மொழி அழகும்... மூத்தோர் சொல்லூம்...



இளம்பிறை

ஒவ்வொரு நாட்டினரும் தத்தமது மொழியில் இருந்து பிறமொழிகளில் அதே அர்த்தப் பரிமாணத்தோடு மொழிபெயர்க்க இயலாத தனித்துவமான பல சொற்களை சொற்றொடர்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் அவை ‘‘நேற்று பெய்த மழையில்... இன்று முளைத்த காளான்களாக இருக்க முடியாது.’’ பல நூற்றாண்டுகள் பேசப்பட்டும், புழங்கப்பட்டும் வந்த சொற்களாகவும், சொலவடைகளுமாகத்தான் இருக்க முடியும். இவற்றை மொழி வழி, முன்னோர்கள் நமக்கு வழங்கியிருக்கும் பெருஞ்செல்வம் என்றால் அது மிகையல்ல.

மானுட வாழ்வின் அனுபவச்சாறாக கெட்டி தட்டிப் போய் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களாக, நம் தாய்த் தமிழில் நம் முன்னோர் மொழிகள் நம் எண்ணங்களை பயன்படுத்தவும், மேம்படுத்தவும் நம் வாழ்க்கை முழுதும் நம் அறியாமலேயே தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன.

தொலைக்காட்சிப் பெட்டிகள் நம் இல்லங்களில் நிரந்தர இடம்பிடிப்பதற்கு முன் வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பழக்கம் நம்மிடையே இருந்தபோது கதைகளும், உபகதைகளும், பழமொழிகளும், சொலவடைகளும், விடுகதைகளும், ஒரு சில மணி நேரமேனும், குடும்ப உறுப்பினர்களை சிந்திக்க வைத்ததோடு சிரிக்கவும் வைத்துக் ெகாண்டிருந்தன. ‘‘ஒரு நெல் குத்தி வீடெல்லாம் உமி. அது என்ன?” எனக் கேட்கத் தொடங்குவார் ஒருவர். எல்லோரும் மனத்தேடல்களில் இருக்கும்போது, ஒரு சிறுமி ‘விளக்கு’ என பதில் சொல்வாள்.

‘‘சின்னப் பொண்ணுக்கும்
சின்ன மாப்ளக்கும்
சேந்து கட்டுன தாலி
சிக்கு இல்லாம எடுப்பவங்களுக்கு
சென்னப் பட்டணம் பாதி’’ என்பார் இன்னொருவர்.
 
அது ‘இடியாப்பம்’ என விடை சொல்வான் ஒரு சிறுவன். இப்படி உட்கார்ந்து உரையாடுவது இயற்கையானதாகவும், திணிக்கப்படாததாகவும் இருந்தால் மனநெருக்கடியற்ற நிலையில் பிள்ளைகளின் கற்பனையாற்றல், தேடல், அறிவுத்திறன் இயல்பாக மேம்படுத்தப்பட்டன. அதற்கு மாறாக, இப்போது எதற்கெடுத்தாலும் புத்தகங்கள், பாடங்கள், மதிப்பெண்கள் என வரும்போது, குழந்தைகளிடையே ஓர் எதிர்ப்பு மனநிலை உருவாகி வருவதை கண்கூடாக காணமுடிகிறது.

 எள்ளல், நகைச்சுவைப் பேச்சுக்களும், இந்த அனுபவ மொழிகளும் அப்படிப் பொருந்திப் போகக்கூடியவை. ‘இந்தால ஒருத்தி போறாப்பாரு, குணத்துல அப்படியே ‘குளுந்த தண்ணியில மலந்த புஷ்பம்’’ என யாரையாவது, ஒருவரைப் பார்த்து ஒருவர் கூறினால், ‘‘குளிர்ந்த தண்ணீரில் மலர்ந்த புஷ்பம்’’ எவ்வளவு அமைதியாகவும், அழகாகவும், இயல்பாகவும் இருக்குமோ அதற்கு முற்றிலும் எதிர்மாறாக ‘அமைதியின்மையும், படபடப்பும், வம்பிற்கிழுக்கும் குணமும் உடையவர்’ என்று பொருள்.

இதனைப் போலவே, ‘யோக்கியன் வாரான் செம்பெடுத்து உள்ள வை’, ‘யோக்கியக்காரன் போறானாம்... வாய்க்காங்கரை மேலே’ போன்ற சொலவடைகளும் எதிர்மறை அர்த்தத்துடனேயே பயன்படுத்த ஒரு நபரை அறவேப் பிடிக்காமல் போனபின் அவர் கைப்பட்டாலும் குத்தம், கால்பட்டாலும் குத்தம் (குற்றம்) என ஆகிவிடுவதை, கொஞ்சம் மாற்றி இப்படியும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் ‘‘ஆமை சுடுறது மல்லாக்க, அதையும் சொல்றது பொல்லாப்பே’’ என்பார்கள்.

என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய நாட்டுப்புற பாடலிது. முதலில் ஆண் பாடுகிறான்,
 
‘‘நாவல் பழமே... நான் தின்னும் செம்பழமே...
நீலக்கருங்குயிலே நிக்கட்டுமா போவட்டுமா’’
அதற்கு அவளோ,
‘‘பாலும் அடுப்பினிலே... பாலகனும் தொட்டிலிலே - என்ன
மாலையிட்ட மன்னவனும் கட்டிலிலே...
இந்தார வேளையில... நீயாரோ நான் யாரோ
ஆராரோ ஆரிராரோ’’ என பதில் சொல்கிறாள்.

சம்பவங்களோடு காட்சிப்படுத்தி, நாவலாக எழுதினால் 400 பக்கம் எழுத வேண்டிய, ஒரு சிக்கலான, மறைக்கப்பட்ட உறவை நாலைந்து வரிகளில் சொல்லவும், முடிக்கவும் தெரிந்த நாட்டுப்புறப் பாடல்களின் ‘கவி நுட்பம்’ மிக எளிமையான சொற்களில் பிரமிக்க வைக்கிறது நம்மை.
 
பெண்களை மையப்படுத்தி அவர்களின் துயரை ‘பளிச்’ சொல்லி எடுத்துக் காட்டும் அனுபவச் சொற்றொடர்கள் மெய்யான ‘ஹைக்கூ’ கவிதைகளைக் காட்டிலும் பொருள் செறிந்தவைகளாகவும், கசந்த வாழ்வை, காட்டும் கண்ணாடிகளாகவும் விளக்குகின்றன.
 
‘‘தினம் தினம் உன் உறவில் வேவதை விட... ஒரு வழியா
ஒரு கட்டு விறகில் வேவது மேல்’’

என்ற சொற்றொடர் எவ்வளவு துயரமான வாழ்விலிருந்து வந்திருக்க வேண்டும். குழந்தையில்லாத ஒரு பெண் மனம் இப்படிப் புலம்புகிறது.
 
‘‘கறிக்குத் தேங்காய் அரைக்கயிலே கைநீட்ட மைந்தன் இல்ல’’ - சமையலுக்கு தேங்காய் துருவும் போதும், அரைக்கும் போதும், வீடுகளில் குழந்தைகள் தின்பதற்கு, தேங்காய் கேட்டு கை நீட்டும் காட்சிகளும், நாம் சிறு பருவத்தில் கை நீட்டிய காட்சிகளும், கண் முன் வந்து போகின்றன. ‘அப்படித் தன்னிடம் கைநீட்ட ஒரு குழந்தை இல்லாத துயரத்தை, கூறி கேட்பவரையும் நெஞ்சடைக்க வைக்கிறது இவ்வழக்கு.’
 
‘இடிச்சவ புடைச்சவ எட்டி நிக்க... எட்டிக்கிட்டு பாத்தவ கொட்டிக்கிட்டுப் போனாளாம்’ என்பதில் ஓர் ஆக்கத்திற்காக, அரும்பாடு பட்டவர்கள் ஒதுங்கி நிற்கும் போது, அதற்காக சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர், அதன் முழுப்பயனை பெற்று, அனுபவிக்கும் அநியாயத்தை சுட்டுகிறது. தன் குறையை மறைப்பதற்காக, பிறவற்றின் மீது குறை சொல்லும் பழக்கத்தை ‘‘ஆடத் தெரியாதவ கூடம் கோணல்னு சொன்னாளாம்’’ என்றும், ‘‘வேலைக்காரிக்கு பிள்ள மேல சாக்காம்’’ என்றும், மிகவும் காலந்தாழ்ந்து மறுவினையாற்றுபவர்களைப் பார்த்து ‘‘சின்னக்குட்டி ஆம்படையான் சித்திர மாசம் அடிச்சானாம்... அடி பொறுக்காம ஆவணி மாசம் அழுதாளாம்’ என்றும் செல்வியக்கா புருஷன் செவ்வாய்க்கெழம செத்தாளாம்... வீடு வெறிச்சோடி போகும்னு வெள்ளிக்கெழம எடுத்தாளாம்’’ என்றும் எகத்தாள மொழிப் பேசுவார்கள்.

எப்போதோ நடக்கப் போவதை இப்போதிலிருந்தே உடனிருப்பவர்களிடம் சொல்லிச் சொல்லி நச்சரிப்பவர்களுக்காக சொல்லப்பட்டது இது. ‘‘கும்பகோணத்துல நடக்குற கோலப்போட்டிக்கு கூடுவாஞ்சேரியிலிருந்தே குனிஞ்சுக்கிட்டு போன கதையாவுல இருக்கு உங்கத’ என்பார்கள். ஒருவர் திட்டும்போது எதிராளியும் திட்டத்தொடங்கி அதுபெரும் சண்டையாகி விடக்கூடாதே... என்ற அக்கறையில் ‘‘ ‘சூரியனப் பாத்து நாய் குறைக்கிறது’னு நெனச்சிக்கிட்டு போயி ஆவுற வேலயப் பாரு’’ எனக்கூறி பதற்றத்தை தணித்து விடுபவர்களும் உண்டு. சிலர் ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் ஊரைக்கூட்டி உறவைக்கூட்டி, ரகளை செய்து விடுவார்கள். அவர்களின் பாசாங்கினை தெரிந்து கொண்டவர்கள் ‘‘பச்சைக்கு பாம்பு கடிச்சிச்சாம்... பாக்க வந்தவுங்களுக்கெல்லாம் தேளு கொட்டுனுச்சாம்’’ என மனிதப் பாசாங்கை மண்பானையைப் போல போட்டு உடைத்து விட்டுப் போவார்கள்.

‘‘கரடி வித்தக்காரன் இடறி விழுந்தா, அதுவும் ஒரு வித்தை’’ ‘‘உச்சிக்கொண்டையாம் தாழம்பூவாம், உள்ள இருக்குமாம் ஈறும் பேனும்’ போன்ற பொருள் பொதிந்த சொலவடைகளை பேச்சுக்கொரு தரம் சொல்லும் கிராமத்து பெரியோர்களின் வாழ்வும், மொழியும் வழக்கொழிந்து வருகின்றன.

பெரும் இழப்பு, வலி போன்றவற்றை நகைச்சுவையோடு கூறி அவற்றிலிருந்து பாதிக்கப்பட்டோர் விடுபட அருமருந்தாகும். இந்த அனுபவ மொழிகள் தொடர்ந்து பயன்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டிய பொக்கிஷங்களாகும். இதுபோன்ற  வழமைகளை, சொலவடைகளை தம் அன்றாடப் பேச்சில் பயன்படுத்தத் தெரிந்தோர் இறுகிப்போன மனதின் அறைகளைத் திறந்து தென்றல் உலவ வைக்கும் திறவுகோல்கள் வைத்திருப்போர் என்றே கூறவேண்டும். 

நமது நீதி நூல்களிலும் இலக்கியங்களிலும் நிறைந்து கிடப்பதுபோல் நல்லெண்ணம், தன்னம்பிக்கை மற்றும் தெளிவினைத் தருகின்ற கருத்தும் கனிவும் மிக்க சொற்றொடர்கள் சொலவடைகளிலும் நிறைந்திருக்கின்றன. ‘‘இளைச்சவனோடு போனாலும் மலைச்சவனோடு போகாதே’’, ‘‘கடும் சினேகம் கண்ணைக் குத்தும்’’, ‘குட்டக் குட்ட குனியறதும் தப்பு... குனிய குனிய குட்டுறதும் தப்பு’ போன்ற எளிய அனுபவ சொல்லாடல்கள் நம் அன்றாட வாழ்வில் மனம் படும் இடர்களுக்கு... முடிவு கூறும் மூதாதையரின் அனுபவ மொழியாக நம்மை சமன்படுத்துகின்றன.
 
இத்தொடரில் என் எழுத்துக்குப் பொருத்தமான ஓவியங்கள் வரைந்தளித்த ஓவியர் ம.செ. அவர்களுக்கும் விமர்சனமும் அபிப்ராயங்களும் சொன்ன தோழியர்களுக்கும் என் நன்றிகள்.
  

(முற்றும்)