வித்தியாசமாய் ஒரு ‘க’ உணவகம்நமது குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிடச் சென்றால், ஏதாவது ஒரு உணவகத்தை  தேடிப் பிடித்து, உள்ளே நுழைந்து, நமக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்து, மேஜை மேலிருக்கும் மெனுகார்டையும் பார்த்து, அதில் இருக்கும் ஏதாவதொரு உணவை ஆர்டர் செய்து, சாப்பிட்டுக் கிளம்பிவிடுவோம். நாம் உண்ட உணவு எதில் இருந்து தயாராகிறது, அதில் என்னென்ன பொருட்கள் கலந்தார்கள், அதை உண்டதன் மூலம் நம் ஆரோக்கியம் சார்ந்த நன்மை என்ன... எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனால் நாம் உணவு சாப்பிட நுழையும் உணவகம், மிகவும் வித்தியாசமான வரவேற்புகளுடன், உணவை பற்றிய விழிப்புணர்வு தாங்கிய வாசகங்கள் சார்ந்து, உணவை உற்பத்தி செய்யும் விவசாயி மற்றும் விவசாயம் பற்றிய சிந்தனைகளுடன், சுற்றுப்புறம் பற்றிய சிந்தனைகளையும் சேர்த்து, இயற்கை முறையிலான விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்றி, ஆங்காங்கே படங்கள், வாசகங்களும் உணவகத்தின் தோற்றத்தை வித்தியாசப்படுத்தி, உணவோடு சேர்த்து நமக்கும், குழந்தைகளுக்கும் வழங்கினால்?

அட ஆச்சரியம் தானே. அப்படி ஒரு உணவகம்தான் சென்னை  பெசன்ட் நகரிலும் திநகரிலும் இயங்கி வரும் ‘க’ உணவகம். சிறுதானியத்தில் இத்தனை வகை உணவுகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு, இந்த உணவகத்தில் பிடித்தமான உணவை, ஆரோக்யம் சற்றும் குறையாமல், சத்துக்களுடன் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தையும் சொல்லி, இன்முகத்துடன் வழங்கும் தலைமை உணவு தயாரிப்பாளரும், இவ்வுணவகத்தின் மேலாளருமான சர்வேஸ்வரனிடம் பேசினோம்.

“தேனீக்களின் தாளாண்மை தரணிக்கே வேளாண்மை” எனும் வாசகத்தை வாசலில் வைத்து வரவேற்கிறது இவ்வுணவகம். உணவு உற்பத்திக்கான அடிப்படை தேவையே தேனீக்கள்தான். எனவே தேனீக்களை அழித்தால் உலகம் இருக்காது என இதற்கு விளக்கம் அளிக்கிறார் சர்வேஸ்வரன்.

இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட அதீத ஈடுபாடு காரணமாக, தொழில்முறை புகைப்படக் கலைஞராக மும்பையிலும், நேஷனல் ஜியாக்கிரபி சேனலில் சுதந்திரமான போட்டோகிராஃபராகவும் வேலை செய்து வந்த வி.பி. ராஜின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்த உணவகம் என்கிறார் இவர். நண்பர்களும் சேர்ந்து இவருக்கு தோள் கொடுக்க வெற்றிகரமான மாற்றுச் சிந்தனையோடு இயங்கிக் கொண்டிருக்கிறது ‘க’ உணவகம்.

குழந்தைகள் ஆரோக்கியத்துடன் நன்றாக வளர்வதற்கு உணவுதான் அடிப்படை. உணவில் இருந்துதான் எல்லாத் தேவையும் நமக்கு தொடங்குகிறது. அந்த உணவை எப்படி எடுத்துக்கொள்கிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் உள்ளது அனைத்தும். நாம் நோய்வாய்பட்டு கடைசியாக  மருத்துவமனைக்கு சென்றாலும் இந்த உணவுகளைத்தான் மருத்துவர்களும் உண்ணச் சொல்வார்கள். நம் முன்னோர்கள் கடினமான வேலைகளை மிகவும் அனாயசமாகச் செய்து, நோயின்றி நீண்டநாள் வாழ்ந்தார்கள்.

இப்போதெல்லாம் சிறுவயதிலே குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதற்கெல்லாம் உணவுப் பழக்க வழக்கங்கள்தான் அடிப்படை. நம் வீட்டுப் பெரியவர்கள், சிறுதானிய உணவுகளையும், சமச்சீர் உணவுகளையும் உண்டதால், நல்ல ஆரோக்கியத்துடன், நீண்டநாள் நோயில்லாமல் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை குழந்தைகளும் இளைஞர்களும் அதிகம் விரும்பி உண்பதால், ஆரோக்கியக் குறைவாக இளம் வயதிலே நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

மற்றும் ரசாயனக் கலவை கொண்ட, அதிக வீரியம் உள்ள, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்குதலுக்கு உண்டான காய்கறி, மற்றும் தானிய உணவுகளை உண்பதாலும் பிரச்சனை. ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழத்தில் என்ன சத்துக்கள் உள்ளன என்று சொல்லித் தரும் நாம் சிறுதானிய உணவுகளை உண்பதால், என்ன பலன் இருக்கிறது என்பதைச் சொல்லித் தருவது இல்லை என ஆதங்கப்படுகிறார்.

“ரசாயனக் கலப்பற்ற, இயற்கை வேளாண் முறையில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், செக்கில் ஆட்டி எடுத்த கலப்படமற்ற எண்ணை, ஹிமாலயன் மற்றும் ஆர்கானிக் உப்பு , நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பசும்பால், பசும் நெய் இவற்றையே எங்கள் உணவகத்தில் உபயோகப்படுத்துகிறோம். முக்கியமாக சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட, விதவிதமான உணவுகளே எங்கள் உணவகத்தின் சிறப்பு” என்கிறார் புன்முறுவலுடன்.

“சுற்றுச் சூழலை பாதிக்காத “நோ பிளாஸ்டிக்”, தண்ணீர் சேமிப்பின் அவசியம், மரத்தை வெட்டக் கூடாது, தேனீக்களைக் கொல்லக் கூடாது என்னும் தாரக மந்திரத்தையும் எங்கள் உணவகத்தில் உணவு உண்ண வரும் குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் வாசகங்கள் வழியாகவும், வண்ண வண்ண படங்கள் மூலமும் பதிய வைக்கிறோம்” என்கிறார். “எங்கள் உணவகத்தில், மதிய உணவிற்கு ஆர்கானிக் காய்களால் தயார் செய்யப்பட்ட தென்னிந்திய உணவு வகைகளுடன், சிறுதானியத்தை பயன்படுத்தி தயார் செய்த சிறப்பு உணவு  மற்றும் வழக்கமான உணவுகளும் உண்டு.

இரவு உணவாக, சிறு தானியங்களால் செய்யப்பட்ட, விதவிதமான கொழுக்கட்டை, பணியாரம், அடை, இட்லி, தோசை, புட்டு இடியாப்பம், பொங்கல், பிரியாணி என எல்லாம் கிடைக்கும். மேலும் அனைத்துவிதமான கூழ், இட்லி, தோசை, ரவை உப்புமா, கிச்சடி, ஆர்கானிக் காஃபி, ஆர்கானிக் டீ, அகர் அகர் எனப்படும் கடல்பாசி, இளநீர் கொண்டு தயாரிக்கப்பட்ட புட்டிங் உணவான ஜெல்லி, பானகம், நன்னாரி, வெட்டிவேர், ஏலம், நமச்சாரம் கலந்த சுத்தமான குடிநீர் போன்றவை எங்கள் உணவகத்தின் சிறப்பு. மதிய உணவிற்கு வாழை இலையும்.

இரவு பாக்குமட்டையால் செய்த தட்டிலும் தருகிறோம். மேலும் மண்ணால் செய்யப்பட்ட சிறு சிறு பாத்திரங்களையும் உணவு வழங்குவதற்கான பயன்பாட்டில் வைத்திருக்கிறோம். உணவுக்கான ஆர்டரை பெற்ற பிறகே உணவை தயார் செய்து வழங்குவோம். பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கிறது, ஆனால் உணவை சம்பாதிக்க விவசாயம்தான் என திடமாக நம்பும் இவர்கள், “எங்கள் உணவகத்திற்குத் தேவையான ஆர்கானிக் காய்கறி மற்றும் சிறுதானியங்களை திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள எங்கள் பண்ணைகளில் விளைவித்து கொண்டு வருவதுடன், இயற்கைமுறை விவசாயம் செய்யும், விவசாயிகளின் நேரடி விற்பனை மையமாகவும், எமது உணவகத்தை ஒட்டியுள்ள “எஃப்-5” ஷாப் என்னும் கடையினை நிர்வகித்து வருகிறோம்” என்கிறார்.

“எஃப்-5” என்பது கணிப்பொறியில் ரெஃப்ரெஷ் செய்வது போல நம்மை புத்துணர்ச்சி செய்து கொள்ள பயன்படுவது” என்கிறார். இங்கு சிறுதானியங்களான குதிரைவாலி, சாமை. திணை. வரகு , கம்பு , சோளம் கிடைக்கிறது. இதிலும் எங்களிடம் பல வகைகள் உள்ளன. புழுங்கல் மற்றும் பச்ச ரிசி, செக்கில் ஆட்டி எடுத்த அனைத்து வகை எண்ணெய் மற்றும் பசும்பால், பசுநெய், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, கலப்படமற்ற உணவுப் பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கின்றன.

“அனைத்து வகை ஆர்கானிக் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்கிறோம். கேட்டரிங் கல்லூரிகளில் கூட மில்லட்ஸ் எனப்படும், சிறுதானிய உணவு தயாரிப்பு வகுப்பு எடுப்பதில்லை. எங்களின் சிறப்புத் திட்டமாக, இதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு, கட்டணமின்றி, தயாரிப்பு பயிற்சி வழங்குகிறோம். சிறுதானியத்தை பயன்படுத்தி விதவிதமான உணவை எப்படி செய்வது எனக் கற்றுத் தருகிறோம்.

எங்கள் உணவகத்திற்கு வருபவர்கள் எங்கள் தயாரிப்பு மிகவும் பிடித்து அதைப் பற்றிய செய்முறை விளக்கத்தைக் கேட்டால் அவர்களின் கைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் விளக்கத்தை அனுப்பி வைக்கிறோம். எங்களின் நோக்கம் சிறுதானியம் மற்றும் இயற்கை விவசாய நன்மையினை மக்கள் முழுமையாக உணர வேண்டும் என்பதே. உணவகத்தின் மேல் பகுதியில் மாடித் தோட்டம் ஒன்றையும் உருவாக்கி ஆர்கானிக் விவசாயம் பண்ணும் முறையை வாடிக்கையாளர்களுக்கு கற்றுத் தருகிறோம்.

குழந்தைகளுக்கும் சிறுதானிய உணவுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம். அவர்களின் எண்ணங்களைக் கவரும் விதத்தில் உணவை விதவிதமாக, கண்ணைக் கவரும் விதமாக தயார் செய்து தருகிறோம்” என்கிறார். “சிறுதானிய உணவு என்பது அரிசி உணவை விட 7 மற்றும் 8 மடங்கு சத்துக்கள் நிறைந்தது. இந்தப் பயிர்கள் 3 மாதங்கள் அதாவது 90 நாட்களிலே அறுவடைக்குத் தயாராகிவிடும். விளைச்சலுக்கு தண்ணீரை மிகவும் குறைவாக எடுக்கும். சிறுதானிய விவசாயத்திற்கு சின்ன மழை வந்தாலே போதும். நிறைய தண்ணீர் தேவைப்படாது. அதில் பூச்சி கண்டிப்பாக வராது. மருந்து அடிக்க வேண்டிய தேவையும் இல்லை” என்கிறார் திட்டவட்டமாக.

“இயற்கையின் கொடையான மரங்களை வெட்டக்கூடாது போன்ற விஷயங்களையும் உணவு உண்ண வரும் வேளைகளில் குழந்தைகளிடத்தில் ஆழமாக விதைக்கிறோம்.நாங்கள் எங்கள் உணவகத்தில் பயன்படுத்தி பூமியில் எறியும் பொருட்களும் உரமாக மாறக் கூடியவையே. ஒரு முறை வந்து உண்பவர்கள் எங்கள் உணவகத்திற்கு திரும்பி வருகிறார்கள்” என முடித்தார். ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமா? இன்றே குடும்பத்துடன் ‘க’ உணவகத்துக்கு சென்று பாருங்கள், நமது தலைமுறை, இயற்கை சார்ந்த எத்தனை விஷயங்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்று அப்போது புரியும்.

- மகேஸ்வரி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்