தி, அவ்வொழுக்கத்திலிருந்து பிறழாத தன்மை என்பது பொருள். தவம் செய்கிற முறை குறித்தும் அதனால் பெறுகிற சிறப்பு குறித்தும் பேசுகிற வெண்பா.

“நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடர் ஓம்பி- ஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத்து உய்க்கும் வழி.”

நீரில் பலகாலும் மூழ்கி, தரையிலே படுத்து, மரவுரியை உடுத்து, நெகிழ்ந்த சடை தொங்க, தீயைப் பேணி, மக்கள் வாழும் ஊரின்கண் காட்டிலுள்ள காய், கனி, கிழங்கு, இலை முதலியவற்றை உணவாகக் கொண்டு, கடவுள் வழிபாடும், துறவோர் வழிபாடும் செய்தல் தம்மைத் துறக்க உலகத்திற்குச் செலுத்தும் வழியாகும்.