வியூகங்களால் வென்றவள்ராணி வேலுநாச்சியார்

செம்மண் புழுதி கிளம்பும் சிவகங்கைச் சீமையில், வீறுகொண்டு எழுந்து, வெள்ளையனை விரட்டி, சீறி வென்ற வீரப்பெண்ணின் மறைக்கப்பட்ட வீர வரலாறு. தமிழ் வரலாற்றின் வீரப்பெண் வேலுநாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, தனது மதியால் வியூகங்களை வகுத்து, பொறுமை காத்து, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். 1730ல் தோன்றி 1796ல் மறைந்த வேலுநாச்சியாரின் காலம், தமிழக வரலாற்றில் வீரத்தின் காலமாக இருந்தது.

‘சக்கந்தி’ ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். 1730ம் ஆண்டு ராமநாதபுர மன்னரின் ஒரே பெண்ணாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஒரு ஆணுக்குரிய அத்தனை பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார். ஆயுதப் பயிற்சியையும் பெற்றார். பல மொழிகள் கற்று கல்வியிலும் சிறப்புற்றார்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட உதவின. வீர விளையாட்டுகள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு உட்பட ஏழு மொழிகளை கற்றுத் தேர்ந்தார். சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் 1746ல் வேலு நாச்சியாரை மணந்தார். வேலுநாச்சியார் சிவகங்கையின் மருமகளாகக் குடிபுகுந்தார்.

சிவகங்கைச் சீமை மீது ஆற்காடு நவாப்பின் பெரும்படை போர்த்தாக்குதல் தொடுத்து ராமநாதபுரத்தைக் கைப்பற்றியது.  அடுத்த குறி சிவகங்கைதான். நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையை தாக்க ஆங்கிலேய படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையை தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாப்பின் படைகள் காளையார் கோயிலைச் சுற்றி வளைத்தன. ஆங்கிலேயர் கொடுத்த போர் சாதனங்கள் இப்போரில் பயன்படுத்தப்பட்டன. முத்துவடுகநாதராலும் அவரது படைகளாலும் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார். இளவரசியும் கொல்லப்பட்டார். காளையார்கோயில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையார் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரை கைது செய்ய படை ஒன்றை அனுப்பினார் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. வேலு நாச்சியார் ஆவேசத்துடன் போரிட்டார்.

தன் எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நல்லதல்ல. நாட்டைக் கைப்பற்ற நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது” என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையார் கோயில் சென்றார். இதற்குள் நவாப்பின் படைகள் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

வேலு நாச்சியார் காளையார் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். கதறி அழுதார் நாச்சியார்.  பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றடைந்தார்கள்.

1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க இடம் மாறிச் சென்றார் வேலு நாச்சியார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக்கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டிக்காரர்தான்.

நவாப்பையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். கடிதத்துடன் ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.

ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார். ‘‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் லட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே வேலுநாச்சியார் தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும் விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் இப்படித்தான் தங்கத் துவங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளை  பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாப்பை வீழ்த்துவது. சிவகங்கையில் தனது கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன், நவாப் படைகளை எதிர்த்து போர் செய்யக் கிளம்பினார் வேலு நாச்சியார்.

படைகளைப் பெற்றவர், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை  தானே முன்னின்று நடத்தினார். சேனாதிபதிகளான மருது சகோதரர்கள்,  உற்ற துணையாக இருந்து படைகளுக்குத்  தலைமை தாங்கினர். 1780 ஐப்பசித் திங்கள் திண்டுக்கல்லிலிருந்து படைகளுடன் சிவகங்கை நோக்கிப் புறப்பட்டார்.

வேலு நாச்சியாருக்கு பக்க பலமாக ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும், 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்தப் படை காளையார் கோயிலை முதலில் கைப்பற்றியது. சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றை தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும்..

அவர் படைகளை இரு பிரிவாக பிரித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் பெண் கடவுளான ராஜராஜேஸ்வரியை பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்க, வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

அந்தத் தாக்குதலில் நிலைகுலைந்தனர் ஆங்கிலேயர்கள். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தவர்களை தவிர்த்து பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.  சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் கொடி ஏற்றப்பட்டது.

அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் மீண்டும் கைப்பற்றிய தமது சிவகங்கைச் சீமைக்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்ன மருதுவை அமைச்சராகவும் நியமித்தார். வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் தனது அறுபத்தாறாவது வயதில் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.

டிசம்பர் 25, ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய, வீரப்பெண் வேலு நாச்சியாரின் நினைவு தினம்.  இந்திய சுதந்திர வரலாற்றில், அதிகம் வெளிவராத பக்கங்களில் வேலுநாச்சியாரின் வரலாறும் ஒன்று. 

நாடகமாக்கியோர் ஜான்சி ராணியின் சுதந்திரப்  போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு தமிழகத்தைச்  சேர்ந்த வேலு நாச்சியாருடையது என்று கூறும் ராம் சர்மா, தொடர்ந்து வேலுநாச்சியாரை பற்றி 12  ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்து அதை நாட்டிய நாடகமாக பல  மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்த்தி வருவதுடன், வேலுநாச்சியாரின் வீரத்தை உலகுக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்துகொண்டிருக்கிறார். இதில்  இவரின் மனைவி மணிமேகலை சர்மா வேலுநாச்சியாராக நடிக்கிறார்.

நம் குழந்தைகளுக்கு வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நம் பாடத்திட்டத்தில், நம் தமிழ் மண்ணில் தோன்றிய வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்க்கவில்லை என ஆதங்கப்படுகிறார் ராம் சர்மா.  திருவள்ளுவருக்கு உருவம் தந்த ஓவியர் வேணுகோபால் சர்மாவின் மகன் இவர் என்பது கூடுதல் தகவல்.

வேலுநாச்சியாரின் வரலாற்றை ஆதாரங்களுடன் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் முதல் பன்மொழி நூலாக வெளிப்படுத்தும் முயற்சியிலும் தற்போது உள்ளார். இவர் தன் ஆராய்ச்சிக்காக வேலுநாச்சியார் வாழ்ந்த ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அதற்கான வலுவான ஆதாரங்களைத் திரட்டி வைத்துள்ளார். ராணி வேலுநாச்சியார் பற்றி இவர் குறிப்பிடும்போது, “தன் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நெருப்பு சற்றும் அணையாமல், தன் வேகத்தை கடைசிவரை குறைக்காமல், வலுவிழக்காமல் இருந்து வெற்றி பெற்றார்” எனச்
சிலாகிக்கிறார்.

வளரி ஆயுதம்
வெள்ளையனை எதிர்த்த வேலு நாச்சியார் பயன்படுத்திய மிக அற்புதமான ஆயுதம், வளரி. இதுவே தற்போது, பூமராங் என்னும் விளையாட்டாக மாற்றப்பட்டுள்ளது. இதைக் கையாள்வதில், வேலுநாச்சியார் மிகத்தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார் எனவும் யானையின் மீது அமர்ந்து வேலு நாச்சியார், வளரியை வீசும் வீரத்தை பார்த்து ஆங்கிலேயரே மிரண்டு நின்றதாக வரலாறு கூறுகிறது. வளரியின் சிறப்பு, எய்தவரிடமே திரும்ப வந்து சேரும் ஆயுதம் என்பதாகும்.

குயிலி
வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்கு தளபதியாக்கப்பட்டார். என்னதான் வீரம் நிறைந்தவர்கள்  படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர்.

அதில் குயிலி உடல் முழுவதும் எண்ணெயை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட, ஆயுதங்கள் தீப்பிடித்து எரிந்தன. வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் நாட்டின் வெற்றிக்காக பலியானார் குயிலி. உலகின் முதல் மனித வெடிகுண்டு குயிலியே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

- மகேஸ்வரி
படங்கள்: கார்த்திகை ராஜா