மனநலமே உடல்நலம்உலகளாவிய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது தற்கொலை. தற்கொலை  என்பது மன அழுத்தத்தினால் நிகழ்கிறது. கொலைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு தற்கொலைகள் அதிகமாகியுள்ளன. இது ஒருவிதமான மனநலப் பிரச்னை. இதை எப்படிக் கையாள்வது என்று விளக்குகிறார் மனநல நிபுணர் எஸ்.வந்தனா.

‘‘நம் நாட்டு மக்களில்  நான்கில் ஒரு சதவிகிதம் பேருக்கு மனநலப் பிரச்னை உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மனநல மருத்துவம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதற்கான சிகிச்சைகள் பெறுவது பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை. மனநலம் தொடர்பான பிரச்னைகள் வெளியே தெரிவதில்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆய்வுகளின்படி, ஆண்களைவிட பெண்களுக்குத்தான் மனஅழுத்தம் தொடர்பான ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். பெண்கள் தங்களுடைய பிரச்னைகளை வெளியே பகிர்ந்து கொள்வது கிடையாது.

தனக்கான நேரத்தை அவர்கள் நண்பர்களிடமோ, குழந்தைகளிடமோ செலவிடுவது கிடையாது. இதனால் mask depression எனப்படும் மன அழுத்தத்திற்கு பெண் உள்ளாக்கப்படுகிறாள். மன அழுத்தம் அடையும் பெண்கள் சில காரணங்களால் எதிர்மறையாக சிந்திப்பார்கள். இப்படி மனநலப் பிரச்னை உள்ளவர்கள் சோகமாகவும், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமலும், தனிமையிலும் இருப்பார்கள். அதே போல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும், அதிகமாக பேசுவதும் கூட மன நோய்க்கான அறிகுறிகள்தான்.

இவர்களுக்கு தக்க சமயத்தில் கவுன்சிலிங் கொடுத்து, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். அவ்வாறு கவனிக்கத் தவறினால், அவர்களின் மனரீதியான, உடல்ரீதியான பிரச்னைகள் அதிகமாகி தற்கொலைகள் நடந்துவிடுகின்றன. குடும்ப சுமையை சுமக்கும் பெண்கள், தொழில் முனைவோர், தொழில் புரியும் பெண்கள் அனைவருக்கும் மனநலம் பேணும் சிகிச்சை இன்றைய சூழலில் தேவைப்படுகிறது. காரணம், ஒருவருக்கு ஏற்படும் மனநலப் பிரச்னை, அவரை மட்டுமே பாதிப்பதில்லை.

அவரைச் சார்ந்து இருப்பவர்களையும் பாதிக்கிறது. குறிப்பாக  குழந்தைகளை பாதிக்கிறது, இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கிறது. உடனடியாக அதை கவனித்து அதற்கு ஆலோசனை பெறவேண்டும். இதற்கு சிகிச்சை பெறவேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தேவை. குறிப்பாக குழந்தை பெறக்கூடிய சமயத்தில், பெண்கள் சிலரது மனநிலை மோசமாகிவிடுகிறது.

பிரசவம் என்பது பெண்ணிற்கு மறுபிறவி என்று சொல்வோம். இதுவரை ஏற்படாத வலியும், வேதனையும் கடந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது சில பெண்களுக்கு, அக்குழந்தை மீதே ஏற்பில்லாமல் போவதுண்டு. இப்படியான மன நிலையில் இருக்கும் தாயிடம் மருத்துவர்கள் குழந்தையை பிரித்து வைத்திருப்பார்கள். அந்தத் தருணத்தில் அவருக்கு தேவை மருந்துகள் அல்ல சிறந்த ஆலோசனைதான்.

சுமார் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு (post traumatic  stress disorder) ஞாபக மறதி போன்ற பிரச்னை ஏற்படுகிறது. அவர்களுக்கு மன நல ஆலோசனை அவசியம் தேவை. 2020ம் ஆண்டில் மனநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடம் பிடிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது’’ என்கிறார் எஸ்.வந்தனா. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.

- ஜெ.சதீஷ்