லட்சத்தில் ஒருத்திசின்னச் சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் சோர்ந்து போகிறவர்களுக்கு மத்தியில் பெரிய அளவிலான பிரச்னைகளை தகர்த்து வெற்றிப் படிகள் ஏறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் Von Willebrand type 3 நோயால் பாதிக்கப்பட்டவர் சாலா வாணிஸ்ரீ. படிப்பில் பத்தாவது தாண்டுவாரா என பார்க்கப்பட்டவர் இன்று பலருக்குப் பாடம் சொல்லித் தரும் அளவு முனைவர் பட்டம் வாங்கியதோடு உலகளவில் மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்பித்திருக்கிறார். இந்த நோயுடன் போராடி அதனை வெல்லவில்லை எனினும் தம் வாழ்க்கையை வென்ற கதையை நம்மோடு பகிர்கிறார் சாலா.
 
“எனக்கு இரண்டு வயதாக இருக்கும் சமயம், ஒருநாள் எனக்கு அடிபட்டு ரத்தம் வந்தது. என்ன செய்தும் ரத்தத்தை நிறுத்த முடியாததால், பயந்து போன என் பெற்றோர் என்னை டாக்டரிடம் கொண்டு சென்று செக்கப்  செய்து பார்த்த போது தான் எனக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்தது. அதாவது உடலில் அடிபட்டாலோ வேறு எதாவது காரணத்தினாலோ ரத்தம் வெளியேறினால் சாதாரணமானவர்களுக்கு சில நிமிடங்களில் உறைய ஆரம்பிக்கும். ஆனால் இந்தப் பிரச்னை உடையவர்களுக்கு ரத்தத்தை உறைய வைப்பதற்கு தேவையான புரோட்டின் குறைவாக இருப்பதனால் ரத்தம் உடனே உறையாது.

ரத்தப்போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கும். ரத்தப்போக்கு அதீதமாக இருந்தால் என்னென்ன பிரச்னை வரும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் அது முதல் என் பெற்றோருக்கு, எனக்கு எப்போது அடிபட்டாலும் பயம் தான். என்னை ரொம்ப ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரைக்கும் விளையாட்டுப் போக்காகத் தான் இருந்தேன். அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டது இல்லை. ஆனால் 13, 14 வயதில் பெரியவளாக ஆனதுக்குப் பின் நிறைய பாதிப்பை சந்திச்சேன். அப்போ தான் அதோட வீரியத்தை உணர முடிஞ்சுது. கொஞ்சம் பயம் வர ஆரம்பிச்சது.

என் அப்பா - அம்மா என் நிலைமையை என் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து இருந்ததால் பள்ளியில் எல்லாருக்கும் என்னைக் குறித்து நல்லாத் தெரியும். அதனால் பள்ளி விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சேர எனக்குத் தடை இருந்தது. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ, அடிபட்டு ரத்தம் வந்தால் என்ன செய்வது என என் மேல் இருந்த அக்கறைதான் அதற்குக் காரணம். எனக்கு அவற்றில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் என் உடல்நிலை காரணமாக ஒரு தயக்கமும் இருந்ததால் அதில் எல்லாம் கலந்து கொண்டதில்லை.

என் இள வயதின் இழப்பாகவே அது இன்னும் என் மனதில் பதிந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நோயின் அவஸ்தையால் படிக்கும் விஷயங்கள் அடிக்கடி மறந்து போய்விடும். என் நிலையை எனது ஆசிரியர்கள் புரிந்து கொண்டனர். கணக்கில் தப்பு செய்தால் எல்லாரையும் வெளுத்து வாங்கிய கணக்கு வாத்தியார் என்னை மட்டும் அடிக்க மாட்டார். பி.டி மாஸ்டரும் நான் விளையாடலன்னா என்னை எதுவும் சொல்ல மாட்டார்.

மாதவிடாய் சமயங்களில் ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதீத ரத்தப்போக்கின் காரணமாக எனது உடன் பிறந்த சகோதரர்களும், என் உறவினர்களும் அடிக்கடி எனக்கு ரத்த தானம் கொடுப்பார்கள். சிறு வயதில் இருந்து இதே நிலைமை தான். 15 வயது ஆகும்போதுதான் இதற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மருந்து இருக்கிறது என்று தெரிந்து அங்கு சென்றோம். (இப்போது சென்னையிலும் இந்த மருந்துகள் பெரிய மருத்துவமனைகளில் கிடைக்கின்றன). அந்த மருந்தின் பெயர் factor 8 & plasma. 

தேவைப்படும் சமயங்களில் இந்த மருந்தை எனக்குச் செலுத்துவாங்க. ஒவ்வொரு மாதமும் இதற்கான தேவை இருக்கும். ஆனால் மிகவும் விலை உயர்ந்த மருந்து இது. நடுத்தர மக்களால் அவ்வளவு எளிதில் வாங்க முடியாது. என்ன செய்வது? வாங்கித் தானே ஆக வேண்டும். அந்த மருத்துவமனையில் ஒரு வசதி என்னவென்றால் நோயாளிகளின் வசதியைப் பொறுத்து நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குக் கொஞ்சம் விலையை குறைத்துத் தருவார்கள்.

அதனால் அந்த மருந்தை பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்ததால் நான் பத்தாவதுக்குப் பிறகு படிப்பேனா என எல்லாரும் நினைச்சாங்க. என்னால இதுக்கு மேலே படிக்க முடியுமான்னு சந்தேகப்பட்டாங்க. ஆனா நான் ஒரு வழியா ஆசிரியர்கள் உதவியோடு பள்ளிப் படிப்பை முடிச்சுக் கல்லூரியில் சேர்ந்தேன்.

ஆனால் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி உடம்பு முடியாத சமயங்களிலும் லீவ் எடுக்க மாட்டேன். அப்படி லீவ் எடுக்க ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகிடும் என நினைத்ததால் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் காலேஜ் போவேன்” எனச் சொல்லும் இவர் தன் அடுத்த தலைமுறைக்கும் 99 சதவிகிதம் இந்தப் பிரச்னை தொடர்ந்து விடக்கூடும் என மருத்துவர்கள் சொன்னதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்பா-அம்மாவுடன் இருந்தாலும் மேற்கொண்டு படித்து தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தார் சாலா. எம்.ஏ., எம்.பில். முடித்த பின் மேலே மேலே படித்து பி.எச்.டி வரை வந்தார். ஆனால் அங்கே அவருக்குக் காத்திருந்தது ஒரு இடி. 
 
“24 வயதிருக்கும் என நினைக்கிறேன், பி.எச்.டி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் எனக்கு மாதவிடாய் ரத்தம் வெளியேறவில்லை, வயிற்றுக்குள்ளே சென்ற ரத்தம் அங்கே கட்டியாக நின்று விட்டது. சிறு வயதில் இருந்தே வேலூரில் தான் சிகிச்சை எடுத்து வந்தோம். ஆனால் அந்த சமயம் அவசரத்திற்கு சென்னையில் டாக்டரிடம் காண்பித்தோம். மிகுந்த வலிகளுக்கிடையில் அந்த ஆபரேஷன் நடந்தது. வயிற்றில் இருந்து 2 லிட்டர் ரத்தத்தை வெளியே எடுத்தார்கள். ஆனால் என் உடல்நிலையை இங்கிருந்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள இயலாததனாலோ என்னவோ அந்த ஆபரேஷனுக்குப் பிறகு எனக்கு வேறு விதமான பிரச்னை ஆரம்பமாகியது.

ஆறு மாதம் ஆகியும் ஆபரேஷன் செய்த இடத்தில் ரணம் ஆறவே இல்லை. ஆபரேஷன் செய்த இடத்தில் இருந்து ஏதோ ஒரு திரவம் மாதிரி வடிந்து கொண்டே இருந்தது. திக்கான பேண்டேஜை வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொள்வேன். ஒரு நாளைக்கு இரண்டு பெரிய பாக்கெட் பேண்டேஜ்கள் நனைந்துவிடும். அந்த அளவுக்கு திரவம் வெளியேறிக்கொண்டே இருக்கும். அதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. வெளியே எங்கும் போக முடியாமல் வேறு வேலைகளில் ஈடுபட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளானேன்.

என்ன செய்வது என்று புரியவில்லை. அப்புறம் பழையபடி என் உடல்நிலை அறிந்த மருத்துவர்கள் இருந்த வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குச் சென்று அதற்குரிய மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகுதான் அந்தப் பிரச்னை ஒரு வழியாக சரியானது. அந்தப் பிரச்னை சரியானதும் மறுபடி கொஞ்ச நாள் கழித்து வேறு ஒரு பிரச்னை ஆரம்பித்தது.  என்ன காரணம் என்றே தெரியாமல் ஒரு மாதம் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது.

வேலூரில் சிஎம்சி சென்று பார்த்தோம். மருந்துகள் செலுத்தினார்கள். அப்போதும் ரத்தம் வடிவது நிற்காததால் மீண்டும், மூக்கில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகு தான் மூக்கில் ரத்தம் வடிவது நின்றது. எனது பி.எச்.டி பேராசிரியர்கள் என் நிலையைப் புரிந்து இந்த இடைவெளிகளைப் பொறுத்துக்கொண்டதால் என்னால் பி.எச்.டியைத் தொடர்ந்து முடிக்க முடிந்தது. பிறகு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வரலாறு மற்றும் சுற்றுலாத்துறையில் இன்னொரு முதுகலைப்பட்டமும் வாங்கினேன்.
 
அதன் பிறகு வேலைக்குப் போனேன். உதவி பேராசிரியர் வேலை. சுய சம்பாத்தியம் சந்தோஷம் கொடுத்ததுதான் என்றாலும் ரொம்ப நேரம் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரங்களில் பல் ஈறுகளில் இருந்து ரத்தம் வரும். கால்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும். ஆனாலும் என் வேலையில் நான் ஈடுபாட்டோடு செய்ததால் எனக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு மேற்பார்வையாளராக செயல்படும் வாய்ப்பும் கிடைத்தது. உதவி பேராசிரியர்களாக இருக்கும் அனைவருக்கும் இத்தகைய வாய்ப்புகள் கிடைக்காது.
 
நான் பிறரின் அனுதாபங்களை விரும்பாததால் வேலையைச் செம்மையாக செய்ததோடு  இலக்கியம் குறித்த நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். 60க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளுக்கு கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தேன். லண்டனில் நடைபெற்ற ‘உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டிலும்’, மலேசியாவில் நடைபெற்ற ‘9 ஆம் உலகத்தமிழ் மாநாட்டிலும்’ கலந்து கொண்டு கட்டுரை வாசித்தேன்.
 
இந்த நிலைமையில் இருக்கும் நான் அதுவும் பெற்றோர் மற்றும் உறவினர் துணையின்றி தனிமையில் லண்டன் செல்வேனா? என்பது என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குக் கேள்விக்குறியாக இருந்தது. இந்த நோயாளிப் பொண்ணு இவ்வளவு தூரம் போகுமா? என்ற கேள்வியை உடைத்து ஏதோ ஒரு துணிவில் அங்கு சென்று கட்டுரை வாசிக்கும்போது பெருமையாக இருந்தது. மற்றவர்களும் இப்போது என்னை பெருமையாகப் பார்க்கிறார்கள்.

இது தவிர இந்தியாவிலும் பல மாநிலங்களில் தமிழ் சார்ந்து நடைபெற்ற பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் எனப்படும் அகாடமிக் அமைப்பு நடத்திய கருத்தரங்கிலும் கொல்கத்தாவில் வரலாறு தொடர்பானக் கட்டுரையை சமர்ப்பித்தேன். தற்போது எனக்கு செம்மொழி நிறுவனத்தால் வழங்கப்படும் 2013-2014ம் ஆண்டுக்கான ‘இளம் அறிஞர் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது.

இது நாங்கள் எதிர்பார்த்திராத ஒன்று. இப்ப இதெல்லாம் பார்க்கும் போது நம்ம பொண்ணுக்கு நாம இன்னும் மனதளவில் நல்ல சப்போர்ட்டிவ்வாக இருக்கணும்னு என் பெற்றோர்களும் சகோதரர்களும் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப கல்லூரி நிர்வாகம் தொடர்பான நிறைய விஷயங்களில் நான் இன்னிக்கு வளர்ந்திருக்கேன்னா நான் வேலை செய்த அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி மற்றும் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி ஆகிய இந்த இரண்டு கல்லூரிகளும் தான் அதுக்குக் காரணம்.

எனக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும் என் குடும்பம், உறவுகள், நண்பர்கள், நான் பணி புரிந்த நிறுவனங்கள், உடன் பணியாற்றியவர்கள் என அனைவரும் எனக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இது என் வாழ்க்கையை வெற்றிக்கொள்ளத் தேவையான பலத்தை எனக்குக்கொடுத்திருக்கிறது” என்கிறார் சாலா. கல்லூரி வேலை, வீட்டு வேலை, கட்டுரைகள் எழுதுதல் இது தாண்டி அருகில் உள்ள பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தல் என எந்நேரமும் தன் கவலையை மறந்து உழைக்கும் இவரது வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம்.

- ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: ஆர்.கோபால்